பட மூலம், HRW

கடந்த மாதம் (மே, 2020) நீதிபதி ஒருவர் போர் நினைவு தின நிகழ்வுகளை ஒழுங்கு செய்தவர்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் கட்டளையை சட்டத்தரணிகளின் மேன்முறையீட்டின் அடிப்படையில் வாபஸ் பெற்றார்.[1] அதன் பின்னர் குறைந்தது மூன்று சட்டத்தரணிகள் அதற்கான பழிவாங்கல்களை எதிர்கொண்டனர். சட்டத்தரணி திரு. றோய் டிலக்சனின் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.[2] குறித்த வழக்கில் ஆஜரான இன்னொரு சட்டத்தரணி அவரது சட்ட அலுவலகத்தின் சுற்றுப்புறங்களில் சந்தேகத்துக்குரிய நபர் சுற்றித்திரிந்ததை அவதானித்துள்ளார். இன்னொரு சட்டத்தரணி தனது வீட்டுக்குச் செல்லும் வழியில் இராணுவத்தினரால் நிறுத்தப்பட்டு கடுமையான விசாரணை மற்றும் மிரட்டல்களுக்கு உட்படுத்தப்பட்டார்.[3]

கடந்த வருடம் (2019) இராணுவம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான கே. குருபரன் பற்றிய தகவல்களைக் கோரியிருந்தது. இராணுவத்தினைச் சம்பந்தப்படுத்தும் காணாமல் போன குடும்பங்கள் பற்றிய வழக்குகளில் அவர் பிரதிநிதித்துவம் செய்வது இதற்குரிய காரணமாக குறிப்பிடப்பட்டிருந்தது.[4] இது அவர் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்பொழுது சட்டத்தரணியாக தொழிற்படுவதைத் தடுக்கும் தொடர் செயன்முறை ஒன்றுக்கு வழிகோலியது.[5] குருபரன், நினைவேந்தல், காணி மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல் போன்ற உரிமை மீறல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைக் காக்கும் வகையில் அவர்களை பிரதிநிதித்துவம் செய்வதில் நன்கறியப்பட்டவராவார். கடந்த வருடம் குருபரன், மற்றொரு சட்டத்தரணி மற்றும் அவர்களின் கட்சிக்காரர்கள் ஆகியோர் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்துள்ள நபர் ஒருவரால் நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து புகைப்படம் எடுக்கப்பட்டதன் மூலம் மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.[6] இவ்வருடம் குருபரன் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குருபரன் மற்றும் வழக்குகளை நடத்திச் செல்வோர் புலனாய்வு அதிகாரிகளின் விஜயங்கள் உள்ளடங்கலாக கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதை ஒரு ஆய்வு நிலையம் கண்டறிந்துள்ளது.

கடந்த பல வருடங்களாக மற்றொரு வடக்குப் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணியும் நீதிமன்ற வளாகத்தினுள் மிரட்டலை எதிர்கொண்டுள்ளார். இந்தப் பெண் சட்டத்தரணியின் வீட்டுக்குப் புலனாய்வு அதிகாரிகள் வந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவர் நீதிமன்றத்துக்குச் சென்ற பின்னர் சிலர் அவரது வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சட்டத்தரணியும் காணாமல் போனோரின் குடும்பங்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுவதுடன் உரிமைகள் செயற்பாட்டாளராகவும் பணிபுரிகின்றார். இராணுவ அதிகாரிகள் பிரதிவாதிகளாக உள்ள காணாமல்போனோர் தொடர்பான வழக்குகளில் குறித்த சட்டத்தரணிக்கு உதவும் பெண் செயற்பாட்டாளர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு முகம் மற்றும் தலையில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.[7]

கடந்த மாதம் (மே, 2020) சட்டத்தரணியான அச்சலா செனவிரத்ன தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டதாக ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன.[8] ஒரு வருடத்துக்கு முன்னர் அவரது தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான வாழ்வுக்கு அச்சுறுத்தல் எனத் தான் கருதும் வகையில் அவரது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு மேற்கொண்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்த நிலையிலும் அது தொடர்பான எந்தவித முன்னேற்றமும் அவருக்கு அறிவிக்கப்படவில்லை. இந்தச் சட்டத்தரணி 11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் நலனுக்காக ஆஜராகும் சட்டத்தரணி ஆவார். இந்த வழக்குடன் கடற்படை உயர் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

