சர்வதேச யாழ்ப்பாணத் திரைப்பட விழாவின் கடைசி நாளிலே சுமதி சிவமோகனின் ஒற்றை டம்ப்ளர் படத்தினைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. படத்திலே ஒரு சிறிய காட்சியிலே, ஒரு சிறிய வேடத்திலே நடித்திருந்தாலும், அன்று தான் படத்தில் என்ன இருக்கிறது, படம் சொல்ல வரும் செய்தி என்ன‌ என்பதனை நான் அறிந்தேன்.

சிக்கல் மிக்க இலங்கையின் இன முரண்பாடுகளின் ஒரு பகுதியாக அமைந்த,‌ வட இலங்கையில் இருந்து முஸ்லிம் மக்கள் புலிகளினால் வெளியேற்றப்பட்ட நிகழ்வினைப் பின்னணியாகக் கொண்டு, அந்த வெளியேற்றத்தின் ஞாபகங்களும், தாக்கமும் ஒரு மத்திய வர்க்கக் கத்தோலிக்கத் தமிழ்க் குடும்பத்தின் போருக்குப் பிந்தைய, நிகழ்கால‌ வாழ்க்கையுடனும், அதனது சமூகப் பொருளாதாரக் கேள்விகளுடனும் எவ்வாறு பிணைந்திருக்கின்றன‌, பயணிக்கின்றன‌ என்பதனைப் படம் மிகவும் சக்தி பூர்வமாகவும் வெளிக்காட்டியது.

பாத்திமா ரீச்சர் (முஸ்லிம் பாத்திரம்) வெளியேற்றப்படும் போது டெய்ஸி ரீச்சரின் வீட்டுக்கு வந்து டெய்ஸி ரீச்சரின் புலிகளுடன் இணைந்திருந்த‌ மகனுடன் பேசுவதும், மகன் அந்த வெளியேற்றத்தினைத் தடுக்கக் கத்தோலிக்க மதகுருக்களின் உதவியுடன் முற்படுவதும், பின்னர் மகனினை இருவர் வந்து அழைத்துச் செல்லுவதும், பின்னர் மகன் நிர்வாணமாக கடலினுள் நடந்து செல்வதும் (Kate Chopin இன் The Awakening நாவலின் இறுதியிலே எட்னா பொன்டலியர் கடலினுள் நடந்து செல்லுவதனை ஞாபகமூட்டிய காட்சி), ஒரு அதிகாலை வேளையில் மகன் சடலமாகக் கரையொதுங்குவதும் படத்திலே நினைவுகளாகவும், நினைவுகளின் நினைவுகளுக்காகவும், கனவாகவும் துண்டு துண்டாக வெளிப்படுகின்றன.

இந்தப் படத்திலே நினைவுகள் எவை? நினைவுகளின் நினைவுகளின் நினைவுகள் எவை? கனவு எது? இறந்த காலம் எது? நிகழ்காலம் எது? பார்வையாளர் காண்பவை எவை, கதாபாத்திரங்கள் காண்பவை எவை என்பதனை வேறுபடுத்துவது எனக்குச் சவாலாக அமைந்தது. எமது சமூக வாழ்க்கையிலும், இனங்களாக நாம் கூடியும், பிரிந்தும் வாழும் வாழ்கையிலும் கூட இந்த வேறுபடுத்தல்களைச் செய்வது கடினம் என்பதனையும், நினைவுகள், நிஜங்கள், ஒன்றில் இருந்து ஒன்று வேறுபடுத்த முடியாத காலங்கள் என்பவற்றின் தொகுப்புக்களினதும் முடிச்சுக்களினதும் மத்தியில் இருந்தவாறே நாம் வாழுகிறோம், அரசியல் செய்கிறோம், சகவாழ்வினைத் தேடுகிறோம் என்ற செய்தியினைப் படம் வெளிக் கொண்டு வந்தது. இவற்றுக்கு வெளியில் இருந்து நாம் தீர்வுகளைத் தேட முடியாது. இவற்றின் ஊடாகவே நாம் தீர்வினை நோக்கிப் பயணிக்க முடியும், பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்ற கருத்தினைப் படம் வெளிக்காட்டியது.

