Photo: Dinuka Liyanawatte/ Reuters, IRISHTIMES

கடந்த பல தசாப்தங்களாக, ஆட்சியில் எந்த அரசாங்கம் இருப்பினும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இயலுமாக்கிய துஷ்பிரயோகங்கள் ஒரு போதும் நிறுத்தப்படவில்லை. அவை ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் தன்மைக்கு ஏற்ப குறைவடைந்தன அல்லது அதிகரித்தனவேயன்றி நிறுத்தப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கூட இச்சட்டத்தின் கீழான கைதுகள் மற்றும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மீதான சித்திரவதைகள் இடம்பெற்றன. எனினும், அவை குறைந்த அளவிலேயே காணப்பட்டன.

கடந்த சில தசாப்தங்களாக இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் துஷ்பிரயோகங்களின் போக்குகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக அமைந்திருப்பது அத்துஷ்பிரயோகங்கள் ஆழ வேரூன்றிக் காணப்படுவதை எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. உதாரணமாக, 2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களும் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் LTTE அமைப்புடன் தொடர்புடைய குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டவர்கள் அனுபவித்த அதே வகையான துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டனர். இது எமக்கு இரண்டு விடயங்களை எடுத்துக் காட்டுகின்றது. முதன்மையாக, இச்சட்டம் இயற்கையிலேயே துஷ்பிரயோகத்தன்மை கொண்டதாக உள்ளதுடன் அது அடிப்படை மனித உரிமை நியமங்களை பின்பற்றியொழுகவில்லை. இரண்டாவதாக, மனித உரிமை துஷ்பிரயோகங்கள் சாதாரணமாக்கப்பட்டு எமது பொறிமுறைகளில் ஆழ வேரூன்றிக் காணப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் கைது மற்றும் தடுத்து வைத்தல் என்பன தக்க நடைமுறைகளுக்கு ஏற்ப இடம்பெறுவதில்லை, உரிமை மீறல்கள் விதிவிலக்காக அல்லாமல் நடைமுறையாக மாறிவிட்டன.

கடந்த ஒக்டோபர் 23, 2021 அன்று பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட கடிதம் ஒன்றை இதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். அக்கடிதத்தில் பொலிஸார் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகளை மேற்கொள்ளும் போது மற்றும் விசாரணைகளை முன்னெடுக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கடிதத்தில் எந்தவித விசேட பணிப்புரைகளும் உள்ளடக்கப்படவில்லை. மாறாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைதுகள் மாத்திரமன்றி எந்தவொரு கைதின் போதும் மதிக்கப்பட வேண்டிய அடிப்படை சட்ட நடைமுறைகள் பற்றி மாத்திரமே குறிப்பிடப்பட்டிருந்தன. கைதுகளின் போது பின்பற்றப்பட வேண்டிய அடிப்படையான வழிமுறைகளை பொலிஸ் மா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றமை கைதுகளின் போது சரியான வழிமுறை பின்பற்றப்படாமல் இருப்பதை எமக்குக் காண்பிக்கின்றது.

பெயரளவிலான “சீர்திருத்தம்”

முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் காணப்படும் மனித உரிமைகளுக்கு மாறான அம்சங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை. எதேச்சையான தடுப்புக் காவலுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுக்களை சமர்ப்பித்தல் மற்றும் கைதுகள் பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு (HRCSL) அறிவிக்க வேண்டிய தேவைப்பாடு போன்ற முன்மொழியப்பட்டுள்ள அநேகமான உரிமைகள்/ பாதுகாப்புகள் சட்டத்தில் ஏற்கனவே காணப்படும் விடயங்கள். அவை புதிய விடயங்கள் அல்ல.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) அல்லது அந்தப் பதவி நிலைக்கு மேலான பதவிநிலை கொண்ட ஒருவரிடம் வழங்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் வழக்குகளில் ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ளப்பட வழிவகுக்கும் பிரிவு இன்னும் மாற்றப்படாமல் நிலைத்திருக்கின்றது. இந்தப் பிரிவு குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக சித்திரவதை பயன்படுத்தப்படுவதை இயலுமாக்குகின்றது என்பது உச்ச நீதிமன்றம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றால் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட யதார்த்தமாகும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களில் 83% ஆனவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் அவர்களில் 90% ஆனவர்கள் குற்ற ஒப்புதல் ஒன்றை வழங்குமாறு வற்புறுத்தப்பட்டமை என்பன மனித உரிமைகள் ஆணைக்குழு சிறைச்சாலைகள் தொடர்பில் முன்னெடுத்த ஆய்வில் வெளிவந்த விடயங்களாகும். இந்தப் பிரிவு உருவாக்கும் அநீதிகளுக்கு ஒரு உதாரணமாக செல்வச்சந்திரன் சந்திரபோஸ் என்பவரின் கவலை தரும் வாழ்க்கைக் கதை எம்முன்னே காணப்படுகின்றது. செல்வச்சந்திரன் கைது செய்யப்படும் வேளை அவரின் வயது 27 ஆக இருந்ததுடன் சித்திரவதை மூலம் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவர் தனது வாழ்வின் 13 வருடங்கள் சிறையில் கழித்த பின்னர் 2019ஆம் ஆண்டு நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார். எனினும், விடுதலையாகி இரண்டு வருடங்கள் நிறைவுறுவதற்கு முன்னர் 2021இல் மரணமடைந்தார்.

