பட மூலம், Gota.lk

“ஆனால், அவர் ஆடைகள் எதுவுமில்லாமல் இருக்கிறார்” என்று ஒரு குழந்தை சொன்னது – ஹான்ஸ் கிரிஸ்டியன் அன்டர்சன் (The Emperor’s New Clothes)

நவீனகால தொன்மங்கள் (Mythic Inflation) என்ற கருதுகோள் அமெரிக்க புராணக் கதைகள் நிபுணர் ஜோசப் காம்பல் அவர்களினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஓர் கருதுகோளாகும். அதாவது, தனது தேசத்தை/ மக்களை மீட்டெடுப்பதற்கான தெய்வீக ஆணையுடன் எழுச்சியடைந்து வரும் புதிய வகையைச் சேர்ந்த லௌகீக ஆட்சியாளர் ஒருவரை விளக்குவதற்காக அவர் அந்தப் பதத்தை பயன்படுத்தினார். அந்த ஆட்சியாளர் தன்னுடைய கொடுங்கோல் அரசில் “மனிதர்களுக்கு ஊடாக பெறப்பட்டிருக்கும் தனது முடியாட்சி பாத்திரத்தை வகித்து வருவார். அவர் கடவுளின் சித்தம் மற்றும் கருணை என்பவற்றின் அவதாரமாக இருந்து வருவதுடன், அகிலத்தின் போஷகராகவும் இருந்து வருவார்” (Occidental Mythologies).

நீண்ட காலமாக இடம்பெற்ற ஈழப் போர் வெற்றியுடன் முடிவடைந்ததன் பின்னர் இலங்கையில் ராஜபக்‌ஷ ஆட்சி தொடர்பாக இதே மாதிரியான ஒரு மீள் வரைவிலக்கணத்தை முன்வைப்பதற்கு ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மஹிந்த ராஜபக்‌ஷ நாட்டை ஒன்றுபடுத்துவதற்காக நான்கு பிரம்மாக்களின் ஆணையுடன் பெற்றுக்கொண்டு, விண்ணிலிருந்து அனுப்பப்பட்ட மன்னராக போற்றிப் புகழப்பட்டார். தொலைக்காட்சி தொடர்களில் இலங்கை வரலாற்றை தொகுத்துக் கூறும் நடிகர் ஐக்சன் அந்தனி மன்னர் துட்டகைமுனுவுக்கு ஊடாக ராஜபக்‌ஷ குடும்பத்தினரின் வரலாற்றை புத்தபெருமான் வரையில் பின்னகர்த்திச் செல்லும் ஒரு குடும்ப விருட்சத்தை முன்வைத்தார். கோட்டாபய ராஜபக்‌ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளராக வந்தால் (அதாவது, கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றம் மற்றும் ஐக்கிய அமெரிக்க ராஜாங்க திணைக்களம் என்பன அதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில்) அவரும் இதே மாதிரியான ஒரு மகுடத்தை தனக்குச் சூட்டிக் கொள்வார். தன்னை புத்தபெருமானின் ஓர் உறவினராகவும், தேவர்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நபராகவும் அவர் தன்னை சித்தரிப்பார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ தனது சொந்த ஆதரவு அடித்தளத்தை கட்டியெழுப்புவதற்கென கடந்த 4 ½ வருட காலத்தை செலவிட்டுள்ளார். வியத்மக (அறிவுசார் மார்க்கம்) மற்றும் எளிய (வெளிச்சம்) போன்ற அமைப்புகளுக்கு ஊடாக, தனது சகோதர்களிடமிருந்து ஓரளவுக்கு அரசியல் மற்றும் கட்டமைப்பு ரீதியான சுயாதீனத்தை பெற்றுக்கொள்வதற்கு அவர் முயற்சித்தார். மஹிந்த மற்றும் பசில் ராஜபக்‌ஷ ஆகியோரின் முற்று முழுதான ஆதரவு இல்லாத நிலையில் அவரால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது. ஆனால், அவர் நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக வந்தால் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஒரு கையாளாக மட்டுமே செயற்படுவார் என்று கூற முடியாது. அதற்கு மாறாக, அடுத்து வரும் சில வருடங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரும், அவருடைய கூட்டாளிகளும், மனைவிமாரும், பிள்ளைகளும் அதிகாரம் மற்றும் செல்வாக்கு என்பவற்றுக்காக ஒருவருடன் ஒருவர் சண்டை பிடித்துக் கொள்ளும் சகோதரப் பகைமை மற்றும் மோதல் என்பவற்றைக் கொண்ட ஆண்டுகளாகவே இருந்துவர முடியும்.

