Photo, Ishara S Kodikara/AFP, FINANCIAL TIMES
மக்கள் ஆதரவை இழந்துவிட்ட அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுப்பதாக சாதாரண இலங்கையர்கள் சந்தேகப்படக்கூடிய நிலை குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருப்பது அவசியம்
இந்தியாவே இலங்கையின் ஒரேயொரு அயல்நாடு. இலங்கையில் நடப்பவற்றை இந்தியா அவதானிக்கிறது. குறிப்பாக, இலங்கையின் நிகழ்வுப்போக்குகள் மக்களின் துன்பங்களுடன் தொடர்புடையவையாக இருந்தால் இந்தியா அது குறித்து வேதனை அடைகிறது. அவற்றை தீர்க்க அக்கறைப்படுகிறது. இரு நாடுகளையும் பிணைக்கின்ற உறவுகள் எண்ணற்றவை. அவற்றை இங்கு முழுமையாக விபரிப்பது சாத்தியமில்லை.
இலங்கையர்கள் அவர்கள் சிங்களவர்களாக இருந்தாலென்ன, தமிழர்களாக இருந்தாலென்ன எமது ஒன்றுவிட்ட சகோதரர்களே; எம்மிடமிருந்து பாக்கு நீரிணையால் மாத்திரமே பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். பூகோள அடிப்படையில் நோக்கும்போது, இலங்கையின் அமைவிடம் மிகவும் முக்கியமானதாகும்; இந்து சமுத்திரத்தின் பரந்த தென்பிராந்தியத்தின் கப்பல்போக்குவரத்து பாதைகளுக்கு அண்மித்தாக அமைந்திருக்கிறது.
மேலும், தென்னிந்திய தீபகற்பம் இலங்கையில் இருந்து குறுகியதொரு தூரத்திலேயே இருக்கிறது. அதன் காரணத்தினால்தான் இலங்கைத்தீவின் வட பகுதியில் சீன உட்கட்டமைப்புத் திட்டங்கள் பற்றிய எந்தப் பேச்சும் மூலோபாய ரீதியில் இந்தியாவுக்கு கசப்பானதாக இருக்கிறது. இலங்கை பொருளாதாரப் பேராபத்தில் சிக்கி அவசர உதவியை நாடும் நிலைவந்தபோது இந்தியா நேசக்கரத்தை நீட்டியிருக்கிறது. எமது உதவி காலப்பொருத்தமுடையது. அவலத்துக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு சில நிவாரணங்களை இந்தியா அனுப்பியிருக்கிறது.
ஆனால், இலங்கையின் அரசியல் நிலைவரம் அத்தகைய முதலுதவித் தீர்வுகளுக்கு ஏற்புடையதாக இல்லை. அரசாங்க உயர்மட்டங்களில் நிலவும் ஊழல், தவறான வழியிலான ஆட்சிமுறையுடன் கூடிய எதேச்சாதிகாரம், தவறான நிதிமுகாமைத்துவம் ஆகியவை காரணமாக இலங்கையின் ஜனநாயகம் அண்மைய வருடங்களில் பலவீனப்படுத்தப்பட்டுவிட்டது. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னரான காலகட்டத்தில் முன்னென்றும் இல்லாத பரந்தளவிலான வேதனையை காணக்கூடியதாக இருக்கிறது. பயங்கரமான உள்நாட்டுப் போரின்போது கூட அரச கட்டமைப்பின் செயற்பாடுகள் இந்தளவுக்கு ஒருபோதும் நிலைகுலைந்ததில்லை.
இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் அந்நாட்டில் ஏற்பட்டிருக்கக்கூடிய அனர்த்தங்களின்போது உதவிக்கு விரைந்து ஓடிச்செல்லும் முதல் நாடு என்ற வகையில் இந்தியா குடும்பத்தை கைவிடமுடியாது என்பது வெளிப்படையானது. இலங்கை எமது குடும்பம். நெருக்கடி முகாமைத்துவத்தில் அல்லது இலங்கையர்களின் வேதனையைத் தணிப்பதற்தை தீர்வுகளை வழங்குவதில் ஆற்றலைக் கொண்டிராத சீனர்கள் தங்களுக்கே உரித்தான பிடுங்கல் இராஜதந்திரத்துக்கு அடுத்த பாதை திறப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த காலத்தில் சீனர்களுடன் சல்லாபிப்பதற்கு பேர்போன ராஜபக்ஷர்கள் இந்தியாவுக்கு எதிராக சீனர்களை அரவணைக்கும் நடைமுறைகளுடன் கூடிய கொள்கைகள் மற்றும் ஆட்சிமுறையில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டார்களா என்பது கேள்வி. அவர்கள் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டார்கள் என்பது வெளிப்படையானது. மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட – நியாயத்தன்மை பெருமளவில் வீதிகளில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசாங்கமொன்றுக்கு முட்டுக்கொடுப்பதாக சாதாரண இலங்கையர்களினால் அடையாளப்படுத்தப்படுவதில் இருந்து இந்தியா எச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும்.
