மஸ்கெலியா, ஓல்டன் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு இதுவரை தொழிலாளர்கள் உட்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும், 16 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலை ஏற்படுவதற்குக் காரணமாகவிருந்த இரு தோட்டத்தொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட முகாமையாளருக்கு எதிராக எந்தவித நடவடிக்கையையும் பொலிஸார் எடுப்பதாக இல்லை என்று ஓல்டன் மக்கள் கூறுகிறார்கள். இரண்டரை வருடகாலமாக ஓல்டன் தோட்டத்தில் பணிபுரியும் இந்த முகாமையாளர் தொழிலாளர்களுக்கு எதிராக மஸ்கெலியா பொலிஸில் 70இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை செய்திருப்பதாகவும் தோட்ட மக்கள் கூறுகிறார்கள்.

இரண்டரை வருடகாலப்பகுதியில் தோட்ட முகாமையாளரின் பல்வேறு வகையான அடக்குமுறைகளுக்கு தாங்கள் முகம் கொடுத்தார்கள் என்றும் அதற்கு எதிராக பல இடங்களில் முறைப்பாடுகள் செய்தும் தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் ஓல்டன் மக்கள் கூறுகிறார்கள்.

தங்களுக்கு முகாமையாளரால் ஏற்பட்ட அநீதிகள் தொடர்பாகவும் முகாமையாளரைத் தாக்குமளவுக்குத் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட கோபத்தின் பின்னால் உள்ள காரணங்கள் குறித்தும் பெண் தொழிலாளி ஒருவர் எம்முடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.