இந்த மாதத்தின் ஆரம்பப் பகுதியில் (ஜூன், 2020), சட்டத்தரணி சேனக்க பெரேரா கடந்த மாதம் மஹர சிறைச்சாலையில் கைதி ஒருவரின் கொலைக்கு சாட்சியாக இருந்த இன்னொரு கைதியிடம் இருந்து சத்தியக் கடதாசி ஒன்றைப் பெறுவதற்கு பொலன்னறுவைச் சிறைச்சாலைக்கு கொழும்பில் இருந்து 200 கிலோமீற்றருக்கு மேல் பயணிக்க வேண்டி இருந்தது. எனினும், நீண்டநேர காத்திருப்புக்கு பின்னரும் சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த சத்தியக் கடதாசியைப் பெறுவதற்கு பெரேராவை அனுமதிக்கவில்லை.[9] பெரேரா கடந்த மாதம் மஹர சிறைச்சாலையில் இறந்த நபரின் பெற்றோரின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ஆவார். கடந்த 2012ஆம் ஆண்டு 27 சிறைக் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்த ரிட் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்ட பின்னர் கொலை அச்சுறுத்தல்களையும் இவர் எதிர்கொண்டிருந்தார்.[10]

மிகவும் அண்மையில், இரண்டு வாரங்களுக்கு முன்பாக சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கம் கொழும்பில் கைது செய்யப்பட்டு பல மணி நேரங்கள் தடுத்து வைக்கப்பட்டார். அவர் செய்த குற்றம் பாதையோரங்களில் உள்ள நபர்கள் ஏன் பொலிஸாரினால் கைது செய்யப்படுகின்றனர் எனக் கேள்வி எழுப்பியதே ஆகும்.[11]

இந்த வருடம் இன்னொரு உரிமைகளுக்காக வாதிடும் சட்டத்தரணி தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர் இலங்கையின் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் என அச்சுறுத்தப்பட்டார்.[12] பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) போன்று ICCPR சட்டமும் எதிர்ப்பை நசுக்கும் அரசின் அடக்குமுறைக் கருவியின் ஓர் அங்கமாக மாறியுள்ளது.[13] இச்சட்டத்தின் தெளிவற்ற மற்றும் பரந்த பதப் பிரயோகம், பொலிஸாருக்கு கைது செய்யவும் தடுத்து வைக்கவும் வழங்கப்பட்டுள்ள பரந்த மற்றும் வழிகாட்டல் அற்ற அதிகாரம். அத்துடன், நீதிபதிகளின் பிணை வழங்கும் அதிகாரம் நீக்கப்பட்டமை என்பன விசேடமாக இந்நிலையைத் தோற்றுவித்துள்ளன.

பூஸா தடுப்பு முகாமுக்கு (தென் மாகாணம்) தமது கட்சிக்காரர்களை சந்திக்கச் செல்லும் சட்டத்தரணிகள் பொலிஸாரின் பிரசன்னத்துடன் அவர்களும் செவியுறும் வகையில் தமது கட்சிக்காரர்களுடன் ஆலோசனைகளை மேற்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுவதாக கடந்த வாரம், ஜூன் மாதம் 26ஆம் திகதி வழக்கறிஞரும் ஜனாதிபதி சட்டத்தரணிகளுள் ஒருவருமான சாலிய பீரிஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.[14] தடுப்பு முகாமுக்கு விஜயம் செய்யும் சட்டத்தரணிகள் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விசேட அதிரடிப்படைப் பிரிவினால் (STF) கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சனநெரிசல் மிக்க பொதுப் போக்குவரத்து, வழிபாட்டுத்தலங்களில் ஒன்று கூடல்கள், திருமணங்கள் மற்றும் மரணச் சடங்குகள் போன்ற விடயங்கள் இடம்பெறும் போதும் சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் சட்டத்தரணி ஒருவருக்கு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரை அணுகுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

