பட மூலம், DNAIndia, (குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவானவர்கள் மேற்கொண்ட வன்முறை நடவடிக்கையினால் கொல்லப்பட்ட 31 வயதான மொஹமட் முதாஸிரின் இறுதிச் சடங்கு).

1940களில் பாரதம் இரு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை இரண்டு பேர் ஆதரித்தார்கள். ஒருவர் பாகிஸ்தானின் ஸ்தாபகர் மொஹம்மட் அலி ஜின்னா. மற்றவர் ஆர்.எஸ்.எஸ். என்றழைக்கப்படும் ராஷ்ட்ரிய சேவா சங் என்ற அமைப்பின் சித்தாந்தங்களை வகுத்த விநாயக் சவர்க்கர்.

பிளவுபடாத இந்தியப் பிராந்தியம் இரு பாகங்களாக பிரிக்கப்பட வேண்டும் என மொஹம்மது அலி ஜின்னா விரும்பினார். இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே மண்ணில் வாழ வேண்டும் என்பது சவர்காரின் நாட்டமாக இருந்தது. ஒரு வித்தியாசம். இந்துக்களை விடவும் முஸ்லிம்கள் தாழ்ந்தவர்களாக, இந்து அதிகாரபீடத்திற்கு கட்டுப்பட்டவர்களாக வாழ வேண்டும் என்று சவர்க்கர் கூறினர்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசம். அரசியல் யாப்பின் ஊடாக மதச்சார்பின்மையை வரித்துக் கொண்ட நாடு. இந்நாட்டை இந்து ராஜ்ஜிய தேசமாக மாற்ற வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படும் ஆர்.எஸ் எஸ்சின் கடும்போக்கு இந்துத்துவக் கோட்பாடுகளால் வன்முறைகளின் நாடாக மாறியுள்ளது. உயிர்கள் பலியாகியுள்ளன. எண்ணற்றவர்கள் காயம் அடைந்துள்ளார்கள். இனத்துவேஷம் தீவிரம் பெற்றுள்ளது. மக்களுக்கு மத்தியில் நம்பிக்கையீனம். புதுடெல்லியில் இருப்பே கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்த வன்முறைகளுக்குக் காரணம் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம். சவர்க்கரை விடவும் ஒருபடி மேலே சென்று, இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்களை வேரோடு பிடுங்கியெறிவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் வகுத்த கேந்திர வியூகத்தின் முக்கியமானதொரு ஆயுதம்.

கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதிலும், குறிப்பாக புதுடெல்லியில், நிகழும் வன்முறைகளைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்காது.

குடியுரிமை திருத்தச் சட்டம், அது வேண்டாம், திரும்பப் பெறு என்ற கோரிக்கையுடன் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள். ஆர்ப்பரித்த மக்கள் மீது அரச இயந்திரத்தின் துணையுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள். தாம் வலிந்து திணிக்க முனையும் இந்துத்துவக் கொள்கைகளை எவனொருவன் எதிர்க்கிறானோ, அவனைத் தேசத்துரோகி என முத்திரை குத்தும் பிரசார தந்திரோபாயங்கள்.

தகவல் தொழில்நுட்பம் கோலோச்சும் நவீன யுகத்தில் செய்தித் துணுக்குகள் வாயிலாகவும், காணொளிகள் ஊடாகவும் இவை பற்றிய தகவல்கள் மக்களை அடைகின்றன. உண்மைகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

சுதந்திர இந்தியாவின் 72 வருடகால வரலாற்றில், இன்றிருக்கக்கூடிய கேவலமான நிலையை ஏற்படுத்தியவர்கள் யார், இவர்கள் மதச்சார்பற்ற பாரத தேசத்தை எந்தத் திசை நோக்கி நகர்த்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வது முக்கியமானது. இதற்கு ஆர்.எஸ்.எஸ். பற்றியும், குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றியும் விளக்குவது அவசியமாகிறது.

சர்வாதிகாரி முஸோலினியின் பாசிஸவாத சிந்தனைகளால் தூண்டப்பட்டு, 94 வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பே ஆர்.எஸ்.எஸ். இந்து மேலாதிக்க சிந்தனையை இந்துத்வா எனக்கூறிக்கொண்டு, அதனையே தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கும் ஸ்தாபனம். இந்துத்துவா என்பதற்கு தாமே அர்த்தம் கற்பித்துக் கொண்டு, இந்து தேச இராஜ்ஜியத்தை கட்டியெழுப்பும் பொறுப்பைக் கொண்டவர்களாக தம்மைக் கருதிக் கொண்டு செயற்படும் இயக்கம்.

