பட மூலம், Selvaraja Rajasegar

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 02ஆம் திகதி ஈரான் செய்னப் செக்காண்வான்ட் என்ற பெண்ணை தூக்கிலிட்டது. அந்தப் பெண் இழைத்தாக கூறப்படும் குற்றம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவள் ஒரு சிறுமியாக இருந்து வந்தாள். சர்வதேச சட்டத்தின் கீழ் அப்பெண்ணுக்கு தூக்குத் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், சிறு வயதில் பலவந்தமாக மணப்பெண்களாக்கப்படும் ஏனைய பெருந்தொகையான சிறுமிகளைப் போலவே அவள் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தாள். மிகவும் வறிய, பாரம்பரிய குடும்பமொன்றில் பிறந்த செய்னப் தனது 15ஆவது வயதில் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டாள். அவளுடைய கணவன் கொடுமைக்காரனாகவும், வன்முறையில் ஈடுபடுபவனாகவும் இருந்து வந்தான். தனது கணவனிடமிருந்தும், கணவனின் சகோதரனிடமிருந்தும் தனக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு அப்பெண் அதிகாரிகளிடமும், குடும்ப உறுப்பினர்களிடமும் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தாள். தனது கணவனின் சகோதரன் பல தடவைகள் தன்னை வன்புணர்வு செய்துள்ளதாகவும் அவள் கூறியிருந்தாள். ஆனால், அவளுடைய மன்றாட்டங்கள் எவருடைய காதிலும் விழவில்லை. செய்னப்புக்கு 17 வயதாகும் பொழுது அவளுடைய கணவன் ஒரு நாள் இறந்து கிடந்தான். பொலிஸ் சித்திரவதையை தாங்க முடியாமல், அந்தக் கொலையை தான் நிகழ்த்தியதாக செய்னப் வாக்குமூலம் அளித்தாள். வழக்கு விசாரணையின் போது – இறுதியில் அவள் தனக்கென ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொண்ட பொழுது – முன்னர் வழங்கியிருந்த தனது வாக்குமூலத்தை அவள் நிராகரித்தாள். ஆனால், ஏற்கனவே அது தாமதமாகியிருந்தது. அதனால் நீதிமன்றம் அவளுக்கு மரண தண்டனை வழங்கியது.

தனது குடிகார கணவனிடமிருந்து தன்னையும், தனது வயது முதிர்ந்த தாயாரையும் பாதுகாத்துக் கொள்வதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில், தனது கணவனை கொலை செய்த குற்றத்துக்காக அலிஸ் நுங்கு என்ற மலாவி நாட்டு பெண்மணிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை பெறுவதற்கு முன்னர், அலிஸ் பல வருட காலம் அனுபவித்து வந்த சொல்லொணாத் துன்பங்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து கொண்ட ஒரு நீதிமன்றம் அப்பெண்மணி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டது. அப்பெண்மணி 12 வருட காலம் தூக்கு மேடையின் நிழலில் துன்பங்கள் சூழ்ந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். எச்.ஐ.வி. தொற்று அவளை தாக்கியிருந்ததுடன், சிறையில் மிக மோசமான நிலைமைகளில், உணவுப் பற்றாக்குறையுடன் நாட்களை கழித்திருந்தாள். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு சில வாரங்களின் பின்னர் தனது தாயார் அருகில் இருக்கும் நிலையில் அலிஸ் மரணமடைந்தாள்.

