படம் | CNN

தேர்தல் நடந்த அதே கிழமை கொழும்பில் வத்தளையில் ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது. தேசியத்தைப் புரிந்துகொள்ளல் என்ற தலைப்பின் கீழான இப்பயிலரங்கில் மூவினத்தைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றினார்கள். இப்பயிலரங்கில் ஒருநாள் ஒரு நாடகம் நிகழ்த்திக் காட்டப்பட்டது. அந்நாடகத்தின் பெயர் ‘ஒரு நாடு இரு தேசம்’. அதில் இச்சிறு தீவில் உள்ள எல்லா அரசியல் போக்குளையும் பிரதிபலிக்கும் விதத்தில் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அரசியல் கட்சி பிரமுகர்களை ‘ஒரு நாடு இரு தேசம்’ என்ற கருத்துத் தொடர்பாக பேச வைப்பதாக அந்த நாடகம் உருவாக்கப்பட்டிருந்தது. நாடகம் முடிந்தபின் வளவாளர்கள் அந்நாடகம் தொடர்பாக அபிப்பிராயங்களைத் தெரிவித்ததோடு அதைப்பற்றி கலந்துரையாடவும்பட்டது. இதன்போது ஒரு வளவாளர் அந்நாடகத்தில் வரும் பாத்திரங்களில் பொதுபலசேனாவைத் தவிர ஏனைய எல்லா அரசியல் தலைவர்களும் வேடிக்கை மனிதர்களாகச் சித்திரிக்கப்படுவதை சுட்டிக்காட்டினார். ஆனால், பொதுபலசேனா மட்டும் சீரியசான விட்டுக்கொடுப்பற்ற மூர்க்கமான ஒரு தரப்பாக சித்திரிக்கப்படுவதை சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இப்போதுள்ள கட்சித் தலைவர்களை ஹரிக்கேச்சர்களாக – கேலிச் சித்திரங்களாக உருவகித்த நெறியாளர் ஏன் பொதுபல சேனாவை அவ்வாறு கேலிச்சித்திரமாக உருவாக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு நாடகக் குழுவினர் பதிலளித்த போது தாங்கள் வேண்டும் மென்றே அவ்வாறு பாத்திரங்களை உருவாக்கியதாக கூறினார்கள். பொதுபல சேனா போன்ற சிங்கள பௌத்த கடும் போக்குவாதிகள் தமது கொள்கைகளில் விட்டுக் கொடுப்பின்றி உறுதியாகக் காணப்படும் பொழுது ஏனைய அரசியல் கட்சிகள் தமது செயற்பாடுகளைப் பொறுத்தவரை கோமாளிகளாகவே மாறிவிட்டதாகவும் அவர்களுடைய செயற்பாடுகளில் பெருமளவிற்கு கோமாளித்தனமும் அபத்தமும் காணப்படுவதாகவும் அவர்கள் கூறினார்கள்.

இந்த உரையாடலின் முடிவில் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கருத்துத் தெரிவித்தார். பொதுபல சேனாவை முஸ்லிம்களும் தமிழர்களும் அதிகம் சீரியசாகப் பார்ப்பது போல சிங்கள மக்கள் பார்க்கவில்லை என்று அவர் சொன்னார். சிங்கள மக்கள் ஞானசார தேரரை ஒரு வேடிக்கை மனிதராகவே பார்ப்பதால்தான் தேர்தலில் அவரையும் அவரோடு சேர்ந்து நின்ற பிக்குகளையும் தோற்கடித்திருக்கிறார்கள் என்றும் அவர் சொன்னர்.

நடந்து முடிந்த தேர்தலில் பொதுபல சேனாவிற்கு கிடைத்த தோல்வியை சிங்கள பௌத்த கடும் போக்குவாதத்திற்குக் கிடைத்த தோல்வியாக மேற்கு நாடுகள் பார்க்கின்றன. சிங்கள மக்கள் மத்தியில் உள்ள ஒரு பகுதி விமர்சகர்களும் அவ்வாறுதான் கூறுகிறார்கள். யுத்த வெற்றி நாயகரான சரத்பொன்சேகாவையும் இம்முறை சிங்கள வாக்காளர்கள் தோற்கடித்துவிட்டார்கள். இலங்கைத் தீவின் முதலாவது பீல்ட் மார்சல் அவரது சொந்த மக்களாலேயே தோற்கடிக்கப்பட்டுவிட்டார். இரண்டாம் உலக மஹா யுத்தத்தின் போது வின்சன்ட் சேர்ச்சிலை ஒரு தலைவராக ஏற்றுக் கொண்ட பிரித்தானியர்கள் யுத்தம் முடிந்ததும் அவரை நிராகரித்ததைப் போலல்லவா இது? இப்படியாக தெற்கில் பொதுபல சேனா சரத்பொன்சேகா போன்றவர்கள் பெற்ற தோல்விகளை வைத்தும் வடக்கு கிழக்கில் மக்கள் முன்னணி பெற்ற தோல்வியை வைத்தும் இலங்கைத் தீவில் தீவிர போக்குடைய சக்திகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக மேற்கு நாடுகள் வியாக்கியானம் செய்கின்றன.