டெய்ஸி ரீச்சர் தனது மகன் இறந்தமைக்குப் பாத்திமா ரீச்சர் தான் ஏதோ ஒரு வகையிலே காரணம் என நினைக்கிறார். அவர் மனதளவிலே கடுமையாகப் பாதிக்கப்பட்டவராகவும், தனது மகனின் இழப்பில் இருந்து மீளமுடியாதவராகவும் இருக்கிறார். கடைசி வரையில் பாத்திமா ரீச்சரின் மகன் ஜூட் ஏன் இறந்தார் அல்லது காணாமற்போனார் என்பது பார்வையாளனின் கண்களிலே ஐயங்களாகவே தொக்கு நிற்கிறது. யார் மீதும் குற்றம் சொல்ல முடியாத நிலை. இந்த மரணம் அல்லது மறைவினைப் பற்றிய பல கதைகளே படத்திலே உலாவுகின்றன.

தமிழ்‍ முஸ்லிம் உறவுகளினை இன்று வடிவமைப்பதிலே எம்மத்தியில் இருக்கும் கடந்த காலம் பற்றிய‌ கதையாடல்களும், துண்டாடப்பட்ட ஞாபகங்களும், ஐயங்களும், ஐயங்களின் ஊடாகக் கட்டப்பட்ட‌ விளக்கங்கங்களும் எவ்வாறு பங்களிப்புச் செய்கின்றன என்பதனைக் கலை வடிவமாகக் காண்பிக்கும் ஒரு செயன்முறையாகவே நான் ஒற்றை டம்ளரினை நோக்கினேன்.

வெளியேற்றத்தின் போது பாத்திமா ரீச்சர் பாதுகாப்புக்காக டெய்ஸி ரீச்சரின் வீட்டிலே வைத்திருந்த பொருட்களை எல்லாம் எறிந்தும், எரித்தும் விடுகிறார் டெய்ஸி ரீச்சர். ஒரு டம்ளர் மாத்திரம் மிஞ்சி இருக்கிறது. அதனையும் எரித்து விடுகிறார் ஒரு கட்டத்திலே. பாத்திமா ரீச்சர் புத்தளத்திலே இடம்பெயர்ந்து வாழுகையிலே மவுத்தாகி விடுகிறார். டெய்ஸி ரீச்சர் தனது மகனின் மறைவுக்குப் பாத்திமா ரீச்சர் தான் காரணம் என நினைத்தாலும், அவருடைய பேச்சுக்களிலே அவர் பாத்திமா ரீச்சர் பற்றிப் பரிதாபப்படும் இடங்களும் படத்திலே இருக்கின்றன. ஒரு கட்டத்திலே தான் எரித்த டம்ளரினையும் தூக்கிக் கொண்டு அதனைப் பாத்திமா ரீச்சரிடம் கொடுப்பதற்கு அவரின் வீட்டினை நோக்கிப் போகிறார் டெய்ஸி ரீச்சர். வேதனைகளுக்கு மத்தியிலும், பிரிவுகளுக்கு மத்தியிலும், இழப்புக்கு மத்தியிலும் ஏதோ ஒரு உந்தல் எம்மைச் சகவாழ்வினைத் தேட வைக்கிறது என்ற நம்பிக்கையூட்டலினைப் படம் காட்டியது.

