படம் | கட்டப்பரிச்சான் முகாம் வீடுகள்

எமக்கு மாற்றிடமும் தேவையில்லை, நஷ்டஈடும் அவசியமில்லை. எமக்கு சம்பூர் நிலமே வேண்டும் என்கிறார் கட்டப்பரிச்சான் இடம்பெயர் முகாமின் தலைவரும் மூதூர் மீனவ சங்கத் தலைவருமான கிருஷணப்பிள்ளை.

“மாற்றுக் காணிக்கு போகவேண்டுமாக இருந்தால் இத்தனை வருஷம் காத்திருக்கத் தேவையில்லை. எப்போதோ நாங்கள் போயிருப்போம். இத்தனை வருட காலமாக எமது நிலத்துக்கு போய்சேர்வதற்காகவே காத்திருக்கிறோம். எமக்கு எமது நிலம்தான் வேண்டும்” என்கிறார் கிருஷ்ணப்பிள்ளை.

சம்பூரில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக மேற்கொள்ளப்பட்ட நிலக்கையகப்படுத்தல் முயற்சியில் நிலமிழந்த மக்களுக்கு, இழப்பீடு வழங்க 300 மிலியன் ரூபா நிதி ஒதுக்கியிருப்பதாக உயர்நீதிமன்றத்தில் சம்பூர் வழக்கு விசாரணையில் அரசு நேற்று தெரிவித்தது.

அரசின் இந்தத் திட்டத்தின்படி, சம்பூரிலிருந்துஇடம்பெர்ந்தோர், தமது கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்குப் பதிலாக மாற்று நிலங்களைப் பெறமுடியும். அதை விரும்பாதோருக்கு நஷ்டஈட்டுத் தொகை தரப்படும் என அரச தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், தங்களுக்கு நஷ்டஈடும் தேவையில்லை; மாற்றுக்காணியும் தேவையில்லை என கட்டப்பரிச்சான் இடம்பெயர் முகாம் தலைவர் தெரிவிக்கிறார்.

கிட்டத்தட்ட அரசு கொடுக்கும் பணத்தில் ஒரு குடும்பத்துக்கு சுமார் 3 இலட்சம் வழங்கப்படலாம். அந்த 3 இலட்சம் பணத்தைக் கொண்டு என்ன செய்வது? எவ்வாறு காணி வாங்குவது? சம்பூரில் இருந்தபோது ஏக்கர் கணக்கில் விவசாயக் காணிகளைக் கொண்டிருந்த நாங்கள் 3 இலட்சத்தில் எத்தனை ஏக்கர்களை வாங்குவது? கட்டப்பரிச்சான் பகுதியில் ஒரு பேர்ச்சர்ஸ் முப்பதாயிரம், நாற்பதாயிரம் பெறுமதியில் விற்கப்படுகிறது.

4 இடம்பெயர் முகாம்களிலும் 260 விதவைகள் இருக்கின்றனர். பெற்றோர்களை இழந்த பிள்ளைகளும் வாழ்கின்றனர். இரண்டரை வருடகாலமாக எங்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், சம்பூருக்குப் போய் மீண்டும் சந்தோஷமாக வாழலாம் என எண்ணியிருந்த எங்களுக்கு இவ்வாறான ஒரு செய்தி வந்துசேர்ந்தது.

எமக்கு எமது நிலம்தான் வேண்டும். எமக்கு மாற்றுக்காணி தேவையில்லை. மாற்றுக் காணிக்குப் போவதாக இருந்தால் 8 வருடங்கள் காத்திருந்திருக்கமாட்டோம். எப்போதோ போயிருப்போம். இவ்வளவு காலமும் காத்திருப்பது எமது நிலத்தைப் போய்ச் சேரவே.

ஐ.நா. சாசனத்தை இவர்கள் மதிப்பதில்லை

கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும் சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து வாழ்பவருமான நாகேஸ்வரன் இது தொடர்பாக தெரிவித்த கருத்து,

இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான ஐ.நா. சாசனத்தின் படி இடம்பெயர்ந்தவர்களின் காணி வழங்கப்படாத பட்சத்தில் அவர்களுக்கு மாற்றுக்காணி வழங்கப்படுவதோடு நஷ்டஈடும் வழங்கப்பட வேண்டும்.

ஆனால், அரசின் இந்தத் திட்டத்தின்படி, சம்பூரிலிருந்து இடம்பெர்ந்தோர், தமது கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்கு பதிலாக மாற்று நிலங்களைப் பெற முடியும், அதை விரும்பாதோருக்கு நஷ்ட ஈட்டுத்தொகைத் தரப்படும் என அரச தரப்பு சட்டத்தரணி சம்பூர் தொடர்பான வழக்கின்போது உயர் நீதிமன்றில் தெரிவித்திருக்கிறார்.

அப்படியென்றால் ஐ.நா. சாசனத்தை இவர்கள் மதிப்பதே இல்லை.

அரசு ஒதுக்கியிருக்கும் நிதியை இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு பகிர்ந்தளித்தால் ஒரு குடும்பத்துக்கு சுமார் 3 இலட்சம் அளவில்தான் வழங்கமுடியும். அவற்றைக் கொண்டு சம்பூரில் மக்கள் வைத்திருந்த காணிப் பெறுமதியை ஈடுசெய்யக்கூடிய வகையில் இங்கு நிலம் வாங்க முடியாது.

அரசால் சம்பூர் மக்களுக்கு பலதடவைகள் மாற்றுக் காணிகள் காட்டப்பட்டுள்ளது. அந்தக் காணிகளை எந்த வகையிலும் சம்பூர் காணியோடு ஈடுசெய்ய முடியாது. 20 ​பேர்ச்சர்ஸ் வீதம் வழங்குகிறார்களாம். மக்கள் வாழமுடியாத காட்டுப்பகுதியில் மக்கள் எப்படிப் போய் வாழ்வார்கள்?

சம்பூர் இடம்பெயர்ந்த மக்களுக்கு நஷ்டஈடாக 300 மில்லியன் ரூபா அரசால் ஒதுக்கப்பட்டிருப்பதாக அரச தரப்பு சட்டத்தரணியால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்தத் திட்டத்தில் மக்களுக்கு உடன்பாடு இல்லை. இதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசு வழங்கும் நஷ்டஈட்டையோ அல்லது மாற்றுக் காணியையோ ஏற்றுக்கொண்டால் சம்பூரில் உள்ள காணி எமக்கு அற்றுப்போகும்; அதைப் பெற்றுக்கொள்ள போராடவும் முடியாமல் போகும்; நிகரான காணியும் கிடைக்காது.

ஆகவே, நீதிமன்றம் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. தங்கள் தரப்பு நியாயங்களை ஏற்றுக் கொண்டு நீதியான நியாயமான தீர்வு வழங்கப்படவேண்டும் என்பதில் மக்கள் நம்பிக்கையாக இருக்கின்றனர்.

கூலித்தொழில் செய்துவரும் இடம்பெயர்ந்த சம்பூர் மக்கள் வறட்சி காரணமாக மிகவும் அல்லல்படுகின்றனர். தற்போது இங்கும் விவசாயத்துக்கான இயந்திரங்கள் வந்துசேர்ந்துள்ளதால் இருக்கும் கூலித்தொழில்களும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கூலித் தொழிலாளிக்கு அற்றுப் போயுள்ளது.

ஆக, எங்களுடைய நிலம் எங்களுக்கு மீண்டும் கிடைக்கவேண்டும். அதன் மூலமே இயல்பு வாழ்க்கை எமக்கு மீண்டும் திரும்பும்.