பட மூலம், Getty Images

கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து சில மாதங்களுக்கு முன்னர் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இலங்கையை பேரழிவிற்கு உட்படுத்தியது. 250 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடந்து ஒரு சில நாட்களின் பின்னர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இலங்கையில் தீவிர இஸ்லாமிய குழுக்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பது வெளியானது. எவ்வாறாயினும், குற்றவாளிகளை இஸ்லாமிய நம்பிக்கையினைப் பின்பற்றுபவர்கள் என மேம்போக்காக அடையாளம் காண்பது இலங்கையில் வாழும் பரந்த முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறையின் வாயில்களைத் திறக்கக் காரணமாக அமைந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்கள் உட்பட முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடுகளையும் வியாபார ஸ்தானங்களையும் இனவாத கும்பல்கள் சூறையாடி தீக்கிரையாக்கியது. ஊரடங்கு உத்தரவுகள் அறிவித்த போதிலும், முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான பெரிய அளவிலான வன்முறைகளைத் தடுக்க அரசாங்கத்தினால் முடியவில்லை. மே மாதம் 2019 இல் ஆகக் குறைந்தது 14 பள்ளிவாசல்கள், 86 வீடுகள் மற்றும் 96 கடைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன என அரச அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.

கடந்த அரை நூற்றாண்டு காலமான  இலங்கையின் மோதல் நிலப்பரப்பில் அரச தரப்பு மற்றும் தமிழ் பிரிவினைவாதிகளுக்கு இடையிலான இன – மொழியியல் சார் வன்முறை ஆதிக்கம் செலுத்தியது. இந்தக் கட்டுரை இலங்கை நாட்டில் இன – தேசியவாதம் மற்றும் வன்முறையின் சிக்கலான சூழல் பற்றிய வித்தியாசமான கோணத்தைப் பற்றி விவாதிக்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் முதல்முறையாக நடைபெற்ற விடயமாக இருந்தபோதிலும் முஸ்லிம்களை குறிவைத்து பழிவாங்கும் வன்முறை ஒரு புதிய விடயமல்ல.

மார்ச் 2018 இல் திகன மற்றும் தெல்தெனிய நகரங்களிலும், 2018 பெப்ரவரியில் அம்பாறை, 2017 நவம்பரில் ஜிந்தோட்டை மற்றும் 2014 ஜூன் மாதம் அளுத்கம ஆகிய நகரங்களிலும் நடந்த முஸ்லிம் எதிர்ப்பு தாக்குதல்களில் இதேபோன்ற வன்முறைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

போக்குவரத்து விபத்துக்கள், உணவில் கலப்படம் செய்ததாக கூறப்படும் நிகழ்வு மற்றும் சில குழுக்களால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் என தூண்டுதல் காரணிகள் மாறுபட்ட போதிலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்குப் பதிலாக வன்முறை பரந்துபட்ட முஸ்லிம் சமூகத்தை நோக்கி பிரயோகிக்கப்படுகின்றன. முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட இத்தகைய வன்முறைகள் ஒரு புதிய, உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய நிகழ்வு என்று பரவலான கருத்து நிலவுகிறது.

இருப்பினும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்ட) இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பரவலான வன்முறைகள் நடந்தேறின. 1915ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலை இன்றுவரை முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து நடந்தேறிய வன்முறைகளில் மிகக்கொடியதாகக் கருதப்படுகின்றது. இவ்வன்முறை ஐந்து மாகாணங்களுக்குப் பரவியதுடன் இதன் விளைவாக குறைந்தது 25 உயிரிழப்புகள், நான்கு கற்பழிப்புகள் மற்றும் 4,000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களின் சொத்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. மக்களின் நினைவுகளில் இருந்து பெரும்பாலும் மறக்கப்பட்ட இந்த அத்தியாயம், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் மிகவும் அழிவுகரமான அத்தியாயமாக உள்ளது. மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளைப் போலவே, 1915 படுகொலையும் ஒரு தனித்துவமான தூண்டுதலால் ஏற்பட்டது. எவ்வாறாயினும், காலனித்துவ மற்றும் சமகால இலங்கையின் முஸ்லிம் விரோத வன்முறைக்கான நீண்டகால காரணங்களில் பல ஒற்றுமைகள் உள்ளன, அவை முன்னிலைப்படுத்தப்பட வேண்டியவை. 1915 முஸ்லிம் விரோத படுகொலை என்பது இலங்கையில் உள்ள முஸ்லிம் சோனகர் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்கள் ஆகும்.

