Photo, UNICEF

மக்கள் போராட்டங்கள் நவீன வாழ்வின் ஒரு கசப்பான உண்மை. அதை மாற்றமுடியாததால் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. உள்நாட்டிலும் உலகளாவிய மட்டத்திலும் தினமும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறாத நாட்களே இல்லை எனலாம்.

இலத்திரனியல் ஊடகங்களில் 24 மணி நேரமும் செய்திச் சக்கரம் என்றாகிவிட்ட நிலையிலும் மிகுதியாக வழக்கத்துக்கு வந்துவிட்ட சமூக ஊடகங்களின் விளைவாகவும் இன்றைய சிறுவர்கள் உலகெங்கும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதை நன்கு அறிவார்கள். அவற்றில் இடம்பெறக்கூடிய வன்முறைகள் அவர்களை பரவசத்தில் ஆழ்த்திவிடக்கூடும் அல்லது திகைப்பில் மூழ்கடித்துவிடக்கூடும்.

சிறுவர்களும் வளர் இளம் பருவத்தவர்களும் ஆர்ப்பாட்டங்களில் அல்லது பேரணிகளில் பங்கேற்பது ஒன்றும் உலகில் இனிமேலும் புதினத்துக்குரியதல்ல. மேற்கு நாடுகளில் சமூகத்தைப் பாதிக்கின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசாங்கங்களிடம் தீர்வுகளை வேண்டி நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களையும் காண்கிறோம். குறிப்பாக காலநிலை மாற்றத்தினால் சுற்றாடலுக்கு ஏற்படுகின்ற பாதிப்பை கட்டுப்படுத்தக்கோரி ஏற்பாடு  செய்யப்படுகின்ற கவனயீர்ப்பு போராட்டங்களில் சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான நிறவெறி தாக்குதல்களைக் கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் கறுப்பின சிறுவர்கள் மாத்திரமல்ல வெள்ளையின சிறுவர்களும் கூட பங்கேற்கிறார்கள்.

தங்கள் சமூகத்தை பாதிக்கின்ற பிரச்சினைகள் பற்றிய பிரக்ஞையைக் கொண்டிருக்கக்கூடிய வயதுடைய சிறுவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பது உலகளாவிய மட்டத்தில் வழக்கமானதாகி விட்டபோதிலும், அது நியதி ஆகிவிடாது. சிறுவர்களுக்கென்று இருக்கின்ற உரிமைகள், அவர்களின் பாதுகாப்புடன் தொடர்புடைய பிரச்சினைகள் மற்றும் கோரமான வன்முறைச் சம்பவங்களுக்கு அவர்களை அம்பலப்படுத்துவதனால் ஏற்படக்கூடிய உணர்வதிர்ச்சிக் கோளாறுகள் தொடர்பில் அக்கறை கொண்ட அமைப்புக்களும் ஆர்வலர்களும் சிறுவர்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பதன் பாதக விளைவுகள் பற்றி இடையறாது  எச்சரிக்கை செய்தவண்ணமே இருக்கிறார்கள்.

இவ்வருடம் மார்ச் இறுதிப்பகுதியில் தொடங்கி ஜூலை நடுப்பகுதிவரை கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிவழி  ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியின்போது ஆயிரக்கணக்கில் மக்கள் இரவுபகலாக பங்கேற்றனர். அவர்களில் பெருமளவானோர் தங்கள் சிறுவர்களையும் ஏன் கைக்குழந்தைகளையும் கூட போராட்டக்களத்துக்குக் கொண்டுவந்தனர்.

பெற்றோர்கள் தாங்கள் ஏந்தியதைப் போன்ற அரசாங்கத்துக்கு எதிரான சுலோக அட்டைகளை அந்த சிறுவர்களின் கைகளிலும் கொடுத்தனர். இடுப்பில் குழந்தைகளைச் சுமந்த வண்ணம் போராட்டத்தில் கலந்துகொள்வது தங்களுக்கு  இடர்பாடுகளைக் கொண்டுவந்த ஆட்சியாளர்களை அதிகாரத்தில் இருந்து விரட்டும் இலட்சியத்துக்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதும் பிரத்தியேகமான செயற்பாடு என்று அவர்கள் நினைத்தார்கள் போலும்.

