“இது மகள்ட பேக் தம்பி. அவாட பேக்கயே அவாவ தேட பயன்படுத்துறன். எல்லா ஆவணங்களும் இதுக்குள்ளயேதான் இருக்கு. பேக் பழசாகி கிழியத் தொடங்கியும் விட்டது. ஆனால், மாற்றத் தோணுதில்ல. அவாட பேக்க, எப்படி ஒதுக்கிப் போடுறது தம்பி…”

“நிறைய பைகள் வச்சிருக்கன் தம்பி. ஒரு பை எவ்வளவு காலம்தான் பாவிக்கிறது. எத்தன இடங்களுக்குப் போய் வந்திட்டம், எத்தன அடிபிடிகளுக்கு மத்தியில போராட்டங்கள் நடத்தியிருக்கம். அப்போதெல்லாம் பைகள் கிழிபட்டுப் போயிடும். இந்தப் பை ஒரு நாலு மாசமா பாவிக்கிறன்.”

“நீண்டகாலமா எந்தப் போராட்டங்களுக்கும் போகவே இல்ல. அலுத்தப்போயிடுச்சி. மகன்ட  ஆவணங்கள் எல்லாம் சும்மா ஒரு பைலதான் வச்சிருக்கன். முன்னர் நல்ல பைகள் இருந்தது தம்பி. இப்ப எங்கயும் போறதில்லதானே…”

“இந்த 13 வருஷமா இந்தப் பையதான் வச்சிருக்கன். இதுலதான் என்ட மகன்ட படத்தயும் ஆவணங்களையும் பாதுகாப்பா வச்சிருக்கன்.”

காணாமலாக்கப்பட்ட தங்களுடைய அன்பிற்குரியவர்களை தேடி 2000 நாட்களுக்கும் மேலாக வடக்கு மற்றும் கிழக்கில் தொடர் போராட்டங்களை உறவுகள் மேற்கொண்டுவருகிறார்கள். தொடர் போராட்டமாக இது இடம்பெற்று வந்தாலும் பிள்ளைகள், கணவர், மனைவி, சகோதர சகோதரிகள் காணாமலாக்கப்பட்ட தினத்திலிருந்து – குறிப்பாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்ததிலிருந்து உறவுகளின் போராட்டம் உயிர்பெறத்தொடங்கியது. அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை பல அச்சுறுத்தல்கள், கண்காணிப்புகள், தாக்குதல்களுக்கு மத்தியில் தளராத துணிவோடு அவர்கள் போராடிவருகிறார்கள்.

இந்த நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் உறவுகளோடு அவர்களுடைய அன்பிற்குரியவர்களின் நினைவுகளை சுமந்த பைகளும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. சில பைகள் இன்னும் பயணித்துக் கொண்டிருக்கின்றன, சில பைகள் களைத்துப் போய் ஓய்வெடுத்துக்கொள்கின்றன. சில பைகள் துணையிழந்து தனிமையடைகின்றன. இன்னும் சில பைகள் நம்பிக்கையிழந்து வீட்டுக்குள் முடங்கிவிட்டன.

இவ்வாறு பல வலிகளை சுமத்துகொண்டிருக்கும் பைகளூடாக சொல்லப்பட்ட கதைகள் இவை. கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் இங்கு கிளிக் செய்வதன் ஊடாகவும் அவற்றைப் பார்க்கலாம்.

Pain with bags