Photo, Associated Press

உலகின் கவனத்தை ஈர்த்தது மாத்திரமல்ல, ஜனாதிபதியை, பிரதமரை, அமைச்சரவையைப் பதவி விலகவும் வைத்த நான்கு மாத கால மக்கள் கிளர்ச்சியை கண்ட நாடு இலங்கை. இப்போது வெறுமனே ஒரு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் குறிப்பிடத்தக்களவுக்கு தோற்றத்துக்கேனும் அமைதியானதாகவும் உறுதிப்பாடு கொண்டதாகவும் இருக்கிறது. அந்த மாற்றத்துக்கான பெருமை (அந்த சொல் பொருத்தமானதாக இருந்தால்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே உரியதாகும். அறகலய போராட்ட இயக்கத்தின் எழுச்சியின்போது அரசாங்கத்தில் உயர்மட்டங்களில் இருந்தவர்கள் அவருக்கு நன்றியுடையவர்களாக இருக்கவேண்டியதற்கு காரணம் இருக்கிறது.

மக்களின் சீற்றத்தைச் சந்திக்கவேண்டி வரும் என்ற பயத்தில் அவர்கள் தங்கள் மறைவிடங்களை விட்டு பல மாதங்களாக வெளியே வரமுடியாமல் இருந்தார்கள். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது மக்கள் இரவோடிரவாக தங்களது வருமானங்களினதும் சேமிப்புகளினதும் பெறுமதியில் அரைவாசியை அல்லது அதற்கும் கூடுதலானதை இழந்தார்கள். மறைந்திருந்த அரசியல்வாதிகள் மீண்டும் அரசாங்க அமைச்சர்களாக பதவிகளில் இருக்கிறார்கள். மீண்டும் அமைச்சர்களாவதற்கு காத்துக்கொண்டிருப்பவர்கள் பொறுமையை இழந்த நிலையில் காணப்படுகிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

மூன்று மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலமாக நாட்டின் அதியுயர் பதவிக்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவானபோது நாட்டில் குழப்பகரமான ஒரு நிலையே காணப்பட்டது. முறைமை மாற்றமொன்றை வேண்டியும் ஜனாதிபதியையும் பிரதமரையும் முழு நாடாளுமன்றத்தையும் வீட்டுக்குப் போகுமாறு கோரியும் நாடுபூராவும் கிளர்ந்தெழுந்த மக்களினால் வீதிகளும் பொது இடங்களும் நிரம்பி வழிந்தன. தாங்கள் வீட்டுக்குப் போகுமாறு கேட்டவர்களுக்குப் பதிலாக யார் அந்த இடத்தை நிரப்பவேண்டும் என்று அந்த மக்கள் சொல்லவில்லை. ஜனாதிபதியினதும் பிரதமரினதும் அலுவலகங்களும் வாசஸ்தலங்களும் முற்றுகையிடப்பட்டிருந்தன. போராட்ட இயக்கத்தின் அடுத்த இலக்காக நாடாளுமன்றம் இருந்தது.

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்று  வந்தபோது பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் தற்காப்பு நிலையில் இருந்தார்கள். ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் கீழான திடீர் மாற்றமே மக்கள் கிளர்ச்சியின் உச்சக்கட்டத்தில் பதவியை விட்டு விலகிய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை புதிய ஜனாதிபதியைப் பெரிதும் பாராட்ட வைத்தது. பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்னர் முதற்தடவையாக கடந்தவாரம் ஆளும்கட்சியின் களுத்துறை பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது ராஜபக்‌ஷ அந்தப் பாராட்டைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியாக விக்கிரமசிங்கவின் தெரிவு, நிலைவரத்தில் உடனடி மாற்றத்தைக் கொண்டுவந்தது; போராட்டங்களின் விளைவான குழப்பநிலையை இராணுவம் திணித்த ஒழுங்கு பதிலீடு செய்தது. சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்திய பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்து அவர்களை கைதுசெய்தனர். உள்நாட்டு மற்றும் சர்வதேசிய மனித உரிமைகள் அமைப்புக்களிடம் இருந்தும் ஏன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடமிருந்தும் கடுமையான அக்கறைகளும் கண்டனங்களும் வெளிப்படுத்தப்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் பாதுகாப்புப் படைகள் போராட்டக்காரர்கள் மீது தொடர்ந்தும் வன்முறையைப் பிரயோகித்து கைதுசெய்துகொண்டே இருக்கிறார்கள்.

அந்த அக்கறைகளும் கண்டனங்களும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆர்ப்பாட்டக் களத்துக்கு குழந்தையைக் கொண்டுவந்த தாயொருத்தி மீது பொலிஸார் நடத்திய தாக்குதலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழந்தைகளை மனித கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறி ஜனாதிபதி உட்பட அரசாங்க பேச்சாளர்கள் அந்தத் தாக்குதலை நியாயப்படுத்தியமையும் இன்று யாருடைய கை ஓங்கியிருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும்.