அண்மையில் இச்சிறிய தீவுக்கு வந்த போன நிஷா பிஸ்வால் அவ்வாறுதான் கருத்துத் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள் மத்தியில் உள்ள மிதப்போக்குடைய விமர்சகரான ஜயதேவ உயாங்கொடவும் அவ்வாறுதான் எழுதியுள்ளார். அதாவது, நடந்து முடிந்த தேர்தலில் முழு இலங்கைத் தீவும் தீவீர நிலைப்பாடுள்ள கட்சிகளை நிராகரித்துவிட்டதாகவும் மிதநிலைப்பாடுள்ள கட்சிகளையே தெரிந்தெடுத்திருப்பதாகவும் இதன் மூலம் இன நல்லிணக்கத்தைக் கட்டி எழுப்புவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்திருப்பதாகவும் இப்பொழுது வியாக்கியானம் செய்யப்படுகின்றது. இது சரியா? மெய்யாகவே இச்சிறுதீவானது நல்லிணக்கத்தின் பாதையில் அடி எடுத்து வைத்துள்ளதா?

முதலில் தெற்கைப் பார்க்கலாம். அங்கு இனவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டதா? அல்லது இனவாதத்தின் ஆகப்பிந்திய வடிவமாகக் காணப்பட்ட யுத்த வெற்றிவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டதா?

தேர்தல் முடிவுகளை எடுத்துப் பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சி, ராஜபக்‌ஷ அணியை மிகப் பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கவில்லை என்பது தெரியவரும். சிங்கள கடும் போக்குவாதிகளின் இதயத்தில் இப்பொழுதும் ராஜபக்‌ஷாக்களே வீற்றிருக்கிறார்கள். பொதுபல சேனாவானது யுத்த வெற்றிவாதத்தின் ஒரு குழந்தைதான். சிங்கள பௌத்த கடும் போக்குவாதத்தை முழுக்க முழுக்க தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ராஜபக்‌ஷ சகோதரர்கள் முயற்சித்தார்கள். ஆனால், தனக்கென்று ஒரு தத்துவ அடித்தளத்தைக் கொண்டிருந்த, ஒப்பீட்டளவில் சுயாதீனமான ஜாதிக ஹெல உறுமயவை ராஜபக்‌ஷாக்களால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, அரசின் அனுசரணை பெற்ற பொதுபல சேனாவை ஹெல உறுமயவுக்கு எதிராக ஊக்குவித்தார்கள். இந்நிலையில், வெற்றிவாதத்துக்கு வாக்களிக்க விரும்பிய சிங்கள வாக்காளர்கள் தாய்க்கு வாக்களித்தால் போதும் குழந்தைக்கு வாக்களிக்கத் தேவையில்லை என்று முடிவெடுத்திருக்கக் கூடும். மேலும், சரத்பொன்சேகாவா? ராஜபக்‌ஷ சகோதரர்களா? என்று தெரிவு செய்ய வேண்டிவரும்பொழுது மேற்கின் ஆதரவைப் பெற்ற பொது எதிரணியோடு அடையாளம் காணப்பட்ட சரத்பொன்சேகாவைவிடவும் ராஜபக்‌ஷாக்களைத் தெரிவு செய்வதையே அவர்கள் விரும்பியிருந்திருக்கக் கூடும்.

