பட மூலம், The Atlantic

கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் சுகாதார, பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் சுகாதார குறிகாட்டிகள் எவ்வாறு காணப்படுகின்றன என்பதை உன்னிப்பாக அவதானித்த வண்ணமுள்ளனர். அதேவேளை இன்னொரு வர்க்கத்தினர் பங்குசந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அதிர்வுகள் குறித்து அச்சத்தில் சிக்குண்டுள்ளனர்.

நியூயோர்க் முதல் கொழும்பு வரை மில்லியன் டொலர்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நிலை உடனடியாக மாற்றமடைவதற்கான அறிகுறிகள் மங்கலானவையாக காணப்படுகின்றன. அரசாங்க வருமானங்கள் வீழ்ச்சியடைகின்றன, வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறைகள் மோசமடைகின்றன, விநியோக பற்றாக்குறை அதிகரிக்கின்றது, விமான மற்றும் சுற்றுலாத் தொழில்துறைகள் முடங்கியுள்ளன, வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கின்றது, ஏற்கனவே, வேலைவாய்ப்பற்றவர்கள் மேலும் மோசமான வேலைவாய்பின்மையை எதிர்கொண்டுள்ளனர். கொவிட் 19 ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கம் 2008இன் சர்வதேச பொருளாதார நெருக்கடியை விட மோசமானதாகக் காணப்படுகின்றது. சர்வதேச பொருளாதார முகாமையாளர்கள் மந்தநிலை என்ற சொல்லை பயன்படுத்தத் தயங்குகின்றனர்.

கொரோனா வைரஸ் மீண்டுமொரு உலகமயமாக்கலின் அழுக்குநிறைந்த முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. 1970களின் பிற்பகுதியிலும் 1980களிலும் மார்க்சியன் மற்றும் கெய்னேசியன் பொருளாதார முகாமைத்துவம் வீழ்ச்சியடைந்த பின்னர் (இரண்டும் நிரந்தரமான நாணயமாற்று விகிதங்கள் பாதுகாக்கப்பட்ட சந்தைகளை அடிப்படையாக கொண்டவையாகக் காணப்பட்டன) பொருளாதாரங்கள் நெகிழ்ச்சி தன்மை மிக்க மாற்று விகிதங்கள் மற்றும் சுதந்திர சந்தைகளை போற்றுவர்களால் மூழ்கடிக்கப்பட்டன.

பணவியல் கொள்கையை வலியுறுத்துபவர்களும்,வரிகளை குறைத்து கட்டுப்பாடுகளை குறைக்கவேண்டும் என வலியுறுத்துபவர்களும் திறந்த பொருளாதாரத்திற்காகக் குரல் கொடுத்தனர்.

அதேவேளை பொருளாதார முகாமையாளர்கள் தொடர்பாடல் தொழில்நுட்பத்திலும், இலத்திரனியலிலும் ஏற்பட்ட புரட்சியை வரவேற்றனர். இந்தப் புரட்சி நேரம் மற்றும் தூரத்தை முற்றாக அழித்ததன் மூலம் உலக மயமாக்கல் யுகத்தின் வரவிற்கு கட்டியம் கூறியது. உலகம் சர்வதேச கிராமத்திற்குள் நசுக்கப்பட்டது, முதலாளித்துவம் டேர்போ வேகத்தில் தன்னை உலகமயப்படுத்தியது.

20ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் பொருளாதார சமத்துவமின்மை, சமூக அநீதிகள் காரணமாக ஆர்ப்பாட்டங்கள் வெடித்து உலகமயமாக்கலுக்கு எதிரான எதிர்ப்பாக அவை மாற முனைந்தவேளை, பின்லாடன் சர்வதேச முதலாளித்துவத்திற்கு பொன்னான வாய்ப்பை வழங்கினார். உலகத்தின் கவனத்தை உலகமயமாக்கலிற்கான எதிர்ப்பிலிருந்து பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்த விடயத்தை நோக்கி மாற்றினார். பூகோளமயமாக்கலிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட பயங்கரவாதிகள் முகாமை சார்ந்தவர்கள் என முத்திரை குத்தப்படும் அபாயம் காணப்பட்டது. அது எதிர்ப்பு இயக்கத்தை அழித்ததுடன் அதன் பின்னர் உலகமயமாக்கல் எந்தவித எதிர்ப்புமின்றி பயணித்தது. 2010 டிசம்பர் அராபிய வசந்தத்தைத் தொடர்ந்து ஆரம்பமான வோல்ஸ்ரீட்டை ஆக்கிரமிக்கும் இயக்கத்தினால் கூட உலகமயமாக்கல் இயந்திரத்தின் வேகத்தை குறைக்கமுடியவில்லை. உலகமயமாக்கலில் பிரான்சிஸ் புக்கியாமா வரலாற்றின் முடிவையும் இறுதி மனிதனையும் பார்த்தார்.

