வட்டுக்கோட்டையின் அரசடிப் பகுதியில் கடந்த செப்டெம்பர் 19ஆம் திகதி ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் மேற்கொண்ட சாதிவெறித் தாக்குதல்களினை சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த மோசமான தாக்குதலில் பலர் காயமடைந்தனர். ஒருவரிற்கு அவயவம் ஒன்று துண்டிக்கப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான‌ மக்களின் வீடுகளும், உடைமைகளும், தொழிற் கருவிகளும், பட்டறைகளும் சேதமாக்கப்பட்டன.

சாதி வெறியினை வெளிப்படுத்தும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் வட்டுக்கோட்டையிலும், அயற் கிராமங்களான பொன்னாலை, துணைவி, கொட்டைக்காடு, முதலி கோயிலடி போன்றவற்றிலே காலங்காலமாக இடம்பெற்று வருகின்றன. ஊடகங்கள் இந்தச் சம்பவத்தினை ஒரு குழுவினால் மற்றொரு குழுவின் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறை எனவும், இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் எனவும் நிறுவ‌ முயலுகின்றன; ஆனால், இந்தச் சம்பவத்தினை, யாழ்ப்பாணச் சமூகத்தில் வேரூன்றிப் போயிருக்கும் சாதிய மனநிலையினையும், சாதி ரீதியிலான அதிகாரக் கட்டமைப்புக்களையும், சாதியத்தினது அரசியல், சமூக, பொருளாதாரப் பரிமாணங்களையும் வெளிக்காட்டும் ஒரு வன்முறையாகவே நோக்க வேண்டும்.

அரசடிக் கிராமமும், அதன் சுற்றயலின் சாதியக் கட்டமைப்பும்

அரசடிக் கிராமமானது தரைத்தோற்ற‌ ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சாதிய எல்லைகளாலும், பிளவுகளாலும் கட்டப்பட்ட ஒரு கிராமம். வட்டுக்கோட்டையில் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளிலே பல‌ செப்பனிடப்படாத, வெள்ளம் தேங்கக் கூடிய‌ பாதைகளையே கொண்டிருக்கின்றன. இங்கு வாழும் மக்களின் வீடுகளிலே சில அடிப்படை  வசதிகள் அற்றனவாக அமைகின்றன. வட்டுக்கோட்டையில் இருக்கும் பாடசாலைகளிலே இந்தச் சமூகங்களைச் சேர்ந்த‌ மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாகப் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். வட்டுக்கோட்டையில் இருக்கும் வழிபாட்டுத் தலங்களிலும் இந்தச் சமூகத்தினர் புறமொதுக்கல்களை எதிர்கொள்ளுகின்றனர். இந்த ஊரில் இருக்கும் சமூக, சமய நிறுவனங்களும் சாதிய ரீதியிலேயே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன‌. நாளாந்த வாழ்விலே ஆதிக்க சாதியினர், இந்த மக்களை அவர்களின் சாதி அடையாளத்தினைப் பெயரிட்டு இகழுகின்றனர்.

சாதியம், எதிர்ப்பு, மீளெழுச்சி

வட்டுக்கோட்டையில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களிலே பலர் வறுமையினால் பாதிக்கப்பட்டவர்களாகவும், கூலி வேலைகளில் ஈடுபடுவோராகவும் இருக்கின்றனர். பலர் வாழ்வதற்கும், விவசாயம் செய்வதற்கும் பொருத்தமான‌ காணிகள் இல்லாதவர்கள். இவ்வாறான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் வறுமையின் நிமித்தம் கல்வியினை இடைநிறுத்த நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். போக்குவரத்து, உட்கட்டுமான ரீதியிலும், கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் பல தசாப்தங்களாகப் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தினரே அண்மையில் தாக்கப்பட்டனர்.