இலங்கையில் பல பெண்கள் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களாக இருந்து வந்தாலும் கூட, மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருப்பவர்களின் பட்டியலின் ஆண் பெண் விபரங்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால், மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பெண்கள் பன்முக வடிவங்களிலான பால்நிலை அடிப்படையிலான காழ்ப்புணர்ச்சியை எதிர்கொண்டு வருவதாக சர்வதேச ஆராய்ச்சி எடுத்துக் காட்டுகின்றது. சமூகத்தில் வேரூன்றியிருக்கும் பால்நிலை நடத்தை நெறிமுறைகளை மீறியதாக கருதப்படும் பெண்களே அநேகமாக மரண தண்டனையை எதிர்கொள்பவர்களாக இருந்து வருகின்றார்கள். அதிலும் அதிகமான பெண்கள் கொலைக் குற்றச்சாட்டுக்களின் விளைவாகவே அவ்விதம் மரண தண்டனையை எதிர்கொள்கின்றார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைச் சம்பவங்களின் பின்புலத்தில் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த குற்றத்திற்காகவே அவர்கள் அவ்விதம் தண்டிக்கப்படுகின்றார்கள். உதாரணமாக, ஜோர்தானில் 16 பெண்கள் இப்பொழுது மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கின்றார்கள். அவர்களில் ஒருவரைத் தவிர, ஏனைய அனைவரும் பாரம்பரியமாக குடும்பத்தில் அதிகாரத்தை வைத்திருக்கும் நெருக்கமான குடும்ப உறுப்பினர் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காகவே அவ்விதம் தண்டனையை பெற்றிருக்கின்றார்கள். அந்த அதிகாரத்தை வைத்திருக்கும் நபர் கணவன், தந்தை, மாமியார் போன்ற நபர்களாக இருந்து வருவதுடன், மற்றவர்களை கொடுமைப்படுத்தக் கூடிய ஆற்றலையும் கொண்டிருக்கின்றார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜூன் 16ஆம் திகதி ஐக்கிய அமெரிக்காவில் சார்ள்ஸ் ரே பின்ச் என்பவர் தன் மீது சாட்டப்பட்டிருந்த அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். மரண தண்டனைக் கைதியாக 43 வருடங்களை சிறையில் கழித்த பின்னர் அவர் அவ்விதம் விடுதலை பெற்றுள்ளார். இவ்வாண்டு தொடக்கத்தில் அதுவும் ஐக்கிய அமெரிக்காவில் கிளிபர்ட் வில்லியம்ஸ் ஜூனியர் என்பவர் மரண தண்டனை விதிக்கப்பட்டு 42 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். 1973ஆம் ஆண்டின் பின்னர் 30 வருட காலப்பிரிவில் இவ்விதம் மரண தண்டனை கைதிகள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் கறுப்பு இனத்தவர்கள் ஆவார்கள். வில்லியம்ஸ் மற்றும் பின்ச் ஆகியோர் ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனை வழங்கப்பட்டு 36 வருட காலப்பிரிவின் போது குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட முறையே 165ஆவது மற்றும் 166ஆவது ஆட்கள் ஆவார்கள். ஆண்டொன்றுக்கு சராசரியாக நான்கு பேர் அவ்விதம் விடுவிக்கப்படுகின்றார்கள். 166ஆவது விடுதலை 2019 ஜூன் 20ஆம் திகதி இடம்பெற்ற 1500ஆவது மரண தண்டனைக்கு சற்று முன்னர் நிகழ்ந்தது.

சட்டபூர்வமாக ஆட்களை கொல்வதற்கான இலங்கையின் புதிய உரிமம்

இலங்கையில் இறுதியாக மரண தண்டனை நிறைவேற்றம் 1976இல் இடம்பெற்றதுடன், அதன் பின்னர் மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பாக ஒரு தற்காலிக தடை அமுலில் இருந்து வந்துள்ளது. மரண தண்டனை எமது சட்டங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும் நிலையில், நீதிமன்றங்கள் அடிக்கடி மரண தண்டனையை விதித்து வந்த போதிலும், ஒருவர் பின் ஒருவராக வந்த நாட்டின் ஜனாதிபதிகள் எவரும் மரண தண்டனைக்கான கட்டளைகளில் கையொப்பமிடவில்லை.