இந்த அமைப்பு நேரடியாக வாக்கு சேகரிக்கும் அரசியலில் ஈடுபடுவதில்லை. தம்முடன் இணைந்த அரசியல் கட்சிகளின் ஊடாக கோட்பாடுகளைப் பரப்புகிறது. அதில் முக்கியமானது பாரதிய ஜனதா கட்சி. அதனை வழிநடத்திச் செல்லும் பிரதமர் நரேந்திர மோதி, தமக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ்சின் கோட்பாடுகளை முன்னெடுத்துச் சென்று, சவர்க்கர்ரையும் தாண்டிச் சென்று, இந்தியாவை சர்வாதிகார இந்து தேசிய இராஜ்ஜியமாக மாற்றுவதற்கு வெளிப்படையாக காய் நகர்த்தி வருகிறார். இதில் முக்கியமானது தான், முஸ்லிம்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக மாற்றுவது.

இந்தப் பிரச்சினை அஸாம் மாநிலத்தில் ஆரம்பித்தது. அஸாம் என்பது பங்களாதேஷூடன் பொது எல்லையைக் கொண்ட பரந்த மாநிலம். பங்களாதேஷில் இருந்து தஞ்சமடைய அஸாம் செல்பவர்கள் அதிகம். இந்தக் குடியேற்றவாசிகள் அஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மக்களின் தொழில் வாய்ப்புக்களைத் தட்டிப் பறித்து, அரசாங்கம் வழங்கும் அனுகூலங்களைப் பெறுவதற்காக போட்டியிடுகிறார்கள் என்ற முறைப்பாடு உண்டு. இது பெரும் அரசியல் பிரச்சனையாக பரிணமித்ததும் உண்மையே.

குடியேற்றவாசிகளையும், உள்ளூர் மக்களையும் பிரித்தறிவதற்காக பிரஜைகள் பதிவேட்டை உருவாக்க வேண்டும் என்பதை முன்னைய அரசுகள் வலியுறுத்தின. அதை உச்சநீதிமன்றமும் அங்கீகரித்தது. பீ.ஜே.பி. தலைவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக குடியேற்றவாசிகளின் பிரச்சனைக்கு இனவாத சாயம் பூசினார்கள். பங்களாதேஷில் இருந்து கூடுதலாக வருவது முஸ்லிம்களே என்றார்கள். 2014இல் அஸாமில் தேர்தல் பிரசாரம் செய்த நரேந்திர மோடி, இந்து குடியேற்றவாசிகள் தங்கவைக்கப்பட்டு, ஏனைய ‘ஊடுருவிகள்’ பங்களாதேஷிற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று சூளுரைத்தார்.

சமகால பீ.ஜே.பி. அரசாங்கத்தின் உள்துறை அமைச்சராக கடமையாற்றும் அமித் ஷா, தமது குருவை விடவும் ஒருபடி மேலே சென்றார். பங்களாதேஷில் இருந்து வரும் முஸ்லிம்கள் வறியவர்களுக்கு செல்ல வேண்டிய தானியங்களைப் பறித்துக் கொள்கிறார்கள் என்று கூறி, அவர்களை மூட்டைப் பூச்சிகளாக வர்ணித்தார். இவர்களை ஒருவர் பின் ஒருவராக வங்காள விரிகுடாவில் தூக்கியெறிய வேண்டுமென அமித் ஷா சூளுரைத்தார்.

பீ.ஜே.பி. தலைவர்கள் இனவாதச் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தார்கள். பிரஜைகள் பதிவேட்டில் முஸ்லிம்கள் பதிவுசெய்து கொள்வதை கஷ்டமாக்கினார்கள். இதற்காக, சமர்ப்பிக்க முடியாத ஆவணங்கள் கோரப்பட்டன. சமர்ப்பிக்க முடியாதவர்களின் மேன்முறையீடுகளை விசாரிப்பதற்காக வெளிநாட்டவர்களுக்கான தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தப்பட்டன.