படத்தின் முடிவிலே வாகனம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட மன்னாரின் வீதிகளின் காட்சிகள் திரையில் விரிகின்றன. அவை வெளிநாட்டுச் சகோதரி விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில் விரிந்த காட்சிகளாகவும் அமையலாம். ஆனால், முஸ்லிம் மக்கள் வெளியேற்றத்தின் போது நடந்து சென்ற வீதிகளாக அவை இருக்குமோ என நான் நினைத்தேன். அந்த வீதியிலே ஆங்காங்கே இராணுவம் நிற்பதும், ஒரு இடத்திலே முஸ்லிம் பெண் ஒருவர் வீதியினைக் கடக்க முற்படுவதும் காட்சிக்குள் அகப்படுகின்றன. தொடரும் இராணுவப் பிரசன்னம், முஸ்லிம் மக்களின் ஓரளவிலான‌ மீள்வருகை போன்ற விடயங்களை இந்தக் காட்சிகள் குறித்து நிற்பதாக நான் கருதினேன். சம காலத்திலே டெய்ஸி ரீச்சர் எரிந்த குவளையுடன் பாத்திமா ரீச்சரினைத் தேடிச் செல்வது எரிந்து போன உறவுகளை மீள் உருவாக்குவதனையும், நிகழ்காலப் பயணங்கள் இறந்த கால வன்முறைகளுடன் பிணைந்திருப்பதனையும் காட்டியது.

டெய்ஸி ரீச்சரின் பிள்ளைகளுக்கு மத்தியில் இருக்கும் பொருளாதாரப் பதற்றங்கள், சொத்துரிமை தொடர்பான கேள்விகள், அவாக்கள், சர்ச்சை மிக்க உறவுகள், குடும்பத்திலே பெண்களின் நிலை, புலம்பெயர்ந்த உறவுக்கும் தீவில் வாழ்வோருக்கும் இடையிலான தொடர்புகள், முரண்கள் எனப் பல விடயங்களையும் படம் ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்தும் வெளிப்படுத்தியவாறே இருந்தது. இவ்வளவு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலே சிக்கல்களும், பதற்றங்களும், மாற்றங்களும் நடந்து கொண்டிருக்கும் இந்த மத்திய வர்க்கக் குடும்பத்தின் நாளாந்த‌ ஓட்டத்திலே ஒரு வேலை செய்யும் பெண்ணினுடைய இயங்குநிலைப் பிரசன்னத்தினை நாம் புறக்கணிக்க முடியாது என்பதனையும் படம் காட்டியது. குடும்பம், இனம் எல்லாவற்றுடனும் பிணைந்த நிலையிலே வர்க்கமும், பால்நிலையும் படத்திலே பயணிக்கிறது. படத்திலே நடனமாடிக் கொண்டிருக்கும் சிறுமி எல்லாச் சிக்கல்களின் மத்தியிலும் மற்றொரு தலைமுறை ஒன்று உருவாகி இருப்பதனையும், வாழ்க்கை தொடர்ந்தும் ஓடிக் கொண்டிருப்பதனையும் காட்டியது.

நல்லிணக்கம், சகவாழ்வு போன்றன இலகுவான செயன்முறைகள் அல்ல. அவை சவால் மிக்கன. அதேநேரம் நாம் அவற்றினை ஏதோ ஒரு மட்டத்திலே கடந்த காலத்திலே செய்ய முற்பட்டிருக்கிறோம், அல்லது இன்னும் செய்ய‌ முற்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கையினை ஒற்றை டம்ளர் வெளிக்காட்டியது. டெய்ஸி ரீச்சரின் மகன் ஜூட் புலிகளுடன் சேர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் போதே முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தினைத் தடுக்க கத்தோலிக்க மதகுருக்களுடன் இணைந்து முற்பட்டார். நம்பிக்கைகளை இறந்த காலத்திலும் சரி நிகழ்காலத்திலும் சரி தேடுவது எமது சகவாழ்வுக்கு அவசியமானது. அந்த வகையில் ஒற்றை டம்ளர் ஒரு முக்கியமான படைப்பாக்கம்.

