Photo, MODERNFARMER

நாட்டின் நெருக்கடி மத்தியதர வர்க்கத்தினரையே தெருவில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியுள்ளபோது வளங்களும் வாய்ப்புக்களும் மட்டுப்படுத்தப்பட்ட அன்றாடம் கூலிவேலை செய்யும் விளிம்புநிலை மக்களின் நிலை என்ன? அவர்களின் தேவைகளுக்கான தீர்வுகள் என்ன?

மக்களின் தேவைகள்

கிளிநொச்சியில் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கி மலையகத்திலிருந்தும், யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்தும் இடம்பெயர்ந்து அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் கடந்த ஒரு வருடமாக ஈடுபட்டு வருகிறேன். பல கலந்துரையாடல்களை இந்த குழுக்களில் உள்ள பெண்களுடன் செய்துள்ளேன். ஆனால், கடந்தவாரம் அவர்களைச் சந்தித்தபோது பொருளாதார நெருக்கடியால் அனுபவிக்கும் சிரமங்களைப் பற்றியே அதிகளவில் கூறிக்கொண்டிருந்தார்கள்.

குறிப்பாக “அரிசி, பருப்பு, சீனி தருவீர்களா? அதுதான் இப்ப தேவைப்படுது. ஒரு வேளை காலை உணவுக்கே 500 ரூபா வேணும். ஒருநாள் முழுவதும் தோட்டத்தில் புல்லு பிடுங்கினாலும் 1000 ரூபாதான் கிடைக்குது. அந்த வேலைகூட குறைவாகதான் இருக்கிது. 1,000 ரூபாவாக இருந்த சீமெந்து இப்ப 2,850 ரூபா ஆகிட்டுது. எங்களுக்கு வேலை இல்லை. நாலு பேருக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கே 3,000 ரூபா தான் சமுர்த்தியால தருவாங்கள். அதுவும் ஒழுங்காக கிடைக்கிறதில்ல. நாங்கள் இப்ப கடன்களை எடுத்தும் சிறிய நகைகளை அடகுவைத்தும்தான் சமாளிக்கிறம். இன்னும் எத்தனை நாளுக்கு நாங்கள் இப்பிடி சமாளிப்பது?” என்று அவர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்ட விடயங்கள் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது.

ஒருபுறம் கொழும்பில் நடக்கும் போராட்டங்களும் அதனுடன் கூடிய அரசியல் மாற்றங்களை வலியுறுத்தும் கோசங்களும். மறுபுறம் அடுத்தவேளை உணவுக்குகூட திண்டாடும் மக்கள். இரண்டுமே போராட்டம்தான், ஆயினும் எதற்கு முன்னுரிமை கொடுப்பது?

இந்த நெருக்கடி அனைத்து மட்டங்களில் உள்ள மக்களையும் பாதிக்கின்றபோதிலும் குறிப்பாக நாட்கூலி வேலை செய்வோரை முதலில் பாதிக்கின்றது. காரணம் அவர்களுக்குச் சொத்துக்களோ வளங்களோ மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக சமூக புறந்தள்ளல்களுக்கு உட்படும் மக்களுக்கு நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருந்தபோதே வாழ்வாதாரத்தை முன்கொண்டு போவதற்கு பல சிக்கல்கள் இருந்தது. தற்போது அது இன்னும் மோசமாகி வருகிறது.