இத்தகைய எதிர்கால ஆபத்துக்களை மஹிந்த ராஜபக்‌ஷ அறிந்திருப்பதன் காரணமாக தனது வாரிசாக கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு முடிசூட்டும் விடயத்தில் அவர் தயக்கம் காட்டி வருகிறார். அவருடைய தயக்கத்திற்கான மற்றொரு காரணம் தனது மூத்த மகனின் அரசியல் எதிர்காலம் குறித்த கரிசனைகள் ஆகும். நாமல் ராஜபக்‌ஷ 2024/ 2025 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தேவையான வயது வரம்பை எட்டுவார். கோட்டாபய ராஜபக்‌ஷ அடுத்த நிறைவேற்று ஜனாதிபதியாக வந்தால் ஐந்து வருடங்களின் பின்னர் அவர் அதிலிருந்து ஒதுங்கி, தன்னுடைய சகோதரரின் மகனுக்கு வேட்பாளர் பதவியை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் பூச்சியத்திலும் குறைவாகவே காணப்படுகின்றன. அவருக்கு இரண்டாவது பதவிக் காலம் ஒன்று தேவைப்பட முடியும். அதேபோல அவருக்கும் ஒரு மகன் உள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷ தனது சகோதரருக்கு முடிசூடும் விடயத்தில் தயக்கம் காட்ட முடியும். ஆனால், கோட்டாபய அணியிலிருந்து தொடர்ச்சியாக உரத்த குரலில் முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் மற்றும் பொது மக்களின் தரப்பிலிருந்து வரும் அழுத்தம் என்பவற்றை அவரால் அலட்சியம் செய்ய முடியாதிருப்பது போல் தெரிகின்றது. ஜனாதிபதி பதவி மீதான தீராத ஆசை சிறிசேன – விக்கிரமசிங்க ஆட்சியை சீர்குலைத்துள்ளது. அதே ஆசை ராஜபக்‌ஷ குடும்பத்திற்குள்ளும் பிளவுகளை உருவாக்கி வருகின்றது. கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியில் அமர்ந்தால் குடும்பச் சண்டை ஒரு வழமையாகவும், நாட்டில் பதற்றங்களை தோற்றுவிப்பதற்கான ஒரு மூலாதாரமாகவும் இருந்து வரும்.

கோட்டாபயவின் எழுச்சியும் சஜித்தின் கனவும்

கோட்டாபய ராஜபக்‌ஷவின் பிரஜா உரிமை இன்னமும் சந்தேகத்திற்கு இடமானதாக இருந்து வரும் நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் தாய்நாட்டை பாதுகாப்பதற்கும், தனது சேவைகளை வழங்குவதற்காகவும் வெளிநாட்டு கௌரவங்களை தியாகம் செய்யும் ஒரு வீரராக அவரை சித்தரித்துக் காட்டுவதற்கான ஒரு முயற்சியில் இறங்கியுள்ளார்கள். வியத்மக அமைப்பு இணையத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு பதிவு இதற்கான உதாரணமாகும். அப்பதிவில் கோட்டாபய ராஜபக்‌ஷவின் படமும், வண. மஹிந்த தேரரின் பாணியில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கவிதையும் சேர்க்கப்பட்டுள்ளது. “தரணி புகழ் தாய்த்திரு நாடு (என்னை ) ‘வருக’ என அழைக்கும் பொழுது மற்றொரு நாட்டு பிரஜா உரிமை எனக்கு எதற்குத் தேவை?” என கவிஞர் கேட்கின்றார். “நான் எல்லா கௌரவங்களையும் துறந்து, எனது தாய்நாட்டிற்கு வருவேன். உங்களை பாதுகாக்கும் பணியை முன்னெடுப்பதற்கு வருவேன்.”

