பட மூலம், DNAindia

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கும் இடையே அண்மையில் நடைபெற்ற இணையவழி உச்சிமாநாடு ஏதோவொரு வகையில் பொதுநிலை கடந்த விசித்திரமானதாக அமைந்தது. இணையவழியில் மோடி தெற்காசியத்தலைவர் ஒருவருடன் உச்சிமாநாட்டை நடத்தியிருப்பது இதுவே முதற்தடவையாகும். இதுகுறித்து பெரிய எதிர்பார்ப்புக்கள் இருந்தன. ஆனால், சர்ச்சைக்குரிய அம்சங்கள் வெளிப்படையாகத் தெரிந்தன.

உச்சிமாநாட்டிற்குப் பிறகு செப்டெம்பர் 26ஆம் திகதி இருநாடுகளும் விடுத்த கூட்டறிக்கையில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது.

“இலங்கையின் அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நல்லிணக்க செயன்முறைகளை முன்னெடுப்பது உட்பட ஐக்கிய இலங்கையொன்றுக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவத்துக்கான தமிழர்களின் அபிலாசைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்” என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

“இலங்கை மக்களால் வழங்கப்பட்ட ஆணையின் பிரகாரம் முன்னெடுக்கப்படக்கூடிய நல்லிணக்க செயன்முறையின் மூலமாகவும் அரசியலமைப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமாகவும் தமிழர்கள் உட்பட சகல இனக்குழுக்களினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதை நோக்கி இலங்கை செயற்படும்” என்று பிரதமர் ராஜபக்‌ஷ நம்பிக்கை வெளியிட்டார்.

1987 இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையை அடுத்து இலங்கையின் அரசியலமைப்பிற்குக் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எந்தவொரு உறுதிப்பாட்டையும் ராஜபக்‌ஷ வழங்குவதற்குத் தவறிவிட்டார். பதிலாக ‘தமிழர்கள் உட்பட சகல இனக்குழுக்களினதும் எதிர்பார்ப்புக்கள்’ குறித்துப் பேசிய ராஜபக்‌ஷ ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் தனக்குக் கிடைத்த ‘மக்கள் ஆணையின் பிரகாரம் தேசிய நல்லிணக்க செயன்முறையை முன்னெடுப்பதையும் பொருத்தமான அரசியலமைப்புத் திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதையும்’ பற்றியே அவர் குறிப்பிட்டார். இலங்கை வாக்காளர்களிடமிருந்து தனக்குக் கிடைத்த ‘பெரிய ஆணை’ குறித்து மோடியின் கவனத்திற்குக் கொண்டுவந்த ராஜபக்‌ஷ “சகலருக்காகவும் சகலருடனும் சேர்ந்து செயற்படுவது எமது பொறுப்பு” என்று குறிப்பிட்டார்.

சுருக்கமாகக் கூறுவதானால் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக நல்லிணக்கச்செயன்முறைகள் இருக்கவேண்டும் என்ற செய்தியை இலங்கை பிரதமர் மோடிக்குத் தெரிவித்தார். புதுடில்லி இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் தவறான பாதையில் சிந்தித்து நேரத்தை வீணாக்குகிறது என்பதே அவர் சூசகமாகக் கூறியதாகும். மோடி அரசாங்கமும் கூட இந்தியாவிற்குள் பெரும்பான்மைவாதக் கோட்பாடொன்றையே கடைப்பிடிக்கிறது என்பது இங்கு விசித்திரமான ஒரு விடயமாகும்.

13ஆவது திருத்தம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சிங்கள பௌத்த சமூகத்திடமிருந்து ஏற்கனவே கோரிக்கையொன்று கிளம்பியிருக்கிறது. இருந்தாலும் அந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த மோடி தீர்மானித்தார். உண்மையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது இன்றியமையாதது என்ற மோடியின் அழுத்தமான கோரிக்கைக்கு எதிர்மறையான பிரதிபலிப்பையே ராஜபக்‌ஷ வெளிக்காட்டினார்.

வரலாற்று ரீதியாக இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரு புவிசார் அரசியல் பரிமாணம் இருக்கிறது. இராஜதந்திரப்பரப்பில் இந்தியா சிறப்பாகவே செயற்பட்டு வந்திருக்கிறது. இந்தியாவின் தலையீடு ஒவ்வொரு நேரங்களில் வெவ்வேறு வடிவங்களில் இடம்பெற்றிருக்கிறது.

1970 இன் பிற்பகுதியிலிருந்து ஒரு தசாப்தகாலமாக புதுடில்லி தமிழர் பிரச்சினையை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான மேற்குலக சார்பான இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்குதலைக் கொடுப்பதற்குப் பயன்படுத்தியது. ஆனால், இந்தியாவின் தலையீட்டுக் கொள்கைகளினால் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கு கொழும்பு முன்னுதாரணமான ஒரு இராஜதந்திர ஆற்றலை வெளிக்காட்டியது.