திரைப்படம் பற்றிய திரு. அத்தனாஸ் யேசுராசா அவர்களின் கருத்துக்கள் பற்றிய ஒரு பார்வை

வட பகுதியிலே இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதனைப் பின்னணியாகக் கொண்ட ஒரு திரைப்படத்திலே, முஸ்லிம் மக்கள் வட பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டமைக்கான காரணம் குறித்த உரையாடல்களிலே, முஸ்லிம் தரப்புக்களினால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் கோடிட்டுக் காட்டப்பட்டிருக்க‌ வேண்டும் எனத் திரைப்பட மற்றும் இலக்கிய விமர்சகரான அத்தனாஸ் யேசுராசா அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவர் இந்த விடயம் குறித்து தனது முகநூலிலே வெளியிட்டுள்ள சில‌ கருத்துக்களை முதலில் இங்கு மீள் பதிகிறேன்:

“முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதை நான் கண்டிக் கிறேன்; அவ்வாறு வெளியேற்றப்பட்டமையைச் சரியென நான் சொல்ல வரவில்லை. ஆனால், ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்று, மூத்தவரான அக்கா பாத்திரம் மீண்டும் மீண்டும் – பல தடவைகளில் கேட்கிறது. தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து கிழக்கு மாகாணத்தில் – முஸ்லிம் குழுக்களாலும், அரச தரப்புடன் இணைந்த அரசியல்வாதிகளின் அனுசரணை நடவடிக்கைகளாலும், தமிழ் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்ட பதிவுகள் பல உள்ளன; அவை பற்றிய கோடிகாட்டல்களையாவது  இங்கு வெளிப்படுத்தியிருக்கலாம். இவற்றையே அங்கு நான் தெரிவித்தேன்.”

முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையை எதிர்க்கும் கருத்தாளர், அதேசமயம் வெளியேற்றத்துக்குச் சில பின்னணிக் காரணங்கள் இருப்பதனையும் சொல்ல வேண்டும் எனச் சொல்ல முற்படுவது இங்கு தெரிகிறது. இனச்சுத்திகரிப்புப் போன்ற பாரதூரமான குற்றங்கள் ஒரு குழுவினருக்கு எதிரான வன்மத்தினாலேயே நிகழுபவை. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்திலும் சரி வடக்கு மாகாணத்திலும் சரி அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழ்க் குழுக்களினாலும், அரச தரப்புடன் இணைந்த தமிழ் அரசியல்வாதிகளினாலும் கூட தமிழ் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். அதற்காக முழுத் தமிழர்களையும் விடுதலைப் புலிகள் இனச்சுத்திகரிப்புச் செய்தார்களா? இந்தக் கேள்வி ஒரு பேய்த்தனமான கேள்வியாகப் படலாம். ஆனால், இந்தக் கேள்வியினைக் கேட்பது தான் இனச்சுத்திகரிப்புக்கான அடிப்படையான காரணங்களை விளங்கிக் கொள்ளுவதற்கு உதவும்.

புலிகளின் அரசியல் என்பது வடக்குக் கிழக்கிலே தமிழரினை முதன்மைப்படுத்துவதுடன் தொடர்புபட்ட அரசியல். தமிழர்களே புலிகளுக்கு வேண்டிய சனத்தொகையினர். தமிழ்த் தேசியவாதம் சார்ந்தோர் என்னதான் உள்ளடக்கம் சார் விரிவுபடுத்தல் (inclusivism) பற்றி கதைத்தாலும் அவர்களின் நிலப்பரப்பு சார் அரசியலும் ஏதோ ஒரு வகையில் தமிழரை வடக்குக் கிழக்கிலே முன்னுரிமைப்படுத்தும் அரசியலே. இங்கு முஸ்லிம் மக்கள் எப்போதுமே இரண்டாந்தர நிலையில் இருப்போரே. அவர்களின் விடுதலை எல்லாம் இங்கு இரண்டாம் பட்சமானதே. இது இனச்சுத்திகரிப்புப் பற்றிய‌ என்னுடைய விளக்கமும் புரிதலும். சுமதியின் படம் இந்த விளக்கத்தினைச் சொல்ல வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. அப்படிச் சொல்லாததற்காக நான் படத்தினைக் குறை சொல்லவுமில்லை. ஏனெனில், இனச் சுத்திகரிப்புக்கான காரணங்களைப் பட்டியலிடுவதும், ஆராய்வதும் சுமதியின் படத்தின் நோக்கங்களாக‌ இருக்கவில்லை. படத்தின் அரசியல் இனச்சுத்திகரிப்பின் பின்னணியிலான‌ தமிழ் முஸ்லிம் உறவுகளின் தாக்கங்கள் பற்றியதாக‌ இருந்தாலும், படத்தின் ஒட்டுமொத்த‌ உருவமைப்பிலே இனச்சுத்திகரிப்பு என்ற நிகழ்வு ஒரு தொடக்கமாகவே  (point of departure) அமைகிறது.