ஆனால், சித்திரவதையினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினமான ஜூன் 26ஆம் திகதி ஜனாதிபதி சிறிசேன மரண தண்டனையை மீண்டும் ஒரு முறை எடுத்து வந்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது கொடூரமான, மனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தும் ஒரு தண்டனையாக இருந்து வருவதுடன், அனைத்து இலங்கை ஜனாதிபதிகளினாலும் முன்னெடுக்கப்பட்டு வந்த அந்த 43 வருட கால இடைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் உள்ளது. கடந்த பல தசாப்த காலமாக உரிய சட்ட நடைமுறைகளுக்குப் புறம்பான விதத்தில் ஆட்களுக்கு மரண தண்டனை வழங்கும் விடயத்தில் மிக மோசமான விதத்தில் பிரபல்யம் பெற்றிருந்த இலங்கை, இப்பொழுது சட்ட ரீதியான விதத்தில் மரண தண்டனைகளை நிறைவேற்றும் விடயம் தொடர்பாக பிரபல்யமடையப்  போகின்றது. மரண தண்டனைக்கான உத்தரவு கைச்சாதிடப்பட்டிருக்கும் நான்கு கைதிகளினதும் பெயர்கள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. 1299 பேர் மரண தண்டனையை எதிர்பார்த்து காத்திருப்பதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிக்கையிடப்பட்டிருந்தது. அவ்விதம் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் அனைவரும், அவர்களுடைய குடும்பத்தினர்களும் முதலில் தூக்கில் இடப்படவிருக்கும் நான்கு பேரில் தாம் அல்லது தமது அன்புக்குரியவர்கள் எவரேனும் இருப்பார்களா என்ற விடயம் தெரியாத நிலையில் அல்லது தங்களுடைய முறை எப்பொழுது வரும் என்ற விடயம் தெரியாத நிலையில் கடும் துன்பத்திலும், மன அதிர்ச்சியிலும் இருந்து வருகின்றார்கள். பெரும்பாலான மரண தண்டனைக் கைதிகள் கடும் மன அழுத்தத்தை எதிர்கொண்டிருப்பதாகவும், உணவு உட்கொள்வதைத் தவிர்த்து வருவதாகவும், ஓரளவுக்கு மன மயக்க நிலையிலிருந்து வருவதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மரண தண்டனை வேண்டாம் என ஏன் கூற வேண்டும்

மரண தண்டனை என்பது மீண்டும் ஒருபோதும் மாற்றியமைக்க முடியாத ஒரு தண்டனை வடிவமாக இருந்து வருவதுடன், நபர் ஒருவருக்கு எதிராக குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் புதிதாக தோன்றக் கூடிய சாட்சியங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய வெளியையும் அது இல்லாமல் செய்கின்றது. உதாரணமாக, முன்னர் தவறாக குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்ட நபர் ஒருவர் புதிய தொழில்நுட்பத்திற்கு ஊடாக நிரபராதியாக்கப்பட முடியும். மேலே குறிப்பிடப்பட்டவாறு, தவறான விதத்தில் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட பல நபர்கள், அவர்கள் மீது தவறான விதத்தில் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதனை எடுத்துக்காட்டும் புதிய சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் பல தசாப்தங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஐக்கிய  அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் தவறான விதத்தில் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டு, மரண தண்டனை கைதிகளாக அல்லது சிறைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல நபர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்கள் என்ற விடயத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு 23 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் 23 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்ற விடயத்தையும் அது சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நபர் தொடர்பான குற்றத் தீர்ப்பு தவறான விதத்தில் நீதி நிலைநிறுத்தப்பட்ட ஒரு சம்பவமாக  இருந்து வருகின்றது என்ற விடயத்தை முதன்மை வழக்குத் தொடுனரும், நீதிபதியும் பின்னர் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