1980களின் நடுப்பகுதியளவில் ஜெயவர்தன புதுடில்லியை மிகவும் புத்திசாதுரியமான முறையில் மடக்கினார். தமிழத்தீவிரவாத இயக்கங்களை வளர்க்கும் ஒரு நாடு என்ற நிலையிலிருந்து அந்த இயக்கங்களை அழிக்கும் ஒரு நாடு என்ற நிலையை இந்தியாவைக்கொண்டு எடுக்கவைத்தார். நாளடைவில் சலித்துப்போன இந்திய அரசாங்கம் இழப்புக்களைச் சந்தித்த பிறகு இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டியேற்பட்டது.

அடுத்த இரண்டு தசாப்தங்களிலும் இந்தியாவின் கணிப்பீட்டில் புவிசார் அரசியல் முக்கியத்துவம் பெறவில்லை. இதனால் 26 வருடகால மோதலுக்குப் பிறகு 2009ஆம் ஆண்டளவில் தமிழ் பிரிவினைவாதக் குழுக்களை கொழும்பினால் தோற்கடிக்கக்கூடியதாக இருந்தது.

2014 இல் மோடி அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு அதன் வெளியுறவுக்கொள்கையில் சீனாவுடனான பகைமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காரணத்தினால் இரவோடிரவாக புவிசார் அரசியல் மீண்டும் முன்னரங்கத்திற்கு வந்தது. 2015 ஜனவரி அளவில் இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக வெளிநாடுகளினால் கொழும்பில் ஆட்சிமாற்றம் ஒன்று கொண்டுவரப்பட்டது. சீனாவிற்கு சார்பானவராக புதுடில்லியினாலும் வாஷிங்டனாலும் நோக்கப்பட்ட கடுமையான தேசியவாதத் தலைவரான ராஜபக்‌ஷ பதவி கவிழ்க்கப்பட்டார்.

இந்த ஆட்சிமாற்றத்திட்டத்தின் ஒரு தனித்துவமான அம்சம் என்னவென்றால் கொழும்பிலுள்ள சிங்கள அரசாங்கத்தைத் தூக்கியெறிவதற்குத் தமிழத்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவும் பெறப்பட்டமையாகும். இதற்கான பழியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீண்டகாலத்திற்கு சுமக்கவேண்டியிருக்கும். அடிப்படையில் முற்றுமுழுதாக ஒரு புவிசார் அரசியல் திட்டத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்மை அடையாளப்படுத்திக்கொண்டது தமிழ் மக்களுக்கு எந்தவகையிலும் உதவவில்லை.

பின்நோக்கிப் பார்க்கும்போது 2015 ஆட்சிமாற்றத் திட்டம் ஒரு பயனற்ற வேலை என்பதை புதுடில்லியும் வாஷிங்டனும் விரைவாகவே புரிந்துகொண்ட போதிலும் இலங்கைப் பரப்பில் தங்களது முயற்சிகளை அதிகரிக்க அவை தீர்மானித்தன. இது ஏனென்றால் சீனாவை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து ‘இந்தோ – பசுபிக் மூலோபாயத்திட்டம்’ ஒன்றை வகுத்து, அதைத் தீவிரமாக முன்னெடுக்கின்ற நேரத்திலேயே கொழும்பில் ராஜபக்‌ஷ மீண்டும் அதிகாரத்திற்கு வந்தார்.

இந்தியாவினதும் அமெரிக்காவினதும் புதிய நிகழ்ச்சித்திட்டம் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவை உள்ளடக்கிய ‘குவாட்’ கூட்டணியின் வலயத்திற்குள் ராஜபக்‌ஷ அரசாங்கத்தைக் கொண்டுவருவதேயாகும். ஆனால், குவாட்டுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே (ஆசியக்கண்டத்தின் பெரும்பாலான நாடுகள் நடந்துகொள்வதைப்போன்று) இலங்கை தேசியவாதிகளும் ஒரு பக்கம் சாய்வதற்குத் தயாராக இல்லை.

அதனால்தான் கொழும்பின் மீது நெருக்குதலை அதிகரிப்பதற்கு தமிழர் பிரச்சினையைப் பயன்படுத்த இந்தியா மீண்டும் திட்டமிட்டது. இலங்கையில் இந்த ‘மனிதாபிமானத்தலையீடு’ புவிசார் அரசியல் நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுப்பதையே நோக்கமாகக்கொண்டதாகும். ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தலைவர். அவர் 71 சதவீதமான வாக்குகளுடன் பெரிய ஆணையை மக்களிடமிருந்து பெற்றிருக்கிறார். மீண்டும் அதிகாரத்திற்கு வந்தமைக்காக அவர் புதுடில்லிக்கோ அல்லது வாஷிங்டனுக்கோ எந்தவிதத்திலும் கடமைப்பட்டவர் அல்ல.

