படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம்

தேசிய அரசுக்கு இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட பல விடயங்களில் ஏராளமான பொறுப்பு உள்ளது. ஐக்கிய தேசிய கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் உள்ளடக்கிய தேசிய அரசின் ஆயுட்காலம் எவ்வளவாக இருக்கும் என்று கூற முடியாது. ஆனாலும், அந்த அரசிடம் மக்கள் குறைந்த பட்சமேனும் நன்மைகளை எதிர்ப்பார்க்கின்றனர். தமிழ் மக்களை பொறுத்தவரை வடக்கு – கிழக்கு மாகாணம் இணைந்த சுயாட்சி ஒன்றுக்கான ஏற்பாடுகளை அரசு செய்யுமா என்ற கேள்வியுடன் இருக்கின்றனர்.

குறைந்தபட்ச சமிக்ஞை

சிங்கள மக்களைப் பொறுத்தவரை ஊழல்மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுக்கொடுத்தல், ஊழல் மோசடிகளை முற்றாக தவிர்த்தல் போன்றவற்றிலும், பொருளாதார சுமைகளை குறைக்க வேண்டும் என்ற விடயத்திலும் எதிர்ப்பார்ப்பை வைத்துள்ளனர். முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை தங்கள் மீதான மத ரீதியிலான தாக்குதல்களை நிறுத்துதல், தங்கள் மதத்திற்குரிய சட்டங்களுக்கு தடைவிதித்தல், தங்கள் பொருளாதார இலக்குகளை அழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுதல் போன்ற விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றனர்.

அரசியல் ரீதியிலான உரிமைகளை உறுதிப்படுத்தல் என்பதில் தமிழ், முஸ்லிம் மக்களிடம் இருக்கக்கூடிய எதிர்ப்பார்ப்புகளுக்கு எற்ப இந்த அரசு செயற்பட வேண்டும் என பொது அமைப்புகள் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய மிதவாதிகள் எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால், இந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு உரிய முறையில் பதிலளிக்கக்கூடிய பொறுப்புவாய்ந்த தன்மை அரசுக்கு உள்ளதா என்பதை தற்போது கூற முடியாது. ஆனாலும், அதற்கான குறைந்தபட்ச சமிக்ஞையை அரசு வெளிப்படுத்தவில்லை என்பதுதான் குறைபாடாக உள்ளது.

ஆகவே முடியாத காரியமா?

தமிழ் மக்கள் எதிர்ப்பார்க்கும் அரசியல் தீர்வை வழங்க எதிர்க்கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அனுமதிக்காது அல்லது கடும் எதிர்ப்பை வெளிக்காட்டி இனவாதம் பேசி அரசை கவிழ்த்து விடுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எதிர்ப்பார்க்கலாம் – சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியமை கூட இனவாதமாக பார்க்கப்படுகின்றது என்றும் அவர்கள் காரணம் கூறலாம். ஆனால், அவ்வாறான இனவாத போக்குகளை அகற்றக்கூடிய அரசியல் வழிமுறைகள் என்ன என்பதுதான் இந்த அரசு நோக்கி எழுப்பக்கூடிய கேள்வியாகும்.

தேசிய அரசிற்குள் அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களிடையே கூட இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் முரண்பாடுகள் உள்ளன. குறிப்பாக ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பலர் தமிழர் விவகாரத்தில் கடும் போக்கை கொண்டுள்ளனர். ஆகவே, அவர்களை எல்லாம் வைத்துக் கொண்டு எவ்வாறு இன நெருக்கடிக்குத் தீர்வை காண முடியும் என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. ஆகவே, அவற்றுக்கும் சேர்த்து பொறுப்புக்கூடிய தலைவர்களாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவும் மாறவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் மக்களிடையே உள்ளது. அவ்வாறு செயற்படுவது முடியாத காரியம் அல்ல.

19 ஆவது தீருத்தச் சட்டம்

இனநெருக்கடிக்குத் தீர்வை முன்வைப்பதற்கு முன்னதாக மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் செய்ய வேண்டிய இரண்டு பிரதான வேலைத்திட்டங்கள் உள்ளன. ஒன்று, 19ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது. இரண்டாவது, வடக்கு – கிழக்கு மாகாணத்தில் இயல்பு வாழக்கையை ஏற்படுத்த இராணுவ முகாம்களை மூடி இலங்கையின் ஏனைய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் போன்ற ஒரு அமைப்பு முறையை உருவாக்குதல். இந்த இரண்டு விடயங்களிலும் முதலாவதை செய்வதற்கு நாடாளுமன்றம் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கிவிட்டது.

