புதிய அரசின் நூறுநாள் வேலைத் திட்டத்தில் 19ஆவது திருத்தச்சட்டம் முக்கியமானது. குறிப்பாக நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் அதிகாரங்கள் பகிரப்படும் என்பது குறித்து மக்களுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், வாத்தமானி அறிவித்தலின் மூலப் பிரதியில் கூறப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது குறித்த விடயங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்க அமைப்புகளும் குற்றம் சுமத்தியிருந்தன.

ஆதரிக்கவேண்டிய தேவை

வர்தமானி அறிவித்தலின் மூலப்பிரதியில் கூறப்பட்டிருந்த நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றுதல் என்பதும், ஜனாதிபதி மீண்டும் நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும் இருப்பதால் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள், பொறுப்புகள் கேள்விக்கு உட்படுவதாகவும் சில பொது அமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன. முன்னாள் அமைச்சர் பீரிஸும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பிரதமரின் அதிகாரங்கள் தொடர்பாக மக்கள் கருத்து கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், ஏனைய பகுதிகள் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் கூறுகின்றது.

உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்தபோது அதனை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர். அவ்வப்போது சில வாதங்களை முன்வைத்திருந்தாலும் சட்டமூலம் குறித்து முன்னர் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றி எதுவும் பேசப்படவில்லை. ஜாதிக ஹெல உறுமயவைப் பொறுத்தவரை பிரதமரின் அதிகாரங்கள் தொடர்பாகவே கேள்வி எழுப்பிருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏற்றமுறையில் உயர் நீதிமன்ற தீர்ப்பு அமைந்து விட்டது. குறிப்பாக அமைச்சரவையின் தலைவராக பிரதமரை நியமித்தல், அமைச்சர்களின் எண்ணிக்கை, அமைச்சர்களுக்கான பணிகளை தீர்மானித்தல் உள்ளிட்ட 7 உப பிரிவுகளுக்கு மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும் என தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஹெல உறுமயவுக்கு ஆறுதல்

மக்கள் கருத்து கணிப்பு நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் கூறிய மேற்படி பகுதிகளை தவிர்த்து விட்டு ஏனையவற்றை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என பிரதமரும் கூறியுள்ளார். ஆகவே, ஜாதிக ஹெல உறுமயவுக்கு சட்ட மூலத்தை நிறைவேற்றுவதில் பிரச்சினை இருக்காது. 19ஆவது திருத்தச்சட்டத்தை விரும்பியோ விரும்பாமலே புதிய அரசு நிறைவேற்ற வேண்டிய தேவையும் உள்ளது. ஏனெனில், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் 19ஆவது திருத்த சட்டமூலத்தை வலியுறுத்தியிருந்தன.

குறிப்பாக தேர்தல், பொலிஸ், பகிரங்க சேவை போன்ற அரச திணைக்களங்களை சுயாதீனமாக செயற்பட வைப்பதற்கு ஏற்ற முறையிலும் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் விடாப்பிடியாக நின்றது.

வடக்கு கிழக்கின் நிலைமை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பு வெளியிட்டாலும் இறுதியில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதன் மூலமாக சட்டமூலத்தை நிறைவேற்ற மறைமுகமான ஆதரவை அவர்கள் கொடுக்கலாம். ஆனால், சட்டமூலம் நிறைவேறினாலும் அது நடைமுறைப்படுத்தப்படுமா என்பது சந்தேகமே. ஏனெனில், குறைந்த பட்சமேனும் ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தும் சட்டமூலங்களை ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற இரு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் விரும்புவதில்லை. உதாரணமாக, 17ஆவது திருத்தச்சட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமுல்படுத்தப்படவில்லை. இறுதியில் 2010ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அந்த சட்டமூலத்தை இரத்துச் செய்து 18ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரித்தார்.

அதேவேளை, 19ஆவது திருத்தச் சட்டமூலத்தில் உள்ள சுயாதீன ஆணைக்குழு முறை உரிய முறையில் நடைமுறைக்கு வருமா என்பதும் சந்தேகம்தான். சிங்கள பிரதேசங்களில் நடைமுறைக்கு வந்தாலும் குறைந்தபட்சம் வடக்கு கிழக்கில் உள்ள அரச நிறுவனங்களை அரசியல் தலையீடுகள் இன்றி செயற்பட அரசு அனுமதிக்கும் என்று கூற முடியாது. ஏனெனில், வடக்கு கிழக்கில் இராணுவ கட்டமைப்பு முறையிலான நிர்வாகம் அதற்கு இடமளிக்காது.

இராணுவ நிர்வாகம் அனுமதிக்காது

உதாரணமாக, இராணுவ எண்ணிக்கைகளை குறைக்க வேண்டும் என தென்பகுதி அரசியல்வாதிகள் விரும்பினாலும் இராணுவம் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. தேசிய பாதுகாப்பு என்ற விடயம் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரமே உரியதாக இருக்கின்றது. ஆகவே, தேசிய பாதுகாப்பு என்ற எழுதப்படாத சட்ட ஏற்பாடுகளுக்கு முன்னால் 19ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள சில நல்ல விடயங்கள் வடக்கு – கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரை செல்லுபடியற்றதாகி விடும். சட்டமூலத்தின் படி பொலிஸ் சேவைக்கும் சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு நியமித்தால் மாகாணங்களுக்கும் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு முறை வரும். ஆனால், வடக்கு – கிழக்கு மாகாணத்திற்கு பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்பட வாய்ப்பில்லை. ஏற்கனவே, மாகாணங்களுக்கான 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்த கடந்த 28 ஆண்டுகளாக பதவியில் இருந்த ஜனாதிபதிகள் விரும்பவில்லை.

இனப்பிரச்சினை தீர்வுக்கானது அல்ல

இந்த நிலையில், 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பொலிஸ் சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கான சுயாதீன குழு முறை நடைமுறைக்கு வரக்கூடிய வாய்ப்புகள் இல்லையெனலாம். அதற்கான ஏற்பாடுகள் சட்டமூலத்தில் தெளிவாக இருக்கின்றதா என்பதும் சந்தேகமே. இந்தச் சட்டமூலம் இனப்பிரச்சினை தீர்வுக்கானது அல்ல. ஆனாலும், சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு அரச திணைக்களங்கள் சுயாதீனமாக செயற்பட இடமளிக்கின்றது.

அத்துடன், வட மாகாண சபையும் இராணுவ கெடுபிடிகளுக்குள் இருந்து விடுபட முடியும். ஆனால், அதற்கான ஏற்பாடுகளை புதிய அரசு செய்யக் கூடிய வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, இந்தச் சட்டமூலம் எந்த வகையிலும் தமிழர்களுக்கு நன்மைதராது. இலங்கையின் ஒட்டுமொத்த அரசியலமைப்பு சட்ட ஏற்பாடுகளும் கடந்த 60 ஆண்டுகளாக தமிழர்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தாத நிலையில் 19 எம்மாத்திரம்?