தற்போது காணப்படுவது போலவே சிங்கள – பௌத்த மக்கள், தீவில் பெரும்பான்மையைக் கொண்டிருந்ததுடன் முஸ்லிம் சோனகர்கள் மொத்த சனத்தொகையில் 6.5% பங்கைக் கொண்டிருந்தனர்.

இலங்கையில் இருந்த சோனகர்கள் இரண்டு குழுக்களாகக் காணப்பட்டனர்: சிலோன் மூர்ஸ் (இலங்கை சோனகர்கள்) – 5.7% மற்றும் கோஸ்ட் மூர்ஸ் (கரையோர சோனகர்கள்) – 0.8%. கண்டி நகரிலுள்ள காஸ்ட்ல் ஹில் ஸ்டிரீட் பாதையினூடாக ஒரு முஸ்லிம் பள்ளிவாசலைக் கடந்து சென்ற பாரம்பரியமாக நடந்து வரும் வருடாந்த பெரஹரா (ஒரு பௌத்த ஊர்வலம்) 1915 படுகொலைக்கான தூண்டுதல் காரணமாக அமைந்தது.

முஸ்லிம் பள்ளிவாசலுடன் தொடர்புடைய ஒரு சில கரையோர சோனகர்கள் காலனித்துவ அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட, மத வழிபாட்டுத்தளங்களிலிருந்து 100 யார்ட் தூரத்தினுள் இசைக்கருவிகளின் பாவனையைத் தடைசெய்யும்  சட்டத்தில் தங்கியிருந்தனர். அவர்கள் பௌத்த ஊர்வலத்தினால் ஏற்படும் சத்தம் பள்ளிவாசலினுள் அவர்களது மதவழிபாட்டிற்கு இடையூறு விளைவிப்பதாக தெரிவித்தனர். காலனித்துவப் பொலிஸாரினால் காஸ்ட்ல் ஹில் ஸ்டிரீடில் இருந்து பௌத்த ஊர்வலத்தை திசைதிருப்ப எடுத்த முடிவு வன்முறை கட்டவிழ்க்கப்பட காரணமாக இருந்தது.

பௌத்த “சப்த வழிபாட்டில்” இருந்து முஸ்லிம் பள்ளிவாசலைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முடிவை சிங்கள பௌத்தர்கள், முஸ்லிம்களுக்கு ஆங்கிலேயர்கள் முன்னுரிமை வழங்கும் நிகழ்வாக நோக்கினர்.

மே 29 அதிகாலையில், பௌத்த ஊர்வலத்தில் பங்கேற்ற நபர்கள் பள்ளிவாசல் மற்றும் அதன் வழிபாட்டாளர்களைத் தாக்கினர். ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாகவன்றி இந்த ஆரம்பத் தாக்குதலைத் தொடர்ந்து தீவு முழுவதும் கலவரங்கள் தீவிரமடைந்து ஒன்பது நாட்கள் நீடித்தன.

கலவரத்தின் ஏழாம் நாள், முஸ்லிம் சோனகர் சமூகத்திற்கு எதிரான வன்முறை 165 மைல்கள் பரவியிருந்தது. உலகின் பிற இடங்களில் நடந்த படுகொலைகளுடன் ஒப்பிடும்போது இறப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், வன்முறையின் இலக்குகளின் தன்மை, அதாவது முஸ்லிம்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் குறிவைக்கப்படல், சிங்கள – பௌத்த விரோதம் முதன்மையாக முஸ்லிம்களின் பொருளாதார வாழ்வாதாரங்கள் மற்றும் வெற்றியின் அடையாளங்களில் இயக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றன. 1915 படுகொலைக்கு பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. கலவரத்தின் போது சிலோனின் ஆளுநராக இருந்த ராபர்ட் சால்மர்ஸ், வன்முறைக்கு அடிப்படையான மிக முக்கியமான காரணிகள் பொருளாதார மற்றும் மத ரீதியானவை எனக் குறிப்பிடுகின்றார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, நகர்ப்புறங்களில் சிங்கள வணிகர்களுக்கு எதிராக போட்டியிட்ட கரையோர சோனகர்களுக்கு எதிரான மனக்கசப்பு அதிகரித்து வந்தது. மேலும், முதலாவது உலகப் போர் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கு காரணமாக இருந்தது. இவ் அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை பெரும்பாலும் முஸ்லிம் வர்த்தகர்களின் கட்டுப்பாட்டின் கீழே இருந்தது. இந்தச் சூழலில் பொருட்கள் பற்றாக்குறையைச் சாதகமாகப் பயன்படுத்துவதன் மூலம் சோனகர்கள் போரின் போது இலாபம் ஈட்டக்கூடியவர்களாகக் கருதப்பட்டனர்.

