Photo, Selvaraja Rajasegar

ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஆவலுடன் காத்திருக்கும் நபர்களை சந்தோசப்படுத்துவதற்காகவன்றி சுதந்திரத்தை மதிக்கும் பிரஜைகளை சந்தோசப்படுத்துவதற்காகவே ஓர் அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும். அரசின் அடித்தளம், அரசியல் இலக்குகள், நிறுவனங்கள் மற்றும் செயன்முறைகள் என்பவற்றை ஜனநாயகமயமாக்கும் ஓர் அரசியல் யாப்பு சீர்த்திருத்தமொன்றுக்கூடாக மட்டுமே அதனை மேற்கொள்ள முடியும்.

இலங்கையில் தற்பொழுது இடம்பெற்று வரும் அரசியல் யாப்பு தொடர்பான உரையாடலில் தவிர்க்க முடியாத விதத்தில் எழுப்பப்பட்டு வரும் ஒரு கேள்வி ஜனாதிபதியை மையமாகக் கொண்டிருக்கும் தற்போதைய அரசியல் யாப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்பதாகும். ஜனாதிபதி முறையா, நாடாளுமன்ற முறையா என்பவற்றுக்கிடையிலான தெரிவை மேற்கொள்வதுடன் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையாகவும் இந்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த இரு தெரிவுகளுக்கிடையில் எந்தத் தெரிவை அதிக அளவில் மக்கள் விரும்புகின்றனர் என்பது குறித்த தெளிவான ஒரு சித்திரம் கிடைக்கவில்லை. அது குறித்த பொதுமக்களின் கருத்துக்களைக் கண்டறியும் மதிப்பீட்டாய்வுகள் நடத்தப்பட்டால் அந்த விடயம் தொடர்பான தெளிவான ஒரு கருத்தை நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும். நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் – குறிப்பாக, பெருமளவுக்கு தோல்வியடைந்திருக்கும் கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியின் ஆட்சி தொடர்பான பொதுமக்களின் விமர்சனங்கள் தீவிரமடைந்து வரும் இன்றைய சூழ்நிலையில் – ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான அல்லது திருத்தியமைப்பதற்கான ஒரு தெரிவுக்கு பொதுமக்களில் பெரும்பாலானவர்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்ள முடியுமென அனுமானிக்கலாம்.

அரசியல் யாப்பின் இயல்பு தொடர்பாக மேலே எழுப்பப்பட்ட கேள்வி ஓரளவுக்கு ஆழமாகப் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டிய விடயமாகும். அது தொடர்பான உப கேள்விகள் சிலவற்றை எழுப்பி, இந்த உரையாடலை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

முதலாவது கேள்வி, 1978 தொடக்கம் தொடர்ச்சியாக நிலவி வரும் ஜனாதிபதி ஆட்சி முறை கட்டமைப்பில் சீர்த்திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமா என்பதாகும். 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பை நோக்கும் பொழுது, அது அமெரிக்க மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி ஆட்சி முறையிலும் பார்க்க வேறுபட்ட ஜனாதிபதி ஆட்சிமுறையொன்றாக இருப்பதனை அவதானிக்க முடிகிறது. அமெரிக்காவில் நிறைவேற்று அதிகாரம் முழுமையாக ஜனாதிபதியின் கீழ் இருந்து வருவதுடன்,  ஜனாதிபதிப் பதவி நாடாளுமன்றத்திலிருந்து சுயாதீனமானதாக உள்ளது. ஜனாதிபதியின் கீழ் அமைச்சரவை செயற்பட்டு வரும் ஆட்சி முறையே அமெரிக்காவில் காணப்படுகிறது. இலங்கை ஜனாதிபதியும் நாடாளுமன்றத்திலிருந்து சுயாதீனமானவராக இருக்கின்றார். ஆனால், நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பாகமாக இருக்கும் அமைச்சரவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். இலங்கைக்கு பெருமளவுக்கு நெருக்கமான பிரான்ஸ் ஜனாதிபதி, இலங்கையைப் போலவே நாடாளுமன்றத்திலிருந்து சுயாதீனமானவராக இருக்கின்றார். அதுமட்டுமன்றி, நாடாளுமன்றம் ஜனாதிபதியின் கீழ் செயற்படுவதுடன், இது ஒரு இருமைத் தன்மையைக் கொண்டுள்ளது. 19ஆவது திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றத்தின் இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட்டாலும் கூட, 20ஆவது திருத்தத்துக்கூடாக அது மீண்டும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

