பட மூலம், The National

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற மிகக் கொடூரமான குண்டுத் தாக்குதல்களை அடுத்து, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான உடல் ரீதியான தாக்குதல்களை இலங்கை தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்து வந்துள்ளது. எவ்வாறிருப்பினும், இலங்கை அரசினால் இந்த நெருக்கடி முகாமைத்துவம் செய்யப்படும் விதம் (கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் இடம்பெற்ற சம்பங்கள் தவிர) முதிர்ச்சியான இயல்பைக் கொண்டதாகவோ அல்லது திருப்திகரமானதாகவோ இருந்து வரவில்லை.

இத்தகைய வன்முறையுடன் கூடிய ஒரு பின்புலத்தில், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நாட்டில் ஒரு பாரிய எதிர்ப்புணர்வு தோன்ற முடியும் என எதிர்பார்ப்பது இயல்பானதாகும். அதேவேளையில், அரசினால் இந்த நெருக்கடி கையாளப்படும் விதம் சமூகங்களை ஒன்றிணைத்து, முஸ்லிம் அல்லாத சமூகங்களில் முஸ்லிம் சமூகத்துக்கெதிரான எதிர்ப்பலைகள் தோன்றுவதனை தணிப்பதற்கு உசிதமான சூழலை உருவாக்கும் விதத்தில் இடம்பெறவில்லை; மாறாக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அச்சத்திலும், பீதியிலும் ஆழ்த்துவதற்கு உசிதமான ஒரு சூழலை தோற்றுவிக்கும் விதத்திலேயே அரசு இந்நெருக்கடியை கையாண்டு வருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற மிகக் கொடூரமான தொடர் குண்டுத் தாக்குதல்கள், முஸ்லிம் அல்லாத சமூகங்களுக்கு மத்தியில் – அதாவது, சிங்கள மற்றும் தழிழ் சமூகங்களுக்கு மத்தியில் – முஸ்லிம் சமூகத்துக்கெதிரான கடுங்கோபம், எதிர்ப்பு  மற்றும் அருவறுப்பு  என்பவற்றை எடுத்து வந்துள்ளன. அதே விதத்தில், இது முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் வெட்க உணர்வு மற்றும் குற்ற உணர்வு என்பவற்றை உருவாக்கியிருந்தது. அதாவது, முஸ்லிம் சமூகத்தினர் ஏனைய சமூகத்தினரை எதிர்கொள்வதில் ஒரு சங்கட உணர்வை எதிர்கொண்டனர்.

இந்த இரு குழுக்களுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உளவியல் ரீதியான பிளவு மிகப் பிரமாண்டமாக இருந்து வரும் அதே வேளையில், பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு சில இலத்திரனியல் ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் விதம் இந்தப் பிளவை மேலும் ஆழமாக்கும் விதத்திலேயே இடம்பெற்று வருகின்றது.

அதேபோல இந்தப் பிரச்சினை தொடர்பாக அரசு செயற்படும் விதமும் முதிர்ச்சியற்ற ஒரு நிலைமையையே காட்டுகின்றது. அது பொறுப்பற்ற, விவேகமற்ற விதத்திலேயே இடம்பெற்று வருகின்றது. நாட்டின் பாதுகாப்பு மீதான இறுக்கமான பிடியை அரசு இழந்திருப்பதுடன், இந்தப் பாதுகாப்பற்ற பலவீன நிலை நீண்ட காலம் நிலவி வந்திருப்பது போல் தெரிகின்றது. இது இலங்கை அரசின் ஒட்டுமொத்தமான சீர்குலைவு செயன்முறையின் ஒரு பின்விளைவாக இருந்து வருகின்றது எனக் கருத முடியும்.

கறுப்பு ஜூலை நெருக்கடியை மிகவும் கவனமான விதத்தில் கையாளும் விடயத்தில் ஜே.ஆர். ஜெயவர்தன அரசு தோல்வி கண்டது. கறுப்பு ஜூலை சம்பவங்களுக்கு முன்னர் வடக்கிலும், கிழக்கிலும் பல பயங்கரவாத இயக்கங்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போதிலும், அந்த இயக்கங்கள் பரவலான ஆதரவையோ அல்லது பொதுமக்களின் ஆதரவையோ கொண்டிருக்கவில்லை.

ஆனால், கறுப்பு ஜுலை கலவரம், நாட்டு நிலைமையை முழுவதுமாக மாற்றியமைப்பதற்கு வழி கோலியது. ஜூலை கலவரங்களின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தமது பிரதேசங்களில் செயற்பட்டு வந்த தீவிரவாதக் குழுக்களைச் சூழ நூற்றுக்கணக்கில் அணி திரளத் தொடங்கினார்கள் என நாராயணசாமி அறிக்கையிட்டுள்ளார். தாம் இணைந்து கொள்ளும் தீவிரவாதக் குழுக்களின் தலைவர்கள் யார் என்ற விடயத்தை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அவர்கள் ஆவேசமடைந்திருந்ததுடன், தமக்கு ஆயுதங்கள் தேவையென சொல்லிக் கொண்டிருந்தார்கள். தாம் ஈழப் போராட்டத்தில் இணைந்து கொள்ளப் போவதாக ஓரிரு வரிகளிலான குறிப்புக்களை தமது வீட்டவர்களுக்கு எழுதி வைத்துவிட்டு, அவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறிச் சென்றார்கள்.

நாங்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ இலங்கையின் முஸ்லிம் சமூகத்தையும் அத்தகைய மிகவும் ஆபத்தான நிலைமை ஒன்றுக்குள் தள்ளி விடுவதற்கு முயற்சித்து வருகின்றோமா?

உன்னிப்பான கண்காணிப்பு கண்களின் பார்வை மழுங்கடிக்கப்பட்டமை

உலகளாவிய ரீதியிலான மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றான தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்கள் தலைதூக்கிய பின்னர் ஆகக் குறைந்தது அரசு மிகவும் பொறுப்பு வாய்ந்த விதத்தில்  நடந்து கொண்டிருக்க வேண்டும். தீவிரவாத சித்தாந்தங்களுக்கு ஆதரவாக குரலெழுப்பி வரும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் நாடுகளுடனான இராஜதந்திர தொடர்புகளின் போது, இலங்கை அரசு இலங்கையின் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் அத்தகைய சித்தாந்தங்களை பரப்பக்கூடிய நிகழ்ச்சித்திட்டங்களை அந்நாடுகள் அமுல் செய்வதனை மிகவும் கவனமான விதத்தில் தவிர்த்திருக்க வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரையில், தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்தின் இருப்பு என்பவற்றிலும் பார்க்க கனமான பணப்பைகள் முக்கியமானவையாக இருந்து வந்துள்ளன. அதன் பின்விளைவாக இலங்கை மிகவும் கேவலமான ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டு இருப்பதுடன், நிதி உதவிகளை வழங்கும் எவரும் எமது நாட்டில் தமக்குத் தேவையான விதத்தில் காரியங்களை செய்வதற்கு அது இடமளித்து வருகின்றது. இறுதியில், இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கி வந்துள்ள முஸ்லிம் நாடுகள் அரசின் உதவியுடன் இலங்கையில் தீவிரவாத இஸ்லாமிய சித்தாந்தங்களை துவக்கி வைத்து, போஷித்து வளர்க்கக்கூடிய நிலையில் இருந்து வந்திருப்பதுடன், ஒரு விதத்தில் அரசின் உதவியுடன் இது இடம்பெற்று வந்திருப்பது போல் தெரிகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் பயங்கரவாதப் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் இலங்கை முஸ்லிம் இளைஞர்களின் ஒரு குழு நாடு திரும்பியுள்ளது என்ற விடயம் தெரிய வந்தவுடனேயே அரச தலைவர்களினதும், பாதுகாப்பு பிரிவினரதும் உடனடிக் கவனம் இது தொடர்பாக செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எவரும் அதனை ஒரு பாரதூரமான விடயமாகக் கருதியிருக்கவில்லை.

அதனையடுத்து மாவனல்லையில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் வனாத்தவில்லு என்ற இடத்தில் கணிசமான அளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் என்பன தொடர்பாக முழுமையாக கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருந்து வந்தது.

இறுதியாக, திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல் நிச்சயமாக முன்னெடுக்கப்பட முடியும் என இந்திய உளவுச் சேவைகள் எச்சரிக்கை விடுத்த சந்தர்ப்பத்தில், அது தொடர்பாக உடனடியாக செயற்பட வேண்டிய பொறுப்பை அவர்கள் முழுதுமாக தட்டிக் கழித்துள்ளார்கள். மிகக் கொடூரமான படுகொலைகள் இடம்பெற்ற பின்னரேயே இந்தப் பொறிமுறைக்கு உயிரூட்டும் பொருட்டு அனைத்து விதமான தேடுதல் நடவடிக்கைகளும், புலன் விசாரணைகளும் முடக்கிவிடப்பட்டிருந்தன. நாட்டின் தற்போதைய நிலவரம், அரசு மற்றும் அதன் தலைவர்கள் ஆகிய தரப்புக்களின் உணர்வற்ற நிலையையும், பொறுப்பற்ற நிலையையும் பிரதிபலிக்கின்றது.

ஆகக் குறைந்தது இந்தப் பாரிய தாக்குதலுக்குப் பின்னர் அரச தலைவர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் ஆகியோரின் பாரதூரமான கவனம் நாட்டின் அரசியல் முறைமையில் ஏற்பட்டு வந்திருக்கும் வீழ்ச்சி மற்றும் சீர்குலைவு என்பவற்றின் மீது திரும்பியிருக்க வேண்டும். வேறு எந்தவொரு விடயத்திலும் பார்க்க ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பையும் மீளமைப்புச் செய்ய வேண்டிய தேவை இருந்து வருகின்றது. எனினும், எவரும் இதனைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.

இந்தத் தரப்புக்கள் அனைத்துமே தம்மைச் செல்வந்தர்கள் ஆக்கி வரும் இந்தச் சுரண்டல் இயல்புடன் கூடிய அமைப்பை முழுமையாக நிலைமாற்றம் செய்ய வேண்டிய உடனடித் தேவையை தவிர்த்துக் கொள்ளவே விரும்புகின்றார்கள். அதற்குப் பதிலாக எதிர்கால தேர்தல்கள் தொடர்பாக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு அவர்கள் முயற்சித்து வருவதுடன், அழுகி நாற்றமடிக்கும், ஊழல் மலிந்த தற்போதைய முறைமையை தமது சொந்த இலாபத்திற்கு தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்புகின்றார்கள்.

தற்போதைய முறைமையை மீளமைப்புச் செய்ய வேண்டிய தேவை குறித்த புரிந்துணர்வு

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், ஒட்டுமொத்த அமைப்பிலும் ஒரு முழுமையான கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை எடுத்துவர வேண்டிய தேவை மிக வழுவாக எழுச்சியடைந்திருந்தது. இது தொடர்பாக நான் மிகவும் விரிவான விதத்தில் கட்டுரைகளை எழுதினேன்; அது தவிர, அரசின் சீர்குலைவு குறித்தும், நாடு எதிர்கொண்டிருக்கும் இந்த நெருக்கடி நிலைமையிலிருந்து மீண்டு வருவதற்கென ஒட்டுமொத்த கட்டமைப்பிலும் முழுமையான ஒரு சீர்திருத்தத்தை எடுத்துவர வேண்டிய உடனடித் தேவை குறித்தும் நாட்டின் முக்கியமான தலைவர்கள் அனைவருக்கும் எடுத்துக் கூறுவதற்கு நான் முயற்சித்தேன். நாட்டின் முதன்மையான அரசியல் தலைவர்கள் பிரசன்னமாகியிருந்த ‘ராவய’ பத்திரிகையின் வெள்ளி விழாக் கொண்டாட்ட நிகழ்வின் போது இந்த விடயத்தை அவர்களிடம் ஆணித்தரமாக எடுத்துக் கூறுவதற்கு நான் ஒரு முயற்சியை மேற்கொண்டேன். ஆனால், அரச தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரையும் உள்ளடக்கிய விதத்தில் இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை பங்கேற்ற எவரும் நான் அவர்களிடம் வலியுறுத்திக் கூறிய விடயத்தின் பாரதூரமாக கவனத்தில் எடுப்பதற்கு முன்வரவில்லை.

அதற்கு முன்னரும் கூட, உள்நாட்டுப் போர் முடிவடைந்ததனை அடுத்து போர் வெற்றி குறித்து நான் எழுதிய கட்டுரை ஒன்றில், உள்நாட்டுப் போரில் கிடைத்திருக்கும் வெற்றி, சுதந்திரத்தின் பின்னர் நாட்டு மக்களின் பேராதரவை வென்ற ஒரு யுக புருஷராக மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களை முன்னிலைப்படுத்தியுள்ளது என்ற விடயத்தை நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அதே வேளையில், நாட்டில் சீர்திருத்தங்கள் எடுத்துவரப்பட்டு, அரசியல் கட்டமைப்பில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் நிவர்த்திக்கப்படாவிட்டால் அவருடைய பெயரும் கூட வரலாற்றின் குப்பைக்கூடைக்குள் வீசப்பட முடியும் என்றும் நான் குறிப்பிட்டிருந்தேன். இந்தச் சீர்திருத்தத்திற்கான தேவை குறித்து அவருக்கு எடுத்து விளக்குவதற்கு நான் முயற்சித்தேன். துரதிர்ஷ்டவசமாக பிரச்சினையின் பாரதூரமான இயல்பினை அவரால் புரிந்து கொள்ள முடியாதிருந்தது.

கற்பனா உலகு குறித்த கனவுகள்

அருட்தந்தை திஸ்ஸ பாலசூரிய அவர்களினால் உருவாக்கப்பட்ட மருதானையில் அமைந்திருக்கும் சமூக, சமய நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது கருத்துரை வழங்குபவர்களில் ஒருவராக நானும் பங்கேற்றேன். அச்சந்தர்ப்பத்திலேயே சமூக நீதிக்கான இயக்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த  இரண்டு யோசனைகள் குறித்து எனக்குத் தெரியவந்தது – அதில் ஒன்று 2015 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஒரு பொது வேட்பாளரை களமிறக்குவதாகும். இரண்டாவது யோசனை ஜனாதிபதி முறையை ஒழித்து, அதற்குப் பதிலாக அரசியல் யாப்பில் எடுத்து வரும் ஒரு எளிமையான திருத்தத்திற்கு ஊடாக நாடாளுமன்ற முறையொன்றை கொண்டு வருதல் ஆகும்.

இக்கலந்துரையாடலில் மூன்று பல்கலைக்கழக விரிவுரையாளர்களான குமுது குசும் குமார, சுமனசிரி லியனகே மற்றும் நிர்மல் ரஞ்சித் தேவசிறி ஆகியோரும் பேச்சாளர்களாக இருந்தனர். அடுத்து வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை களமிறக்குவதற்கு சமூக நீதிக்கான இயக்கம் தீர்மானித்திருப்பதாகவும், அநேகமாக வண. சோபித்த தேரர் அந்தப் பொது வேட்பாளராக இருந்து வருவார் என்றும் நிர்மல் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார். அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்படும் ஒரு எளிமையான திருத்தத்திற்கு ஊடாக ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்றும், அதன் பின்னர் நாடாளுமன்ற ஆட்சி முறை உருவாக்கப்படும் என்றும் அவர் சொன்னார். இச்சந்தர்ப்பத்தில் பார்வையாளர்களுக்கு மத்தியிலிருந்து கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன எழுந்து நின்று, அரசியல் யாப்பில் செய்ய வேண்டிய திருத்தம் குறித்த நகல் ஏற்கனவே வரையப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

என்னுடைய உரையின் பொது வேட்பாளர் குறித்த கருத்தை நான் விமர்சனம் செய்ததுடன், ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து, அரசியல் யாப்பில்  மேற்கொள்ளப்படும் ஒரு சாதாரண திருத்தத்திற்கு ஊடாக நாடாளுமன்ற முறையை எடுத்து வரும் கருத்துக் குறித்தும் விமர்சனத்தை முன்வைத்திருந்தேன். அரசியல் யாப்புக்கான ஒரு சாதாரண திருத்தம் பொதுவாக புதிய உறுப்புரைகளை சேர்ப்பதற்காக அல்லது தற்போதைய அரசியல் யாப்பில் காணப்படும் ஏதேனும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படுகின்றது என்பதனையும் நான் சுட்டிக்காட்டினேன். ஒரு ஆட்சி முறையிலிருந்து ஒரு புதிய ஆட்சி முறைக்கு மாற்றத்தை எடுத்து வரும் விடயம், புதிய அரசியல் யாப்பொன்றுக்கு ஊடாக மட்டுமே எடுத்து வரப்படுதல் வேண்டும் என்றும், அரசியல் யாப்புக்கு செய்யும் ஒரு சாதாரண திருத்தத்தின் மூலம் அதனை மேற்கொள்ள முடியாது என்றும் நான் எடுத்து விளக்கினேன். அரசியல் யாப்பு உருவாக்கத்தை பொறுத்தவரையில் இது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாக  இருந்து வருகின்றது என்பதனையும் சுட்டிக்காட்டினேன்.

நான் வண. மாதுலுவாவே சோபித்த தேரர் அவர்களையும் சந்தித்து, இப்பிரச்சினை குறித்த என்னுடைய கருத்துக்களை அவரிடம் விளக்கிக் கூறினேன். மேலும், இந்த இரு பிரச்சினைகள் தொடர்பாகவும் – அதாவது, ஜனாதிபதித் தேர்தலின் போது ஒரு பொது வேட்பாளரை களமிறக்குதல் மற்றும் அரசியல் யாப்பு தொடர்பாக மேற்கொள்ளும் ஒரு எளிமையான திருத்தத்திற்கு ஊடாக ஜனாதிபதி ஆட்சி முறைக்குப் பதிலாக நாடாளுமன்ற முறையை எடுத்து வருதல் என்பன தொடர்பாகவும் – என்னுடைய கருத்துக்களை நான் எழுத்து மூலமும் வெளிப்படுத்தினேன்.

அரசியல் யாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் அத்தகைய ஒரு திருத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த அரசாங்க அமைப்பிலும் குளறுபடியும், ஒரு குழப்ப நிலையும் தோன்றும் என்றும், அது நாட்டை அராஜகத்துக்குள் தள்ளி விடும் என்றும் நான் வலியுறுத்திக் கூறினேன். என்னுடைய தீர்க்கதரிசனம் இப்பொழுது எதிர்பார்க்கப்பட்ட அளவிலும் பார்க்க அதிகமாக உண்மையாகி வருவது போல் தெரிகின்றது. இந்த விவாதத்தின் போது ‘ராவய’  பத்திரிகையும் கூட – அது என்னுடைய ஓர் ஆக்கமாக இருந்து வந்த போதிலும் – உத்தியோகபூர்வமாக எனது கருத்துக்களுக்கு ஆதரவளிக்கவில்லை. அதற்குப் பதிலாக, சமூக நீதிக்கான இயக்கத்தின் நிகழ்ச்சிநிரலின் சார்பாகவே அது செயற்பட்டது. அந்த நிகழ்ச்சிநிரல் ஒரு கற்பனாவாத இலட்சியமாக எடுத்து விளக்கப்பட்டதுடன், வெளிப்பார்வைக்கு அது மிகவும் கவர்ச்சியூட்டும் ஓர் இலட்சியமாகவே தென்பட்டது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ‘ராவய’ பத்திரிகையின்  30ஆவது ஆண்டு நிறைவு விழா இடம்பெற்றது. பத்திரிகையின் வெள்ளி விழாவின் போது நாட்டின் அரசியல் கட்டமைப்பில் ஒரு சீர்திருத்தம் எடுத்து வரப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அது குறித்த ஒரு விவாதத்தை முன்னெடுக்கும் ஒரு மேடையாக இந்த 30ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு நடத்தப்பட வேண்டும் என நான் ஒரு யோசனையை முன்வைத்திருந்தேன்.

நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் மற்றும் அந்த நிகழ்ச்சித்திட்டத்துடன் சம்பந்தப்பட்டிருந்த ஏனைய தலைவர்கள் ஆகியோர் தவிர, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களும் இந்த உரையாடலில் பங்குபற்ற வேண்டும் என்பது என்னுடைய கருத்தாக இருந்து வந்தது. எவ்வாறிருப்பினும், அச்சந்தர்ப்பத்தில் ‘ராவய’ பத்திரிகையின் பணிப்பாளர் குழு என்னுடைய கருத்துக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. அதன் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி அவர்களுக்கு இந்த ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுப்பது குறித்த என்னுடைய யோசனை நிராகரிக்கப்பட்டதுடன், நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களின் பங்கேற்புடன் மட்டும் அந்த விழா இடம்பெற்றது.

அக்கூட்டத்தின் போது அரசியல் கட்டமைப்பை சீர்திருத்துவதற்கான தேவை குறித்த பிரச்சினையை முன்வைப்பதற்கு நான் முயற்சித்தேன். ஆனால், இக்கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் அதனை அலட்சியம் செய்யும் ஒரு கொள்கையை  பின்பற்றியதுடன், அவர்கள் ஏனைய விடயங்கள் குறித்தே பேசினார்கள்.

விக்டர் ஐவன் எழுதி Overcoming Wretchedness என்ற தலைப்பில் டெய்லி எவ்டியில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம். இரண்டாவதும் இறுதியுமான பாகம் நாளை வௌியாகும்.

 


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மாற்றத்தில் வௌிவந்த கட்டுரைகளை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.