புதிய முன்மொழிவுகளுக்கு ஏற்ப, நீதவான்கள் குறைந்தது மாதத்துக்கு ஒரு தடவையாவது நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று பார்வையிட வேண்டும் என்ற ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலோட்டமாக நோக்கும் வேளை இது நேர்மறையான ஏற்பாடு போன்றே தோன்றுகின்றது. எனினும், இதன் யதார்த்தம் முற்றிலும் வேறுபட்டது. நபர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என நீதவான் கருதினால் குறித்த நபரை சட்ட வைத்திய அதிகாரி (JMO), “ஆஜர்படுத்த உத்தரவிடலாம்” என்று குறித்த சட்டப் பிரிவு குறிப்பிடுகின்றது. எனவே, இங்கு நீதவான் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நபரை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆற்றுப்படுத்துவது கட்டாயமானதல்ல. குறித்த நபர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என சட்ட வைத்திய அதிகாரி கண்டறிந்தால், நீதவான் குறித்த நபருக்கு மருத்துவ பராமரிப்பு வழங்க உத்தரவிட வேண்டும். எனினும், சித்திரவதை தொடர்பான குற்றச்சாட்டை பற்றி விசாரணை செய்யுமாறு அவ்விடயத்தை பொலிஸ் மா அதிபருக்கு நீதவான் உத்தரவிடுவது இங்கு கட்டாயமானதல்ல. எனவே, அவ்வாறான உத்தரவு ஒன்றை மேற்கொள்வது நீதவானின் விருப்பத்தெரிவுக்கு உரிய விடயமாகும். மேலும், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நபர் மீண்டும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அந்நபர் வேறொரு தடுப்பு நிலையத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்பதும் முன்மொழிவுகளில் உள்ளடங்கவில்லை. இந்த சூழமைவில், பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் சித்திரவதை தொடர்பான முறைப்பாடுகள் மேற்கொள்வதைத் தவிர்க்கலாம்.

சித்திரவதைகளைத் தடுப்பதற்காக நீதவான் ஒருவர் குறைந்தது மாதத்துக்கு ஒரு தடவை தடுப்பு நிலையங்களுக்கு விஜயம் செய்வது போதுமானதா என்பது தற்போது நலிந்த நிலையில் காணப்படும் சித்திரவதையைத் தடுப்பதற்கான பொறிமுறைகளின் சூழமைவில் நோக்கப்பட வேண்டும். இப் பொறிமுறைகளின் நலிவுத்தன்மை 17 வயது நிரம்பிய சந்துன் மலிங்க என்ற நபர் தடுப்புக்காவலில் இருந்த வேளை மரணித்த சம்பவம் தொடர்பான வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் கடமைகளை நிறைவேற்றத் தவறிய ஒரு தரப்பாக சட்ட வைத்திய அதிகாரியும் அமைந்திருந்தமை தீர்ப்பில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனித உரிமைகள் ஆணைக்குழு அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்றன தடுப்பு நிலையங்களுக்கு விஜயம் செய்யும் வேளை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களை அவ்வமைப்புகளின் பார்வையில் இருந்து மறைத்து வைப்பது மிகவும் இலகுவான விடயமாகும். இலங்கை மனித உரிகைள் ஆணைக்குழுவின் ஆணையாளராக நான் கடமையாற்றிய வேளை பூஸா தடுப்பு முகாம் மற்றும் ஏனைய சிறைச்சாலைகளுக்கு விஜயம் செய்த வேளை அவ்வாறான பல அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டுள்ளன. எமது விஜயங்களுக்கு முன்னர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்கள் மாத்திரமன்றி ஏனைய சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களும் சித்திரவதை அடையாளங்கள் வெளித் தெரியும் வேளை எமது பார்வையில் இருந்து மறைக்கப்படுவது வழமையான விடயமாக இருந்தது. அநேகமான சந்தர்ப்பங்களில், அவ்வாறான தடுத்து வைக்கும் வசதி ஒன்றுக்கு அடிக்கடி மற்றும் அடுத்தடுத்த நாட்கள் மேற்கொள்ளப்படும் விஜயங்கள் மற்றும் வளாகங்களை நன்றாக சோதனை செய்தல் என்பவற்றின் மூலமே அவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களையும் கண்டுபிடிக்க முடிந்தது.

மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சித்திரவதைகளை இலகுபடுத்தும் மேலும் இரண்டு பிரிவுகளை நீக்குவதற்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது சித்திரவதைகளை தடுக்கும் நோக்கம் அரசுக்கு உள்ளதாக அரசாங்கம் கூறிவருவது இதயசுத்தி அற்றதாகும். நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும் குறித்த நபரை விசாரணைக்காக வேறொரு இடத்துக்குக் கொண்டு செல்லும் அனுமதியை பொலிஸாருக்கு பிரிவு 7(3) வழங்குகின்றது. மேலும், நபர் ஒருவர் நீதிமன்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் மற்றும் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும் கூட அந்நபர் தடுத்து வைக்கப்படும் இடத்தினை தீர்மானிக்கும் அதிகாரத்தை பிரிவு 15A பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்குகின்றது. இந்த இரண்டு பிரிவுகளின் ஏற்பாடுகளும் பயன்படுத்தப்பட்ட வேளைகளிலேயே மிகவும் கொடூரமான சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கையிடப்படுகின்றது. நபர் ஒருவரை நீதிமன்றத் தடுப்புக்காவலில் இருந்து மற்றும் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும் கூட அந்நபரின் நீதிமன்றக் காவலை அகற்றும் அதிகாரத்தை நிறைவேற்றுத் துறைக்கு பிரிவு 15A வழங்குகின்றது. இதன் மூலம் நிறைவேற்றுத்துறை நீதித்துறைக் கட்டளை மீது மேலாதிக்கம் செலுத்துகின்றது.

பிணை: ஒரு கையால் கொடுத்துவிட்டு மறு கையால் பறித்தெடுத்தல்

பொதுவான சட்டத்தில் பிணை வழங்கல் என்பது ஒரு விதிவிலக்காக அன்றி நெறிமுறையாக அமைந்துள்ளது. எவ்வாறாயினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் பிணை நெறிமுறையாக அன்றி விதிவிலக்காகவே கையாளப்படுகின்றது.

தற்பொழுது, நபர் ஒருவருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத பட்சத்தில் நீதவான் சட்டமா அதிபரின் ஒப்புதலுடன் பிணை வழங்குவதை பயங்கரவாதத் தடைச் சட்டம் அனுமதிக்கின்றது. அசாதாரண சூழ்நிலைகளில், குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிணை வழங்க முடியும். நபர் ஒருவருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை முடிவடையும் வரை குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்படுவதை பிரிவு 15(2) கட்டாயமாக்குகின்றது. மேலதிகமாக, பிணை வழங்கப்படுவதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதலை தேவைப்படுத்துவதன் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டம் பிணை வழங்குவதற்கான நீதித்துறையின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துகின்றது. நடைமுறையில், சட்டமா அதிபரின் ஒப்புதலைப் பெறுவது கடினமான விடயமாக அமைவதனால் பலர் வருடக்கணக்கில் தடுப்புக்காவலில் துயருறும் நிலை உருவாகின்றது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் நபர் ஒருவர் உச்ச பட்சமாக 15 வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடைமுறையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிணை வழங்கப்படுவதில் ஒழுங்கான வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. உதாரணமாக, பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு 2017ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மட்டக்களப்பு உயர் நீதிமன்றத்தினால் நவம்பர் 2020 இல் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையிலும் பிணை வழங்கப்பட்டது. இதற்கு முரணாக, சட்டமா அதிபரின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையிலும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க புத்தளம் உயர் நீதிமன்றம் மறுத்தது.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களில் பிணை பற்றிய புதிய ஏற்பாடு ஒன்றும் உள்ளடங்குகின்றது. நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு 12 மாதங்கள் நிறைவுற்ற நிலையிலும் வழக்கு விசாரணை தொடங்கப்படாவிட்டால், தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது தடுப்புக் காவலில் உள்ள அந்த நபரை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்யலாம் என்று அந்த ஏற்பாடு குறிப்பிடுகின்றது. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 12 மாதங்களின் பின்னரும் வழக்கு விசாரணை தொடங்கப்படாவிட்டால் உயர் நீதிமன்றம் பிணை வழங்குவதை பரிசீலனை செய்யலாம் என அந்த ஏற்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய பிரிவின் இரண்டு பகுதிகளும் வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்படாவிட்டால் பிணை வழங்கப்படலாம் எனக் குறிப்பிடப்படும் அதேவேளை பகுதி இரண்டில் மாத்திரமே குற்றப்பகர்வு பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. முதலாவது பகுதி குற்றப்பத்திரிகை பற்றிக் குறிப்பிடாததால் அப்பகுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் பிணை வழங்கப்படுவதை பற்றியே அது குறிப்பிடுகின்றது என ஒருவர் அனுமானிக்கலாம்.