எதிரணியின் ஐக்கியம் காலத்தின் தேவை. ஆனால், அது ஒரு மாயத்தோற்றமாகவே இருக்கிறது. அடிப்படையில் இலங்கையின் தற்போதைய ஜீவாதார நெருக்கடிக்கான தீர்வுகள் அந்த நாட்டுக்குள்ளேயே காணப்படவேண்டியிருக்கின்றன. உள்நாட்டுப் போருக்குப் பின்னரான காலகட்டத்து நிகழ்வுப்போக்குகள் பிளவுபட்ட அரசியல் சமுதாயத்தையும் தேசத்தையும் ஐக்கியப்படுத்துவதற்குத் தேவையான குணப்படுத்தல்களை கொண்டிருக்கவில்லை. இப்போது பல வருடகாலமாக பெரும்பான்மையினவாத அரசியலே கோலோச்சிக்கொண்டிருக்கிறது. அந்த இனவாதமும் தவறான ஆட்சிமுறை மற்றும் தலைமைத்துவமும் ஒரு காலத்தில் பெரும் ஆற்றல்களைக் கொண்டிருந்த ஒரு நாட்டுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
எமது அயல்நாடுகள் பலவற்றின் நிலைவரங்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான – மறைப்பதற்கு அரிதான போட்டியினால் வரையறை செய்யப்படுகின்றன. அதை எமது அயல்நாடுகள் நன்கு பயன்படுத்திக்கொள்கின்றன. அதிகாரப்போட்டியை மனம்போனபோக்கில் ஊக்குவித்து வளர்ப்பதன் மூலமாக தங்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து இந்த அயல்நாடுகள் நிதானமாக சிந்தித்துச் செயற்படுவதாக இல்லை. அந்த விளையாட்டில் ராஜபக்ஷர்கள் மகா கெட்டிக்காரர்கள். ஆனால், அவர்களது அசட்டுத்துணிச்சலும் திறமையின்மையும் சேர்ந்து சரிவைக் கொண்டுவந்திருக்கிறது. இல்லாமையில் இருந்து விடுதலை, பொருளாதார உறுதிப்பாடு, தங்களது அன்றாட வாழ்வில் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற ஒரு அரசாங்கம் ஆகியவற்றையே மக்கள் அடிப்படையில் விரும்புகிறார்கள் என்பது ராஜபக்ஷர்களின் சரிவில் இருந்து பெறக்கூடிய தெளிவான பாடமாகும்.
தங்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களின் பாரதூரமான குறைபாடுகளுக்காக இலங்கையர்கள் பெரிய விலையைச் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது பிரச்சினைகள் குறுகிய காலத்தில் தணியப்போவதில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் எந்த உதவியும் ஆலோசனையும் கடுமையான நிபந்தனைகளுடனேயே வந்துசேரும். செலவினங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
இந்தியா தொடர்ந்து அதன் உதவிக்கரத்தை நீட்ட வேண்டியிருக்கும். எமது உதவிகள் மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளாக இருக்கவேண்டும்.
உள்நாட்டுப்போரின் கசப்பான வருடங்களில் இந்தியா இலங்கையின் இனப்பிளவின் இரு மருங்கிலும் உள்ள மக்களிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திக்கொண்டது. மிகுந்த நிதானத்துடன் கூடிய மக்கள் இராஜதந்திரத்தின் ஊடாக பழைய குறைபாடுகளுக்கு பரிகாரம் காண்பதற்கு இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. கடுமையாக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட தலைமைத்துவத்துக்கு இந்தியா முட்டுக்கொடுக்கின்றது என்ற எந்த எண்ணமும் (தவறானதாக இருந்தாலும் கூட) இலங்கையர்கள் மனதில் ஏற்படுவது சாதுரியமாக தவிர்க்கப்படவேண்டும். இந்தியாவின் இலங்கைக் கொள்கை அமிலப்பரிசோதனையை எதிர்நோக்கிநிற்கிறது. தவறுக்கு இடமிருக்கக்கூடாது ஏனென்றால், சிறிய நாடாக இருந்தாலும் இலங்கை எமது மூலோபாய நலன்களைப் பொறுத்தவரை நாம் தவறிழைக்காமல் செயற்படவேண்டிய அளவுக்கு பெரிய நாடு.
இறுதியில் குடும்பம் குடும்பம்தான். இலங்கையர்கள் எமது குடும்பம்.
நிரூபமா ராவ்
(முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர்)
Standing by family என்ற தலைப்பில் இந்தியா டுடே பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்: வீரகத்தி தனபாலசிங்கம்.