கடந்த ஏப்ரலிலிருந்து சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இலங்கைச் சட்டத்தில் எந்த ஒரு தடுத்து வைக்கப்பட்ட நபருக்கும் தனது சட்டத்தரணியுடன் இரகசியமாக உரையாடல் மேற்கொள்ள உரிமை உள்ள போதும் அவருக்கு தனது சட்டத்தரணிகளுடன் அர்த்தபூர்வமான முறையில் அணுகுவதற்கு மறுக்கப்பட்டு வருகின்றது.[15] சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை அவர் நீதிபதி ஒருவரின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவில்லை. தாம் இன்னும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான போதுமான சான்றுகளைத் தேடுவதாக ஒரு புலனாய்வு அதிகாரி தெரிவித்ததாக கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.[16] கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி ஹிஸ்புல்லாவின் வழக்கறிஞர்கள் அவரது புகைப்படம் ஏற்கனவே சம்பந்தப்பட்ட சிறுவர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளதால் அடையாள அணிவகுப்பு நடத்தும் தொடர் செயன்முறை நியாயமற்றது, நீதியற்றது மற்றும் சட்ட விரோதமானது என வாதிட்டதை அடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அடையாள அணிவகுப்பை நீதிபதி ஒருவர் இரத்துச் செய்தார்.[17]

சட்டத்தரணி ஹிஸ்புல்லாவுடன் பணிபுரியும் கனிஷ்ட சட்டத்தரணிகள் குற்றப் புலனாய்வுத் துறை தமது சட்ட அலுவலகத்தை சோதனை செய்து அங்கிருந்த இரண்டு சட்ட ஆவணங்களை எடுத்துச் சென்றமை, கட்சிக்காரர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையான கௌரவமான தொடர்பாடலை மீறியமை தொடர்பில் தனித்தனியாக அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் அறிவின்படி சட்ட அலுவலகத்துக்குள் நுழைதல் மற்றும் சோதனை செய்வதற்கான ஆணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என அறிக்கையிடப்பட்டுள்ளது.[18]

இக்கட்டுரையில் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சட்டத்தரணிகளில் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளடங்குவதுடன் ஆண் மற்றும் பெண் இரு பாலாரும் காணப்படுகின்றனர். அத்துடன், இச்சட்டத்தரணிகள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். இவர்களில் குறைந்தது ஏழு சட்டத்தரணிகள் தமிழர்களாக உள்ளதுடன் குறைந்தது ஐந்து பெண் சட்டத்தரணிகள் இதில் உள்ளடங்குகின்றனர். அதிகமாக, அத்துடன் சாத்தியமான வகையில் அனைத்து சட்டத்தரணிகளும் உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகளிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்தல் தொடர்பான வழக்குகளை முன்னெடுக்கும் நபர்களாக உள்ளனர். அத்துடன், இவர்கள் பேரினவாதம், இராணுவம், அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளை தமது தீவிர செயற்பாட்டின் மூலம் நீதிமன்றத்துக்குள்ளும் வெளியிலும் சவாலுக்கு உட்படுத்துபவர்களாகக் காணப்படுகின்றனர்.

இவ்வருடம் உரிமைகள் சார்ந்த சட்டத்தரணிகளுக்கு எதிரான சம்பவங்களின் எண்ணிக்கையில் அவதானிக்கத்தக்க அதிகரிப்பு காணப்படுகின்றது. எனினும், வரலாற்று ரீதியாக இவ்வாறான போக்கை அவதானிக்க முடிகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு நான் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டபோது அதிக எண்ணிக்கையான எனது சக சட்டத்தரணிகள் என்னைக் காண வந்திருந்தனர். எனினும், அவர்களில் எவரையும் என்னுடன் உரையாடுவதற்கு அனுமதிக்கவில்லை. கடந்த 2008ஆம் ஆண்டு மிகவும் நன்கு அறியப்பட்ட உரிமைகளுக்காக வாதிடும் சட்டத்தரணி ஒருவரின் வீட்டின் மீது கிரனைற் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.[19] கடந்த 2009ஆம் ஆண்டு அரசாங்கத்தை தொடர்ச்சியாக விமர்சித்து வந்த செய்திப்பத்திரிகை ஒன்றுக்காக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு முகங்கொடுத்தனர். அத்துடன், அவர்கள் கறுப்பு மேலங்கி அணிந்த காட்டிக்கொடுப்பவர்கள் என தூற்றப்பட்டனர்.[20] கடந்த 2013ஆம் ஆண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிரதம நீதியரசருக்கு ஆதரவாக செயற்பட்ட சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன.[21] 1980களில் சட்டத்தரணிகள் கொலை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதுடன் குறைந்தது இருவர் கொல்லப்பட்டனர்.[22] இவ்வாறான விடயங்கள் மீண்டும் இடம்பெறாமலிருக்க நாம் இத்தருணத்தில் செயற்பட வேண்டியுள்ளது.