மோடிக்கும் மஹிந்தவிற்கும் இடையிலான அண்மைய இணையவழி உச்சிமாநாடு இந்தியாவின் தலையீட்டுக்கொள்கைக்கு எதிராக இலங்கையின் தேசியவாதம் தொடர்ந்து கிளர்ந்தெழுகிறது என்பதை வெளிக்காட்டியிருக்கிறது. பௌத்தமதம்சார் உறவுகளை மேம்படுத்தவதற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானிய உதவியை வழங்கியதன் மூலம் இலங்கையின் பௌத்தமதபீடத்தை வளைத்துப்போட புதுடில்லி முயற்சித்திருக்கிறது. ஆனால், செல்வாக்குமிக்க பௌத்தமதபீடத்தை ஊக்கப்படுத்துவதில் இந்தியாவின் நோக்கங்கள் பற்றி இந்தியா தொடர்ந்து விளிப்பாகவே இருக்கும்.

ராஜபக்‌ஷவின் முன்னைய அரசாங்கத்தை நிலைகுலையச் செய்வதற்கு 2014 – 2015 காலகட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட தந்திரோபாயங்கள் இன்னமும் மறக்கப்பட்டிருக்க முடியாது. இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்க – இந்தியத் தலையீட்டை எதிர்ப்பதற்கு முன்னைய வேறு எந்தவொரு சந்தர்ப்பத்தையும் விட மிகவும் சிறப்பான நிலையில் கொழும்பு இப்போதிருக்கிறது.

அடிப்படையில், புவிசார் பொருளாதார அக்கறைகளினால் ஊக்கப்படுத்தப்படுவதாக இலங்கையின் வெளியுறவுக்கொள்கைகள் இருக்கின்ற அதேவேளை இந்தியாவும் அமெரிக்காவும் முன்னெடுக்கின்ற நிகழ்ச்சித்திட்டம் முதன்மையாக புவிசார் அரசியலை அடிப்படையாகக்கொண்டதாகும். இங்கு ஓரளவிற்கு முரண்பாடு இருக்கிறது. இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் ஒருதடவை கூறியதைப்போன்று இலங்கைத்தீவு நிரந்தரமானதொரு விமானந்தாங்கிக்கப்பல் என்ற நோக்கை அடிப்படையாகக்கொண்டதே இந்தியாவினதும் அமெரிக்காவினதும் திட்டமாகும்.

இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் ‘குவாட்’ அமைப்பை செயற்படுத்துவது அமெரிக்காவின் இந்தோ – பசுபிக் மூலோபாயத்திட்டத்திற்கு அவசியமும் அவசரமானதுமாகும். இலங்கையில் அமெரிக்க இராணுவ பிரசன்னமொன்று இருப்பது சீனாவின் வெளிநாட்டு வாணிபத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கின்ற இந்து சமுத்திரத்தின் கடற்பாதைகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்காக வகுக்கப்பட்ட ‘தீவு சங்கிலி மூலோபாயம்’ என்று அழைக்கப்படுகின்ற திட்டத்தை அமெரிக்கா முன்னெடுப்பதற்கு வசதியாக இருக்கும்.

இந்தோ – பசுபிக் மூலோபாயத்திட்டத்துடன் ஒத்துழைக்காவிட்டால் உள்நாட்டு தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களைப் பற்றிய பிரச்சினையைப் பெரிதுபடுத்தப்போவதாகவும் அதற்காக இலங்கை பெரும் விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று கடந்த வருடத்திலிருந்து கொழும்பு அரசாங்கத்தை அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் அச்சுறுத்தி வந்திருக்கிறார்கள்.

இணையவழி உச்சிமாநாட்டிற்கு மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட போது இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் இலங்கைத் தமிழர் பிரச்சினை முன்னரங்கத்திற்குக் கொண்டுவரப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்று ராஜபக்‌ஷ எதிர்பார்த்தார். அதற்கான பதிலையும் தயார்ப்படுத்தியே வைத்திருக்கிறார்.

தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இந்தோ – பசுபிக் மூலோபாயத்திட்டத்தை தீவிரப்படுத்துவது இந்தியாவின் நலன்களுக்கு எந்தளவிற்கு உதவும் என்பது குறித்து புதுடில்லி மிகவும் கடுமையாக சிந்திக்க வேண்டும்.

எம்.கே.பத்ரகுமார்
முன்னாள் இந்திய இராஜதந்திரி.

 


US, India seek to press Sri Lanka into the Quad என்ற தலைப்பில் AsiaTimes தளத்தில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.