தீர்ப்பாயங்களில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடுகளை ஆராய்ந்தால், சராசரியாக பத்து முறையீடுகளில் ஒன்பது முறையீடுகள் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டதாக இருந்தது. மேன்முறையீடு செய்த முஸ்லிம்களில், 90 சதவீதமானவர்கள் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்துக்களைப் பொறுத்தவரையில், இந்த எண்ணிக்கை 40ஐத் தாண்டவில்லை.

சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட நபர்களை அடைத்து வைப்பதற்காக தடுப்பு முகாம்களை அமைக்கும் முயற்சியும் முன்னெடுக்கப்படுகிறது. தொலைதூரப் பிரதேசத்தில் உயரமான இரட்டை மதில்கள் சூழ, 100 மீற்றர் உயரமான கண்காணிப்புக் கோபுரங்களுடன் 28,000 சதுர மீற்றரில் மூவாயிரம் பேரை அடைத்து வைக்கும் தடுப்பு முகாம் ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் பீ.ஜே.பி. தலைவர்களை புளங்காகிதம் அடையச் செய்தது. இதன் காரணமாக, அவர்கள் நாடு முழுவதிலும் இந்தியப் பிரஜைகளின் தகவல்கள் உள்ளடங்கிய பதிவேடுகளை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்திய அரசாங்கம் கடந்தாண்டு டிசம்பர் 11ஆம் நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் நீடிக்கப்பட்ட பாகமாக பிரஜைகள் பதிவேடு காணப்படுகிறது. இந்தச் சட்டத்தை முதலில் பார்ப்போம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து தப்பிவந்து இந்தியாவில் தஞ்சம் கோரியவர்களுக்கு விரைவாக பிரஜா உரிமை வழங்கும் ஏற்பாடுகள் சட்டத்தில் உள்ளன.

தெற்காசிய பிராந்தியத்தில் பரவலாக உள்ள எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் பிரஜா உரிமை கோரி விண்ணப்பிக்கலாம். ஒரேயொரு மதத்தைச் சேர்ந்தவர்கள், அதாவது இஸ்லாமியர்கள் மாத்திரம் விண்ணப்பிக்க முடியாது. இஸ்லாமியர்கள் மீது வில்லன் முத்திரை குத்துவதைத் தவிர வேறெந்த நோக்கம் இருக்க முடியும் அவர்களுக்கு? இந்துத்துவ தலைவர்களைப் பொறுத்தவரையில், இந்திய சமூகத்தில் இருந்து இஸ்லாம் ஒழிக்கப்பட்டால் மாத்திரமே நாட்டு நலன்களை சிறப்பாக பேண முடியும். இந்த இலட்சியத்தைப் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு வெட்கமில்லாமல் நிறைவேற்றுவதற்குக் கிடைத்த சிறந்த ஆயுதமே, குடியுரிமை திருத்தச் சட்டம்.

இதனுடன் சேர்ந்ததாக உருவாக்கப்படும் பிரஜைகள் பதிவேட்டின் ஊடாக எவ்வாறு முஸ்லிம்கள் ஒதுக்கப்படுவார்கள் என்பதையும் பார்க்கலாம். ஒருவர் இந்தியராக இருக்க வேண்டுமானால், அவரது பெயர் சனத்தொகை பதிவேட்டில் இருக்க வேண்டும். இந்தப் பதிவேட்டில் தகவல்கள் சேர்க்கப்பட்டு, செப்டெம்பர் மாதம் பொது இடங்களில் பார்வைக்கு வைக்கப்படும். பதிவேடு எங்கு காட்சிப்படுத்தப்படுகிறதோ, அங்குள்ள மக்கள் சந்தேகத்திற்கு இடமான பெயர் குறித்து ஆட்சேபம் தெரிவிக்க முடியும். அப்போது அந்தப் பெயர் D-Voters என்ற பட்டியலில் சேர்க்கப்படும்.