கோட்டாபய ராஜபக்‌ஷ ஐக்கிய அமெரிக்காவில் எத்தகைய கௌரவங்களையும் பெற்றுக் கொண்டிருக்கவில்லை. பல இலட்சக்கணக்கான ஏனையவர்களைப் போலவே அவரும் வெறுமனே அங்கு குடிபெயர்ந்து சென்ற ஒரு சாதாரண ஆளாக இருந்து வந்ததுடன், கடின உழைப்பில் ஈடுபட்டு, வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமையை சாதித்துக் கொண்டிருந்தார். வரிகளை செலுத்துவதன் மூலமும், பரீட்சைகளுக்கு தோற்றுவதன் மூலமும், தனது தாய்நாட்டுடனான பிணைப்புக்களை துறப்பதன் மூலமும், ஐக்கிய அமெரிக்காவுக்கு முற்றுமுழுதான விசுவாசத்தை தெரிவிப்பதன் மூலமும் அவர் அமெரிக்க குடியுரிமையை பெற்றுக் கொண்டிருந்தார். அவ்விதம் மிகவும் கடினமாக பெற்றுக்கொண்டிருக்கும் குடியுரிமையை அவர் கைவிடுவதற்கான – அநேகமாக விருப்பமற்ற நிலையில் கைவிடுவதற்கான – ஒரேயொரு காரணம் அவர் அதனை செய்ய வேண்டிய நிர்ப்பந்த நிலையில் இருந்து வருவதாகும்.

அவருடைய ஆதரவாளர்கள் கோட்டாபிகமனய (கோட்டாபயவின் வருகை) என இதனை வரவேற்று வரும் நிலையில், இன்றைய சூழ்நிலையில் அவர் தன்னை சிங்கத்தின் குணாதிசயங்களுடன் கூடிய ஒரு புருஷராக சித்தரித்துக் காட்டுவது ஏன் என்பதனைப் பார்க்க வேண்டியிருக்கின்றது. இந்த நபர் இராணுவத்திலிருந்து முன்னரேயே (அநேகமாக முழுமையான ஓய்வுதியத்துடன்), அவர் ஓய்வு பெற்றது ஏன் என்ற கேள்வி இங்கு எழுகின்றது. இரண்டாவது ஈழப் போர் தீவிரமடைந்த கால கட்டத்தில் அமெரிக்க நாட்டிற்குச் செல்வதற்காக அவர் தனது தாய்த்திருநாட்டை கைவிட்டது ஏன்? அவரிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்ட பொழுது, எமது தலைவிதியை நிர்ணயிப்பதற்கு வந்திருக்கும் இந்த மனிதர் தனது மனைவியின் மீது பழியை போட்டார். “நான் அதனைச் செய்ய விரும்பவில்லை. எனது மனைவியே அவ்வாறு செய்யுமாறு தூண்டினார்”.

மனைவி அவ்வாறு சொன்னதாக அவர் மீது பழி போடும் இந்தச் செயல் ‘கடைசியில் அயோமா தான் விரும்பியதை சாதித்துக் கொண்டார்’ என்ற பொருத்தமான விதத்தில் தலைப்பிடப்பட்டிருந்த ஒரு கட்டுரையில் உள்ளடக்கப்பட்டிருந்தது. திரு. ராஜபக்‌ஷ அவர்களுடன் நடத்தப்பட்ட ஒரு நேர்காணலின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்த இந்தக் கட்டுரை கோட்டாபய ராஜபக்‌ஷவின் களங்கமற்ற நிலையையும், அயோமாவின் குற்ற உணர்வையும் வாசகர்களை நம்ப வைக்கும் விதத்தில் விரிவான விளக்கங்களை கொண்டுள்ளது. லெப்ரினன்ட் கேர்ணல் ராஜபக்‌ஷ தனது மனைவியின் வேண்டுகோளுக்கு இறுதியில் அடிபணிந்து, இராணுவத்திலிருந்து விலகிச் செல்வதற்கு தீர்மானித்த பொழுது இராணுவத்திலிருந்த அநேகமாக அனைவரும் அவர் தனது முடிவை மாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள். அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன வெலிஓயாவிற்கு விமானத்தில் சென்று, நேரடி இராணுவச் செயற்பாடுகளிலிருந்த லெப்ரினன்ட் கேர்ணல் அவர்களுக்கு ஒரு இடமாற்றத்தை வழங்குவதற்கும் முன்வந்தார். அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று நாட்டிலிருந்து வெளியேறிச் செல்வதற்கு திட்டமிட்டுக் கொண்டிருந்த லெப்ரினன்ட் கேர்ணல் அவர்கள் “தனது படையணி எங்கெங்கு பணியில்  அமர்த்தப்படுகிறதோ அங்கெங்கல்லாம் அந்தப் படையணியுடன் சேர்ந்து செயற்படவே தான் விரும்புவதாக” கூறியிருந்தார்.