சுமதியின் திரைப்படத்திலே அக்கா பாத்திரம் ஏன் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டனர் எனத் திரும்பத் திரும்பக் கேட்பதாக திரு. யேசுராசா குறிப்பிட்டுள்ளார். என்னுடைய நினைவுக்கு எட்டிய வரைக்கும் அக்கா பாத்திரம் முஸ்லிம் மக்கள் ஏன் வெளியேற்றப்பட்டனர் எனக் கேட்டதாகத் தெரியவில்லை. அக்காவின் கேள்வி எல்லாம் தம்பி ஜூட்டுக்கு என்ன நடந்தது என்பது பற்றியதாகவே அமைந்தது. முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் என்ற விடயம் கூட இந்தப் படத்திலே ஜூட்டின் கதையின் ஊடாகவே நோக்கப்பட்டிருக்கிறது. கதையின் மையம் எவ்வாறு இனச்சுத்திகரிப்பினைத் தமிழ்க் குடும்பம் ஒன்று பார்க்கிறது அல்லது அதனுடன் அது எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதுவே. இது இனச்சுத்திகரிப்புப் பற்றிய ஒரு படம் அல்ல.

புலிகள் மீள்குடியேறும் படி முஸ்லிம்களை அழைத்தனர். அதனைப் படம் சொல்லவில்லை என்ற வகையிலும் திரு. யேசுராசா குறிப்பிடுகிறார். அழைத்த பின்னர் சமாதான ஒப்பந்த காலத்திலே வடக்குக்குத் திரும்பிய முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு உதவுவதற்குப் புலிகள் முழு மனதுடன் உதவவில்லை எனக் குறிப்பிடும் முஸ்லிம் மக்களும் எம்மத்தியில் இருக்கிறார்கள். சுமதியும் இடம்பெயர்ந்த சில முஸ்லிம் மற்றும் தமிழ்ப் பெண்களும் இணைந்து எழுதிய ஒரு பதிவிலே ஒரு இடத்திலே முஸ்லிம் பெண்ணொருவர் இது குறித்த தனது அனுபவத்தினை வெளியிட்டிருக்கிறார்:

We still have a shop in Jaffna in the north, on Kasthuriar Road, a famous spot, you know. Not just any place. It is in my mother’s name. It has been taken over by a Tamil man who is refusing to give it back to us. Umma, Mother and I went recently. When the man refused to return our property we went to the LTTE. It looks like LTTE has no time for us. At first the LTTE said that the property of the Muslims should be given back to the rightful owners. But the Tamil man talks to the LTTE in private and gives them money, I think. The LTTE is not sympathetic to what we ask. For seven days Umma and I went about trying to negotiate with the LTTE for the sale of our shop. I told them of my difficulties and with what difficulty we had come there. I used to like the LTTE. They banned the drinking of Coca-Cola, they would not be disloyal to their people and all. These were my thoughts those days as a child. I used to be friendly with people in the Movement as well. On the anniversary of Thileeban’s death they opened a clinic in Jaffna. I went there to get my wound bandaged on that day. (pages 23-24, “Salt, sand, and water, 2009)

மேலும் மீள வருபவர்களுக்கு வடக்கிலே இருக்கின்ற தமிழ் நிருவாக அதிகாரிகள் எவ்வாறு கரைச்சல் கொடுத்தனர், இன்றும் கொடுக்கின்றனர் என்பதுவும் கூட இங்கு பேசப்பட்டிருக்க வேண்டும் என்று இன்னொரு தொகுதிக் கேள்விகளை இன்னொரு தரப்பினர் சுமதியினை நோக்கி முன்வைக்கலாம்.

