பட மூலம், AP Photo/Eranga Jayawardena, NEWS YAHOO

தான் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டால் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுதலை செய்வதாக தன்னுடைய முதலாவது கூட்டத்தின்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான கோட்டபாய ராஜபக்‌ஷ கூறியிருந்தார்.

இந்த இராணுவத்தினர் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர் என்று மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கூறுகின்றார்.

தடுப்பில் இருக்கும் இராணுவத்தினர் தொடர்பாக கோட்டபாய ராஜபக்‌ஷ கூறாத விடயமொன்றும் இருக்கிறது. அது – பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 42 இராணுவ சிப்பாய்களுள் இன்று 7 பேர் மாத்திரமே சிறைவைக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, சேவை நேரத்தின்போது செய்த குற்றத்தினால் எவரும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படவில்லை. ஊடகவியலாளர்களை கொலை செய்தமை, ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டமை, ஊடகவியலாளர்களை கடத்திச் சென்றமை, கப்பம் பெறும் நோக்கில் இளைஞர்களை கடத்திச் சென்றமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக மட்டும்தான் சில இராணுவ சிப்பாய்கள் நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டனர். இவ்வாறான செயற்பாடுகள் இராணுவ சிப்பாயின் உத்தியோகபூர்வ வேலை அல்ல. இவை அரசியல் நோக்கங்களுக்காக அல்லது உத்தரவின் பேரில் இடம்பெற்ற குற்றங்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த விடயங்களை ஒருபுறம் வைத்துவிட்டு, அநுராதபுரத்தில் கோட்டபாய ராஜபக்‌ஷ அளித்த உறுதிமொழி குறித்து மீண்டும் பார்ப்போம். நவம்பர் 17ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுதலை செய்யப்போவதாக மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் உறுதிமொழி அளிந்திருந்தார்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, நீதிமன்றம் ஊடாக குற்றவாளியாக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட பின்னரே ‘ஜனாதிபதி மன்னிப்பு’ வழங்கமுடியும். அப்படியில்லாமல், நடத்தப்படும் விசாரணையில் சந்தேகநபர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் போது அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை.

கோட்டபாய ராஜபக்‌ஷ கூறுவது போன்று நம்பர் 17 அதிகாலை இராணுவ சிப்பாய்களை விடுதலை செய்வதற்கு இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் அதற்கான சந்தர்ப்பம் எங்கும் இல்லை. அப்படியிருந்தும் அவர் கூறியதைப் போன்று செய்வதாக இருந்தால் அது, நீதிக் கட்டமைப்புக்கும் நீதியை நிலைநாட்டுவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும் எதிராக நேரடியாக விடுக்கப்படும் அச்சுறுத்தலாம். சட்டத்தின் ஆட்சி என்பது சட்டத்தின் மேல் யாரும் இல்லை என்பதாகும்.

சட்டத்தின் முன் எல்லோரும் சமம்

நீதிமன்றின் உத்தரவினை அடுத்தே இராணுவத்தினர் அனைவரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த அதே சுயாதீன நீதிமன்றம்தான் மேற்கண்ட உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

இராணுவ சிப்பாயோ அல்லது வேறு எந்தவொரு நபரோ கடத்தல் மற்றும் கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். இது சாதாரண மக்களுக்கு எதிரான குற்றங்களாகும்.

கோட்டபாயவின் ஒழுக்கமான சமூகத்தில் இவர்களுக்கு விசேட இடம் இருக்கிறதா? அல்லது அந்த ஒழுக்கமான சமூகத்தில் இந்த விசேடமானவர்களுக்கு குற்றங்களில் ஈடுபட முடியுமா?

2005இலிருந்து இராணுவத்தின் கௌரவத்தை உறுதிப்படுத்தியதாக கோட்டபாய கூறுகிறார். எப்படி இருந்தபோதிலும் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசு (சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கருதி குற்றங்களில் ஈடுபட சீருடையை பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து) இராணுவத்தின் கௌரவத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக எமது முப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு நல்ல கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. ஆனால், 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் கௌரவமிக்க முப்படையினரை வீதிகளை சுத்தம் செய்ய, மரக்கறி விற்பனை செய்ய அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்‌ஷ உத்தரவிட்டிருந்தார் என்பதை யாரும் மறக்கக்கூடாது.

அரசியல் ரீதியாக துன்புறுத்தி இராணுவ சிப்பாய்களை சிறைவைத்தது யார்?

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக போட்டியிட்டதற்காக போரை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறைக்கு அனுப்பிய விதம், முன்னாள் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஜனாதிபதிப் போட்டியில் நுழைந்தவுடன் அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்க்குற்றச்சாட்டுகள் போன்றவற்றை நினைவில் கொள்வோம்.

சரத் பொன்சேகா மட்டுமன்றி, தேர்தலின்போது அவருக்கு உதவிபுரிந்த அனைத்து முன்னாள் இராணுவ அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டு அரசியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர்.

மக்களுடைய வாக்குகளால் தெரிவுசெய்யப்படுவார் என்று நம்புகிற கோட்டபாய ராஜபக்‌ஷ தான் நினைத்தாற் போல் சட்டத்தை கையாளப்போவதாக உறுதியளித்து பிரசாரத்தை தொடங்குகிறார்.

மக்களின் வாக்குகளால் நாட்டின் உயர் பதவிக்குத் தெரிவாகி அதிகாரத்துக்கு வர எதிர்பார்க்கும் கோட்டபாய ராஜபக்‌ஷ, தன்னுடைய முதல் பிரசாரக் கூட்டத்திலேயே இதுபோன்ற சட்டத்துக்கு விரோதமான முறையில் உறுதிமொழி வழங்கியமையால் நாட்டில் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அவரின் அந்தப் பேச்சு நாட்டின் எதிர்காலத்தை இருண்ட படுகுழிக்குள் கொண்டுசெல்லும் என்பது தெளிவான, ஆபத்தான எச்சரிக்கையாகும்.

අනේ! ඔවුන් සිර­ග­තව සිටින්නේ ඔබ නිදොස් කළ අධි­ක­ර­ණ­යේම නියෝ­ග­යෙනි! என்ற தலைப்பில் சிலுமின பத்திரிகையில் விஹங்க வீரசேகர எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.