அமைச்சர் விஜேரத்ன இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு நிலையை தெளிவாக கண்டுகொண்டார். அவர் லெப்ரினன்ட் ராஜபக்‌ஷ அவர்களை கொத்தலாவல பாதுகாப்பு கல்வி கழகத்தின் பிரதிக் கமாண்டராக நியமனம் செய்தார். (அப்போது அவருடைய படையணி எங்கிருந்தது என அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கவில்லை.) அமைச்சர் விஜேரத்ன கொழும்பு நகரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் கொல்லப்பட்ட பொழுது, லெப்டினன்ட் கேர்ணல் ராஜபக்‌ஷ இந்தப் பாதுகாப்பான பதவியில் இருந்து வந்தார். “அமைச்சர் விஜேரத்ன அவர்களின் கொலையை அடுத்து லெப்ரினன்ட் கேர்ணல் ராஜபக்‌ஷ ஓய்வு பெறுவதற்கான தனது ஆவணங்களை அனுப்பி வைத்தார்” எனக் அக்கட்டுரை குறிப்பிடுகின்றது.

இந்த நீண்ட கதையில் துணைப் பாத்திரங்களை வகித்து வந்த லெப்ரினன்ட் கேர்ணல் ராஜபக்‌ஷவின் பல மூத்த மேலதிகாரிகளின் பெயர்களையும் அக்கட்டுரை குறிப்பிடுகின்றது. கலிபோர்னியாவின் பாதுகாப்பான சூழலில் கோட்டாபய ராஜபக்‌ஷ அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்கான பயணத்தில் ஈடுபட்டிருந்த போது, அவருடைய மூத்த சகாக்களில் பலர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் கொல்லப்பட்டார்கள்.

தனது பெயருக்கு பின்னால் பல பட்டங்களை சூட்டி, தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கும் கோட்டாபய ராஜபக்‌ஷவின் செயல், அவரால் கொழும்பு நகரம் அலங்கரிக்கப்பட்டதைப் போல ஒரு மேல்பூச்சான விடயம் மட்டுமே ஆகும். வெறும் வண்ணங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. வண்ணக்கலவை ஒரு மினுமினுப்பைக் காட்டுவதற்காக அங்குமிங்கு தூவிவிடப்பட்டது. இதன் இறுதிப் பெறுபேறு அந்த பிரகாசத்திற்கு அடியில் மறைந்திருக்கின்றது: ஆள் அதே ஆள்தான் .

Daily FT நாளிதழின் மூத்த ஆசிரியர் மேரியன் டேவிட் பொது இடங்களில் பெண்கள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் குறித்து முறைப்பாடு செய்த பொழுது, அவரை கோட்டாபய நாட்டு குடி மக்கள் ருவிட்டரில் கடித்துக் குதறினார்கள். திருமதி டேவிட் உலகின் கண்களுக்கு முன்னால் இலங்கையை அசிங்கப்படுத்துவதாகவும், சுற்றுலாத்துறையின் மீட்சிக்கு இடையூறு விளைவித்து வருவதாகவும் வியத்மக ஆட்கள் அவர் மீது குற்றம் சாட்டினார்கள். கோட்டாபய ராஜபக்‌ஷவின் கையாள்களில் ஒருவரான ஓய்வுபெற்ற அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம திருமதி டேவிட்டிடம் இப்படிக் கூறினார். “தயவு செய்து இந்த நாட்டை விட்டுச் சென்று விடுங்கள்! இது உங்களுக்குச் சொந்தமான இடம் அல்ல.”