காலி முகத்திடல் போராட்டத்துக்கு ஆதரவாக கொழும்பில் வேறு ஒரு பகுதியில் நடைபெற்ற வீதிப் போராட்டத்தில் ஒரு பெண்மணி பிறந்து ஏழு நாட்களையான சிசுவுடன் கலந்துகொண்டதையும் அவரை அங்கிருந்து போகுமாறு ஆர்வலர்கள் கேட்டதையும் சமூக ஊடகங்களில் பரவலாக அந்த நாட்களில் காணக்கூடியதாக இருந்தது. காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக தங்கள் செல்லப்பிராணிகளான நாய்களுடன் வந்த பலர் அவற்றின் கழுத்திலும் ‘கோட்டா வீட்டுக்கு போ’ என்ற சுலோக அட்டையை தொங்கவிட்ட காட்சிகளையும் பல நாட்கள் காணக்கூடியதாக இருந்தது.

அமைதிவழியில் அந்தப் போராட்டம் நடைபெற்றவரை தங்கள் பிள்ளைகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்டு ஒருமைப்பாட்டை வெளிக்காட்டியதில் பெற்றோர் எந்த ஆபத்தையும் உணரவில்லை.வேறு பலரைப் பொறுத்தவரை, வழமையான காலிமுகத்திடல் அனுபவத்தையும் விட வித்தியாசமான ‘பின்னணி அமைவில்’ ஒரு கேளிக்கையாகவும் அதை உணர்ந்தார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் மக்கள் கிளர்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு எதிராக கடந்த சுமார் மூன்று மாதங்களாக தொடர்ந்து முன்னெடுத்துவருகின்ற அடக்குமுறைக்கு மத்தியில் கொந்தளிப்பு நிலை அடங்கிப்போயிருந்தாலும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் – முன்னரைப் போன்று பெருமளவில் மக்கள் பங்கேற்காவிட்டாலும் கூட – இடம்பெறவே செய்கின்றன.

இத்தகைய பின்புலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.9) காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கை்குழந்தைகளுடன் வந்து கலந்துகொண்டவர்கள் குறித்து பெரும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. அந்த ஆர்ப்பாட்டமும் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராகவும் ‘அறகலய’ போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் அடக்குமுறையை கண்டிக்கவுமே நடத்தப்பட்டது.

அமைதிவழி போராட்டமாக இருந்தாலும் தங்களிடம் முன் அனுமதி பெறப்படவில்லை என்பதை காரணமாகக் கூறிக்கொண்டு பொலிஸார் ஆர்பாட்டக்காரர்களைக் கலைக்கும் நடவடிக்கையில் இறங்கியபோது அவர்களில் பலர் கைக்குழந்தைகளை தலைக்குமேல் உயர்த்திப்பிடித்த வண்ணம் பொலிஸாரை எதிர்கொண்டனர். குழந்தைகள் அந்தக் காட்சிகளைக் கண்டு கதறி அழுதன. தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாத அந்த வயதுக் குழந்தைகளைப் போராட்டக்களத்துக்கு பெற்றோர் கொண்டுவந்த செயல் பரவலான கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது.

பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மூளக்கூடிய மோதல்களில் அந்த சின்னஞ்சிறுசுகள் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து நிச்சயமாக இருக்கிறது. போராட்டங்களுக்கு எதிராக பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் படைபலத்தை பிரயோகிப்பதைத் தடுக்கும் ஒரு தந்திரோபாயமாக போராட்டங்களில் பங்கேற்பவர்களை குழந்தைகளுடன் வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்பதாகக் கூட செய்திகள் வெளியாகின. அவை உண்மையானால், பால்மணம் மாறாத குழந்தைகளை ‘மனிதக் கேடயங்களாகப்’ பயன்படுத்தும் இந்தப் பொறுப்பற்ற செயல் நிச்சயம் கண்டனத்துக்குரியது; தவிர்க்கப்படவும் வேண்டும்.