மேலும், இலங்கையில் நிரபராதிகள் மீது குற்றத் தீர்ப்பு வழங்கப்படும் நிலைமையை எடுத்துவரக் கூடிய விதத்தில் வழக்குத்தொடுனர்கள் மோசமான விதத்தில் நடந்து கொள்கின்றனர் என்று கூறப்படுவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. உலகில் ஏனைய நாடுகளைப் போலவே இலங்கையிலும் நபர்கள் தவறான விதத்தில் குற்றத் தீர்ப்புக்களின் பேரில் சிறையில் அடைக்கப்படக் கூடிய சாத்தியப்பாடு இருந்து வருகின்றது. வழக்கின் போதும், மேன்முறையீட்டின் போதும் – குறிப்பாக, வறியவர்களைப் பொறுத்தவரையில் தரமான சட்ட உதவியை எளிதில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை இருந்து வருவதனையும் உள்ளடக்கிய விதத்தில் – குற்றவியல் நீதிச் செயன்முறையில் காணப்படும் பாரதூரமான பல குறைபாடுகளின் பின்னணியில் இது இடம்பெறக்கூடிய வாய்ப்பு நிலவி வருகின்றது. எனவே, வறியவர்களே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தவறான குற்றத் தீர்ப்புக்களை எதிர்கொள்ளக் கூடியவர்களாக இருந்து வருகின்றார்கள்.

மரண தண்டனை, குற்றச் செயல்களை தடுத்து நிறுத்தியிருக்கின்றது அல்லது குறைத்திருக்கின்றது என்பதனை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் இலங்கையில் இருந்தோ அல்லது உலகின் வேறு எந்த இடங்களிலும் இருந்தோ பெற்றுக் கொள்ள முடியவில்லை.

மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது சாத்தியமானதாக இருந்து வருவதுடன், அத்தகைய எதிர்ப்பு அவசியமானதாகவும் உள்ளது. போதைப் பொருள் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்களையும் உள்ளக்கிய விதத்தில் குற்றச் செயல்களை கையாள்வதற்கான ஆக்கபூர்வமான வழிமுறைகளுக்கு ஆதரவளிக்க வேண்டியும் உள்ளது. அனைத்து மனித உரிமைகளையும் உத்தரவாதப்படுத்துவதன் மூலம் – அதாவது, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள், பொருளாதார மற்றும் கலாசார உரிமைகள் என்பவற்றை உத்தரவாதப்படுத்துவதன் மூலம் – குற்றச் செயல்களைத் தடுப்பது தொடர்பாக செயற்படுவது மிகவும் நிர்ணயகரமான ஒரு விடயமாக இருந்து வருகின்றது. ஒரு சில சிறைக்கைதிகள் சிறைக்குள் இருந்து கொண்டே போதைப் பொருள் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் நிலை காணப்பட்டால், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதையும் உள்ளடக்கிய விதத்தில் சிறைச்சாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுதல் வேண்டும். மேலும், சிறைச்சாலைகளுக்குள் அவ்விதம் போதை வஸ்துக்களை எடுத்து வருவதற்கு இடமளித்தால் அதற்கு சிறை அதிகாரிகள் பொறுப்புக்கூற வைக்கப்படுதலும் வேண்டும்.

சர்வதேச ரீதியான கடப்பாடுகள்

மரண தண்டனை மீதான தற்காலிகத் தடையை கோரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 121 நாடுகள் ஆதரவளித்திருந்ததுடன், இலங்கையும் அதில் ஒன்றாக இருந்து வந்தது. இதுவரையில் ஐ.நா. தீர்மானம் ஒன்றுக்கு ஆகக்கூடிய நாடுகள் ஆதரவளித்திருந்தது இதுவே முதல் தடவையாகும். மரண தண்டனையை அமுல்  செய்யும் பொழுது நீதி ஏதேனும் விதத்தில் பிழைத்தால் அதனை ஒரு போதும் திரும்பப் பெற முடியாது என்ற விடயத்தையும், மீண்டும் ஈடு செய்ய முடியாது என்ற விடயத்தையும் ஏற்றுக்கொள்வதில் 120 நாடுகளுடன் இலங்கையும்  இணைந்திருந்தது. மரண தண்டனை குற்றச் செயல்களை தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதனை நிரூபித்துக் காட்டுவதற்கான முடிவான சான்றுகளும் இருந்து வரவில்லை. தொடர்ச்சியாக மரண தண்டனையை அமுல் செய்து வருவது குறித்த ஆழமான கவலையை உலகளாவிய  ரீதியில் கூட்டாக வெளிப்படுத்தியிருந்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இணைந்திருந்தது. மரண தண்டனை தொடர்பான தற்காலிக தடைகளை கொண்டிருக்கும் நாடுகள் அவற்றை தொடர்ந்து பராமரித்து வர வேண்டும் என்றும் ஊக்குவிக்கப்பட்டிருந்தன. இப்பொழுது இந்தத் தீர்மானத்தின் ஆறு மாதங்களின் பின்னர், மரண தண்டனை தொடர்பாக மிக நீண்டகாலமாக நாட்டில் நிலவி வந்த தற்காலிகத் தடை முடிவுக்கு வருவது போல் தெரிகின்றது. மரண தண்டனையை ஒழிக்கும் விடயத்தில் முன்னேற்றம் காட்டுவதிலும் பார்க்க, இந்தத் திசையில் நாடு இப்பொழுது சென்று கொண்டிருக்கின்றது. போதைப் பொருட்களுடன் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கான மரண தண்டனையும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச  சமவாயத்தின் உறுப்புரை 6ஐ மீறுகின்றது. இலங்கையும் இந்த சமவாயத்திற்கு ஒரு தரப்பாக இருந்து வருவதுடன், சர்வதேச சட்டத்தின் கீழ் அத்தகைய மரண தண்டனைகள் சட்ட விரோதமான கொலைகள் எனக் கருதப்படுகின்றன.