திரு. விஜேவிக்கிரமவின் இந்தப் பேச்சு கோட்டாபய ராஜபக்‌ஷவின் மற்றொரு கையாளான ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்தினவின் மற்றொரு அபாயகரமான  கூற்றை நினைவு படுத்தியது. 2017 அக்டோபர் மாதம் இடம்பெற்ற வியத்மக கருத்தரங்கில் பேசிய அவர், புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் எந்தவொரு நபரும் தேசத்துரோகியாகவே இருந்து வருகின்றார் என முத்திரை குத்தினார். இந்த தேசத்துரோகிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றும், இரண்டாவது கிளர்ச்சியின் போது ஜேவிபி செய்ததைப் போல, அந்த ஆட்களுக்கு கண்ணியமான விதத்திலான இறுதிக் கிரியைகள் மறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த இரு சம்பவங்களும்  கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இலங்கை எந்த மாதிரியான ஒரு நாடாக இருந்து வரும் என்பதற்கான தெளிவான முன்னெச்சரிக்கைகளாக உள்ளன. அதாவது, சகிப்புத்தன்மையற்ற, வன்முறை கோலோச்சும் ஒரு தேசமாக அது இருந்து வரப் போகின்றது. மீட்பர் ஜனாதிபதியின் சாபத்தை சம்பாதித்துக் கொள்ளும் எந்தவொரு நபரும், அவருடைய ஆதரவாளர்களும் ஏதோ ஒரு வழியில் மௌனிக்கச் செய்யப்படுவார்கள்.

கோட்டாபய ராஜபக்‌ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக வர விரும்பும் அதே விதத்தில், சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக வருவதற்கு விரும்புகின்றார். கோட்டாபய ராஜபக்‌ஷ தன்னுடைய அபிலாசைகளை இரகசியமாக வைத்திருக்கவில்லை. அதேவேளையில், சஜித் பிரேமதாச தன்னுடைய அபிலாசைகள் குறித்து வெளியில் பேசுவதற்கு கூச்சப்படுகின்றார்.

உரித்து அடிப்படையிலான அரசியல் மற்றும் குடும்பத்துடன் பிணைந்த அரசியல் என்பன ரணசிங்க பிரேமதாச வெறுத்தொதுக்கிய ஒரு விடயமாக இருந்து வந்தது. அவருடைய மகனின் விருப்பங்கள் அதற்கு நேர்மாறானவையாக இருந்து வருகின்றன. “எனது பிறப்பிலிருந்து நான் தயார்படுத்தப்பட்டு வந்ததுடன், நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கென பணியாற்றி வந்திருக்கின்றேன்” என சஜித் பிரேமதாச கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. சங்கைக்குரிய அஸ்கிரிய மற்றும் மல்வத்த தேரர்களுடன் நடத்தப்பட்ட உயர் குறியீட்டுத் தன்மை வாய்ந்த சந்திப்புக்களின் பின்னர் அவர் அவ்வாறு கூறியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் குறித்து கேட்கப்பட்ட பொழுது, அவர் நேரடியாக பதிலளிக்காமல் நழுவிச் சென்றார். அவர் கூறும் விதத்தில், ஜனாதிபதித் தேர்தல் அவருடைய குறியாக இருந்து வரவில்லை.  அதற்குப் பதிலாக நாட்டில் 1,123 சைத்தியக்களை நிர்மாணிப்பது எப்படி என்பது குறித்தே தாம் சிந்தித்து வருவதாக அவர் சொன்னார்.

நாட்டு மக்கள் கழுதைகளாக இருந்து வருகின்றார்கள் என்றே சஜித் பிரேமதாச தெளிவாக நம்புகிறார். ஜனாதிபதித் தேர்தல் குறித்து தான் சிந்திக்கவில்லை என அவர் ஏன் கூற வேண்டும்? மேலும், 1123 சைத்தியக்களை நிர்மாணிப்பது இன்றைய கால கட்டத்தின் தேவையாக இருந்து வருகின்றது என அவர் நம்பினால் இலங்கை அரசு குறித்தும் இலங்கை வாழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் அவருக்கு எதுவுமே தெரியவில்லை என்பது அதன் பொருளாகும். இன்றைய இலங்கையை பொறுத்தவரையில் ஊழல் மற்றும் அறியாமையுடன் கூடிய அரசியல் வாதிகள் ஆகியோருக்கு அடுத்த படியாக, தெவிட்டுமளவுக்கு எம்மிடம் இருக்கும் வஸ்துக்கள் சமயச் சின்னங்கள் ஆகும்.