1978 தொடக்கம் எமது அரசியல் யாப்பு ஒரு தனித்துவமான இயல்பைக் கொண்டதாக உள்ளது. அதாவது, ஜனாதிபதி முறையையும், வெஸ்ட்மினிஸ்டர் முறையின் ஒரு சில அம்சங்களையும் முன்னெடுத்துச் செல்லும் ஒரு கலப்பு அல்லது இரட்டை அரசியல் யாப்பாக இலங்கையின் அரசியல் யாப்பு இருக்கின்றது.

பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்றம் இரு சபைகளைக் கொண்டிருந்த போதிலும், இலங்கை நாடாளுமன்றம் தனியொரு சபையைக் கொண்ட நாடாளுமன்றமாக இருக்கின்றது. 1972ஆம் ஆண்டு தொடக்கம் அந்த நிலைமை காணப்படுகிறது. ஆனால், இலங்கையின் நாடாளுமன்றமான மக்கள் பிரதிநிதிகள் சபை, பிரித்தானிய மக்கள் பிரதிநிதிகள் சபை, அமைச்சரவை, அரசியலமைப்பின் வடிவம் மற்றும் சம்பிரதாயங்கள் என்பவற்றின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ளது. அது அமெரிக்க அல்லது பிரான்ஸ் முறைகளின் பிரகாரம் உருவாக்கப்பட்டிருக்கவில்லை.

அரசியல் யாப்பு தொடர்பாக இலங்கையில் தற்பொழுது இடம்பெற்று வரும் உரையாடலில் மேலே குறிப்பிட்ட விடயம் பின்வரும் விதத்தில் எழுப்பப்படும். இலங்கை நாடாளுமன்றம் முழுமையாக அல்லது திருத்தப்பட்ட வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்றத்தின்/ அமைச்சரவையின் வடிவத்தை தெரிவு செய்து கொள்ள வேண்டுமா? இந்த விடயம் தொடர்பாக எமது நாட்டில் இதுவரையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்கவில்லை எனத் தெரிகிறது. எனவே, ஓர் அரசியல் யாப்பிற்கான வரைவைத் தயாரிக்கும் பொழுது ஒரு சிலரின் அபிப்பிராயத்தின் பிரகாரம் அவசரத் தீர்வொன்றைத் தெரிவு செய்து கொள்ளும் நிலையே இங்கு பெருமளவுக்கு இடம்பெறக் கூடியதாக இருக்கின்றது. அது எவ்விதத்திலும் ஒரு ஜனநாயக மாற்றுவழியாக இருந்து வர மாட்டாது. அந்த விடயம் தொடர்பாக இப்பொழுதிலிருந்தே திறந்த கலந்துரையாடலொன்று இடம்பெறுவது முக்கியமாக இருப்பதுடன், அரசியல் யாப்பின் உள்ளடக்கம் தொடர்பாக அவசர முடிவுகளை எடுப்பதைத் தடுப்பதற்கு அத்தகையதொரு கலந்துரையாடல் தேவையாகவும் இருக்கின்றது.

ஜனாதிபதியை மையமாகக் கொண்ட அரசியல் யாப்பு?

“ஜனாதிபதி ஆட்சி முறை” என்ற எண்ணக்கரு இலங்கையில் அரசியல் யாப்பு வல்லுனர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு மத்தியில் ஜனாதிபதியை மையமாகக் கொண்ட மற்றும் நாடாளுமன்றம் ஜனாதிபதிக்குக் கீழ் செயற்படும் ஒரு கட்டமைப்பாக இருக்கும் ஓர் அரசியல் யாப்பு என்ற கருத்திலேயே புரிந்து கொள்ளப்படுகின்றது. அவ்வாறு புரிந்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. இலங்கையின் அரசியல் யாப்பு 1978 தொடக்கம் அந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டே செயற்பட்டு வந்துள்ளது. அதாவது, அதனை ஒரு கலப்பு முறை என அறிமுகம் செய்து வைத்தால் அதில் எந்தத் தவறுமில்லை. இலங்கையில் ஜனாதிபதியை மையமாகக் கொண்ட ஆட்சி முறை தொடர்பான தற்போதைய அரசியல் யாப்பு சீர்த்திருத்தம் தொடர்பான உரையாடலில் பின்வரும் விதத்தில் இரண்டு கேள்விகள் தோன்றியுள்ளன.