ஆகவே, முதலில் 19ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து அதன்மூலம் அரச திணைக்களங்களை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்க வேண்டும். அவ்வாறு சுயாதீனமாக செயற்படும்போது வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும் உள்ள அரச திணைக்களங்கள் அரச நிறுவனங்கள் சுயாதீனமாக இயங்குவதுடன் அங்கு இரணுவ தலையீடுகளுக்கும் இடமிருக்காது. குறிப்பாக சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுக்களை நியமிக்கும் போது மாகாணங்களுக்குமான சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுக்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு பொலிஸ் திணைக்களம் சுயாதீனமாக இயங்க முற்படும்போது வடக்கு கிழக்கில் குறைந்தபட்சமேனும் இராணுவ தலையீடு இல்லாத ஜனநாயக இடைவெளி ஒன்று உருவாகும்.

துணிந்து செய்ய முடியுமா?

இவற்றை துணிந்து செய்யக்கூடிய ஆற்றல் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் உள்ளதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. 19ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துகின்றோம் என்று கூறிவிட்டு வடக்கு – கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாத்திரம் அமுல்படுத்தினால் அது இன நெருக்கடியை மேலும் விஸ்த்தரிப்பதாகவே அமையும். ஆகவே, இவ்வாறான செயற்பாடுகளுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய தைரியம் இருக்கின்றதா என்பதையும் பிரமதரும் ஜனாதிபதியும் முதலில் பரீட்சித்துப் பார்க்க வேண்டும்.

தேசிய அரசு என்றாலே அனைத்து விடயங்களையும் எதிர்ப்பின்றி செய்ய முடியும் என்ற பொதுவான நம்பக்கை சர்வதேச மட்டத்தில் உண்டு. ஆனால், அரசுக்குள் இருக்கக்கூடிய முரண்பாடுகள் அல்லது அந்த முரண்பாடுகளையும் தாண்டி தமிழர் விவகாரத்தில் அவர்கள் ஈடுபடமுடியாத நிலைமை ஒன்று உள்ளது போன்ற விடயங்கள் எதுவும் சர்வதேச நாடுகளுக்குத் தெரிவதில்லை. அல்லது தெரிந்தாலும் கூட இந்த ஆட்சி மாற்றத்தை வைத்துக் கொண்டு தமிழர்கள் ஏதாவது செய்யட்டும் என்ற மன நிலையும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் உள்ளது.

தமிழர்கள் ஏற்கவில்லை

ஆகவே, இந்தியாவையும் அமெரிக்காவையும் சமாளிக்கும் வேலைத்திட்டங்களில் பிரதமரும் ஜனாதிபதியும் ஈடுபட்டால் அது மீண்டும் ஒரு போராட்டத்தை நோக்கி நகரக்கூடிய சூழலை ஏற்படுத்தலாம். தமிழ் மக்களைப் பொறுத்தவரை அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்கவில்லை. 19ஆவது ஆவது திருத்தச்சட்டமும் தீர்வு அல்ல. அந்தச் சட்டம் முழுநாட்டுக்குமான பொதுவான ஒரு ஜனநாயக ஏற்பாடு. ஆனாலும், குறைந்தபட்சம் அந்த ஏற்பாடுகளை செய்ய மறுப்பது அல்லது வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் அதனை நடைமுறைப்படுத்தாமல் விடுவது போன்ற செயற்பாடுகள் இலங்கையில் இரு தேசங்கள் உள்ளன என்ற மன நிலையை இயல்பாகவே உருவாக்குகின்றது.

அவ்வாறு இரு தேசம் என்ற உணர்வு நிலைக்குள் தமிழ் மக்கள் செல்லும்போது அதனை பிரிவினைவாதம் என்றும், தமிழர்கள் பிரிவினையைத் தான் விரும்புகின்றனர் என்றும் சிங்கள கட்சிகள் கூறுவது நியாயமற்றது. 1920ஆம் ஆண்டு இலங்கைத் தேசிய இயக்கம் பிளவுபட்டதில் இருந்து இன்று வரை அவ்வாறான பிரிவினைவாத சூழலுக்குள் தமிழர்களை தள்ளியது யார் என்பதை அறிய வரலாறுகள் உள்ளன. ஆகவே, அவ்வாறான வரலாறுகளின் பட்டறிவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் செயற்பட வேண்டும். சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைமை பதவியை இணக்க அரசியலாக உதாரணம் காண்பித்து தமிழர்களை சிறுமைப்படுத்துவது நேர்மையான அரசியல் அல்ல.