Photo: Author

2009 போரின் இறுதிநாட்களில் பிறந்த குழந்தைகளுள் தமிழ் நிலாவும் ஒருவர். தந்தையின் தழுவலை உணரும் முன்னே தந்தையைப் பிரிந்த பெண் குழந்தை. 2009 மே 18 அன்று விடுதலைப் புலிகள் அமைப்பின் திரைத்துறை பிரிவின் போராளியான இவளது தந்தை அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் தலைமையில் இலங்கை இராணுவத்தினரின் அறிவிப்புக்கு அமைவாக முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் சரணடைந்த நாளிலிருந்தே காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். கடந்த 12 ஆண்டுகளாக அப்பா எங்கே? எப்போது வருவார்? என்ற கேள்விகளோடு காத்திருக்கும் தமிழ் நிலா, தந்தை அருகில் இல்லாத பிரிவை தினமும் அனுபவித்து வருகிறார். தந்தை இருந்தால் நான் எப்படி இருப்பேன் என்ற உள்ளக் கிடக்கையை எம்மோடு பகிர்ந்துகொள்ளும் தமிழ் நிலா போன்று காணாமல் ஆக்கப்பட்ட அப்பாக்கள் எப்போது வருவார்கள் என்ற எதிர்பார்ப்போடு வாழும் குழந்தைகள் இந்த மண்ணில் ஆயிரமாயிரம்.

“என்ர பெயர் தமிழ் நிலா. நான் இப்ப ஏழாம் ஆண்டு படிக்கிறன். எனக்கு பன்னிரண்டு வயது. எனக்கு பட்மின்டன் விளையாட்டுதான் பிடிக்கும். பிரண்ட்ஸ்சோட சேர்ந்து பள்ளிகூடத்தில் பட்மிண்டன் விளையாடுவன். எனக்கு டொக்டர் ஆகோணும் எண்டுறதுதான் இலட்சியம். அம்மா சொல்லுவா, அப்பா வருவார், நீ படிச்சு ஒரு நிலைக்கு வா எண்டு. அப்ப நான் யோசிப்பன், நான் படிச்சு டொக்டரானா, அப்பாவையும் பாக்கலாம் எண்டு.

எனக்கு ரெண்டு அண்ணாக்கள். அம்மாவோடதான் இருக்கிறன். அண்ணாக்கள் என்மேல பாசமாவே இருப்பினம். அப்பா இல்லை எண்டு ஏதும் நான் சொன்னா அண்ணா சொல்லுவான் கவலை படாத அப்பா வருவார் எண்டு.

நான் சின்னன்ல இருந்து அப்பாவை பார்த்ததில்லை அம்மாட்ட கேக்கிறனான் அப்பா எங்க எண்டு, அவர் காணாமல் போயிட்டார் எண்டு அம்மா சொல்லுவா. அப்பாவ நான் நேர்ல பார்த்ததில்ல, படத்திலதான் பார்த்திருக்கன். அம்மாதான் சொல்லிருக்கிறா, நான் பிறந்து ரெண்டுமாதத்தில அப்பா ஆமி காரங்களிட்ட சரணடைஞ்சு பிறகு காணாமல் போயிட்டார் எண்டு. அப்பா எங்களோட முள்ளிவாய்க்கால்ல இருந்து வந்துகொண்டு இருக்கேக்க சரணடைய சொல்லி ஆமிக்காரர் ஸ்பீக்கர்ல அறிவிக்க பாதரோட சேர்ந்து சரணடைஞ்சவராம். நான் பள்ளிக்கூடம் போன பிறகு யோசிப்பன், பள்ளிக்கூடம் விட்டு வீட்ட போகேக்க அப்பா வீட்ட வந்திருந்தா எப்பிடி இருக்கும் எண்டு யோசிப்பன். அப்படி இருந்தா எங்களுக்கு எவ்வளவு சந்தோசம். எனக்கு அப்பாவோட எல்லா இடமும் போகவேணும் எண்டு ஆசையா இருக்கும். அம்மா சொல்லுவா அண்ணாக்கள் சின்ன ஆக்களா இருக்கேக்க அப்பாதான் பாடம் சொல்லிக்குடுக்கிறவர் எண்டு. அப்படி அப்பா இருந்திருந்தா எனக்கும் பாடம் சொல்லித் தந்திருப்பார்தானே. மற்றப்பிள்ளையள் போல நானும் அப்பாவோட சந்தோசமா இருந்திருப்பன் எண்டு அடிக்கடி யோசிப்பன்.

எங்கட வகுப்பில நிறைய பிள்ளையள் கார்ல, பைக்ல எல்லாம் பள்ளிக்கூடம் வருவினம், அவையள் அப்பாவோடதான் பள்ளிக்கூடம் வருவினம். எனக்கு அதை பார்க்கவே ஆசையா இருக்கும். அவையள் சொல்லுவினம் அப்பா புது கொம்பாஸ் வாங்கி தந்தவர் எண்டு. சொல்லும்போது நான் யோசிப்பன், எங்களுக்கும் அப்பா இருந்தா இப்படி எல்லாம் வாங்கி தருவார்தானே எண்டு. வீட்ட புதுசா யாரும் வந்தா அப்பாதான் வாறாரோ எண்டு நான் ஓடி போய் பாக்கிறனான். நான் அம்மாவை கேக்கிற நேரம் எல்லாம் சொல்லுவா, திருப்ப விடுதலை செய்வம் எண்டு அப்பாவ சரணடைய சொன்னவையள். அப்பா எங்கையோ இருக்கிறார், வருவார் நீ யோசிக்காத எண்டு சொல்லுவா.

12 வருசமான அப்பாவை நான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறன். ஆனா, அப்பா இன்னும் வரேல்ல…”

ஆயிரமாயிரம் தமிழ் நிலாக்கள் அப்பாக்கள் வரும்வரை 12 வருடங்காக காத்திருக்கிறார்கள்.

குறிப்பு: சிறுமியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குமணன்