1). ஜனாதிபதியை மையமாகக் கொண்ட அரசியல் யாப்பை, நாடாளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஒரு அரசியல் யாப்பாக மாற்றியமைக்க வேண்டுமா?

2). ஜனாதிபதி பதவியை முற்றாக ஒழிக்க வேண்டுமா?

இந்தச் சவால் தொடர்பாக தெளிவான ஒரு விளக்கத்தினைப் பெற்றுக் கொள்ளாவிடில், 2015 இல் ஏற்பட்ட பின்னடைவு தொடர்பான அனுபவம் மீண்டுமொரு முறை ஏற்பட முடியும்.

20ஆம் திருத்தத்தின் கீழ் செயற்படும் முழுமையான அதிகாரங்களைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி முறையை சீர்த்திருத்தங்கள் எவையுமில்லாமல் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை இப்பொழுது இலங்கையில் மூன்று குழுக்கள் ஆதரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. இதில் முதலாவது குழுவினர் – அரசியல், வணிக மற்றும் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குழுவினராக இருப்பதுடன், அவர்கள் இலங்கைக்கு இப்பொழுது ஒரு ஜனநாயக ஆட்சி முறை தேவைப்படவில்லை மற்றும் தனிநபர் ஒருவர் முழுமையாக அதிகாரம் செலுத்தும்  அரசியல் யாப்பொன்றே தேவையாக இருக்கின்றது என்ற முடிவில் உள்ளார்கள். சிங்களத் தேசியவாதிகள் மற்றும் தேசிய பாதுகாப்புச் சக்திகள் ஆகியோரைக் கொண்ட தரப்புகள் இதில் இரண்டாவது குழுவாகும். அரச அதிகாரம் ஒரு மையத்தைச் சூழ, ஒரு நபரைச் சூழ ஒன்று திரண்டிருக்கும், வரையறுக்கப்பட்ட அல்லது பெயரளவிலான ஒரு ஜனநாயகமும், ஒற்றை அரசும் இருக்கவேண்டுமென அவர்கள் நம்புகின்றனர். மூன்றாவது குழு – இலங்கையில் அரச தலைவராக வர வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் திடசங்கற்பமும் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் ஆவார்கள். அதிகாரம் குறைக்கப்பட்ட ஒரு ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொள்வதற்கு அவர்கள் விரும்புவதில்லை. இந்த ஆதங்கத்துடன் கூடிய நபர்கள் மற்றும் அவர்களைச் சூழ இருக்கும் குழுவினர் அரசாங்கக் கட்சியிலும், அதே போல எதிர்கட்சிகளிலும் இருக்கின்றார்கள்.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து, சீர்த்திருத்தங்களுடன் கூடிய ஒரு ஜனாதிபதி முறையை எடுத்து வரும் தெரிவு குறித்து சிந்தித்துப் பார்க்கும் பொழுது இங்கு நாங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பொறியிருக்கின்றது. அது அதிகாரம் குறைக்கப்பட்ட ஜனாதிபதியை மக்கள் நேரடி வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்வதற்குப் பதிலாக, வரையறுக்கப்பட்ட வாக்காளர் குழுவொன்றின் மூலம் தெரிவு செய்வதற்கு ஏற்பாடு செய்வதாகும். 19ஆவது திருத்தத்தில் காணப்பட்ட மிக முக்கியமான பலவீனம் இந்தப் பொறி அரசியல் யாப்பிலிருந்து நீக்கப்படாததாகும். பின்வரும் காரணங்களினால் அதனை ஒரு பொறியாகக் கருத முடியும். ஜனாதிபதி நேரடியாக மக்களுடைய வாக்குகளினால் தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பத்தில் வாக்காளர்களில் பெரும்பான்மை விருப்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மக்கள் ஆணை தனக்குக் கிடைத்துள்ளது என்றும், அது பிரதமருக்கோ அல்லது வேறொரு நபருக்கோ கிடைத்திராத ஒரு மக்கள் ஆணை என்றும் அவர் கூற முடியும். அந்த அடிப்படையில், பிரதமர், அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம் ஆகிய தரப்புகளின் மீது தனது அதிகாரத்தை விரிவாக்கிக் கொள்ள முடியுமென அத்தகைய நபர்கள் சிந்திக்கிறார்கள். 19ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட பின்னரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அதன் பின்னர் ஜனாதிபதி பதவியேற்ற கோட்டபாய ராஜபக்‌ஷவும் இந்த நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள். இது ஒரு அரசியல் பிரச்சினையாக இருப்பதனால், இதனைத் தீர்த்து வைக்கும் பொறுப்பினை உச்ச நீதிமன்றத்திடம் ஒப்படைப்பது எவ்விதத்திலும் பொருத்தமானதாக இருந்து வரவில்லை. ஜனாதிபதிப் பதவியின் அதிகாரங்களை வரையறை செய்யும் அரசியல் யாப்புத் திருத்தமொன்றின் மூலம் ஜனாதிபதி நேரடி மக்கள் வாக்குகளினால் தெரிவு செய்யப்படாமல், நாடாளுமன்றம் அல்லது நேரடி வாக்காளர் குழுவொன்றின் (Electoral College) மூலம் தெரிவு செய்யப்பட வேண்டிய முறையை எடுத்து வர வேண்டியுள்ளது. பங்களாதேஷ், ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் வாக்காளர் குழு நாடாளுமன்றமாகும். ஓரளவுக்கு சமஷ்டி ஆட்சியைக் கொண்டிருக்கும் இந்தியாவில் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும், மாநில சட்ட சபைகளும் வாக்காளர் குழுக்களாகச்  செயற்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி மற்றும் குடியரசு