அதே சமயம் தனக்கென்று ஒரு கோட்பாட்டு அடித்தளத்தைக் கொண்டிருக்கும் ஜாதிக ஹெல உறுமயவானது பொதுபல சேனவைப் போல முற்றாக மண் கவ்வவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.   ஜே.வி.பி.யும் எதிர்பார்த்த வெற்றியை பெறத் தவறினும் முற்றாகத் தோற்கடிக்கப்படவில்லை. எனவே, தென்னிலங்கை நிலவரங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் விக்ரர் ஐவன் கூறுவது போல அங்கு அரைவாசிக்கும் குறையாத வாக்காளர்கள் இனவாதத்துக்கே வாக்களித்திருக்கிறார்கள். அதாவது, இனவாதம் இப்பொழுதும் பலமாகத்தான் இருக்கிறது. இந்நிலையில், ரணிலும் மைத்திரியும் சந்திரிகாவும் இனவாதத்துக்கு எதிராக நல்லிணக்கவாதத்தை முன்வைப்பார்களா? அல்லது மனித முகத்துடன் கூடிய 2015ஆம் ஆண்டுக்குரிய ஒரு புதிய இனவாதத்தை அல்லது மாற்றத்தைப் பலப்படுத்தும் நோக்கிலான ஒரு புதிய இனவாதத்தைக் கண்டுபிடிப்பார்களா? இது தென்னிலங்கை நிலவரம்.

இனி தமிழ்ப்பகுதிகளைப் பார்க்கலாம். மக்கள் முன்னணியின் தோல்வியை வைத்து ஒரு நாடு இரு தேசம் கோட்பாடு தோற்டிக்கப்பட்டுவிட்டதாக வியாக்கியானம் செய்யப்படுகிறது. இது சரியா? ஒரு கட்சியின் தோல்வி ஒரு கோட்பாட்டின் தோல்வியாகுமா? தவிர ஒரு நாடு இரு தேசம் கோட்பாடு என்பது மக்கள் முன்னணியோடு தோன்றிய ஒரு கோட்பாடா? மக்கள் முன்னணிக்கு முன்பு அது இருக்கவில்லையா?

தமிழ் மக்கள் ஒரு தேசமாகச் சிந்திப்பது என்பது கஜேந்திரகுமாருக்கு முன்னரே இருந்த ஒன்று. அது பிரபாகரனுக்கு முன்னரும் இருந்தது. காவலூர் நவரத்தினதுக்கு முன்னரும் இருந்தது. அது ஈழத் தமிழர்களின் நூற்றாண்டு காலக்கனவு. மிதவாதிகளும் ஆயுதப் போராளிகளும் அதற்கு அவ்வவ்போது தலைமை தாங்கினார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் அக்கனவின் பிரகாரம் ஒரு நடைமுறை அரசையே கட்டி எழுப்பியது. கூட்டமைப்பில் முதன்மைக் கட்சியாகக் காணப்படும் தமிழரசுக் கட்சியின் பெயரில் அந்தக் கனவு தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் கட்சிப் பெயரை பெடரல் பாட்டி – சமஸ்டிக் கட்சி என்று மொழி பெயர்த்த அக்கட்சியானது தனது சொந்த வாக்காளர்களுக்கு தமிழரசுக் கட்சியாகவே தோற்றம் காட்டியது.

எனவே, ஒரு தேசமாகச் சிந்திப்பது என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு புதிய கோட்பாடு அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. இன்னொரு விதமாகச் சொன்னால் சிங்கள பௌத்த இனவாதத்தின் விளைவாக பலப்படுத்தி புதுப்பிக்கப்பட்ட ஒரு பழைய கனவு அது. கடந்த நூற்றாண்டில் சிங்களத் தலைவர்களால் திட்டமிட்டு ஏமாற்றப்படும் போதெல்லாம் அக்கனவு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு இனக்கலவரத்தின் போதும் தமிழ் மக்கள் வடக்குக் கிழக்கை நோக்கி அகதிகளாக ஓடி வந்த போது அக்கனவு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. தார்ஸி விற்றார்ச்சி, ஜி.எச்.பார்மர் போன்ற அறிஞர்கள் அதை ஏற்கனவே பல தசாப்தங்களுக்கு முன்பு எழுதியிருக்கிறார்கள்.

எனவே, ஒரு தேசமாகச் சிந்திப்பது என்பது இலங்கைத்தீவின் நவீன அரசியலைப் பொறுத்தவரை சிங்கள பௌத்த இனவாதத்தின் விளைவாக பலமடைந்த ஒரு தோற்றப்பாடுதான். தெற்கில் அரைவாசிக்கும் குறையாத வாக்காளர்கள் இனவாதத்திற்கே வாக்களித்திருக்கும் ஒரு அரசியல் சூழல் தொடர்ந்தும் இருக்கும் வரை தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் ஒரு தேசமாகச் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.