சமூகபொருளாதார பின்னணி

இவர்களுக்கு ¼ ஏக்கர் அல்லது ½ ஏக்கர் பெமிட் காணிகளே இருக்கின்றன. சிலருக்கு இன்னும் பெமிட் வழங்கப்படவில்லை. விவசாயத்திற்குப் போதுமான காணிகளோ பெரிய குளங்களில் இருந்து நீர்ப்பாசனத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்களோ இல்லை. கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தங்களால் அவர்கள் பல இடப்பெயர்வுகளைச் சந்தித்து இருந்த சிறிய சொத்துக்களையும் இழந்தனர்.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும்கூட வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பொருத்தமான உதவிகள் கிடைக்கவில்லை. அரச வர்த்தக வங்கிகள்கூட அரசாங்க உத்தியோகத்தர்கள் அல்லது சொத்துக்கள் பிணையாக கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே தமது கடன் சேவைகளை வழங்கியதால் நியாயமான வட்டிவீதத்தில் நிதித்தேவையை பூர்த்தி செய்தற்கான வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. அந்த நிலை தனியார் நுண்நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் நாள் கடன், கிழமைக்கடன்களை அணுகுவதற்கு அவர்களைத் தள்ளியது. இக்கடன்களின் அதிகூடிய வட்டிவீதமும் அறவீடுகளின் போதான முறைகேடுகளும் இவர்களை கடன்பொறிக்குள் சிக்க வைத்ததோடு பல குடும்ப பிரச்சினைகளையும் உருவாகவும் தற்கொலைகள் ஏற்படவும் வழிவகுத்தது. மிகவும் மோசமான அந்த நிலையிலிருந்து அவர்கள் தம்மை ஓரளவாவது விடுவித்துக் கொள்வதற்கு பல வருடங்கள் எடுத்தது.

தற்போது பெரும்பாலான ஆண்கள் தோட்டங்களிலும் கட்டுமான பணிகளிலும் கூலித்தொழிலாளர்களாக இருக்கிறார்கள். சிலர் சிறிய அளவில் குத்தகை காணிகளில் விவசாயம் செய்கிறார்கள். பெண்கள் வீட்டில் இருந்து தமது பிள்ளைகளை பராமரிப்பதுடன் கோழி, ஆடு, மாடு வளர்தலிலும் தையல் வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள்.​குடும்பங்களின் பொருளாதார சூழ்நிலை காரணமாக  உயர்கல்வியை தொடரமுடியாத இளம் தலைமுறையினரும் வீட்டில் தமது பிள்ளைகளை பராமரிப்பதற்கான உதவி கிடைக்கும் பெண்களும் ஆடைத் தொழிற்சாலைகளுக்கும் கண்ணிவெடி அகற்றும் வேலைகளுக்கும் செல்கிறார்கள்.

நெருக்கடி ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள்

சீமெந்தின் விலை அதிகரிப்புடன் பெருமளவிலான மேசன் கூலித்தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். விவசாயத்திற்குத் தேவையான உரங்கள், கிருமிநாசினிகள் இல்லாததால் கடந்த போகத்தில் விளைச்சல்கள் அரைவாசியாக குறைந்தது. அதை அனுபவமாகக் கொண்டு இந்த போகம் விவசாய செய்கையை குறைத்துள்ளார்கள். இதனால் தோட்டங்களிலும் கூலிவேலைகள் மிக குறைவாகவே கிடைக்கிறது. ஆடைத்தொழிற்சாலைகளில் வேலை புரிபவர்களுக்கு மாதாந்தம் நிலையான வருமானம் கிடைத்தாலும் தற்போது சடுதியாக அதிகரித்து செல்லும் பொருட்களின் விலையேற்றங்களால் குடும்ப செலவுகளை ஈடுசெய்ய முடியவில்லை.

கடன்திட்டங்கள் ஊடாகவோ நீண்டகாலத்தில் பயன்தரும் திட்டங்களுக்கூடாகவோ உடனடியாக தேவைப்படும் உணவுதேவையை பூர்த்திசெய்ய முடியாது. விவசாயிகள் விவசாயத்தின் அளவை குறைத்தது உணவுப் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்துகிறது. எதிர்காலத்தில் கடுமையான போஷாக்கு பிரச்சினைகள் உருவாகலாம். போஷாக்கு குறைபாடுள்ள தலைமுறையால் சமூக பொருளாதாரம் பின்னடைவாகவே தொடர்ந்தும் இருக்கும்நிலை உருவாகலாம்.