சர்வதேச மன்னிப்புச் சபையின் தரவுகளின் பிரகாரம் சட்ட ரீதியான மரண தண்டனையை நிறைவேற்றும் நாடுகளின் எண்ணிக்கையும், அதேபோல மரண தண்டனை தொடர்பான தீர்ப்புக்களை வழங்கி வரும் நாடுகளின் எண்ணிக்கையும் இப்பொழுது வீழ்ச்சியடைந்து வருகின்றன. 2018 ஆம் ஆண்டில் 20 நாடுகளில் ஆகக் குறைந்தது 690 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், இது 2017 ஆம் ஆண்டு தரவுகளுடன் (ஆகக் குறைந்தது 993 மரண தண்டனைகள்) ஒப்பிடும் பொழுது 31% வீழ்ச்சியைக் காட்டுகின்றது என்றும் தெரிவிக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை, கடந்த தசாப்தத்தின் போது அது பதிவு செய்திருக்கும் ஆகக்குறைந்த மரண தண்டனைகளின் எண்ணிக்கையாகவும் இது இருந்து வருகின்றது என்றும் குறிப்பிடுகின்றது. 2018ஆம் ஆண்டில் 54 நாடுகளில் 2531 மரண தண்டனை தீர்ப்புக்கள் வழங்கப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை பதிவு செய்துள்ளது. 2017ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட 2591 மரண தண்டனைகளுடன் ஒப்பிடும் பொழுதும் இது ஒரு வீழ்ச்சியைக் காட்டுகின்றது. 2018ஆம் ஆண்டின் முடிவில் உலக அளவில் 19,336 ஆட்கள் மரண தண்டனையை எதிர்பார்த்து காத்திருந்தனர். 170 இற்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றில் மரண தண்டனையை ஒழித்துள்ளன அல்லது சட்டத்தில், நடைமுறையில் ஒரு தற்காலிகத் தடையை அறிமுகம் செய்து வைப்பதன் மூலம் மரண தண்டனை நிறைவேற்றுதல்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. 40இற்கும் குறைந்த நாடுகளே இப்பொழுது இந்த மரண தண்டனை வழக்கத்தை பின்பற்றி வருகின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பின் தரவுகளின் பிரகாரம் 2019 மே 23 திகதி அன்றுள்ளவாறு, மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயத்தின் இரண்டாவது மேலதிக ஆவணத்தை 87 நாடுகள் அத்தாட்சிப்படுத்தியிருந்தன.