ஜனாதிபதிப் பதவியை முழுமையாக ஒழிப்பதாக இருந்தால், நாடாளுமன்ற – அமைச்சரவை ஆட்சி முறையொன்றுக்கு திரும்பிச் செல்லும் ஒரு நிலைமையே ஏற்படும். அப்பொழுது இலங்கை தொடர்ந்தும் ஒரு குடியரசாக இருக்க முடியாது. “ஜனாதிபதி பதவி” குடியரசு அல்லது கூட்டாட்சி முறையின் ஒரு சிறப்புப் பண்பாகும். அதற்கு அடிப்படையாக இருந்து வரும் அரசியல் கோட்பாடு ஆட்சித் தலைவர் பரம்பரையின் மூலமோ அல்லது பெற்றோரின் வாரிசு உரிமையின் மூலமோ அல்லது கடவுளின் விருப்பத்தின் பிரகாரமோ தெரிவு செய்யப்படக் கூடாது; அதற்குப் பதிலாக அவர் மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற அரசியல் கோட்பாடாகும்.

ஜனாதிபதி ஒருவரை வரையறுக்கப்பட்ட ஒரு காலப் பிரிவுக்கென தெரிவு செய்து கொள்ளும் இரண்டு முறைகள் இப்பொழுது உலகில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்று நேரடி மக்கள் வாக்குகளின் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்யும் முறை; மற்றையது வரையறுக்கப்பட்ட வாக்காளர் குழுக்களூடாகத் தெரிவு செய்யும் முறை. இந்த இரண்டு முறைகளினதும் ஒரு கலவையே அமெரிக்காவில் காணப்படுகின்றது. அமெரிக்காவில் நாடு தழுவிய ரீதியில் நடாத்தப்படும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் வாக்காளர் குழுக்களுக்கான  பிரதிநிதிகளை மக்கள் முதலில் தெரிவு செய்கிறார்கள். அந்த வாக்காளர் குழுக்களூடாகவே ஜனாதிபதி உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யப்படுகிறார். இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் அதிகாரம் குறைந்த ஒரு ஜனாதிபதி முறை நாடாளுமன்ற – அமைச்சரவை ஆட்சிமுறையொன்றுடன் இணைக்கப்படும் நிலைமை காணப்படுகின்றது. அநேகமாக இலங்கை இந்த முறையைத் தெரிவு செய்வதே பொருத்தமானதாக இருந்து வரும். இலங்கையின் அடுத்த அரசியல் யாப்பை இந்த முறைமைக்கேற்ப திருத்தியமைத்தால், சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட வேண்டுமென கனவு கண்டு கொண்டிருக்கும் அரசியல்வாதிகள், இந்தியாவிலும் பங்களாதேஷிலும் இருக்கும் சர்வ வல்லமை பொருந்திய பிரதமராக வர வேண்டுமென்ற விதத்தில் தமது கனவை திருத்தியமைத்துக் கொள்ள வேண்டிய நிலையேற்படும். இலங்கையில் சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி ஒருவர் இருக்க வேண்டுமெனக் கருதும் பிரிவினர் கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம் இருக்கிறது. ஜனாதிபதிக்கு அளவற்ற அதிகாரங்கள்  வழங்கப்படும் நிலை தோல்வியடைந்த ஒரு தெரிவாக இருக்கின்றது என்பதே அந்தப்  பாடமாகும்.  