படம்: Selvaraja Rajasegar Photo

தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கூறி வருகின்ற நிலையில், தோட்டக் கம்பனிகள் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன. இங்கே தொடர்புபடும் மூன்று தரப்பினர்களில் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்தை நிறைவேற்றும் பொறுப்பு, அதனை மறுக்கும் கம்பனிகள் சார்ந்தது என்றவகையில் இனிவரும் காலங்களில் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை மாற்றுவடிவம் எடுக்க வாய்ப்புகள் உள்ளன.

சம்பள நிர்ணய சபை ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தைத் தீர்மானிக்கும் முறைமை புதியதல்ல. ஆனாலும், கூட்டு ஒப்பந்தம் மூலம் தீர்மானிப்பதான ஒரு முறைமை வந்தவுடன் அந்த முறைமை கிடப்பில் போடப்பட்டது.

இப்போது மீண்டும் அந்த முறைமைக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரமும், ஆண்டின் இறுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வரவு செலவுத் திட்டத்தில் விடுத்த அறிவிப்பும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரவில்லை. அது அரசாங்கத்துக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்த நிலையிலேயே சம்பளநிர்ணய சபையின் ஊடாக தீர்மானிப்பதற்கு தொழில் அமைச்சர் நிமால் சிறிபால சில்வா அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து சம்பள நிர்ணய சபைக்குச் செல்லும் தீர்மானத்தை எடுத்தார்.

சம்பள நிர்ணய சபையில் அடிப்படை நாட்சம்பளம் 900/= எனவும் வரவுசெலவுத்திட்டபடி 100/= எனவும் வழங்க வேண்டும் என்று எடுத்த முடிவுக்கு கம்பனிகள் இணங்கவில்லை என்பது அவர்கள் அதனை எதிர்த்து வாக்களித்ததில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது. மேலும் 14 நாள் கால அவகாசத்தினைப் பயன்படுத்தி அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் செல்லலாம். மறுபுறம் தாங்கள் 1000/= நாட்சம்பளத்தைப் பெற்றுக் கொண்டுவிட்டதாக அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கொண்டாடினாலும் அடுத்துவரும் மாதங்களில் அந்த சம்பளத்தை மாதாந்தம் பெறும் தொழிலாளர்களின் பதிற்குறி வாயிலாக அதன் உண்மைத் தன்மை வெளிப்படும்.

தோட்டக் கம்பனிகள் தமது ஆட்சேபனையைத் தெரிவிக்க 14 நாட்கள் கால அவகாசம் உண்டு. அது குறித்து தாம் கவனம் செலுத்த உள்ளதாக முதலாளிமார் சம்மேளனப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்து உள்ளார். அதற்குள் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை வெளியிட்டு, அதனை ஏற்று நடைமுறைப்படுத்த கம்பனிகள் நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர்கள் வழங்கும் வேலை நாட்களைக் குறைக்க வாய்ப்பு உள்ளது. அது தொழிலாளர்களின் மாத வருமானத்தைக் குறைக்க வல்லது.

எனவே, இதுவரை காலம் ஆயிரம் ரூபாதான் பிரச்சினை என பேசிவந்த அரசியல், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இப்போது அதற்கு அப்பால்சென்று வேலை நாட்கள் குறித்து பேசத் தலைப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினை உக்கிரமடையும்போது முறைமை மாற்றம் குறித்து ஆயிரம் ரூபாவுக்கு வெளியே சென்று பேசும் பல திறப்புகள் வெளிப்பட வாய்ப்புகள் உள்ளன.

கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறைமையில் மாற்றம் வேண்டுமென கடந்த காலங்களில் தொடர்ச்சியாக குரல் எழுப்பப்பட்டு வந்துள்ளது. இப்போது சம்பள நிர்ணய சபை மூலம் தீர்மானிக்கப்பட்ட ஒரு தொகையை கம்பனிகள் வழங்க வேண்டும் என்று அரசினால் நிர்ப்பந்திக்கப்படும் நிலையில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறைமையின் இறுக்கம் தளர்ந்துள்ளது என்பதனைக் காட்டுகிறது.

இதனால், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை மாற்றுவடிவில் வெளிவரும். இதன்போது அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் மேலும் இந்த விடயத்தில் கவனம் எடுக்கும் தேவை எழும். அதன்போது முறைமை மாற்றம் ஒன்றிற்கான அழுத்தம் அதிகரிக்கும். சமூக மட்டத்திலும் ஆயிரம் ரூபாதான் பிரச்சினை என்கிற நிலையைக் கடந்து தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினையை, மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினையைப் பார்க்கும் சூழ்நிலை ஏற்படும். இதனை அரசியல் ரீதியான ஒரு முன்னகர்வு என கொள்ளுதல் வேண்டும். அதேநேரம் அந்த அரசியலை கவனமாக முன்னகர்த்தவும் வேண்டும்.

மயில்வாகனம் திலகராஜ்

(முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)