ஆட்சேபம் தெரிவிப்பவர் அதிகாரியாக, அயல்வீட்டுக்காரராக, ஏன் ஆர்.எஸ்.எஸ். அங்கத்தவராகக் கூட இருக்கலாம். ஆட்சேபத்திற்கு உள்ளாக்கப்படுவர், அரச கொள்கைகளை ஆட்சேபிப்பவராக, அதிருப்தியாளராக, ஊடகவியலாளராக, மாற்றுக் கட்சியைச் சேர்ந்தராக, ஏன் இஸ்லாமியராக இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

மாறி நடக்காதா என்று எவரும் கேட்கலாம். இதற்கு பீ.ஜே.பியின் கொள்கைகளை விளக்கும் கையேட்டில் விளக்கம் உள்ளது. சந்தேகத்திற்கு இடமான பிரஜைகளின் பட்டியலில், இந்துக்களோ, சீக்கியர்களோ, ஜைனர்களோ, பௌத்தர்களோ, சீக்கியர்களோ இருக்க மாட்டார்கள் என்று கையேடு கூறுகிறது. இதில் முஸ்லிம்கள் என்ற சொல் இல்லை என்பதால், சந்தேகத்திற்கு இடமான பிரஜைகள் பட்டியலில் நிறைய முஸ்லிம்களைக் காண முடியும் என்பது திண்ணம்.

இந்தியாவின் 100 கோடிக்கு மேற்பட்ட சனத்தொகையில் இருந்து 18 கோடி முஸ்லிம்களைத் துடைத்தெறிவது இந்துத்துவ கோட்பாட்டின் இலக்காக இருக்குமாயின், அந்த இலக்கை நிறைவேற்றுவது எளிதானது அல்ல. இதற்காக இனச்சுத்திகரிப்பு செய்யவும் முடியாது. பிரஜை உரிமையில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி, இந்துக்களை உயர்ந்தவர்களாகவும், முஸ்லிம்களைத் தாழ்ந்தவர்களாகவும் மாற்றுவது சரியான, முறையான நடவடிக்கையாக இருக்கும் என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் நம்பிக்கை. அதனை நிறைவேற்றும் வேலையையே நரேந்திர மோடி சூசகமாக நிறைவேற்றி வருகிறார்.

இந்திய சமூகத்தில் இஸ்லாமியர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கமும், பீ.ஜே.பி. தலைமையிலான அரசாங்கமும், அதன் பங்காளிகளும் செய்த தகிடு தத்தங்களைப் பட்டியலிடுவது எளிது. அயோத்தி பாபர் மசூதி விவகாரத்தில் பீ.ஜே.பியின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் ரத யாத்திரை என்ற பெயரில் இந்தியா முழுவதும் பயணித்து, இந்து மத உணர்வுகளைத் தூண்டினார். இதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தூபமிடப்பட்டன. ஆர்.எஸ்.எஸ்., பீ.ஜே.பி. செயற்பாட்டாளர்கள் 1992ஆம் ஆண்டு பாபர் மசூதியைத் தகர்த்தார்கள். இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த மதக் கலவரங்களில் இரண்டாயிரம் பேர் வரை கொல்லப்பட்டார்கள்.

அடுத்து ஜம்மு-காஷ்மீர் விவகாரம். இந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த விசேட சுயாட்சி அதிகாரம் நீக்கப்பட்டது. மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் பிரயோகிக்கப்பட்டது. இதற்கு எதிராக காஷ்மீர் மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்தபோது, படைகள் குவிக்கப்பட்டன. அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இணையச் சேவைகள் முற்றுமுழுதாக முடக்கப்பட்டன.

இவை வாக்குபலத்தின் ஊடாக தமக்குக் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, பீ.ஜே.பி. தலைவர்கள் நிறைவேற்றிய காரியங்கள். இதற்கு அப்பால் மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, கும்பலாக சென்று தனித்தனி முஸ்லிம்களை அடித்துக் கொன்ற அட்டூழியங்களையும் மறக்க முடியாது. இந்துக்களின் புனிதம் காக்கிறோம் என்ற போர்வையில் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்கள்.

தமது கோட்பாடுகளுக்கு வாக்குகள் மூலம் அங்கீகாரம் கிடைத்தது என்ற மமதையில் ஆர்.எஸ்.எஸ். செயற்பாட்டாளர்களும், பீ.ஜே.பி. அடியாட்களும் செய்த கொடுமைகளுக்கு உயர்மட்டத்தில் அனுமதி இல்லாதிருக்க முடியாது. மாட்டிறைச்சிக் கொலைகளுக்காக சிறைவாசம் அனுபவித்த நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட சமயம், ஒரு நபரை அமைச்சரொருவர் வீட்டுக்கு அழைத்து மாலையிட்டு மகிழ்ந்ததைக் கூற முடியும்.