கோட்டபாய ஜனாதிபதியையும் உள்ளடக்கிய ராஜபக்‌ஷ குடும்பம் இலங்கையின் ஜனநாயகத்துக்கு வழங்கியிருக்கும் ஒரேயொரு மறைமுகமான பங்களிப்பு இலங்கையின் வலதுசாரி சமூக மற்றும் அரசியல் சக்திகள் கொண்டிருக்கும் “வலிமையான தலைவர்” குறித்த கனவு ஒரு போலி நம்பிக்கை மட்டுமே என்பதனை நிரூபித்துக் காட்டியமையாகும். இலங்கைக்கு ஹிட்லர், ஸ்டாலின், டிகோல் அல்லது லீ க்வான் யூ போன்ற தலைவர்கள் தேவையில்லை. தீவிரவாத நிலைப்பாட்டைக் கொண்டிராத, ஜனநாயக இயல்பிலான, தலையீட்டுத் திறன் கொண்ட பொதுமக்களின் சுதந்திர வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்படுவதற்கும், அகற்றப்படுவதற்கும் தயாராக இருக்கும் ஒரு தலைவரே இலங்கைக்குத் தேவை. அடுத்து வரவிருக்கும்  அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தயார் நிலையில் இருக்கும் ஜேவிபி மற்றும் எஸ்ஜேபி போன்ற கட்சிகள் அத்தகையதொரு ஆட்சி முறையைக் கட்டியெழுப்புவதற்கு வழிகோலக் கூடிய அரசியல் மற்றும் அரசியல் யாப்பு திருத்தமொன்றுக்கே தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அத்தகைய மாற்றுத் தெரிவுகளுக்கே நாட்டு மக்களின் ஆதரவு பெருமளவுக்குக் கிடைக்கக் கூடிய நிலைமை காணப்படுகின்றது.

அரசியல் யாப்பின் வரையறுக்கப்பட்ட பணிகள் 

அரசியல் யாப்புத் திருத்தம் தொடர்பான கலந்துரையாடல்களில் எமது நாட்டில் பொதுவாக ஒரு தவறான கருத்து நிலவி வருவதுடன், அது குறித்து நாங்கள் விழிப்புடன் இருப்பது முக்கியமாகும். அதாவது, ஒரு புதிய அரசியல் யாப்பு நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கும் ஒரு மர்மமான மருந்தாக இருந்து வருகின்றது என்ற விதத்தில் ஒரு தப்பெண்ணம் நிலவி வருகின்றது. நாட்டில் பாரதூரமான சமூக, அரசியல், பொருளாதார சிக்கல்கள் நிலவி வரும் இன்றைய கால கட்டம் போன்ற ஒரு காலப் பிரிவில் அத்தகைய எதிர்பார்ப்புகள் தோன்றுவது தவிர்க்க முடியாததாகும். சில அரசியல் தலைவர்களும் பொதுமக்களை ஏமாற்றுவதற்கும், அதிகாரத்திற்கு வருவதற்கான ஒரு மார்க்கமாக பயன்படுத்திக் கொள்வதற்கும்  சமூகத்தில் அத்தகைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகின்றார்கள். 18, 19 மற்றும் 20ஆவது திருத்தங்கள் தொடர்பாகவும் இதே மாதிரியான கற்பிதங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