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய சில காரணிகள் உள்ளன. முதலாவதாக, தற்போதைய சட்டத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத சந்தர்ப்பத்தில் நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்குவதை அனுமதிக்கும் நிலையில், முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் அவ்வாறான சந்தர்ப்பங்களில் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு பிணை வழங்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது போல் தோன்றுகின்றது. இரண்டாவதாக, பிணை வழங்கப்படுவது குற்றப்பத்திரிகை பதிவுசெய்யப்படல் அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் வழக்கு தொடங்கப்படாமல் இருப்பதில் தங்கியுள்ளது. வழக்கு விசாரணை ஆரம்பமாகி விட்டால் வழக்கு விசாரணை முடிவடையும் வரை குறித்த நபரை உயர் நீதிமன்றம் தடுப்புக் காவலில் வைப்பதை முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் அனுமதிக்கின்றது. எனவே, முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் பிணை தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் சாத்தியம் அற்றதாக அமைந்துள்ளது.

தவறாக வழிநடத்தும் தகவல்களும் வெறுமையான வாக்குறுதிகளும்

உலகளாவிய ரீதியில் பயங்கரவாத முறியடிப்பு வடிவமைப்புகளை அரசாங்கங்கள் மனித உரிமைகளை மட்டுப்படுத்த பயன்படுத்துகின்றன. எனவே, எமது சொந்த அரசாங்கம் உள்ளடங்கலாக அரசாங்கங்கள் மனித உரிமைகளை நசுக்கும் சட்டவாக்கங்களை நியாயப்படுத்த சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறான தவறாக வழிநடத்தும் தகவல்களை முறியடிக்க மற்றும் அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாக்கும் அதன் கடமையை ஒழுங்காக நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கவும், நாம் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிபுணர்கள் டிசம்பர் 2021 இல் வழங்கிய கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் நியமங்களை நோக்க வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான எந்தவொரு சட்டமும் பயங்கரவாதத்தின் துல்லியமான வரைவிலக்கணத்தை உள்ளடக்க வேண்டும். அத்துடன், நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு 48 மணிநேரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றத்தினால் தடுப்புக்காவல் பற்றி தீர்மானிக்கப்பட வேண்டும். குற்றவியல் நீதி தொடர் செயன்முறைக்கு வெளியே நிகழும் அனைத்து நிர்வாக தடுத்து வைத்தல்களும், அதாவது, பாதுகாப்பு அமைச்சரின் தடுப்புக் காவல் ஆணைக்கு ஏற்ப தடுத்து வைக்கப்படல் போன்ற செயன்முறைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைக்கு எதிரான குழு பரிந்துரைத்துள்ளது. சட்ட உதவியை அணுகுவதற்கான உரிமையில் அனைத்து விசாரணைகளின் போதும் ஒருவரின் சட்டத்தரணி அங்கு பிரசன்னமாவது முக்கியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நபர்கள் அமைதியாக இருத்தல் குற்ற ஒப்புதலாக புரிந்துகொள்ளப்படல் மற்றும் நபர்களின் பாதிப்புறும் ஏதுநிலையை பயன்படுத்தி குற்ற ஒப்புதலைப் பெறல் என்பன அந்நபர்களின் நியாயமான வழக்கு விசாரணைக்கான உரிமையை மீறுவதாக அமைகின்றன. சட்டத்தரணிகளின் பிரசன்னத்தின் மூலம் இவ்வுரிமை மீறல்களை எம்மால் தடுக்க முடியும். பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் வழக்கில் ஆதாரமாகக் கருதப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அத்துடன், பிணை வழங்குதல் விதிவிலக்காக அன்றி நெறிமுறையாக மாற்றப்பட வேண்டும்.

இந்த அடிப்படை மனித உரிமைப் பாதுகாப்புக்கள் விட்டுக்கொடுப்புகளுக்கு அப்பாற்பட்டவை. இந்த அடிப்படை மனித உரிமைகளுக்கான பாதுகாப்புகள் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களில் காணப்படவில்லை.

அம்பிகா சற்குணநாதன்