Photo, AP Photo, The Hindu
அடிப்படை உரிமைகளும் வரையறைகளும்
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பிலான வரையறைகளைக் குறிக்கும் 15ஆம் உறுப்புரையில் கூறப்பட்டுள்ளவாறு அரசியல் யாப்பில் 12ஆம் உறுப்புரை (சமத்துவத்துக்கான உரிமை), 13ஆம் உறுப்புரை (தன்னிச்சையாக கைதுசெய்யப்படுதலிலிருந்தும் தடுத்து வைக்கப்படுதலிருந்தும் விடுபடுவதற்கான உரிமை, கடந்த காலத்தை உள்ளடக்கும் பயனுடையனவான தண்டனைச் சட்டவாக்கங்களைத் தடை செய்தல் ), 14 ஆம் உறுப்புரை (பேச்சு சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், குழுமச் சுதந்திரம், முயற்சி செய்வதற்கான சுதந்திரம், தடையின்றி நடமாடுவதற்கான சுதந்திரம்) ஆகிய உரிமைகளை அனுபவிக்க வேண்டியது தேசிய பாதுகாப்பு தொடர்பாக சட்டங்களினால் விதிக்கப்பட்டுள்ள வரையறைகளுக்கு உட்பட்ட வகையில் ஆகும். அங்கேயும் தேசிய சட்டம் என்பதனுள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் ஒழுங்கு விதிகளையும் உள்ளடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் மூலம் சிந்தனை உரிமை, மனட்சாட்சியின் உரிமை மற்றும் மத உரிமை (10ஆம் உறுப்புரை) மற்றும் சித்திரவதைகளில் இருந்து விடுபடும் உரிமை (11ஆம் உறுப்புரை) ஆகிய உறுப்புரைகளினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தவிர ஏனைய அடிப்படை உரிமைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன.
ஜூலை 18ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட அவசர காலச் சட்ட ஒழுங்குவிதிகள்
ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்தபோது ஜூலை 17ஆம் திகதி நாடுபூராகவும் அவசரகால சட்டத்தைப் பிரகடனப்படுத்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அவ்வாறு அவசர நிலைமையை பிரகடனம் செய்ய அரசியல் யாப்பின் 155ஆம் உறுப்புரையின் மூலமும் (40ஆவது அதிகாரம் ) பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழும் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பம் ஒன்றில் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் அவசர நிலைமை கட்டளைகளைப் பிறப்பிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஜூலை மாதம் 18ஆம் திகதி இலக்கம் 22289/07 கொண்ட அதி விசேட வர்த்தமானி மூலம் 2022 இலக்கம் 1 கொண்ட அவரச நிலைமை (விதிமுறைகள் மற்றும் அதிகாரங்களை) உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்த உத்தரவு சில பகுதிகளை உள்ளடக்கியது. அவற்றை அடிப்படைத் தேவைகளை நடைமுறைப்படுத்தல், சோதனையிடல் மற்றும் கைது செய்தல், குற்றம் மற்றும் தண்டனை, விசாரணை மற்றும் வழக்கு விசாரணை மற்றும் பல்வேறு அதிகாரங்கள் என அறிமுகப்படுத்தலாம்.
இங்கு அவசர நிலைமை உத்தரவு அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள காலப் பகுதிக்கானது மட்டுமேயாகும். 2022 ஜூலை மாதம் 17ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட அவசரகால நிலைமை 2022 ஜூலை மாதம் 27ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்படுமாக இருந்தால் ஆகஸ்ட் மாதம் 17 வரை அமுலில் இருக்கும் என்பதுடன், அவசரகாலச் சட்டப் பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்காவிட்டால் ஜூலை 31ஆம் திகதி வரை (14 நாட்கள் வரை ) நடைமுறையிலிருக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் தேர்வாகியிருக்கும் ஜனாதிபதிக்கு இந்த அவசரகால நிலைமையை இரத்துச் செய்ய முடியும். எவ்வாறாயினும், இரத்துச் செய்யவில்லை என்றால் அவசரகால நிலைமை நடைமுறையில் இருக்கும் காலமெல்லாம் அவசரகாலச் சட்ட ஒழுங்கு விதிகள் எமது நாட்டின் அரசியல் யாப்பினைத் தவிர ஏனைய எல்லா சட்டங்களையும் மிஞ்சிய ஒரு பகுதியாக வலுவில் இருக்கும்.
