Photo: Ethical Tea Partnership

கொவிட்-19 மூன்றாம் அலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. முழு நாடே ஏன் முழு உலகமுமே பயந்து வீட்டிற்குள் ஓழிந்துக் கொண்டு இருக்கிறது. நாளாந்த நடவடிக்கைகள், பொருளாதார நடவடிக்கைகள் யாவும் முடங்கிப் போயிருக்கின்றன. நோய் பரவலை, உயிரிழப்புகளை கட்டுப்படுத்த நடமாடும் கட்டுப்பாடுகள் இலங்கை முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு சட்டம் போட்டாலோ நாட்டை முழுமையாக முடக்கினாலோ குடும்பத்திற்கு ரூபா 5000 வழங்கப் பட வேண்டும் என்ற காரணத்தினால் நடமாட்டத்தை கட்டுப்படுத்தல் சட்டத்தை அமுல்படுத்தி உள்ளனர்.

ஆனாலும், இலங்கைப் பொருளாதாரத்திற்கு பாதகம் ஏற்படக்கூடாது என்ற காரணத்தினால் தேயிலை, இறப்பர் தோட்ட தொழிலாளர்கள் இன்றும் தேயிலை/ இறப்பர் மலைகளில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இவைதான் ஓரளவிற்கேனும் அந்நிய செலாவணியை ஈட்டித் தந்துகொண்டிருக்கிறது. சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்தின் படி நாளொன்றுக்கு ரூபா 1000 வழங்கப்பட்டால் (23 நாள் வேலை செய்தால்) மாதத்துக்கு ரூபா 23,000 பெறலாம். நாட் சம்பளம் ரூபா 1000 கிடைத்தது என்று பட்டாசு கொழுத்தி பொங்கள், பால் சோறு சமைத்துக் கொண்டாடிய தொழிலாளர்கள் இன்று 18 கிலோ பறிக்க வேண்டும், இல்லாவிட்டால் நாள் பெயர் கிடைக்காது என்ற காரணத்தினால் (பெண்கள்) சாப்பிட்டும் சாப்பிடாமலும் தேயிலை மலையில் மல்லுக் கட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

இன்றைய நிலையில் பல தோட்டங்கள் சம்பள நிர்ணய சபையின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாததால் கிழமைக்கு 3 நாள் மட்டும் வேலை வழங்குகின்றனர். இதனால் இந்த மாத  முற்பணமாக ரூபா 400 தொடக்கம் ரூபா 1000 பெற்ற பல தொழிலாளர்கள் பிள்ளைகளின் ஒன்லைன் செலவு, மின்சாரக் கட்டணம் இன்னும் பல செலவுகளையும் சமாளித்துக் கொண்டு அத்தியாவசிய பொருட்களின் வானுயர் விலைவாசியினால், எவ்வாறு பொருட்களை கொள்வனவு செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றனர். அத்துடன், மலையகத்தில் இன்று வேகமாகப் பரவிவரும் கொவிட்டினால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கின்றமையும், மரண எண்ணிக்கை அதிகரிக்கின்றமையும் அனைவரையும் அச்சமூட்டுகின்றது.

நமது மக்களின் வாழ்கைச் சூழல், இருக்கும் வீட்டு வசதிகள், வேலைச் சூழல் போன்றவை காரணமாக மற்றைய பகுதிகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளான ஒரு மீட்டர் இடைவெளி, வீட்டை விட்டு வெளியில் வராமல் இருத்தல், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை இருக்கமாக கடைப்பிடிப்பது என்பதும் மிகக் கடினமான காரியமாக உள்ளது. அத்துடன், கொவிட்-19 நோயாளிகளை தனிமைப்படுத்த முடியாமல் மற்றவருக்கும் வந்த பிறகு முழுக் குடும்பமும், அயரவர்களும் தனிமைப்படுத்தப்படக் கூடிய நிலைமைக்குச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலைமையானது தனிப்பட்ட ரீதியிலும் சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று இலங்கையில் பொருளாதாரத்திற்கு தொடர்ந்து பங்களிப்பு செய்துவரும், முக்கியமாக கொவிட் தாக்கத்தினால் விரைவில் தாக்கமடையும், அதிகூடிய பாதிப்புறும் நிலையிலுள்ள மக்களுக்கு அவர்களைப் பாதுகாத்து பொருளாதாரத்தையும்  பாதுகாத்துக்கொள்ள முன்னுரிமை அடிப்படையில் வேகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இவை இன்று கொழும்பு, கம்பஹா போன்ற பகுதிகளில் வேகமாக செலுத்தப்பட்டாலும் பொருளாதாரத்திற்குத் தொடர்ந்து பங்களிப்பு செய்துவரும் முக்கியமாக கொவிட் தாக்கத்தினால் அதிகூடிய பாதிப்புறும் நிலையிலுள்ள மக்களான தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை.

தோட்டத் தொழிலாளர்களும் மற்றவர்கள் போலவே வீட்டிற்குள் தொடர்ந்து இருக்கலாம். ஆனால், அப்படி இருந்தால் கிடைக்கும் இந்த சொச்ச நாளாந்த வருமானத்தையும் இழக்க வேண்டிவரும். அதேவேளை நாடும் தனக்குக் கிடைக்கும் டொலரையும் இழக்க நேரிடும். தேர்தல் காலங்களில் வாக்கைத் தவறாமல் பெற்றுக் கொள்ளும் மக்கள் பிரதிநிதிகள், சந்தாவை தவறாமல் பெற்றுக் கொள்ளும் தொழிற்சங்கங்கள், மக்களுக்கு சேவையாற்றவென அமைச்சுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர்கள் விரைந்து இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிலைமை மோசமடைய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேலுசாமி வீரசிங்கம் | Velusamy Weerasingham