ஒரு கலைப்படைப்பின் உள்ளடக்கம் என்ன? விலத்தல் என்ன? என்பதனை விமர்சிப்பது தவறு அல்ல. ஆனால், ஒரு கலைப்படப்பின் ஒட்டுமொத்தமான உருவத்திலே அசாதாரணமாக எவை விலத்தப்பட்டிருக்கின்றன அல்லது அசாதாரணமாக எவை சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதே இங்கு முக்கியம். சுமதியின் படம் ரியலிச (realism) உருவமற்றது. லினியர் (linear) உருவம் அற்றது. நினைவு எது நிஜம் எது என்பதனைக் குழப்பும் பாங்கில் அமைகிறது. கால வரையறைகளை வெட்டிச் செல்லுகிறது. வேண்டுமென்றே ஐயங்களை விட்டுச் செல்லுகிறது. துண்டுகளால் உருவானது. இந்த அம்சங்களின் ஊடாக நான் மேலே குறிப்பிட்டது போல நிகழ்கால சகவாழ்வு பற்றிய‌ அரசியலின் சிக்கல் தன்மைகளைச் சுமதி பேச முற்பட்டிருக்கிறார். சுமதி தனது உரையிலே சொன்னது போல அது ஒரு கவிதை உருவமான‌ படம். அந்தப் படத்தினைக் காரண காரிய அணுகுமுறையில் பிரச்சினைகளைச் சொல்லும், வரலாற்றைப் படிப்பிக்கும், ரியலிஸ, லீனியர் படமாக இருக்க வேண்டும் என நினைப்பது அணுகுமுறையில் இருக்கும் பிரச்சினை.

ஆரம்பத்திலே திரைப்படத்தில் வரும் காட்சிகள் யாழ்ப்பாணம் போன்று இருந்ததாக திரு. யேசுராசா குறிப்பிடுகிறார். ஆனால், படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ஒன்றிலேயே மன்னாரில் இருக்கும் கடை ஒன்றின் பெயர்ப் பலகை இடம்பெறுகிறது. படத்திலே பேசியவர்களின் மொழி யாழ்ப்பாணத்தில் இருப்போர் பேசும் தமிழ் போல இருக்கவில்லை எனவும் (இது அவர் உரையாடலிலே சொன்ன விடயம்), கத்தோலிக்க சமயத்தவர் செய்திப் பத்திரிகையைப் பிடித்தபடி சமயப் பாடல்களைப் பாடமாட்டார்கள் எனவும் அவர் முன்வைக்கும் கருத்துக்களிலே குறித்த சமூகங்களின் மொழி மற்றும் சமயக் கலாசார வாழ்வினை அவர் பொதுமைப்படுத்தப்பட்ட‌ சாராம்சங்களின் (essentialism) ஊடாக நோக்க முயல்வதாகப் படுகின்றது.