அடிப்படை உரிமைகள் மீது அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளின் தாக்கம்
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான தவறுகள்
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அத்தியாவசிய சேவை ஒன்றில் ஈடுபடும் உத்தியோகத்தர் ஒருவருக்கு (அரச அல்லது தனியார்) சட்டபூர்வமான காரணம் ஒன்றினால் தவிர பணிக்குச் சமூகமளிக்காமை, வேலை நிறுத்தம் செய்தல், தவிர்த்தல், பணியாற்றுவதை நிராகரித்தல் குற்றமாகும். அவ்வாறே பிரகடனப்படுத்தப்படுகின்ற அத்தியாவசிய சேவைக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதும் இந்தப் பிரகடனத்தின் மூலம் தவறாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளதுடன், அவ்வாறான குற்றம் ஒன்றை இழைப்பவருக்கு உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்க முடியும் என்று இந்தக் கட்டளைகளில் சொல்லப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக அவ்வாறான குற்றம் ஒன்றுக்காக குற்றவாளியாக்கப்படும் நபர் ஒருவரின் அசையும், அசையாத சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட முடியும் என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறே அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனம் ஒன்றிற்குள் அனுமதியின்றி உட்பிரவேசிப்பதை தவிர்ப்பதற்காக முன் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியமும் இந்தக் கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகள் மூலம் அரசியலமைப்பின் 14(1) உறுப்புரையினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சட்டபூர்வமான தொழில் ஒன்றில் ஈடுபடும் உரிமை, அமைதியாக ஒன்று கூடும் உரிமை மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பன மட்டுப்படுத்தப்படுகின்றன என்பது தெளிவாகிறது.
கைதுசெய்தல் மற்றும் சோதனையிடல்
கைதுசெய்தல் மற்றும் சோதனையிடல் தொடர்பில் ஏதேனும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் அல்லது இராணுவப் படையின் உறுப்பினர் ஒருவரால் இந்த கட்டளைகளில் ஏதேனும் ஒரு கட்டளையின் கீழ் வரும் ஏதேனும் குற்றம் ஒன்றிக்கு அல்லது (19 ஆம் அதிகாரம்) குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவை ( 345, 354, 355, 356, 357, 358, 359, 360, 360அ, 360ஆ, 360இ, ஆகிய உறுப்புரைகளும், 364, 365, 365அ, 365ஆ, 365இ ஆகிய உறுப்புரைகளும், 427 இலிருந்து 446 வரையான உறுப்புரைகளின் அடிப்படையிலான குற்றமொன்றை செய்கின்ற அல்லது செய்துள்ள அல்லது குற்றம் ஒன்றுடன் தொடர்புடைய அல்லது குற்றம் ஒன்றை செய்ததாக சந்தேகிக்கப்படுவதற்கு நியாயமான காரணங்களை உடைய ஏதேனும் ஒரு நபரை சோதனை இடுவதற்கு, அவ்வாறு சோதனை இடுவதற்காக தடுத்து வைப்பதற்கு அல்லது பிடியாணை இல்லாத நிலையில் சிறைப்படுத்த முடியும் என்று கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறே இராணுவப் படையின் உறுப்பினர் ஒருவரால் கைது செய்யப்படுமிடத்து 24 மணித்தியாலத்திற்குள் பொலிஸ் நிலையம் ஒன்றில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், பெண்களை சோதனை செய்யும் பொது பெண்களாலேயே சோதனையிடப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசரகால சட்ட ஒழுங்குவிதிகளின் இந்த ஏற்பாடுகளின் மூலம் அரசியலமைப்பின் 13ஆம் பிரிவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தன்னிச்சையாக சிறைப்படுத்தல் மற்றும் தடுத்து வைத்தலுக்கும், குற்றமற்றவர் என்ற பூர்வாங்க முடிவிற்கும், 14(1) உறுப்புரை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தடைகளின்றி நடமாடுவதற்கான சுதந்திரத்திற்கும் கடுமையான மட்டுப்படுத்தல்களை விதிக்கின்றது என்பது தெளிவாகிறது.
கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை கட்டுப்படுத்துதல்
11ஆம் கட்டளையில் ஜனாதிபதிக்கு குறித்த கால எல்லைக்குள் குறித்த பிரதேசம் ஒன்றினுள் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்களை தடை செய்வதற்கு கட்டளையிட முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அவசரகாலச் சட்ட ஏற்பாட்டின் மூலம் 14(1) உறுப்புரையினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், குறிப்பிட்ட பிரதேசத்தில் தடையின்றி நடமாடுவதற்கான சுதந்திரம் என்பன மட்டுப்படுத்தப்படுகின்றன.
ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்தல்
குறிப்பிட்ட பிரதேசம் ஒன்றில் குறிப்பிட்ட காலப்பகுதி ஒன்றில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவரின் அனுமதியின்றி பொது இடங்களில் நடமாடுவதைத் தவிர்ப்பதற்கான உத்தரவு ஒன்றை விடுப்பதற்கு அல்லது ஊரடங்கு சட்டத்தை பிரகடனப்படுத்துவதற்கு அதிகாரம் உள்ளதாக 12ஆம் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அவசரகாலச் சட்ட ஏற்பாட்டின் மூலம் 14 (1) உறுப்புரை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், தடையின்றி நடமாடுவதற்கான சுதந்திரம், சட்டபூர்வமான தொழில் ஒன்றில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் என்பன மட்டுப்படுத்தப்படுகின்றன.
ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல்
குறித்தவொரு பிரதேசத்தில் குறித்தவொரு காலப்பகுதியினுள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியொருவரின் அனுமதியின்றி பொது இடங்களில் நடந்துகொள்வதை தடுக்கும் உத்தரவு ஒன்றைப் பிறப்பிப்பதற்கோ, ஊரடங்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பிப்பதற்கோ பொலிஸ் மா அதிபருக்கு அதிகாரம் உள்ளது என 12ஆம் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அவசரகால சட்ட ஏற்பாடு ஊடாக உறுப்புரை 14(1) மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் மற்றும் சட்டபூர்வமான தொழிலொன்றில் ஈடுபடும் சுதந்திரம் என்பன மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
குற்றங்கள்
இந்த அவசரகால கட்டளைகள் மூலம் பின்வரும் செயல்கள் குற்றமாகக் கருதப்படுகின்றன:
- சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல்
- ஒரு நபரைக் கொலை செய்தல் அல்லது காயம் விளைவித்தல்
- குற்றவியல் அச்சுறுத்தல் விடுத்தல் மற்றும் அத்துமீறுதல்
- அழிவடைந்த அல்லது கைவிடப்பட்ட ஆதனங்களை சூறையாடுதல்
- (19ஆம் அத்தியாயமான) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் 345, 354, 355, 356, 357, 358, 359, 360, 360அ, 360ஆ, 360இ, 364, 365, 365அ, 365ஆ பிரிவுகளின் கீழ் ஏதேனும் ஒரு குற்றத்தைச் செய்தல்
- கொள்ளையடித்தல், களவு, பலவந்தமாகப் பெற்றுக்கொள்ளல்
- (19 ஆம் அத்தியாயமான) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் 427 முதல் 446 வரையான பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவின் கீழ் ஏதேனுமொரு குற்றத்தைச் செய்யும் அல்லது அவ்வாறான வளாகமொன்றிலிருந்து ஏதேனும் பண்டங்களை அல்லது பொருட்களை சட்டவிரோதமாக அகற்றுதல் அல்லது அகற்ற முயலுதல்
- மேற்கூறிய செயல்களுக்காக நிகழ்த்தப்படும் சட்டவிரோதமான கூட்டமொன்றின் அங்கத்தவராக இருத்தல். இவ்வாறான குற்றமொன்றுக்கு குற்றவாளியாகும் நபரொருவருக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்க முடியும்.
- பொதுமக்கள் பாதுகாப்புக்கு, மக்களின் அமைதிக்கு அல்லது மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளை கொண்டு நடாத்துவதற்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய விடயங்களை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்களை பகிரக்கூடாது எனவும், பொதுமக்களை அச்சுறுத்தக்கூடிய அல்லது மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்கக்கூடிய அல்லது இனரீதியான வன்முறைக்கு ஏதுவாகக்கூடிய அல்லது குற்றமொன்றைச் செய்யத் தூண்டக்கூடிய எந்தவொரு வதந்தியையோ பொய்யான கூற்றையோ பரப்பக்கூடாது எனவும், அச்சுறுத்தல்களை விடுக்கக்கூடாது எனவும் அவசரகால கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அரசாங்க உத்தியோகத்தரொருவரை அல்லது அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள நபரொருவரை அசௌகரியத்துக்கு உட்படுத்துதல்.
- அதிகாரமுள்ள நபர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தல் அல்லது இடைஞ்சல் ஏற்படுத்துதல்,
- பெருந்தெருக்கள், புகையிரதப்பாதை ஆகியவற்றுக்கு தடங்கல் ஏற்படுத்துதல் அல்லது சேதம் விளைவித்தல் மற்றும் இந்தக் குற்றங்களைச் செய்தல், அவற்றைச் செய்யல் முயலுதல், ஒத்தாசை புரிதல் அல்லது அவற்றைச்செய்வதற்குச் சதித்திட்டம் மேற்கொள்ளுதல் என்பனவும் இந்த கட்டளைகளின்படி குற்றங்களாகும்.