மேலும், பௌத்தர்கள் ஊர்வலங்களில் ‘சப்த வழிபாட்டை’ பயன்படுத்துவது, பள்ளிவாசல்களில் முஸ்லிம்களின் வழிபாட்டின் போது மௌனம் கடைபிடிப்பது போன்ற மாறுபட்ட மத நடைமுறைகள் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து சிங்கள – பௌத்தர்களையும் முஸ்லிம்களையும் மோதலுக்குள் கொண்டுவந்தன. ஆகையால், மே 29, 1915 இல் ஏற்பட்ட சர்ச்சை புதியதல்ல, மாறாக இதேபோன்ற பிரச்சினைகள் குறித்த தொடர்ச்சியான கொந்தளிப்பின் வெளிப்பாடே.

இருப்பினும், சட்டம் ஒழுங்கு குறித்த பிரித்தானிய காலனித்துவ கொள்கைகள் சிங்கள-பௌத்தர்களுக்கும் முஸ்லிம் சோனகர்களுக்கும் இடையிலான விரிசலிற்கு பங்களித்தன. பெப்ரவரி 1915 இல், கம்பளையில் உள்ள அம்பகமுவ தெருவில் உள்ள பள்ளிவாசலைக் கடந்து செல்ல மற்றொரு பௌத்த பெரஹெரவிற்கு மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அனுமதியை உச்ச நீதிமன்றம் மாற்றியது.

மே 1915-இல் பெரஹெரவின் நேரத்தில், ஊர்வலத்தின் பாதை பிரச்சினை மிகவும் அரசியல்மயமாக்கப்பட்டது.

சிங்கள – பௌத்தர்களினால் முஸ்லிம் சிறுபான்மையினருக்குச் சாதகமானதாக வழங்கப்பட்டிருப்பதாக கருதப்பட்ட பெப்ரவரி 1915 தீர்ப்பைத் தொடர்ந்து பதற்றங்கள் உருவான போதிலும், 1915 மே மாதத்தில் பதற்றங்கள் அதிகரிக்கும் என்பதை காலனித்துவ அரசு மதிப்பிடத் தவறியது.

பொருளாதாரம் மற்றும் மதம்சார் மனக்குறைகளின் இந்தக் கலவையானது 1915 மே மாதம் ஒரு பௌத்த ஊர்வலத்தின் வழியே பரந்த முஸ்லிம் சோனகர் சமூகத்தை குறிவைத்து பெரிய அளவிலான வன்முறைகளை கட்டவிழ்ந்தது.

மே 1915 ஐப் போன்றே மே 2019, மார்ச் 2018 மற்றும் ஜூன் 2014 நிகழ்வுகளுக்கான தூண்டுதல் காரணிகள் சிங்கள-பௌத்தர்களுக்கும் முஸ்லிம் சோனகர்களுக்கும் இடையிலான ஆழமான குறைகளைப் பிரதிபலிக்கவில்லை. இன்றைய இலங்கையில் வன்முறை என்பது போருக்குப் பிந்தைய பதற்றங்களிலிருந்து மாத்திரம் உருவானதுவோ அல்லது உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதத்தின் விளைவாக உருவானதுவோ அல்ல.

எனவே, எதிர்கால முஸ்லிம் விரோத வன்முறையைத் தடுப்பதற்கான வழிமுறைகள் மேலெழுந்தவாரான அறிகுறிகளில் மாத்திரம் கவனம் செலுத்துவதற்கு மாறாக, பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் நீண்டகால மற்றும் பெரும்பாலும் ஆழமாக வேரூன்றியிருக்கும் முரண்பாடுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஷமாரா வெத்திமுனி