நரேந்திர மோடியைப் பொறுத்தவரையில், இரண்டாவது தடவையாகவும் மக்கள் தம்மைப் பிரதமராகத் தெரிவுசெய்வதற்கு அளித்த வாக்குகளை தமது கொள்கைளுக்கு கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறார். இந்த ஜனநாயக தேசத்தில், நீதிமன்றங்களும், ஊடகங்களும், புலனாய்வு நிறுவனங்களும், தேர்தல் ஆணையகமும் கூட மோதியின் கொள்கைகளை அங்கீகரிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது.

இதன் அடுத்தகட்ட நகர்வு அபாயகரமானதாக இருக்கக்கூடும். இந்துத்துவ இந்தியா என்ற வாசகத்திற்கு முழுமையான அர்த்தம் கொடுக்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மதச் சார்பின்மைக் கோட்பாட்டை புறந்தள்ளுவதற்காக அரசியல் யாப்பையே மாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்படலாம். அதன் மூலம் தாராளமயவாத ஜனநாயகத்தை சிதைக்கவும் கூடும்.

ஒரு சமூகமென்ற ரீதியில் இந்தியாவில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருக்கலாம். சட்டங்கள் முறையாக நிறைவேற்றப்படாமல் இருக்கலாம். ஏழை – பணக்காரன், உயர் சாதி – தாழ்த்தப்பட்ட சாதி என்ற வித்தியாசம் இருக்கலாம். அரசியல் அராஜகங்களும் நிகழக்கூடும்.

எனினும், பாரதத்தை பன்முகத்தன்மை மிகுந்த தேசமாகப் பேணும் இந்திய அரசியல் யாப்பை மாற்றுவதற்குரிய எந்தவொரு முயற்சிகளும் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது. இந்த அரசியல் யாப்பை வரைந்த ஜவஹர்லால் நேருவும், டாக்டர் அம்பேத்காரும் இந்தியாவை தாராளமயவாதமும், மதச்சார்பும் கோலோச்சும் ஜனநாயக தேசமாக கட்டியெழுப்பவே பாடுபட்டார்கள்.

கடந்த தேர்தல் பிரசாரத்தில், இந்த மதச்சார்பின்மை என்பது எமது நம்பிக்கையின் ஆவணம் என அரசியல்வாதியாக நரேந்திர மோடி கூறினார். இன்று, ஆர்.எஸ்.எஸ். அங்கத்தவராக முஸ்லிம்களை ஒழித்து இந்தியாவை இந்து தேச ராஜ்ஜியமாக மாற்றும் திசையில் பயணிக்கிறார்.

1947ஆம் ஆண்டு இரத்தக்களரியைத் தொடர்ந்து, பாரத தேசம் இந்தியா, பாகிஸ்தான் என்று பிரிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் முதற்தடவையாக, யாரை வைத்திருக்க வேண்டும் யாரை ஒதுக்க வேண்டும் என்ற பிரித்தொதுக்கல் கொள்கையின் அடிப்படையிலான அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. இந்தியர் யார் என்பதையும், ஒருவர் எந்தளவிற்கு இந்தியராக இருக்கிறார் என்பதையும் அரசியல்வாதிகள் தீர்மானிக்கக்கூடிய அராஜகங்களுக்கு சட்டவடிவம் கொடுக்கப்படுகிறது. இது ஏனைய நாடுகளிலும் பரவும் போக்குதான்.

இருந்தபோதிலும், இந்தியா என்பது வேறுபட்ட அடையாளங்கள் நிறைந்த நாடு. இங்கு இனம், மதம், சாதி, மொழி, பால்நிலை என்பதன் அடிப்படையில் பல்வேறு மக்கள் பரந்த ஆட்புலத்தில் வாழும் நாடாகத் திகழ்கிறது. இந்தியா இதே மாதிரியாகத் தொடர வேண்டுமாயின், இந்த பன்முகத்தன்மை மதிக்கப்பட வேண்டும். இந்தியா என்பது சகலருக்கும் சம அளவில் சொந்தமான தேசம் என்ற கருத்தியலை மீளவும் நிலைநாட்டுவது கட்டாயமானது.

சதீஸ் கிருஸ்ணப்பிள்ளை | Sadeesh Krishnapillai