அதற்கு மாறான விதத்தில், அரசியல் யாப்பினால் வரையறுக்கப்பட்ட ஒரு சில பணிகளை மட்டுமே முன்னெடுக்க முடியும். அதாவது, நாட்டின் அரசின் இயல்பு, அரசியல் கட்டமைப்பு, அரசியல் நிறுவனங்கள், அரசாங்க செயன்முறையின் அடிப்படைப் பயணம் மற்றும் பிரஜைகளின் உரிமைகள் ஆகியவற்றை நிர்வகித்துக் கொள்ளும் வரையறுக்கப்பட்ட பணிகளையே ஓர் அரசியல் யாப்பு மேற்கொள்கிறது. ஜனநாயக கோட்பாடுகள் மற்றும் ஒரு ஜனநாயகச் சட்டகம் என்பவற்றில் அவை நிர்ணயிக்கப்படுவதாக இருந்தால் அந்நாட்டுப் பிரஜைகள் தமது அரசியல் யாப்பு குறித்து பெருமிதமடைய முடியும். அவ்வாறில்லாவிடில், அது குறித்து அவர்கள் கவலைப்பட வேண்டியிருக்கும். பிரஜைகளை கவலையிலும், வெட்கத்திலும் ஆழ்த்தும் அரசியல் யாப்பு ஒரு சமுதாயத்துக்கு அவசியமில்லை; மாறாக, பிரஜைகளை மகிழ்ச்சியிலும், பெருமிதத்திலும் ஆழ்த்தும் ஒரு அரசியல் யாப்பே சமுதாயத்துக்குத் தேவைப்படுகின்றது.

இலங்கையின் தற்போதைய அரசியல் யாப்பு கலந்துரையாடலில் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒரு தலைப்பாக இதுவும் இருக்கின்றது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆவலுடன் காத்திருக்கும் நபர்களை சந்தோசப்படுத்துவதற்காக ஒரு அரசியல் யாப்பை உருவாக்க முடியாது; சுதந்திரத்தை மதிக்கும் பிரஜைகளை சந்தோசப்படுத்தவே அதனைச் செய்ய வேண்டும். அரசின்  அடித்தளம், அரசியல் இலக்குகள், நிறுவனங்கள் மற்றும் செயன்முறைகள் என்பவற்றை ஜனநாயக மயமாக்கும் அரசியல் யாப்புத் திருத்தமொன்றின் மூலமே அதனைச் சாதித்துக் கொள்ள முடியும். “மக்களுக்கென ஒரு அரசியலமைப்பை உருவாக்குதல்” என்ற கருத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விளக்கம் அதுவாகும்.

அத்தகைய அரசியல் யாப்புச் சீர்த்திருத்த முயற்சியொன்று வெற்றியடைய வேண்டுமானால் அது சமுதாயத்தில் ஏற்படும் ஒரு ஜனநாயக எழுச்சியுடனும், அலையுடனும் இணைந்ததாக இருக்க வேண்டும். எமது நாட்டில் 2015ஆம் ஆண்டில் அத்தகைய ஒரு சாதகமான சமூகப்  பின்புலம் நிலவி வந்த போதிலும், அது வீணடிக்கப்பட்ட ஒரு சரித்திரத் தருணமாக இருக்கிறது. எனவே, இலங்கையில் ஜனநாயக ரீதியிலான ஓர் அரசியல் யாப்புச் சீர்த்திருத்தத்திற்கென தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அரசியல் சக்திகள் இப்பொழுது பொருத்தமான வரலாற்று ரீதியான ஒரு தருணம் திறந்து விடப்பட்டிருக்கும் நிலை மற்றும் அந்தத் தருணத்தை ஆக்கபூர்வமான விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை ஆகிய இரண்டு விடயங்கள் குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது.

பேராசிரியர் ஜயதேவ உயன்கொட

ලංකාවට සුදුසු ජනාධිපති ක්‍රමයද? පාර්ලිමේන්තු ක්‍රමයද? என்ற தலைப்பில் ‘அனித்தா’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்