மேலும், சஜித் பிரேமதாசவின் மேலே குறிப்பிடப்பட்ட கூற்று ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக  வருவதற்கும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைவதற்கும் அவர் சமயத்தை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் இருந்து வருகின்றார் என்பதனை வெளிப்படுத்துகின்றது. ஓர் உத்தி என்ற முறையில் சமய உணர்வுகளைத் தூண்டும் நிலைப்பாடு, கொள்கையற்ற ஒரு நிலைப்பாடாகவும், அறிவுக்கு ஒவ்வாத ஒரு நிலைப்பாடாகவும் இருந்து வருகின்றது. அது நாட்டின் இன – சமயப் பிரிவினையை மேலும் மோசமாக்குவதுடன், ராஜபக்‌ஷ வெற்றியை தடுப்பதற்குப் பதிலாக, அதற்கு வழிகோலுவதற்கு உதவ முடியும். இனத்துவ – சமய அரசியலை முன்னெடுக்கும் விடயத்தில் ராஜபக்‌ஷ ஆட்கள் ஈடு இணையற்றவர்களாவும், எவராலும் முடியடிக்கப்பட முடியாதவர்களாகவும் இருந்து வருகின்றார்கள். அது அவர்களுடைய கோட்டையாக இருந்து வருகின்றது. அந்தக் கோட்டையில்  அவர்களுடன் மோதும் எவருமே நிச்சயமாக தோல்வியையே தழுவிக் கொள்வார்கள்.

தனது ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருந்து வந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னடைவுகள் தேர்தல் காலத்தின் போது அக்கட்சியை பெருமளவுக்கு பாதிக்கும். இலங்கை முஸ்லிம்களை கல்லடித்துக் கொல்ல வேண்டும் என்று கூறப்பட்டதற்கு அஸ்கிரிய பீடத்தின் சங்கைக்குரிய மகாநாயக்க தேரர் அவர்கள் மறைமுகமாக ஆதரவளித்த பொழுது ஐக்கிய தேசியக் கட்சி எங்கிருந்தது? முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பான திருத்தங்களின் குரல்வளையை நெரிப்பதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்புக்கு ஐக்கிய தேசியக் கட்சி இடமளித்தது ஏன்? ஒரு புனைவின் அடிப்படையில் புத்த பிக்கு ஒருவரை விமர்சிக்கும் விதத்தில் சிறுகதை ஒன்றை எழுதியமைக்காக ஷக்திக சத்குமார என்ற சிங்கள பௌத்த இளம் எழுத்தாளர் அநீதியான விதத்தில் சிறைபடுத்தப்பட்டிருக்கும் விடயம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி மௌனம் காப்பது ஏன்? திருகோணமலை ஐவர்  வழக்கை வெற்றிகரமான விதத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கு அரசு தவறிய விடயத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு விளக்கமளிக்கப் போகின்றது? தீவிரவாதிகளை தட்டிக் கொடுப்பதன் மூலம் தேர்தல் மீட்சியினை பெற்றுக்கொள்ள முடியுமென ஐக்கிய தேசியக் கட்சி சிந்திக்கின்றதா? அதன் அடிப்படை ஆதரவாளர்கள் மதித்துப் போற்றும் விழுமியங்கள் தொடர்பாக முன்வந்து குரல் எழுப்பத் தவறுவது, வெற்றிக்கான ஒரு வழியாக அல்லாமல், தானே தேடிக்கொள்ளும் தோல்விக்கான ஒரு வழியாக இருந்து வருகின்றது என்ற விடயத்தை அது புரிந்து கொள்ளவில்லையா?