அதே போன்று ஏதேனுமொரு அவசரகால சட்ட விதிமுறைக்கு முரணாக செயற்படும் நபர்கள் தொடர்பில் அறிந்திருப்பின் உடனடியாக அது குறித்து ஒரு பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்க வேண்டும் எனவும் இவ் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் விதிமுறைகளின் மூலமாக 14(1) உறுப்புரை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பேச்சு சுதந்திரம், அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம், குழுமச்சுதந்திரம் என்பன மட்டுப்படுத்தப்படுகின்றன.
வழக்குத்தொடுத்தல்
இக்குற்றங்கள் தொடர்பில் வழக்குத்தொடுப்பதற்கு சட்ட மாஅதிபரின் அனுமதியின் அடிப்படையில் உயர் நீதிமன்றமொன்றில் வழக்குத்தாக்கல் செய்ய முடியும்.
தடுத்துவைப்புக் கட்டளைகள்
இந்தக் கட்டளைகளின் கீழ் இழைக்கப்படும் ஒரு குற்றத்துக்காக கைதுசெய்யப்படும் நபரொருவர் தொடர்பில் 14 நாட்கள் வரை தடுத்து வைக்கும் கட்டளையொன்றைப் பிறப்பிக்க முடியும். அதன்படி, பொலிஸாருக்கு இவ்வாறான சந்தேக நபரொருவரை ஒரு நீதவான் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்காது 7 நாட்கள் வரை தடுத்துவைக்க இயலும். இந்த ஏற்பாடுகள் மூலமாக அரசியலமைப்பின் 13ஆம் உறுப்புரையின்படி உறுதிப்படுத்தப்பட்ட தன்னிச்சையாக கைது செய்வதிலிருந்தும் தடுத்து வைப்பதிலிருந்தும் விடுபடுவதற்கான உரிமை மற்றும் நியாயமான வழக்கு விசாரணையொன்றுக்கான உரிமை என்பன மட்டுப்படுத்தப்படுகின்றன.
இராணுவத்துக்கு வழங்கப்படும் விசேட அதிகாரங்கள்
இந்தக் கட்டளைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் காலப்பகுதியினுள் சார்ஜண்ட் பதவிக்குக் குறையாத ஒரு பதவியில் உள்ள பொலிஸ் அதிகாரியொருவருக்கு அல்லது கோப்ரல் பதவிக்குக் குறையாத ஒரு பதவியில் உள்ள இலங்கை இராணுவத்தின் உறுப்பினரொருக்கு அல்லது பிரதான கடற்படை சிப்பாய் பதவிக்குக் குறையாத ஒரு பதவியில் உள்ள இலங்கை கடற்படையின் உறுப்பினரொருவருக்கு அல்லது கோப்ரல் பதவிக்குக் குறையாத ஒரு பதவியில் உள்ள இலங்கை விமானப்படையின் உறுப்பினரொருவருக்கு ஏதேனுமொரு பொது வீதியில், புகையிரதப்பாதையில், பொது மைதானத்தில், பொது களியாட்ட விளையாட்டுக்களத்தில் அல்லது வேறேதேனும் பொது இடத்தில், கடற்கரையில் அல்லது பொதுக் கட்டடத்தில் அல்லது அரசாங்க திணைக்களம் ஒன்றுக்கு அருகில் அல்லது அந்த வளாகத்தில் இருக்கும் நபரொருவரை அல்லது நபர்களை அவ்விடத்திலிருந்து அகலுமாறு ஆணையிட முடியும். மேலும், அந்த விதிமுறைக்கு கீழ்ப்படிதல் சந்தர்ப்பத்துக்கேற்ப குறித்த நபரது அல்லது குறித்த ஒவ்வொரு நபரினதும் கடப்பாடு ஆகும்.
இந்த அவசரகால சட்ட ஒழுங்குமுறை ஏற்பாடுகள் மூலமாக அரசியலமைப்பின் 14(1) உறுப்புரையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் மற்றும் சட்டபூர்வமான வியாபாரமொன்றில் ஈடுபடும் உரிமை, தனியாகவோ கூட்டாகவோ கலாசாரத்தை அனுபவிக்கும் உரிமை என்பன மட்டுப்படுத்தப்படுகின்றன.
அவசரகால சட்ட விதிமுறை மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படும் பட்சத்தில்,
அவசரகால சட்டத்தை அமுல்படுத்தல் மூலம் அல்லது அவசரகால சட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் கருமமாற்றும் அதிகாரியொருவரின் செயற்பாடு ஒன்றின் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படும் பட்சத்தில் அல்லது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கான அபாயம் நிலவும் பட்சத்தில் அரசியலமைப்பின் 126ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைவாக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்ய முடியும்.
சட்டத்தரணி ஜகத் லியன ஆரச்சி