அக்கொள்கையை முன்வைத்த ஒரு கட்சி பெற்ற தோல்வி என்பது அக்கொள்கைக்கு கிடைத்த தோல்வியா? அல்லது அக்கொள்கையின் உண்மையான வாரிசு அக்கட்சிதான் என்று தமிழ் மக்களை நம்பச் செய்வதில் அக்கட்சி பெற்ற தோல்வியா?

இப்பொழுது கூட்டமைப்புக்குக் கிடைத்திருக்கும் மக்களாணையை மாற்றத்தைப் பலப்படுத்தும் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவானது என்று வியாக்கியானம் செய்யும் தரப்புக்கள் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் உள்நாட்டுப் பொறிமுறைகளை ஆதரித்து செயற்படத் தொடங்கியுள்ளன. அண்மையில் கொழும்புக்கு வந்து போன முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளேயர் தனக்குப் பின் வரப்போகும் நிஷா பிஸ்வால் கூறப்போகும் கருத்துக்களுக்கு ஆதரவான தளத்தை முன்கூட்டியே தயாரிக்கும் விதத்தில் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். நல்லிணக்கத்துக்கான ஏழு கோட்பாடுகள் பற்றி அவர் அண்மையில் பேசியிருக்கிறார். இதில் ஏழாவது கோட்பாடு உள்நாட்டு விசாணைப் பொறிமுறையின் நோக்கத்தை ஓரளவுக்கு வெளிக்காட்டுகிறது. ரொனி பிளேயர் கூறுகிறார் வெற்றிகரமான நல்லிணக்கத்துக்காக இறந்தகாலத்தை அழிக்கவோ மறைக்கவோ முடியாது என்று…. ஆனால், அவ்வாறு இறந்த காலத்தைப் பரிசோதிப்பது என்பது உண்மையை வெளிக்கொண்டு வருவதாக இருக்க வேண்டும்; பழிவாங்கும் உணர்வோடு தண்டனையைப் பெற்றுக் கொடுக்கும் ஒன்றாக அமையக் கூடாது என்ற பொருள்பட.

உலகின் வெற்றி பெற்ற எந்தவொரு போர்க்குற்ற விசாரணையிலும் சரி அல்லது நல்லிணக்க முயற்சிகளின் போதும் சரி ஒரு பொதுப் போக்கை அவதானிக்க முடியும். அதன்படி முதலில் விசாணைகளின் போது உண்மையை அச்சமின்றி வெளிப்படையாகப் பேசத்தக்க ஒரு சூழல் உறுதி செய்யப்படும். அவ்வாறு உண்மை வெளிவருமிடத்து அந்த உண்மையின் அடிப்படையில் வளங்கப்படும் நீதியே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர பரிகாரமாக அமைகிறது. பலராலும் முன்னுதாரணமாகக் காட்டப்படும் தென்னாபிரிக்க நல்லிணக்க முயற்சிகளில் இவ்வாறு உண்மை பகிரங்கமாகப் பேசப்படும் ஒரு சூழல் உறுதி செய்யப்பட்டது. உண்மை பகிரங்கமாகப் பேசப்படும் ஒரு விசாரணைச் சூழல் எனப்படுவது எல்லா விதத்திலும் ஓர் அரசியல் சூழல்தான். இறந்தவர்களையும் காணாமல் போனவர்களையும் கணக்கெடுப்பது இறந்தவர்களை நினைவு கூர்வது போன்றவை அனைத்தும் அவ்வாறான ஓர் அரசியல் சூழலில்தான் சாத்தியப்படும். அப்படி ஓர் அரசியல் சூழலை ஏற்படுத்துவது என்பது முழுக்க முழுக்க ஓர் அரசியல் தீர்மானம்தான். புதிய அரசிடம் அப்படி ஓர் அரசியல் தீர்மானத்தை எடுக்கக் தேவையான அரசியல் திடசித்தம் உண்டா? அப்படி ஓர் அரசியல் சூழல் உருவாக்கப்படுமிடத்து வெளிவரும் உண்மையின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படுமா? அந்நீதியானது குற்றவாளிகளைத் தண்டிப்பதாக அமைந்தால் அது நிச்சயமாக சிங்கள பௌத்த கடும்போக்குவாதிகளைச் சீண்டுவதிலேயே போய் முடியும். அது மாற்றத்ததைப் பலப்படுத்தும் நிகழ்ச்சி நிரலைக் குழப்பிவிடும். என்பதால்தான் மேற்கு நாடுகளும் இலங்கை அரசும் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன.