மேலும் உணவை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் தம்மிடமுள்ள சிறிய சொத்துக்களைக்கூட இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவது அவர்களின் எதிர்காலத்தை ஸ்திரமற்றதாக்கும். இந்த நிலை உருவாகும்வரை விட்டுவிட்டு பின்பு வாழ்வாதார திட்டங்கள் என்ற பெயரில் ஆடு, மாடு, கோழிகளை கொடுப்பதால் அவர்களது வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. யுத்தத்திற்கு பின்னரும்கூட இப்படியான ஒரு நிலைதான் இருந்தது. எந்தவிதமான சொத்துக்களோ நிரந்தர வருமானமோ இல்லாத மக்கள் வேறுவழியில்லாமல் நுண்நிதிக் கடன்களைப் பெற்றார்கள். தற்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடியும் அதே நிலைக்கு மக்களை இட்டுச்செல்கிறது. அவர்கள் முழுமையாக கடன்பொறிக்குள் சிக்குவதற்கு முன்பு கடந்தகால அனுபவத்தை படிப்பினையாக கொண்டு விரைந்து தீர்வுகளை தேடவேண்டும்.

மாற்றுத்தீர்வுகள்

அரசியல் பொருளாதார மாற்றங்களுக்கூடாக எதிர்பார்க்கப்படும் தீர்வுகள் நடைபெறுவதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படும். அதற்கிடையில் பல விடயங்கள் நடந்துமுடிந்துவிடும். பசி கண்களுக்கு புலப்படுவதில்லை என்பதால் இல்லை என்று கூறிவிட முடியாது. தினமும் அதற்கான தேவை உள்ளது. அதனால் சமூகத்தில் ஏற்படுத்தப்படும் தாக்கம் ஆழமானது என்பதை விளங்கிக்கொண்டாலும் கூட அதை நாம் கலந்துரையாடல்களுக்குள் கொண்டுவருவது மிக குறைவாகவே இருக்கிறது. அது அரசாங்கத்தின் கடமை என்றுகூறி அப்படியே விட்டுவிடுகிறோம். இது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல சக மனிதர்களாக, சமூக அமைப்புகளாக நம் எல்லோரது கடமையும்கூட.

விவசாய திணைக்கழங்கள் விவசாயத்திற்குத் தேவையான உள்ளீடுகளை முன்னுரிமைப்படுத்தி இறக்குமதி செய்தற்கான அழுத்தங்களை வழங்குவதன் ஊடாகவோ அல்லது தொண்டு நிறுவனங்களிடம் உதவிகளை பெறுவதன் ஊடாகவோ தன்நிறைவுப் பொருளாதாரத்திற்கான வழிவகைகளை செய்வதுடன். பசளைகள் உரங்கள் அதிகளவில் தேவைப்படாத கிழங்கு வகைகள் மற்றும் தானியங்களின் செய்கையை விவசாயிகள் மத்தியில் ஊக்குவிக்க வேண்டும்.

தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூகநிறுவனங்கள் தங்களது அமைப்புகளுக்கூடாக செய்யும் வேலைத்திட்டங்களில் உணவுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்கும் திட்டங்களுக்கு முன்னரிமை கொடுக்க வேண்டும். புலம்பெயர் அமைப்புகளிடமும் நன்கொடையாளர்களிடமும் இருந்து உதவிகளை பெற்று உணவு வங்கிகளையும் பசியால் வாடும் குடும்பங்களை இனங்கண்டு நேரடியாக உணவு விநியோகங்களை செய்யும் நிலையங்களையும் உருவாக்க  முன்வரவேண்டும்.

இந்து, கிறிஸ்தவம், இஸ்லாமிய சமய நிறுவனங்கள் இன, மத பேதங்களைக் கடந்து மக்களுக்கு உதவ முன்வரவேண்டும். குறிப்பாக செல்வச்சந்நிதி, நயினாதீவு போன்ற ஆலையங்கள் அன்னதான பணிகளை செய்துவருகின்றன. அதேபோல நல்லூர் போன்ற பெரிய சமய நிறுவனங்களும் தம்மிடமுள்ள பெருமளவிலான சொத்துக்களில் குறிப்பிட்ட அளவையாவது மக்களின் தேவைகளுக்கு பயன்படுத்துவது அவசியமாகும்.

தனி மனிதர்களாக எங்களால் எல்லோருக்கும் எப்போதும் உதவ முடியாது என்றாலும்கூட எங்களுக்கு முன்னால் இருக்கும் ஒருவரின் ஒருநேர பசியை போக்க முடியுமாக இருந்தால் அதுகூட இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சிறிய பங்களிப்பாக இருக்கும்.

சுகன்யா காண்டீபன்
(வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி)