படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம்

ஜெனீவா மனித உரிமை பேரவை ஆணையாளரின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இரண்டு தினங்களில் அமெரிக்கா சமர்ப்பித்த இலங்கை தொடர்பான பிரேரணையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராட்டியதுடன் அந்தத் தீர்மானத்திற்கு அணுசரனையாளராக செயற்படவுள்ளதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல அமைச்சர்கள் கூட அமெரிக்கத் தீர்மானத்தை பாராட்டியுள்ளதுடன் தமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் கூறியுள்ளனர்.

தமிழர் நிலை என்ன?

ஆக, மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் மாத்திரமே இலங்கை அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அந்த அறிக்கையின் காரம் குறைவடைந்தமைக்கு புதிய அரசின் செயற்பாடுகள்தான் காரணம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அச்சு ஊடகங்களின் தலைவர்கள் பிரதம ஆசிரியர்களை சந்தித்து பேசியபோது பெருமையாக கூறியிருந்தார். எவ்வாறாயினும் மைத்திரிபால சிறிசேன அரசு மஹிந்த ராஜபக்‌ஷ அரசு எதிர்நோக்கிய சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபட்டுள்ளது என்பது மட்டும் உண்மை.

இந்த இடத்தில் தமிழ் மக்களின் நிலைமை என்ன? இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன. 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா எடுத்த நகர்வுகள் தமிழர்களுக்குச் சாதகமாக இருந்ததாக தோற்றப்பாடு ஒன்று தென்பட்டது. அத்துடன், இந்தியா அதற்குத் தடையாக இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்த நகர்வுகள் தமிழர்களுக்கானது அல்ல மஹிந்த ராஜபக்‌ஷவை விழுத்துவதற்கான ஒரு ஆயுதம் மாத்திரமே என்றுதான் விமர்சகர்கள் பலரும் கூறியிருந்தனர்.

ஆட்சிமாற்றத்தின் பின்னரான நிலைமை

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதியின் பின்னரான சூழலில் இலங்கையில் அமைதியை ஏற்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கை அமெரிக்கா – இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டது. அதன் பிரதிபலிப்பாகவே மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் அறிக்கையின் காரம் குறைந்தது. அமெரிக்காவின் தீர்மானத்திலும் சர்வதேச விசாரணை என்ற சொற்பதம் நீக்கம் செய்யப்பட்டது. ஆகவே, இலங்கை அரசு தமக்குச் சாதகமான விடயங்களை உரிய நேரத்தில் காய்நகர்த்தி வருகின்றது என்று கூறலாம். தமிழர் தொடர்பான சர்வதேசத்தின் ஒவ்வொரு கோரிக்கைகளையும் இலங்கை அரசு அவ்வப்போது புறம்தள்ளி வந்தமைதான் வரலாறு. மஹிந்த ராஜபக்‌ஷ மாத்திரமே அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளை புறம்தள்ளி செயற்பட்டார் என்று கூற முடியாது.

சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை இராணுவம் ஆக்கிரமதித்தது. இதனால், ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் இடம்பெயர்ந்தனர். அப்போது ஐ.நா. செயலாளர் நாயகமாக பதவி வகித்த பூட்ரஸ் பூட்ரஸ்காலி இலங்கை அரசை கடுமையாக எச்சரிக்கை செய்திருந்தார். ஆனால், அப்போது வெளிவிவகார அமைச்சராக இருந்த அமரர் லக்ஸ்மன் கதிர்காமர் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டார். அதுமாத்திரமல்ல, ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் வேறு என்றும், உள்நாட்டில் போரில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் லக்ஸ்மன் கதிர்காமர் கூறியிருந்தார். ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவும் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றி முடிவடையும் வரை சர்வதேச நாடுகள் கூறிய எந்த ஆலோசனைகளையும் கேட்கவில்லை.

சந்திரிக்காவும் நிராகரித்தார்

யாழ்ப்பாணம் கைப்பற்றி முடிவடைந்த பின்னர் மக்களை மீளக் குடியமர்த்தல் மற்றும் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள், போராளிகளை விடுதலை செய்வது குறித்த விடயங்களிலும் முற்று முழுதாக சர்வதேச யோசனைகளை சந்திரிக்கா புறக்கணித்திருந்தார். 1983இல் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் ஜே.ஆர். ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்தபோது கூட இந்தியாவின் தமிழர்கள் குறித்த யோசனைகளை புறக்கணித்தார். 1988இல் பிரமதாச ஜனாதிபதியாக இருந்தபோதும் இதே நிலைமைதான். ஆகவே, மஹிந்த ராஜபக்‌ஷ மாத்திரம் சர்வதேசத்தை புறக்கணித்து செயற்பட்டார் என்று கூற முடியாது. ஆனால், போரை நடத்தி முடித்து அந்தப் போரை அழிக்கும்போது அவருக்கு சர்வதேச ஆதரவு தேவைப்பட்டது. ஜே.ஆர். ஜெயவர்த்தன, பிரேமதாச, சந்திரிக்கா ஆகியோரும் பதவியில் இருந்தபோது புலிகளுடனான போரை நடத்த சர்வேதச ஆதரவையும் இராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களையும் கொள்வனவு செய்திருந்தனர்.

ஆனால், இனப்பிரச்சினை தீர்வு அல்லது தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அநீதிகளை விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்டால் மாத்திரம் அது உள்ளக விசாரணை என்றும் உள்ளுர் நீதிமன்றங்கள் மூலமாக அந்த விசாரணையை நடத்த முடியும் என்றும் கூறி தட்டிக்கழித்து விடுவார்கள். இந்த நிலைமைதான் 2015ஆம் ஆண்டும் தொடருகின்றது. ஆகவே, மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் முற்று முழுதாக மறுத்திருப்பதன் அர்த்தம் என்ன? இறுதிப் போரில் இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை, பாலியல் வல்லுறவுகள் மற்றும் கடத்தல் காணாமல்போதல் எதுவுமே நடைபெறவில்லை என்று ரணில் விக்கிரமசிங்க கூற முற்படுகின்றாரா? சதாரணமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் முன்னாள் போராளிகள் கூட இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை.

ரக்பி வீரரின் சடலம் எங்கே?

பாலியல் வல்லுறவுகள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளை விசாரணை செய்ய கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மற்றும் விசாரணை குழுக்கள் தமது அறிக்கையை கையளித்தபோதும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில், உள்ளக விசாரணையை எவ்வாறு தமிழ் மக்கள் நம்ப முடியும்? 1983இல் ஜே.ஆர் ஜெயவர்தனவில் இருந்து 2014ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருக்கும் வரையான காலப்பகுதிகளில் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகள், பாலியல் வல்லுறவுகள், மக்களின் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் எவ்வாறான விசாரணைகளை நடத்தின? சந்திரிக்காவினால் 1998இல் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்று தமக்கு விசாரணை நடத்த மேலும் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என கூறி கலைந்து சென்றது.

ஆகவே, இந்த நிலையில் உள்ளக விசாரணைகளை மக்கள் எவ்வாறு நம்ப முடியும்? ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த வரலாறுகள் தெரியாதவை அல்ல. ஏன்? அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த உண்மை தெரியும். அப்படியிருந்தும் உள்ளக விசாரணைக்கு ஏன் ஆதரவு கொடுக்கின்றனர்? புலிகள் அழிக்கப்பட்ட வரலாற்றில் இந்த நாடுகளுக்கும் பங்களிப்பு உண்டு என்பது ஒன்று. மற்றையது தமது அரசியல் பொருளாதார நிலை என்பதுதான் வெளிப்படையானது. அதேவேளை, பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை செய்யப்பட்டமைக்கான ஆதாரமாக அரச வைத்தியசாலையில் பொலிஸாரின் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த அவரின் உடற்பாகங்கள் காணாமல்போயுள்ளன. இந்த நிலையில், உள்ளக விசாரணை எம்மாத்திரம்? வசீம் தாஜூதீன் கொலைக்கு யார் காரணம் என்ற சந்தேகங்களும் எல்லோருக்கும் தெரியும். ஆகவே, போர்க்குற்றம் பற்றிய உள்ளக விசாரணை யாரை பாதுகாக்கும்?