அடக்குமுறையை நியாயப்படுத்தல்

ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் கீழ் அரசாங்க அதிகாரம் மீண்டும் முனைப்புடன் வெளிக்காட்டப்படுவதன் பின்னணியில் இரு காரணிகள் இருக்கின்றன. முதலாவதாக, நாட்டின் ஆட்சிமுறைக்கு முக்கியமானவையாக அரச கட்டடங்களை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த செயல் மூலமாக போராட்ட இயக்கம் கட்டுமீறிப்போயிருந்தது என்ற கருத்து நாட்டில் பரவலாக காணப்பட்டது. இந்தக் கட்டடங்கள் அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் வெள்ளை மாளிகை அல்லது பக்கிங்ஹாம் மாளிகை அதிகாரத்தின் மையங்களாக எவ்வாறு விளங்குகின்றனவோ அதேபோன்றே இலங்கையில் அதிகாரத்தின் கோட்டைகளாக அல்லது காப்பரண்களாக விளங்குபவை. உதாரணமாக, அலரிமாளிகை இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து பிரதமர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக விளங்கிவருகிறது. அதற்கு  மதிப்புக்குரிய வரலாறு ஒன்று உண்டு.

போராட்டக்காரர்கள் குதித்து நீச்சலடித்த தடாகத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதி மாளிகையில்  காலனித்துவ ஆட்சிக்காலத்தில் ஆளுநர்கள் வசித்தார்கள். அது  இராணி மாளிகை என்று அழைக்கப்பட்டது. ஆயுதந்தாங்கியவர்கள் என்பதற்காகவும் போரின்போது தியாகங்களைச் செய்தவர்கள் என்பதற்காகவும் பாரம்பரியமாக மதிக்கப்படுகின்ற பாதுகாப்புப் படைகளின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் மரியாதையில்லாத முறையில் போராட்டக்காரர்களில் சிலர் பேசியதை காண்பிக்கும் காணொளிகளை பலரும் மோசமான அத்துமீறலாக நோக்கினார்கள். தலைமைத்துவம் இல்லாததும் கட்டுப்பாட்டை மீறியதுமான போராட்ட இயக்கம் எங்குபோய் நிற்கும் என்ற கேள்வியும் எழுந்தது.

இரண்டாவதாக, ஜனாதிபதி விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, தனக்கு முன்னர் பதவியில் இருந்தவர்ளைப் போன்று தனிப்பட்ட முறையில் சர்வதேச சமூகத்தின் அணுகுமுறைகளினால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றியோ அல்லது சர்வதேச குற்றங்களாக அமையக்கூடிய மனித உரிமை மீறல்களுக்காக சர்வதேச நீதிமன்றங்களுக்குக் கொண்டுசெல்லப்படக்கூடிய அச்சுறுத்தல் பற்றியோ அவர் கவலைப்படுவதற்கு காரணமில்லை. முன்னர் பிரதமராக பதவி வகித்த காலகட்டங்களில் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயன்முறைகளில் ஒரு கடப்பாட்டை ஜனாதிபதி எப்போதும் காண்பித்தார்.

2001- 2004 காலப்பகுதியில் பிரதமராக அவர் இருந்தபோது விடுதலை புலிகளுடன் நோர்வேயின் அனுசரணையுடனான போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றார். 2015 – 2019 காலப்பகுதியில் பிரதமராக இருந்தபோது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்குவதற்கு அவர் தனது சம்மதத்தை தெரிவித்தார்.

இலங்கை அரசியலில் மிகப்பெரிய பரிசை விக்கிரமசிங்க பெற்றுக்கொண்ட பிறகு கடந்த நான்கு மாதங்களாக அவர் நாட்டை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நிலையுறுதிப்படுத்துவதற்கு பாடுபட்டுவருகின்றார். போராட்ட இயக்கத்தின் தலைவர்களை கைதுசெய்வதன் மூலமும் மக்கள் ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க பாதுகாப்புப் படைகளை பயன்படுத்துவதன் மூலமும் அந்த இயக்கத்தை அரசியல் ரீதியில் ஜனாதிபதி வலுவிழக்கச் செய்திருக்கிறார். அதன் விளைவாக, வெளித் தோற்றப்பாட்டை பொறுத்தவரை, போராட்ட இயக்கம் (நாடு பூராவும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை அணிதிரட்டக்கூடியதாக இருந்த நாட்களுடன் ஒப்பிடும்போது) கடுமையாக சுருங்கிப்போயிருக்கிறது.

தற்போது அரசியல் கட்சிகளின் தீவிர ஆதரவாளர் குழுக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் மாத்திரமே பொது ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க துணிந்து முன்வருகிறார்கள். பொலிஸார் சட்டவிரோதமானவை என்று கருதுகின்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பதற்கு முன்னர் விவேகமுடைய எவரும் ஒன்றுக்கு இரு தடவைகள் சிந்தித்துப் பார்ப்பர் எனலாம்.