கொலைகளுக்கு எதிரான சமயங்களின் போதனைகள்

ஒரு கத்தோலிக்கர் என்ற முறையில் நான் நம்பிக்கை வைத்திருக்கும் அடிப்படை  கோட்பாடுகளில் ஒன்று “நீ கொலை செய்யாதிருப்பாயாக” என்பதாகும். மனித உயிர் புனிதமானது என்றும், மரண தண்டனை “அது எந்தவொரு வடிவத்தில் நிறைவேற்றப்பட்டு வந்தாலும் கூட, மனித கண்ணியத்தை குலைக்கக் கூடிய, மனித நேயமற்ற ஒரு செயலாக இருந்து வருகின்றது” என்றும் ஒரே சீரான நிலைப்பாட்டை பாப்பாண்டவர் பிரான்சிஸ் எடுத்திருப்பதுடன், இது தொடர்பாக நேரடியாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அது “வேதாகமத்திற்கு எதிரானது” என்றும் அவர் கூறியுள்ளார். எவ்வாறிருப்பினும், கொழும்பு கத்தோலிக்க பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்ட அறிக்கையில் ஒரு சில சம்பவங்கள் தொடர்பாக மரண தண்டனை நிறைவேற்றப்படுவதனை தான் ஆதரிப்பதாக குறிப்பிட்டிருந்தார். மிகக் கொடூரமான குற்றச் செயல்களை இழைத்திருக்கும் நபர்கள் வாழ்வதற்கான தமது சொந்த உரிமையை பறி கொடுத்திருக்கின்றார்கள் எனக் கருத முடியும் என்றும், அதனால் அவர்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் என்ன தண்டனையை வழங்குகின்றனவோ அதனை அமுல் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் அறிக்கை வெளியிடப்பட்டு இரு வாரங்களுக்கும் குறைந்த காலப் பிரிவில் ஓகஸ்ட் 01ஆம் திகதி வத்திக்கான் பேராயர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருந்தது. அந்தக் கடிதத்தில் மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அப்பாவி மக்களின் உயிரை பாதுகாப்பதற்கெனப் பயன்படுத்தப்படும் நிலையிலும் கூட அது தேவையற்றது என்றும் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கை கத்தோலிக்க பேராயர் சபை 2018 ஆகஸ்ட் 09ஆம் திகதி வெளியிட்ட ஓர் அறிக்கையின் ஊடாக இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டிருந்தது. அந்த அறிக்கை வத்திக்கான் கடிதத்திலிருந்து விரிவாக மேற்கோள்களை காட்டியிருந்ததுடன், தாம் நிபந்தனையற்ற விதத்தில் மரண தண்டனையை எதிர்ப்பதாக தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. கார்டினல் றஞ்சித் ஆண்டகை அவர்கள் தனது முன்னைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பதுடன், அந்த அறிக்கையில் கைச்சாதிட்டிருந்தார்.

பௌத்த மக்கள் பெரும்பான்மையினராக வாழும் இந்த நாட்டில் பௌத்த மதத்தின் முதலாவது கோட்பாடு கொல்வதிலிருந்து தவிர்த்து கொள்ள வேண்டும் என்பதாகும் (பானதிபார்த்த வேரமணி சிக்காபதம் சமாதியாமி) .

மரண தண்டனை – அல்லது சட்ட ரீதியான கொலைகள் – இலங்கையின் சர்வதேச கடப்பாடுகள், சமய மற்றும் ஆன்மீக விழுமியங்கள் என்பவற்றுக்கு எதிரானதாகும். அந்த விழுமியங்கள் மனித வாழ்வின் புனிதத்துவத்தை மேலோங்கச் செய்கின்றன. நாங்கள் மரண தண்டனையை எதிர்க்க வேண்டும்; குறுங்காலத்தில் அது தொடர்பான தற்காலிக தடையை பராமரித்துவர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், நீண்ட காலத்தில் உள்நாட்டு சட்டத்திலிருந்து மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்றும், மரண தண்டனை  ஒழிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளும்  சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயத்தின் இரண்டாவது மேலதிக ஆவணத்தை இலங்கை அத்தாட்சிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ள வேண்டும்.

ருக்கி பெர்னாண்டோ

Death Penalty: License for Judicial Killings என்ற தலைப்பில் கிரவுண்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.