முன்னைய இயக்கங்களால் செய்ய முடியாமல் போனதை வைரஸ் செய்வதற்கான வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது. உலகமயமாக்கல், தொழில்நுட்ப அற்புதங்கள் மூலம் உலகை ஒரு கிராமமாக மாற்றியுள்ளதன் காரணமாக  ஆபத்தான பக்ரீயாக்கள் – வைரஸ்கள் முன்னரை விட வேகமாக பரவக்கூடிய நிலையையும், எல்லைகள் அற்ற கிராமங்களில் எங்கும் நுழைந்து பேரழிவை உருவாக்கியுள்ளது என்பதை வைரஸ் உணர்த்தியுள்ளது. இந்த வைரஸ்களைத் தனிமைப்படுத்தி உரிய தருணத்தில் அழிப்பதற்கான விஞ்ஞானிகளின் திறன் அதிகளவிற்கு கடினமானதாக மாறியுள்ளதுடன் அதிகளவு செலவுமிக்கதாகவும் மாறியுள்ளது. மனிதர்களால் மாற்று  மருந்துகளை நிச்சயம் உருவாக்க முடியும். ஆனால், இதற்கு குறிப்பிட்ட காலமும் பாரிய முயற்சியும் தேவைப்படும்.கொரோனா வைரஸ், சார்ஸ் (Severe Acute Respiratory Syndrome) மற்றும் மேர்ஸ் (Middle East Respiratory Syndrome) இரண்டும் இணைந்து பலி வாங்கிய உயிர்களை விட அதிகமானவர்களை பலியெடுத்துள்ளதுடன் வேகமாகவும் பரவிவருகிறது. இது எபோலா நெருக்கடியை விட மோசமானது. கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு நீண்டகாலம் பிடிக்கப்போகின்றது, இதனை தற்போது கட்டுப்படுத்தினால் கூட அடுத்து வருவது இதனை விட மோசமானதாகக் காணப்படும்.

முன்னரை விட அடிக்கடி, அதிகரித்த எண்ணிக்கையில், கல்வி, தொழில், உல்லாசத்திற்காக பயணம் செய்யும் மனிதர்களே பிரதான காவிகளாக காணப்படுகின்றனர். உலகமயமாக்கல் பொருளாதாரங்களை கிடைமட்டாக இணைத்துள்ளது, இந்த பொருளாதாரங்கள் அதிகளவிற்கு நிதிமயப்படுத்தப்பட்டவையாக மாறிவருகின்றன. அதிகப்படியான திறன் மற்றும் கீழ் நுகர்வு ஆகியன உற்பத்தி சந்தையை பாதிக்கின்ற அதேவேளை நிதிச்சந்தைகள் நெருக்கமான சூதாட்ட முகாம்களாக மாறியுள்ளதுடன் உற்பத்தி சந்தைகளுக்கு தொடர்பற்ற மிகப்பெரும் நிதிவளத்தை உருவாக்குகின்றன. பொருளாதாரத்தை நிதிமயப்படுத்துவது அதனை எதிர்பாராத குழப்பங்களால் அதிகளவு பாதிப்பை சந்திக்கக்கூடியதாக மாற்றுகின்றது. இது எதனை வெளிப்படுத்துகின்றது என்றால் உலகின் ஒரு பகுதியில் ஏற்படும் குழப்பத்தின் அதிர்வுகள் முழு உலகையும் எதிர்பாராத விதத்தில் உடனடியாக பாதிக்கின்றது என்பதையே வெளிப்படுத்தியுள்ளது.

சமீபத்தைய பங்குசந்தை வீழ்ச்சி, விநியோக வலையமைப்பில் ஏற்பட்ட குழப்பம், வரவுசெலவு நெருக்கடிகள், வேலைவாய்ப்பின்மை, பாரிய நலத்திட்ட ஒதுக்கீடுகள் ஆகியன வூஹானில் ஆரம்பமான கொரோனா வைரஸின் மோசமான பாதிப்புகளாக காணப்படுகின்றன. இது உலகமயமாக்கலின் மோசமான விளைவு, இதன் தாக்கத்தினைக் குறைப்பதற்கு தேசிய பொருளாதாரங்கள் தங்கள் பகுதிகளை பாதுகாக்கவேண்டும். உலகமயமாக்கலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும், பாரிய நோய்கள் மற்றும் பேரிடர்கள் மூலம் ஏற்படக்கூடிய அதிர்வுகளை தாங்கிக்கொள்ளக்கூடிய விதத்தில் அதனை மாற்றவேண்டும். உள்ளூர் மற்றும் சர்வதேச சூழலிற்கு ஏற்றபடி இயங்கும் பொருளாதாரத்தை உருவாக்கவேண்டும்.