கத்தோலிக்க மதகுருமார் பாலியல் செயல்முறைகளில் தொடர்புபடுவதாகப் பொதுமைப்படுத்தப்பட்ட முறையில் திரைப்படம் சொல்லுவதாகத் திரு. யேசுராசா குறிப்பிடுகிறார். ஆனால், படத்திலே அவ்வாறு எதுவும் சொல்லப்பட்டது போல எனக்குத் தெரியவில்லை. படத்திலே வருகின்ற, சகோதரன் பாத்திரத்துக்கும், உள்ளூரில் வாழும் சகோதரி பாத்திரத்துக்கும் இடையில் ஒரு முரண் நிலவுகிறது. வெளிநாட்டில் இருந்து வந்த சகோதரி தான் குடும்பக் கட்டுப்பாடு செய்ததாகச் சொல்லும் போது, அம்மாவுக்கு இதனைச் சொல்லாதீர்கள் என உள்ளூர் சகோதரி சொல்லுகிறார் (ஏனெனில் தாயின் மத நம்பிக்கைக்கு அது விரோதமாக இருக்கக்கூடும் என்பதனாலாக இருக்கலாம்). அப்போது தம்பியார் உள்ளூர் சகோதரி திருமணத்துக்கு முன்னர் கருக்கலைப்புச் செய்தார் என்ற தோரணையிலும், இந்த விடயத்திலே சகோதரிக்குக் கத்தோலிக்க மதகுரு ஒருவரோ சிலரோ இரகசியமான முறையில் உதவி செய்தார்கள் என்ற தோரணையிலும் பேசுகிறார். இங்கு எங்கே கத்தோலிக்க மதகுருமாரின் பாலியல் செயன்முறைகள் வருகின்றன என எனக்கு விளங்கவில்லை. அதேபோல படத்தில் வரும் கத்தோலிக்க மதகுருக்கள் முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தினை நிறுத்தவும் முயற்சி செய்கிறார்கள். எனவே, கத்தோலிக்க மதகுருக்களின் தமிழ்த் தேசியவாத ஆதரவு நிலைப்பாட்டுக்கு எதிரான நோக்கிலே கத்தோலிக்க மதகுருக்களினைச் சுமதி தவறாகப் பொதுமைப்படுத்திச் சித்திரிக்கிறார் என்ற திரு. யேசுராசாவின் விமர்சனத்துக்குப் படத்திலே எந்த அடிப்படையும் இல்லை. மேலும் ஒரு திரைப்படத்திலே வருகின்ற ஒரு கதாபாத்திரத்தின் எல்லாப் பேச்சுக்களும் நெறியாளரின் கருத்துக்கள் எனவும் ஏன் இங்கு நோக்கப்பட வேண்டும் எனத் தெரியவில்லை. ஒரு கலைப்படைப்பிலே பாத்திரங்கள் அரசியல் பிழையான (politically incorrect) கருத்துக்களைப் பேச முடியாதா? எல்லாப் பாத்திரங்களும் அரசியல் சரியான மொழியினைப் பேசினால் அங்கே என்ன கலை இருக்க முடியும்?

படத்தில் வரும் ஜூட் என்ற பாத்திரம் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பயணித்த பாத்திரமாகப் பல இடங்களிலே பேசப்படுகிறது. அந்தப் பாத்திரம் முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தினை நிறுத்த முற்படுகிறது. பின்னர் தமிழ் பேசும் இருவர் அவரினை வந்து கடத்தி விடுகின்றனர். அவர்கள் புலிகள்தான் என எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால், இந்தக் கடத்தல் உண்மையில் இடம்பெற்றதா அல்லது சகோதரியின் கனவாக வருகின்றதா எனப் படம் ஒரு ஐய நிலையினையும் தோற்றுவிக்கிறது. விடுதலைப் புலிகள் என்ற அமைப்புக்குள் இருக்கும் சிக்கல் தன்மையினையும், வேறுபாடுகளையும் ஜூட் பாத்திரம் ஒரு வகையில் வெளிக்காட்டுகிறது. 1990களிலே செயற்பட்ட‌ எல்லாப் புலிகளும் முஸ்லிம் விரோதமானவர்கள் இல்லை. எல்லாப் புலிகளும் முஸ்லிம் மக்கள் வெளியேறுவதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பதனையும் கூடப் படம் ஒரு வழியிலே பேசிச் சென்றது. சுமதியின் படத்தில் நிறையப் புலி bashing இருக்கும் என நினைத்தவர்களுக்கு இது சற்று ஏமாற்றமாக இருக்கலாம்.

மகேந்திரன் திருவரங்கன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே ஆங்கில இலக்கியத்துறையிலே விரிவுரையாளராக இருக்கின்றார்.