படுபாதாளத்திற்கு இட்டுச் செல்லும் பாதை

2015ஆம் ஆண்டில் ராஜபக்‌ஷ ஆட்சியை தோற்கடித்த எதிர்க்கட்சி கூட்டணியின் அடிப்படையான தேர்தல் வாக்குறுதி நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகவே இருந்து வந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியமை சிறிசேன – விக்கிரமசிங்க ஆட்சியின் ஒவ்வொரு தனித்தனி சாதனையையும் ஆபத்துக்குள் தள்ளிவிடுவதாகவே இருந்து வந்தது. குறிப்பாக, ஜனாநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்துவதிலும், சட்டத்தின் ஆட்சியை ஸ்தாபிப்பதிலும் ஓரளவுக்கு சாதித்துக் கொள்ளப்பட்டிருந்த முன்னேற்றங்களையும் கூட அது பாதித்துள்ளது. இந்த முன்னேற்றங்கள் கணிசமானவையாக இருந்து வந்த போதிலும், எளிதில் உடைந்து நொருங்கக் கூடியவையாக இருந்து வருகின்றன. வேரூன்றுவதற்கு அவற்றுக்கு ஒரு வெளியும், வளர்வதற்கு அவற்றுக்கு ஒரு காலப் பிரிவும் தேவையாக இருந்து வருகின்றன. ஆனால், தற்போதைய ஆட்சியின் பெருந்தொகையான தோல்விகள் ராஜபக்‌ஷ ஆட்சிக்கான கதவுகளை மீண்டும் திறந்துவிடக்கூடிய ஒரு சூழலை உருவாக்கியிருக்கும் நிலையில், இலங்கைக்கு அந்த வெளி மற்றும் காலம் என்பன கிடைக்கக்கூடிய சாத்தியம் அநேகமாக இருந்து வரவில்லை.

அரசாங்கம் மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றான மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்றி, நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கிய பயணத்தில் ஓரளவுக்கு வெற்றியை சாதித்துக் கொண்டிருந்தால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான தகைமைகள் மேலும் உயர் மட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டிருக்க முடியும். தற்போதைய ஆட்சியின் வஞ்சக புத்தி, பணத்தை குறியாகக் கொண்ட செயற்பாடுகள், கோழைத்தனம் மற்றும் செயல்திறனற்ற நிலை என்பவற்றின் காரணமாக அரசியல்வாதிகள் தொடக்கம் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் வரையில் தொழில் முயற்சியாளர்கள் தொடக்கம் டியூசன் ஆசிரியர்கள் வரையில்  எந்தவொரு பேர்வழியும் தன்னை ஒரு (ஜனாதிபதி) வேட்பாளராக முன்னிறுத்தக் கூடிய நிலைமை காணப்படுகின்றது.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வர்த்தகப் புள்ளியான தம்மிக்க பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் அநேகமாக ‘பொது வேட்பாளராக’ களமிறக்கப்பட முடியும் என கூறப்பட்டது. கழிவுப் பொருட்களை இறக்குமதி செய்த மாபெரும் ஊழலின் மையத்தில் இருந்து வரும் Hayles Free Zone  நிறுவனம், திரு. பெரேரா பெரும்பான்மை பங்குகளை வைத்திருப்பதுடன், நிறைவேற்றுத் தரம் சாராத தலைவராக இருந்து வரும் ஹேலிஸ் குழுமத்தின் ஒரு துணை நிறுவனமாகும். கொள்ளை இலாபமீட்டும் நோக்கில் சுற்றாடலை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட போது ஹேலிஸ் துணை நிறுவனம் ஒன்று கையும் மெய்யுமாக அகப்பட்ட முதல் தடவை இதுவல்ல. 2013ஆம் ஆண்டில் Dip products PLC என்ற ஹேலிஸ் குழுமத்தின் மற்றொரு துணை நிறுவனம் றத்துபஸ்வல அனர்த்தத்தின் மையத்தில் இருந்து வந்தது. 28 கிராம அதிகாரி பிரிவுகளில் தரைக் கீழ் நீர் மாசடைவதற்கும் அந்தக் கம்பனியே பொறுப்பாக இருந்து வந்தது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட குடிமக்கள் அமைதியான விதத்தில் தமது எதிர்ப்பை தெரிவித்த பொழுது,  இராணுவத்தை அனுப்புவதன் மூலம் ராஜபக்‌ஷ நிர்வாகம் அதற்கு எதிர்வினையாற்றியது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்கார்கள் மீது இராணுவம் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட போது மூன்று போர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தார்கள். அத்தகைய ஒருவர் நாட்டின் ஜனாதிபதிப் பதவியை பெற்றுக்கொண்டால் எமது நாட்டின் தலைவிதி எப்படி இருந்து வரும் என்பதனை கற்பனை பண்ணிப் பார்ப்பது சிரமமான ஒரு காரியமல்ல.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது பொது மக்கள் மத்தியில் நிலவி வந்த கருத்தொற்றுமை ஜனநாயகத்திற்கு சார்பானதாகவும், இனவாதத்திற்கு எதிரானதாகவும், முற்போக்கானதாகவும், மதச்சார்பற்றதாகவுமே இருந்து வந்தது. ஆனால், இன்று இலங்கையில் ஆதிக்கம் செலுத்தி வரும் கருத்தொற்றுமை சர்வாதிகாரத்திற்கு சார்பானதாக, பெரும்பான்மை இனத்தின் இனவாதத்திற்கு சார்பானதாக, தனிநபர் துதிபாடுவதாக, பிற்போக்கு இயல்பைக் கொண்டதாக காணப்படுகின்றது. நாட்டின் இன்றைய தருணம் ஒரு நல்ல சர்வாதிகாரி மீதான பிரியத்தையே எடுத்துக் காட்டுகின்றது. ஆகவே, முன்னணி பௌத்த பிக்கு ஒருவர் கோட்டாபய ராஜபக்‌ஷ “ஹிட்லரைப் போல ஆட்சியை நடத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

