கடந்த 3ஆம் திகதி தாமரை தடாகத்தில் இடம்பெற்ற உலக திருமதி அழகிப் போட்டிக்காக திருமதி இலங்கை அழகியைத் தெரிவுசெய்யும் இறுதிப்போட்டி கிரீடத்தை பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட இழுபறி நிலையுடன் முடிவுற்றது. வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்ட புஷ்பிகா டி சில்வா விவாகரத்து பெற்றவர் என்று அறிந்தகொண்ட ஏற்பாட்டாளர் குழு அதனைக் கண்டித்து அவருடைய கிரீடத்தை பலவந்தமாகப் பறித்தெடுத்து போட்டியில் இரண்டாமிடம் பிடித்தவருக்கு சூட்டியது.

முதலாமிடத்துக்கு புஷ்பிகா வந்திருக்காவிட்டால் விவாகரத்து விடயம் பிரச்சினையாகியிருக்காது. புஷ்பிகா தோல்வியடைந்துவிடுவார் என்றே கரோலின் ஜூரி எதிர்பார்த்திருந்திருக்கிறார். பிறகு கிரீடத்தைப் பெறுவதற்காக பொலிஸ் வரைக்கும் புஷ்பிகாவிற்கு செல்ல வேண்டியிருந்தது.

இலங்கையில் இவ்வாறு இருந்தபோதிலும், இராணுவ சூழ்ச்சியினால் அதிகாரத்தைக் கைப்பற்றி இப்போது வரை 600 வரையான ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்களை மிலேச்சத்தனமாக கொன்று குவிக்கும் மியன்மாரில் அந்நாட்டின் அழகிப் போட்டியில் தேர்வானவர், தன்னுடைய கிரீடத்தை இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக வெளி உலகத்தின் கவனத்தைப் பெறுவதற்காகப் பயன்படுத்தினார். கூடைப்பந்து வீராங்கனையான 22 வயது ஹென் லே தான் இவ்வாறான செயற்பாட்டில் இறங்கியுள்ளார்.

கடந்த மார்ச் 29ஆம் திகதி இடம்பெற்ற Miss Grand International 2020 போட்டியின் போது மேடையில் இருந்தவாறு ஊடகங்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

“நான் இந்த மேடையின் மீதிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் கூட எனது நாட்டின் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் வருத்தமாக இருக்கிறது. உங்களுடைய உதவி எமக்கு தேவைப்படுகிறது. ஜனநாயகத்துக்காக மியன்மார் மக்கள் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். எனக்கும் ஜனநாயகம் தேவைப்படுகிறது. தயவுசெய்து எமக்கு உதவுங்கள்.”

ஒரு மாதத்துக்கு முன்னர் மியன்மாரின் மிகப்பெரிய நகரமான யென்குன் வீதிகளில் இராணுவத்துக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்களில் சக மாணவர்களுடன் ஹென் லே பங்குபற்றியிருந்தார்.


நீல நிற முகக் கவசம் அணிந்திருப்பவர் ஹென் லே. Photo: BBC

யென்குன் பல்கலைக்கழகத்தில் உளவியல் சார்ந்த பட்டப்படிப்பை மேற்கொண்டுவரும் ஹென் லே, தனது நாட்டில் இடம்பெறும் அடக்குமுறையை சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல பொருத்தமான மேடை Miss Grand International 2020 என்று தீர்மானித்திருந்தார்.

“மியன்மாரின் ஊடகவியலாளர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், நான் பேசுவதற்குத் துணிந்தேன்” என்று பிபிசி செய்திப்பிரிவிற்கு அவர் கூறியிருக்கிறார். 2 நிமிடங்கள்தான் நான் பேசியிருந்தாலும் மியன்மார் இராணுவத்தின் கவனத்தை இது பெற்றிருக்கும் என்றும் கூறுகிறார்.

இராணுவத்தினரோ, வேறெந்த அதிகாரிகளோ இதுவரை அவருடன் பேசியிருக்கவில்லை. இருந்தாலும் சமூக ஊடகங்களின் ஊடாக தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஹென் லே குறிப்பிடுகிறார். “சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி எனக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார்கள். மியன்மார் திரும்பும்போது எனக்காக சிறைச்சாலை திறந்தேயிருக்கும் என்று அவர்கள் அச்சுறுத்துகிறார்கள்.”

என்னுடைய இந்த நிலைப்பாடு காரணமாக மியன்மாரில் வாழும் எனது பெற்றோருக்கு, குடும்பத்தினருக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சம் இருப்பதாக ஊடகங்களிடம் அவர் கூறியிருக்கிறார். “குறைந்தபட்சம் 3 மாதத்துக்கு நான் போவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறேன். இராணுவத்தை விரட்டியடிப்பதற்கு மியன்மார் மக்கள் ஒன்றுகூடியிருக்கிறார்கள்.”

ஹென் லே மியன்மார் மொழி, சீன மொழி, ஆங்கிலம் சரளமாகப் பேசக்கூடியவர். Miss Grand International 2020 மேடையில் அவர் நடத்திய பேச்சு உலகம் பூராகவும் பரவியுள்ளது. 64 போட்டியாளர்கள் பங்குபற்றிய போட்டியிலேயே அவர் கிரீடத்தைக் கைப்பற்றிக் கொண்டார். கிரீடத்தை விட ஜனநாயகமே முக்கியத்துவம் வாய்ந்தது என்று செயற்பாட்டில் அவர் காட்டியுமுள்ளார்.

உரிமைகளுக்காகப் போராடுவதன் மூலமும் வாழ்வோடு பயணிக்கலாம் என்று ஹென் லே மீண்டுமொரு முறை எமக்கும் உரத்துக் கூறியுள்ளார். அழகிப் போட்டியில் கலந்துகொள்வதன் மூலம் சமூகத்திற்கு அப்பால் – மேல் இருக்கும் ஒரு ஸ்டாராக அவர் விரும்பவில்லை.

இரண்டு மாதங்களுக்கு மேலாக இராணுவ அடக்குமுறைக்கு எதிராக நிராயுதபாணிகளாக போராடிவரும் மியன்மார் மக்களின் நெஞ்சரத்தை ஹென் லே அடையாளப்படுத்துகிறார்.

சுனந்த தேசப்பிரிய


Main Photo: Miss Grand Myanmar official facebook page