இதன் காரணமாக இலங்கை போன்றதொரு பொருளாதாரத்தில் மேற்கொள்ளவேண்டிய கட்டமைப்பு மாற்றங்கள் குறித்து சிந்திப்பதற்கான தருணம் இதுவாகும். இலங்கையின் பொருளாதாரம் மிகச்சிறியதாகவும் உலக பொருளாதாரத்துடன் நெருக்கமாக பின்னிப்பிணைந்ததாகவும் காணப்படுகின்றது. இதற்கு முதலாளித்துவம் மீதான ஜேஆரின் காதலே காரணமாகும். சர்வதேச குழப்பங்களால் ஏற்படக்கூடிய அதிர்வுகளை தாங்குவதற்கு சீர்த்திருத்தங்கள் அவசியம். பொருளாதாரத்தை அவ்வாறான ஆபத்துக்கள் எதிர்கொள்ளக்கூடிய வகையில் வல்லமையுள்ளதாக மாற்றுவது எப்படியென்பது கோட்டபாய ராஜபக்‌ஷவும், அவரது பொருளாதார கொள்கை வகுப்பாளர்களும் எதிர்கொள்ளும் சவாலாகும். நுண்பொருளாதாரத்தின் அடிப்படைகளைப் பலப்படுத்துதல் மற்றும் அவ்வப்போது நிதி ஊக்கத்தை வலுப்படுத்துதல் போன்ற தற்காலிக நடவடிக்கைகளிற்கு அப்பால் கட்டமைப்பு மாற்றத்தை நோக்கி ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறை அவசியம். மத்திய வங்கியின் தலைமைப்பொறுப்பில் மிகவும் திறமைவாய்ந்த புகழ்பெற்ற  பொருளாதார  நிபுணர் உள்ள நிலையில் – அவர் தாராள பொருளாதாரத்தை மனிதத்தன்மை மிக்கதாக மாற்றப்போவதாக தெரிவித்துள்ள நிலையில் இந்த பணியை முன்னெடுப்பதற்கான பொருத்தமான தருணம் வந்துள்ளது. மத்திய வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளதை போல அரசாங்கத்திடமிருந்து கடுமையான அரசியல் தீர்மானங்கள் இதற்கு அவசியம்.

இதற்கான ஒரு தீர்வாக தேசியப் பிரச்சினைக்கான தீர்வு காணப்படுகின்றது. கொரோனா வைரஸினை ஒழிப்பதற்காக கோட்டபாய ராஜபக்‌ஷ முழு நாட்டினதும் ஒத்துழைப்பை கோரியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அனைத்து இலங்கையர்களும் ஒன்றுபடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். ஏன் இதற்கு மாத்திரம்? தேசத்தையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்கு அவர்களுக்கு இந்த ஒத்துழைப்பு அவசியமில்லையா? அது ஏன் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

நான்கரை நூற்றாண்டு காலனித்துவ ஆட்சியின் பின்னர் ஜனநாயக அரசியல் கட்டமைப்பைத் தழுவிய இலங்கை பன்முக சமூகத்தைக் கொண்ட நாடு. அதன் பன்மைக் கூறுகள் ஒவ்வொன்றும் சமமாக உணரவேண்டும். ஜனநாயகத்தை ஒரு தரப்பினர் பணயக்கைதியாக்கி அதனை முழுமையாக பயன்படுத்த முயன்றால் ஜனநாயகத்தின் அர்த்தம் மாத்திரமல்ல பன்மைத்துவத்தின் ஒருங்கிணைந்த நெறிமுறைகளும் பாதிக்கப்படலாம்.

பன்மைத்துவத்தின் ஒரு பாகத்தினர் தங்களுக்கு மேலாதிக்கம் உள்ளதாகவும் விசேட சிறப்புரிமைகள் உள்ளதாகவும் தெரிவிப்பதும் ஏனையவர்களின் நலன்களை புறக்கணிப்பதும் அறிவார்ந்த அடிப்படையிலும் நெறிமுறை அடிப்படையிலும் தவறான விடயம் என்பதுடன், தேசிய அளவில் அழிவை ஏற்படுத்தக்கூடிய விடயமுமாகும். கூட்டு முயற்சிகளை பாதித்து வரும் அடிப்படை விடயம் இதுவேயாகும்,முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீர்வை காணதவறும் விடயமாகவும் இது காணப்படுகின்றது. அதிகாரத்திற்கான பசி தலைவர்களின் தேசிய தொலைநோக்கு பார்வைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கொள்ளை நோயை ஒழிப்பதற்கான முயற்சிகளின் போது நாங்கள் இன மற்றும் மதரீதியான வெறுப்பு என்ற எங்கள் உள்ளூர் வைரஸினையும் ஒழிப்போம்.

இறுதியாக கொவிட்-19 சூழலைப் போன்று சிறந்த பாடங்களை எங்களுக்குக் கற்பித்துள்ளது. ஒருவரின் இழப்பின் மூலம் மற்றையவர் உயிர் பிழைக்க முடியாது என்பது முதலாவது. இதில் இருவருக்கும் ஒரே மாதிரியான பாதிப்புகளே ஏற்படப்போகின்றன, தேசிய கூட்டு முயற்சிகள் மூலம் மாத்திரமே இதனை சாதகமான விளைவுகள் உள்ளவையாக மாற்றலாம். மேலாதிக்கவாதிகள் இந்த பாடத்தைக் கற்றுக்கொண்டு தேசிய பிரச்சினைக்குத் தீர்வை காண முயல்வார்களா?

“Covid-19, globalisation and glocalisation” என்ற தலைப்பில் கலாநிதி அமீர் அலி எழுதி டெய்லி எவ்டி பத்திரிகையில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.