அடக்குமுறை மூலமாக அரசியல் சமுதாயத்தில் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதிலும் பார்க்க பொருளாதாரத்தை நிலையுறுதிப்படுத்துவது மிகவும் கூடுதல் சிக்கலானதாக இருக்கிறது. இது வரையில் அரசாங்கம் உயர் பணவீக்கம், மறைமுக வரியறவீடு மற்றும் மானியங்கள் குறைப்பு போன்ற வழிவகைகளின் ஊடாக மக்களிடம் இருந்து வளங்களை திசைதிருப்புவதில் கவனத்தைச் செலுத்திவந்திருக்கிறது. ரஜரட்டையில் சிறுநீரக நோயாளிகளுக்குத் தேவையான மானிய அடிப்படையிலான மருந்தை பெறமுடியாமல் உள்ளது. மட்டக்களப்பில் மானிய அடிப்படையில் மொழிபெயர்ப்பாளருக்கான பயிற்சி வாபஸ் பெறப்பட்டுவிட்டது.

சிறுவர்கள் பாடசாலையை விட்டு விலகி கொழும்பில் கட்டட நிர்மாணப் பகுதிகளுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். இத்தகைய போக்குகள் வறிய மக்களுக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. அவர்களினால் போராட்டத்தையும் செய்யமுடியவில்லை. துன்பத்தை மௌனமாக ஏற்றுக்கொண்டு வாழ்ககையை ஓட்டுவதற்கு திணறுகிறார்கள். இது உடனடியாக கண்ணுக்குத் தெரியாத மனித அவலமாகும்.

வரியறவீட்டை உயர்வருமானம் பெறும் மட்டங்களுக்கு விஸ்தரிக்குமாறு அரசாங்கத்துக்கு சர்வதேச நாணய நிதியம் கடுமையான நெருக்குதல் கொடுக்கிறது போன்று இப்போது தெரிகிறது. இந்த மட்டத்தினர் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு ஜனாதிபதிக்கும் அவரது அணிக்கும் வாய்ப்பைக் கொடுக்க இதுவரை முன்வந்தவர்கள். போராட்ட இயக்கத்தின் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறையையும் கூட இவர்கள் பெருமளவுக்கு ஆதரித்தவர்கள். ஆனால், நேரடி வரியறவீட்டின் ஊடாக அவர்களிடமிருந்து வரிகளைப் பெறுவதற்கு (இது 36 சதவீதத்தை எட்டலாம்) அரசாங்கம் அண்மையில் செய்த அறிவிப்பு வர்த்தக மற்றும் துறைசார் நிபுணர்கள் குழுக்களிடமிருந்து எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

சர்வதேச தராதரங்களின் பிரகாரம் நோக்குகையில் 36 சதவீத நேரடி உயர் வரிவிதிப்பு ஒன்றும் வழமைக்கு மாறானது அல்ல. இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கான அடிப்படைக் காரணங்களை ஜனாதிபதியும் அரசாங்கமும் கையாளவில்லை என்ற உணர்வே புதிய வரிக்கொள்கையை எதிர்ப்பவர்களின் சீற்றத்தின் அடிப்படையாகும். நேர்மையான வேலை மூலமாக ஒளிவு மறைவின்றி தங்களது ஜீவாதாரங்களை சம்பாதிப்பவர்கள் பெரிய வரிகளை செலுத்துமாறு கேட்கப்படுகிறார்கள்.

பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட நேரத்தில் அதிகாரப் பதவிகளில் இருந்தவர்களும் அந்த வீழ்ச்சிக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டைக் கொண்டவர்களும் மீண்டும் அரசாங்க உயர்பதவிகளுக்கு வந்திருப்பதே குறிப்பாக எரிச்சல் தருவதாக இருக்கிறது.அவர்கள் அப்போது ஒளிவு மறைவற்றவர்களாக இருக்கவில்லை. இப்போதும் அப்படியே. தாங்கள் இறுதியாக விட்ட இடத்தில் இருந்து தொடருவதில் முனைப்புக் காட்டுகிறார்களே தவிர, தங்களின் செயற்பாடுகளினால் நேர்ந்த அவலத்துக்காக பச்சாதாபப்படுபவர்களாக இல்லை.

எரிவாயு, நிலக்கரி மற்றும் பெற்றோல் போன்ற அத்தியாவசியப் பண்டங்களை  கொள்வனவில் பாரிய ஊழல் தொடருவதாக முறைப்பாடுகள் கிளம்பியிருக்கின்றன. முறைப்படி கேள்விப்பத்திரங்கள் கோரப்படாமல் தனி வட்டாரம் மூலமாக புதிய பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களும் முன்னெடுக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. வறியவர்களும் வர்த்தக துறையினரும் துறைசார் நிபுணர்களும் உட்பட  பொதுவில் மக்களை  தியாகம் செய்யுமாறு கேட்பதற்கு முன்னதாக அரசாங்கம் அதன்  தார்மீக நியாயப்பாட்டை மீண்டும் பெறுவது இன்றியமையாததாகும். ஜனநாயக அரசியல் சமுதாயமொன்றில், தார்மீக நியாயப்பாடு என்பது  போராட்டக்காரர்களை கைதுசெய்து அவர்களின் குரல்வளையை நெரிப்பதன் ஊடாக அல்ல தேர்தல்கள் மூலமாகவே வருகிறது.

கலாநிதி ஜெகான் பெரேரா