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை தமிழ் மக்கள் சந்தேகத்தோடேயே பார்க்கிறார்கள் என்பது மேற்கு நாடுகளுக்குத் தெரியும் என்பதனால்தான் அனைத்துலக நிபுணத்துவ உதவி என்ற புனித நீரைத் தெளித்து உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை பாவ நீக்கம் செய்ய முற்படுகிறார்கள். ஆனால், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகள் எவ்வாறு அமையக்கூடும் என்பதற்கு ஓர் ஆகப்பிந்திய ஒரு உதாரணத்தைச் இங்கு சுட்டிக்காட்டலாம். காணாமல் போனவர்களுக்கான ஜனாதிபதியின் ஆணைக்குழுவானது அண்மையில் கிழக்கில் விசாரணைகளை மேற்கொண்டது. இது தொடர்பான காணொளிப் பதிவுகள் இணையத்தில் பகிரப்பட்டன. அப்பதிவுகளை உற்றுக் கவனிக்கும் எவரும் மிக எளிமையான ஓர் உண்மையைப் பிரயத்தனமின்றிக் கண்டுபிடிப்பர். அதாவது, அந்த விசாரணைகளின் போது மொழிபெயர்ப்பாளராக இருப்பவர் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது. அவருடைய குரலில் ஒரு வித அதிகாரம் தொனிக்கிறது. சில சமயங்களிலில் வேண்டா வெறுப்பாகவும் அல்லது சலிப்போடும் இதை நான் கடமைக்கே செய்கிறேன் என்று மற்றவர்கள் உணரத்தக்க விதத்திலும் மொழி பெயர்ப்பாளரின் குரல் அமைந்திருக்கிறது. இத்தகையதோர் விசாரணைச் சூழலானது கண்ணீரோடு வந்து நிற்கும் சாட்சிகளுக்கு உற்சாகமூட்டுமா அல்லது இடைஞ்சலாக இருக்குமா?

இது தொடர்பாக விசாரித்த பொழுது மேற்படி விசாரணைகளைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து வரும் மனிதநேயச் செயற்பாட்டாளர் ஒருவர் சொன்னார், கடந்த பல மாதங்களாக இது தொடர்பாக தாங்கள் சுட்டிக்காட்டி வருவதாகவும், இந்த விசாரணைச் சூழலை மாற்றி அமைக்குமாறு தாங்கள் முறைப்பாடு செய்துவருவதாகவும், ஆனால், இதுவரையில் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும். இதுதான் உள்நாட்டு விசாணைகளின் இப்போதுள்ள நிலைமை.

இப்பொழுது மட்டுமல்ல இனிமேலும் அப்படித்தான் இருக்கக் கூடும். ஏனெனில், இலங்கைத்தீவில் உண்மை வெளிப்படையாக் பேசப்படும் ஒரு விசாரணைச் சூழல் உறுதி செய்யப்பட்டால் அதில் வெளிவரும் உண்மையானது இனவாதிகளுக்கு எதிராகவே இருக்கும். அந்த உண்மையின் மீது கட்டி எழுப்பப்டும் நீதியானது போர்க்குற்றவாளிகளைத் தண்டிப்பதாகவே அமைய முடியும். அது மாற்றத்தைப் பலப்படுத்தும் நிகழ்ச்சி நிரலையே குழப்பிவிடும். அதாவது, இலங்கைத் தீவின் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கும் ஒரு பொறிமுறையும் மாற்றத்தைப் பலப்படுத்தும் ஒரு பொறிமுறையும் சமாந்திரமாகப் பயணிக்க முடியாத ஓர் அரசியல் சூழலே தற்பொழுதும் நிலவுகிறது. இனவாதிகளைப் பலப்படுத்தக் கூடாது என்று சொல்லிச் சொல்லியே தமிழ் மக்களுக்குக் கிடைக்கக் கூடிய நீதியும் மறுக்கப்படும். அப்பொழுது தமிழ் மக்கள் ஒரு தேசமாகச் சிந்திப்பார்களா? அல்லது வேறெப்படியும் சிந்திப்பார்களா?

தினக்குரல் பத்திரிகைக்காக நிலாந்தன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.