‘அறகலய’ காலத்தைப் போலன்றி தற்போது பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் எந்தவொரு மக்கள் போராட்டத்துக்கும் எதிராக எடுத்த எடுப்பிலேயே படைபலத்தை பிரயோகிக்கிறார்கள். அதனால் குழந்தைகளை போராட்டங்களுக்கு கொண்டுவரும் வழக்கத்தை மக்கள் தவிர்க்கவேண்டும்.

‘அறகலய’ போராட்ட காலத்தில் காலிமுகத்திடலுக்கு பெருமளவானோர் தங்கள் பிள்ளைகளுடன் வந்ததை அவதானித்த தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை அவ்வாறு செய்வதைத் தவிர்க்குமாறு பெற்றோரையும் பாதுகாவலர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது. இப்போது கடந்தவாரம் அதே காலிமுகத்திடலில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்தும் அதிகாரசபை இத்தகைய போராட்டங்களுக்கு சிறுவர்களையும் குழந்தைகளையும் கூட்டிவந்து அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டாம் என்று கேட்டிருக்கிறது.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களைக் கேடயங்களாகப் பயன்படுத்துவது பாரதூரமான குற்றச்செயல் என்று கூறி அத்தகைய நடத்தைகளுக்கு எதிராக உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஜனாதிபதி செயலகத்தில் புதனன்று இடம்பெற்ற சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலின்போது, “சிறுவர்களினதும் இளைஞர்களினதும் உடல், உள, தார்மீக மற்றும் சமூக அபிவிருத்தியை உறுதிசெய்வதற்காகவும் அவர்களை சுரண்டல், பாரபட்சங்களில் இருந்து பாதுகாப்பதற்காகவும் அவர்களின் நலன்களில் விசேட அக்கறை செலுத்தவேண்டியது அரசின் கடமை” என்று அரசியலமைப்பில் இருக்கும் ஏற்பாட்டையும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுவர்களையும் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வந்த சம்பவங்களை அடுத்து இந்த  உத்தரவை பொலிஸாருக்கு பிறப்பித்திருக்கும் ஜனாதிபதி அதே சிறுவர்கள் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சத்துணவுப் பற்றாக்குறையால் மோசமாகப் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அந்த அவலநிலையில் இருந்து அவர்களை மீட்கவும் துரிதமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் சத்துணவு பற்றாக்குறை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைப்புக்கள் வெளியிடுகின்ற விபரங்களை அரசாங்க அமைச்சர்கள் சிலர் தவறானவை என்று குறைகூறுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. சத்துணவு பற்றாக்குறைப் பிரச்சினை பற்றிய முறைப்பாடுகளை அரசியல் நோக்குடன் செயற்படும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அண்மையில் நிராகரித்தார். பல வருடங்களுக்கு முன்னர் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் சத்துணவுப் பற்றாக்குறை நிலைவரம் பற்றி கூறுகின்றன, ஆனால் நிலைமை இப்போது முன்னரை விடவும் மேம்பட்டுவிட்டது என்று அமைச்சர் ரமேஷ் பத்திரன நாடாளுமன்றத்தில் கூறினார்.

பட்டினிக் கொடுமையால் பாடசாலைகளில் பிள்ளைகள் மயங்கிவிழுந்ததாகக் கூறப்படும் சம்பவங்களை அறிந்து வேதனையுற்ற அரசாங்க அதிகாரிகள் சிலர் சமூக ஊடகங்களில் பதிவுகளைச் செய்ததை அடுத்து அரச அலுவலர்கள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவுசெய்வதற்கு அரசாங்கம் தடைவிதித்திருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சிறுவர்கள் நிதியம் (யுனிசெவ்) அண்மையில் வெளியிட்ட தகவல்களின் பிரகாரம் வழமையான உணவு வகைகளை அதிகரித்த விலை கொடுத்து வாங்குவது கட்டுப்படியாகாது என்பதால் குடும்பங்கள் தங்களது கிரமமான உணவுகளை தவிர்க்கின்றன; அடுத்தவேளை உணவு எங்கிருந்து வரும் என்பது நிச்சயமற்ற நிலையில் சிறுவர்கள் பசியுடன் படுக்கைக்கு போகிறார்கள்; சுமார் 50 சதவீதமான சிறுவர்களுக்கு ஏற்கெனவே சில அவசரகால உதவிகள் தேவைப்படுகின்றன.