தாக்குதலுக்கு இலக்காகிய சிலர் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டவர்கள். 1995 இல் யாழ்ப்பாண‌ இடப்பெயர்வின் போது இடம்பெயர்ந்து, வன்னியில் பல்வேறு இடப்பெயர்வுகளையும், இறுதியிலே முள்ளிவாய்க்காலிலே யுத்த முடிவின் கோரங்களையும் சந்தித்து, அவர்கள் மீளவும் வட்டுக்கோட்டைக்குத் திரும்பினர். போருக்குப் பின்னர் இவர்களுடைய சமூகப் பொருளாதார‌ மீட்சிக்கு வேண்டிய திட்டங்கள் எதனையும் அரசு முன்னெடுக்கவில்லை. தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முற்படுகையில், பலர் நுண் நிதிக் கடன்பொறிக்குள் சிக்கினர். செப்டெம்பரில் இவர்கள் சந்தித்த வன்முறையானது தாம் புறமொதுக்கப்படுகிறோம் என்ற உணர்வினை இவர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.

காலங்காலமாக நிலைபெற்றிருக்கும், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் சாதிய அடக்குமுறை, சாதிய வேற்றுமைப்படுத்தல்களைக் கருத்தில் எடுக்காத அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தமிழ் அரசியலிலே அவதானிக்கப்படும் சாதியினை மூடி மறைத்து, சாதியப் பிரச்சினைகளைப் புறமொத்துக்கும் போக்குகள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன‌. இவ்வாறு அரசியல், சமூகப், பொருளாதார ரீதியாக இடம்பெற்று வரும் புறக்கணிப்புக்களின் ஒரு பகுதியாகவே வட்டுக்கோட்டை வன்முறையினை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

சாதி அடக்குமுறைகளுக்கு எதிராக வரலாற்று ரீதியாகப் பல‌ போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. உழைக்கும் சாதி சமூகங்கள் அவர்களின் மீது இழைக்கப்படுகின்ற ஒடுக்குமுறையினை போராடியும், பேச்சுவார்த்தைகளை நடாத்தியும், சில சந்தர்ப்பங்களிலே விட்டுக்கொடுப்புக்களுக்கு ஊடாகவும், தனித்தனியாகவும், கூட்டாகவும் எதிர்த்து வருகின்றனர். சாதி வன்முறையை எதிர்கொண்ட வட்டுக்கோட்டைச் சமூகமும், பல ஆண்டுகளாக சாதி அடிப்படையிலான ஓரங்கட்டலை சமாளிப்பதில் பெரும் தைரியத்தையும், மீளெழுச்சித் தன்மையினையும் வெளிக்காட்டிய ஒரு சமூகமாகும். கௌரவத்துடன் வாழ்வதற்கு அவர்களிடம் இருக்கும் வேட்கையும், எதிர்காலப் போராட்டங்களை மீள்வடிவமைப்பதிலே அவர்களுக்கு இருக்கும் திறனும் இதற்குச் சான்றாகும். அவர்களின் விடாமுயற்சி, எதிர்ப்பு, சமூகத்தினைக் கட்டமைக்கும் செயன்முறைகளினாலும், வடக்கிலே சாதிவெறிக்கு எதிரான பரந்த‌ மற்றும் தினசரி போராட்டங்களால் உருவாக்கப்பட்ட திறப்புக்கள் காரணமாகவும், வட்டுக்கோட்டையில் இருக்கும் இந்தச் சமூகத்திலும் புவியியல், சமூக, பொருளாதார ரீதியில் சில‌ மாற்றங்களும், அசைவுகளும், முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளன‌.

தம் மீது மேற்கொள்ளப்பட்ட‌ ஒடுக்குமுறைகளுக்கு மத்தியிலும், தாம் சாதித்த விடயங்கள் குறித்துப் பெருமை மிக்கவர்களாக இந்தச் சமூகத்தினர் இருக்கின்றனர். தங்களின் கௌரவமான வாழ்க்கைக்காக கூட்டாகவும், தொடர்ச்சியாகவும் பாடுபடுகிறார்கள். வாழ்க்கையில் நம்பிக்கை வைத்திருப்பதுடன், தாமும், தமது மூதாதையரும் எதிர்கொள்ள வேண்டி இருந்த‌ பிரச்சினைகளைத் தங்கள் குழந்தைகள் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய தங்களால் முடிந்தவரை முயற்சிக்கிறார்கள். இந்த வன்முறைச் சம்பவம் அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அச்சுறுத்தல்களைக் கூட்டுணர்வுடனும், கூட்டணிகளை அமைத்தும் வெற்றிகொள்ளலாம் என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியும், சாதி ஒடுக்குமுறைகளை இல்லாதொழித்தலும்

வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி பெற்றுக் கொடுப்பதில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் திருப்தியானவையாக‌ இல்லை. தாக்குதலிலே ஈடுபட்டோருக்குச் சார்பாக சில சந்தர்ப்பங்களிலே பொலிஸார் செயற்பட்டிருக்கின்றனர் என்ற அபிப்பிராயமும் நிலவுகிறது. தாக்குதலிலே ஈடுபட்டோரினைச் சட்டத்தின் முன் நிறுத்துவத்திலே பொலிஸார் தமது கடமைகளைச் சரிவரச் செய்யவில்லை. வன்முறையில் ஈடுபட்டோருடன் தொடர்புடைய அரசியல்வாதிகளும் வழக்கறிஞர்களும், சாதிவெறியை நேருக்கு நேர் சவால் செய்யத் தயங்கும் தரப்புக்களும், இந்த மக்களின் நீதிக்கான கோரிக்கைகளையும், சாதிவெறிக்கு எதிரான அவர்களின் ஜனநாயகப் போராட்டத்தையும் நீர்த்துப்போகச் செய்யும் நோக்கத்துடன் பாதிக்கப்பட்ட சமூகத்தினரினை சமரசத்துக்கு வரும்படி தூதுவிடுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பு உணர்வுகளை பலவீனப்படுத்தும் இவ்வாறான நேர்மையற்ற‌ முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும்.

வட்டுக்கோட்டைச் சம்பவம், சாதிய எதிர்ப்புச் செயற்பாட்டு வரலாற்றின் முக்கியமான தருணம் ஒன்றிலே எம்மை நிறுத்தியுள்ளது. நாம் வாழும் சமூகங்களை நாம் எவ்வாறு பார்க்கின்றோம் என்பதற்கான மறுமதிப்பீட்டினை மேற்கொள்ள வேண்டிய காலம் இது. எம்மிடையே நிலவும் ஆழமான பொருளாதார, அரசியல், சமூகப் பிளவுகளைப் பற்றி, குறிப்பாக அவற்றின் வலிமையான‌ வடிவமான‌ சாதியம் பற்றி, விழிப்புணர்வுடன் நாம் போராட வேண்டும். குடியிருத்தலுக்கும், வேலை செய்வதற்கும், சமூகத்தில் வாழ்வதற்கும் தமக்கு இருக்கும் உரிமைகள் வன்முறை மூலமாக‌ மீறப்பட்டமைக்கு எதிராகப் போராடும் வட்டுக்கோட்டைச் சமூகத்துடன், நாம் தோழமையுடன் செயற்படுவோம். சாதி அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடவும், சாதிய அடக்குமுறை அற்ற‌ ஒரு சமூக அரசியற் கலாசாரத்தினைக் கட்டியெழுப்புவதற்கும் நாம் பற்றுறுதியுடன் செயற்படுவோம்.

சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்கள் ஒன்றியத்தின் சார்பாக:

வணக்கத்துக்குரிய சாமுவேல் பொன்னையா

அகல்யா பிரான்சிஸ்கிளைன்

அகிலன் கதிர்காமர்

எம். . எம். எஃப். சியானா

சபா தனுஜன்

சுமதி சிவமோகன்

மகேந்திரன் திருவரங்கன்

ரஜனி ராஜேஸ்வரி

2019 ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் யாழ்ப்பாணத்திலே வெவ்வேறு இனங்களினையும், சமயங்களையும் சேர்ந்தோருக்கும் இடையில் சகவாழ்வினையும், நல்லுறவுகளையும் ஏற்படுத்தும் நோக்கிலும், சமூக நீதியினை வலியுறுத்தும் வகையிலும் சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.

வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற சாதிய வன்முறைகளை அடுத்து, ஒன்றியத்தின் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகக் குடும்பங்களுடன் உரையாடல்களை மேற்கொண்டனர். 22 அக்டோபர் 2021 அன்று ஒன்றியத்தின் கூட்டத்திலேயும் இது தொடர்பாக விரிவாக‌ உரையாடப்பட்டு, இந்தச் சம்பவம் பற்றிய ஓர் அறிக்கையினை வெளியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.