சட்டத்தரணிகள் என்போர் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்லர் என்பதுடன் அவர்கள் ஈடுபடும் எந்த ஒரு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் அவர்கள் வகைபொறுப்பு கூற வேண்டும். ஏனைய அனைத்து தொழில்வாண்மையாளர்கள் போன்று அவர்களும் அவர்களின் சேவை நாடிகள், தொழில்சார் அமைப்புகள், ஊடகம் மற்றும் பொதுமக்களின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வகை கூறுபவர்களாக ஆக்கப்பட வேண்டும். ஏனைய அனைவரையும் போன்று சட்டத்தரணிகளும் அனைத்து மனித உரிமைகளுக்கும் உரித்துடையவர்கள். பல்வேறுபட்ட தரப்புகளின் நலன்கள் மற்றும் உரிமைகளை பிரதிநிதித்துவம் செய்வதன் மூலம் சட்டத்தரணிகள் நீதிமன்றங்கள் நீதியை வழங்குவதில் உதவுகின்றனர். கடமைக்கு கட்டுப்பட்ட அவர்கள் சட்டம் மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதுடன் “நீதியின் அவசியமான முகவர்கள்” என அங்கீகரிக்கப்பட்டவர்களாவர். இதன் காரணமாகவே சட்டத்தரணிகள் நியாயமற்ற மற்றும் நீதியற்ற முறையில் நடத்தப்படல், பிரசித்தமாக அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தக்கவாறான முறைமை என்பன மறுக்கப்படல் தனி நபர் உரிமை மீறலாகவும் நீதி வழங்கலில் தலையீடு செய்வதாகவும் அமையும். சட்டத்தரணி – கட்சிக்காரர் இடையான இரகசியத்தன்மையை மீறுதல் அத்துடன் சட்டத்தரணிகளின் அணுகலில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தல் என்பன சட்டத்தரணிகள் மற்றும் நீதி வழங்கும் முறைமையில் மக்கள்  நம்பிக்கை இழப்பதற்கு வழிகோலும். ஏனையவர்களின் கைதுக்கான காரணத்தைக் கேட்கும் சட்டத்தரணிகளை கைது செய்தல், அச்சுறுத்தல்கள், சட்டத்தரணிகள் மீதான வேவு நடவடிக்கைகள், அவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துதல் என்பன சட்ட ஆட்சி மற்றும் நீதியைத் தேடுதல் என்பவற்றில் தீய விளைவுகளை ஏற்படுத்தும்.

அனைத்து சட்டத்தரணிகளினதும் உச்ச அமைப்பாகக் காணப்படும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தனது நோக்கங்களுள் ஒன்றாக (அதனது உறுப்பினர்களின்) நலன்கள், நலன்புரி, உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் எனவும் இத்தொழிலின் மற்றும் பொதுமக்கள் சார்பில் சட்டவாக்கம் அல்லது ஏனைய எந்த ஒரு அதிகாரத் தரப்பிடமும் பிரதிநிதித்துவம் செய்தல் மற்றும் எடுத்துக்கூறல் எனக் குறிப்பிடுகின்றது.[23] எனினும், அவ்வமைப்பின் மிகவும் அர்ப்பணிப்புமிக்க உறுப்பினர்கள் மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் சமூக நீதிக்காக எழுந்து நிற்கும் வேளை அல்லது எளிமையாக தமது கடமைகளை மேற்கொள்ள முயற்சிக்கும் வேளை நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் சமயத்தில் BASL மற்றும் அதன் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான குழுக்கள் என்பன அமைதியைப் பேணுவதுடன் சுய தணிக்கையை பின்பற்றுகின்றனர்.