உலக உணவுத்திட்டத்தின் விபரங்களின் பிரகாரம் 10 இலங்கையர்களில் மூவர் – 63 இலட்சம் பேர் – உணவுப் பாதுகாப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; இவர்களில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார், ஐந்து வயதுக்கும் குறைவான சிறுவர்களும் அடங்குகிறார்கள்.

23 இலட்சம் சிறுவர்கள் உட்பட 57 லட்சம் பேர் அவசரமாக உணவு ஆதரவு தேவைப்படுகிறது; 5 வயதுக்கு குறைந்த சிறுவர்களில் 15.7 சதவீதமானோர் சத்துணவுப் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; தெற்காசிய நாடுகள் மத்தியில் சத்துணவுப் பற்றாக்குறையில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கிறது; இந்த நிலைவரம் 2022 அக்டோபர் தொடக்கம் 2023 பெப்ரவரி வரை மேலும் மோசமடையும் என்று யுனிசெவ் கூறுகிறது.

இதேவேளை, குடும்ப சுகாதார ஆலோசகர் டாக்டர் கௌசல்யா கஸ்தூரியாராச்சி கடந்தவாரம் வெளியிட்ட தகவல்களின் பிரகாரம் ஐந்து வயதுக்கு குறைந்த சிறுவர்களில் 14.6 சதவீதமானோர் வயதுக்கேற்ற நிறையைக் கொண்டவர்களாக இல்லை; ஐந்து வயதுக்கும் குறைவான சிறுவர்கள் மத்தியிலான நிறைக்குறைவைப் பொறுத்தவரை, நுவரெலியா மாவட்டமே உயர்ந்த சதவீதத்தை (21%) கொண்டிருக்கிறது ; வவுனியாவில் இது 19.9 சதவீதமாகவும் அம்பாறையில் இது 18.5 சதவீதமாகவும் இருக்கிறது.

இலங்கையில் இன்று சிறுவர்களின் நிலை எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பதை  இந்த விபரங்கள் பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன. எதிர்காலச் சந்ததிக்கு அபிவிருத்தியடைந்த இலங்கையை கிடைக்கச் செய்வதே தனது இலட்சியம் என்று அடிக்கடி கூறும் ஜனாதிபதி விக்கிரமசிங்க, இன்றைய சிறுவர்களும் குழந்தைகளும் ஆரோக்கியமானவர்களாக வளருவதை உறுதிசெய்தால் மாத்திரமே நலம்வாய்ந்த எதிர்காலச்சந்ததிகள் பற்றி பேசமுடியும் என்பதை உணர்ந்து சத்துணவுப் பற்றாக்குறைப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வைக்காண வேண்டும்.

போராட்டங்களுக்கு குழந்தைகளைக் கொண்டுவருவது எந்தளவுக்கு அவர்களின் நலன்களுக்கு விரோதமானதோ சத்துணவுப் பற்றாக்குறையை முறையாகக் கையாளாமல் அலட்சியம் செய்வதும் அதேயளவுக்கு விரோதமானது.

சிறுவர்களைப் பற்றி நெல்சன் மண்டேலா கூறியதை நினைவுபடுத்துவது இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாகும்.

“எமது சிறுவர்கள் என்ற பாறையின் மீதே எமது எதிர்காலம் கட்டியெழுப்பப்படும். அவர்களே எமது தேசத்தின் மகத்தான சொத்து. எமது தேசிய செல்வத்தை உருவாக்குபவர்களும் அவர்களே. சிறுவர்களை எவ்வாறு ஒரு சமூகம் நடத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் உண்மையான பண்பு மதிப்பிடப்படுகிறது.”

வீரகத்தி தனபாலசிங்கம்