அதே வேளையில், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றுக்கு எதிராக கார்டினல் மல்கம் றஞ்சித் ஆண்டகை  மீண்டும் மீண்டும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருவதனை நாங்கள் பார்க்கின்றோம். வத்திக்கான் – ​II க்கு முற்பட்ட கால கட்டத்தில் பாப்பாண்டவர் XI பெனிடோ முசோலினியுடன் (Lateran Accords) ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட காலத்துக்கும், (வருங்கால பாப்பரசர்) கார்டினல் பிரெலி அடொல்ப் ஹிட்லருடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட காலத்துக்கும் திரும்பிச் செல்பவராகவும் கார்டினல் ரஞ்சித் அவர்கள் இருந்து வருகின்றார். மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு சர்வதேச சதிச் செயலாக இருந்து வருகின்றது என்றும், ஐ எஸ்  தலைவர் அமெரிக்க முகாம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் திவயின பத்திரிக்கை வெளியிட்ட அந்தப் புனைகதையை கார்டினல் அவர்களும் நம்புவது போல் தெரிகின்றது. அதாவது, அவர் என்ன கூறுகின்றாறோ அவர் அதனை அறிந்திருக்கவில்லை என்பதனை மட்டுமே எம்மால் ஊகிக்க முடியும்.

அரசாங்கத்தின் பல தோல்விகள் ஜனநாயகத்தின் தோல்விகளாகக் கருதப்படும் ஒரு பின்னணியில், வலுவான ஒரு தலைவர் குறித்த தொன்மம் அரசியல் களத்தில் செல்வாக்குப் பெற்று வருகின்றது. கடும் ஏமாற்றத்தில் அல்லது கோபத்தில் தமது சுயபுத்தியை இழந்திருக்கும் வாக்காளர்களுக்கு ஒவ்வொரு புதரின் மறைவிலிருந்தும், ஒவ்வொரு பாறைக்கும் பின்னால் இருந்தும் மீட்பர்கள் தோன்றி ‘உங்களுக்கு மீட்சியளிப்போம்’ எனக் கூறி வருகின்றார்கள். அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் சயத் தலைவர்கள் ஆகியோர் ‘வலுவான ஒரு தலைவர்’ என்ற ஒரே கீதத்தை இசைக்கும் பொழுது, அவர்களுடைய நோக்கம், எமது தேசத்தை மீண்டும் ஒரு முறை அந்தப் பழைய நாட்களுக்கு – அதாவது, ஆட்சியாளர்கள் சட்டத்தையும், ஒழுங்கையும் மிதித்து, நசுக்கி, குற்றங்களை நிகழ்த்தி, தவறுகளை இழைத்து, அதே வேளையில் தாம் எந்தத் தவறும் இழைக்காதவர்கள் என்ற நற்பெயரை ஈட்டிக் கொண்ட அந்தக் கால கட்டத்துக்கு – எடுத்துச் செல்வதாகும். ஏனெனில், சக்கரவர்த்தி நிர்வாண கோலத்தில் உலா வருகின்றார் என்று சொல்லுமளவுக்கு எவரும் சுதந்திரமானவர்களாக இருந்து வரவில்லை.

திசரணி குணசேகர எழுதி The naked Surviours என்ற தலைப்பில் கிரவுண்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையில் தமிழாக்கம்.