இன்று நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் இந்தச் சட்டத்தரணிகள் மக்களின் சுதந்திரம், உரிமைகள் மற்றும் கௌரவம் என்பன நசுக்கப்படும் வேளை அதனை பாதுகாத்தவர்களாகவும் அவர்களுக்கு ஆதரவு வழங்கியவர்களாகவும் உள்ளனர். பரந்த அளவில் அவர்கள் ஜனநாயக மேம்பாடு, சட்டத்தின் ஆட்சி மற்றும் சமூக நீதிக்கு பங்களிப்பு வழங்கியவர்களாவர். நாளை எமது உரிமைகள் மீறப்படும் வேளை, நாம் அநீதிக்கு உட்படுத்தப்படும் வேளை, எம்மை நியாயப்படுத்த மற்றும் பாதுகாக்க நாம் அவர்களை நோக்கியும் அவர்கள் போன்றோர் பக்கமாகவும் திரும்புவோம். இன்று அவர்கள் நெருக்கடிக்கு உள்ளாகும் வேளை நாம் அனைவரும் அவர்களுடன் எழுந்து நிற்க வேண்டும்.

ருக்கி பெர்னாண்டோ

“Rights Lawyers Under Fire in Sri Lanka” என்ற தலைப்பில் கிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.


[1]  https://twitter.com/rkguruparan/status/1262282744278601728

[2] https://twitter.com/TnpfOrg/status/1264570885299716096 and https://www.tamilguardian.com/content/home-tamil-lawyer-attacked

[3] மேலுள்ளது.

[4] https://twitter.com/rkguruparan/status/1232537042615181314

[5] http://www.sundayobserver.lk/2019/11/17/news/university-students-and-academics-condemn-harassment-guruparan and https://www.frontlinedefenders.org/en/case/human-rights-lawyer-kumaravadivel-guruparan-barred-practicing-law

[6] https://twitter.com/rkguruparan/status/1156863157396054016

[7] https://twitter.com/rukitweets/status/1018096403581530113?cxt=HHwWgsCjqZ7SgKEcAAAA

[8] https://www.lankanewsweb.net/66-special-news/62362-Disappearance-of-11-Youths-Lawyer-in-Defence-of-Aggrieved-Party-threatened-with-life

[9] https://ceylontoday.lk/news/lawyer-refused-recording-of-affidavit-by-prison-authorities

[10]    http://www.dailymirror.lk/article/Key-eyewitness-lawyer-threatened-with-death-132788.html,

[11] கைதுகள் கடுமையாக விமர்சிக்கப்படும்போது கைதுகள் மற்றும் பொலிஸ் அராஜகம். பார்க்க. See https://ceylontoday.lk/news/breaking-up-black-lives-matter-protest-by-fsp-npp-alliance-condemns-police-use-of-force

[12] ICCPR சட்டம் என்பது சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டம் இல 56 இன் 2007 என்பதைக் குறிக்கிறது.

[13]    உதாரணங்களுக்கு பார்க்க : https://srilankabrief.org/2019/06/misuse-of-iccpr-act-in-sri-lanka-in-suppressing-freedom-of-expression-rights/, http://www.sundayobserver.lk/2019/06/19/news-features/abuse-iccpr-act-has-%E2%80%98chilling-effect%E2%80%99-fundamental-freedoms and https://groundviews.org/2020/05/03/freedom-of-expression-vs-hate-speech-fake-and-misleading-news/

[14]    https://twitter.com/saliyapieris/status/1276373251313238017

[15] பலவந்தமாக காணாமலாக்கப்படுவதிலிருந்து சகலரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாடு சட்டம் இலக்கம் 5 இன் 2018 பிரிவு 15 (2) மற்றும் 16  https://www.srilankalaw.lk/gazette/2018_pdf/05-2018_E.pdf

[16]    https://medialk.com/Sinhala/ReadPost/2421

[17]    https://twitter.com/sarojpathi/status/1275842604782010368 and http://www.ft.lk/news/Magistrate-disallows-ID-parade-for-detained-lawyer/56-702168

[18]    http://www.ft.lk/news/Three-Juniors-of-Hejaaz-file-FR-petitions/56-700584#.XsdfiMvbcM9.twitte

[19]    https://www.tisrilanka.org/grenade-attack-on-executive-director-tisl/

[20]    http://www.tamilcanadian.com/news/index.php?action=full_news&id=10389

[21]    https://www.colombotelegraph.com/index.php/romesh-de-silva-jayampathi-wickramaratne-ma-sumanthiran-and-jc-weliamuna-receive-threatening-letters/

[22]    https://www.amnesty.org/en/documents/asa37/008/1989/es/ and

[23]    https://basl.lk/what-is-basl