படம் | DAILY NEWS

19ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு விடயத்தை தெளிவாக்கியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கோ, அப்பதவியின் முக்கிய அதிகாரங்களைக் குறைப்பதற்கோ ஒன்றில் பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் அல்லது புதிய அரசியலமைப்பு ஒன்று முற்று முழுதாக புதிதாக உருவாக்கப்பட வேண்டும்.

19ஆவது திருத்தம் பிரதானமாக மூன்று விடயங்களை சாதிக்க முனைந்தது:

  1. ஜனாதிபதியின் நிறைவேற்றுத்துறை அதிகாரங்களில் முக்கியமானவற்றை – குறிப்பாக அமைச்சரவை நியமனம் தொடர்பிலான அதிகாரங்களை பிரதமரிடம் வழங்கல்.
  2. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் உருவாக்கப்பட்ட 18ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியொருவர் எத்தனை தடவையும் பதவி வகிக்கலாம் என்ற ஏற்பாட்டை இல்லாமல் செய்தல்.
  3. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் இல்லாதொழிக்கப்பட்ட 17ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளை மீளக்கொண்டுவரல். (17ஆம் திருத்தம் சில முக்கிய ஆணைக்குழுக்கள், நீதித்துறை போன்றவற்றின் நியமன அதிகாரங்களை ஜனாதிபதியிடமிருந்து எடுத்து அரசியலமைப்பு பேரவைக்கு வழங்கியிருந்தது.)

மேற்சொன்னவற்றைத் தவிர தகவலறியும் உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக சேர்ப்பது போன்ற இன்னும் சில விடயங்களும் 19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இவற்றில் சர்ச்சைக்குரியதாக முதலாவது விடயம் மாத்திரமே இருந்தது. மற்றைய விடயங்கள் அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் பிரச்சினைக்குரியவையாக இருக்கவில்லை.

அரசியலமைப்பின் சில பிரிவுகளை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மை போதாது என அரசியலமைப்பு கூறுகின்றது. அப்பிரிவுகளை மாற்றுவதானது அரசியலமைப்பின் மிக அடிப்படையான கட்டமைப்பை மாற்றும் தன்மையானது என்பதனால் அவற்றை மக்களின் சம்மதத்தோடுதான் திருத்த முடியும் என அரசியலமைப்புக் கூறுகின்றது. (ஒற்றையாட்சியைப் பற்றிய பிரிவும் இந்த வகைக்குரியதே) மாறாக முழு அரசியலமைப்பையும் இல்லாதொழித்து புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மை போதுமானதாகும் என அரசியலமைப்பு கூறுகின்றது.

மக்களிடம் இறைமை இருப்பது அரசியலமைப்பின் மிக அடிப்படையான கட்டமைப்பைச் சேர்ந்த அரசியலமைப்புப் பிரிவுகளில் ஒன்றாகும். மக்களின் நிறைவேற்றுத்துறை அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுவும் அரசியலமைப்பின் மிக அடிப்படையான கட்டமைப்பைச் சேர்ந்த அரசியலமைப்புப் பிரிவு என உயர் நீதிமன்றம் முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் பொருள்கோடல் செய்துள்ளது. அதன் அடிப்படையிலேயே பிரதமருக்கு நிறைவேற்று அதிகாரங்களை வழங்குவது இந்த அடிப்படைப் பிரிவுக்கு முரணானது எனவும், அத்தகைய மாற்றத்தைச் செய்ய பொது வாக்கெடுப்பு தேவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது.

நிறைவேற்று அதிகார முறை ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என ஜனாதிபதி சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதி அளித்திருக்கவில்லை. பொது வாக்கெடுப்பிற்குப் போக அவசியமில்லாத அரசியல் சீர்திருத்தங்களைத் தான் செய்வேன் என ஜனாதிபதி சிறிசேன உறுதி அளித்திருந்தார் (இதற்கான உண்மையான காரணம் ஜாதிக ஹெல உறுமய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பதற்கு எதிராக இருந்தமையே). ஆனால், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு கூட பொது வாக்கெடுப்பு தேவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

பொது வாக்கெடுப்பிற்கு தேர்தலுக்குப் பின்னர் கூட போவதற்கு எந்தத் தரப்பும் தயங்கும் என்றே தோன்றுகின்றது. அது தேவையில்லாத அரசியற் செலவைக் கொண்டு வரும் என அத்தகைய மாற்றத்தைச் செய்ய விரும்பும் தரப்பு கருதும் என்றே தோன்றுகின்றது. உண்மையில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை ஒழிப்பதற்கான ஆர்வம் தொடர்ந்து இருக்குமா, பொதுவான அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கான ஆர்வம் தொடர்ந்து இருக்குமா என்பதும் நிச்சயமில்லை. இதை ஒரு புறம் வைப்போம். தேர்தலில் தொடர்ந்து அரசியலமைப்பு சீர்திருத்தத்தைச் செய்ய விரும்பும் தரப்பு ஆட்சிக்கு வரும் என எடுகோள் கொள்வோம். அவ்வாறெனின் தமிழர்கள் செய்ய வேண்டியதென்ன?

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கோ, அப்பதவியின் முக்கிய அதிகாரங்களைக் குறைப்பதற்கோ புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் அன்றி சாத்தியமில்லை என்பதை ஏற்கனவே கண்டோம். தேர்தல் முறையை மாற்றி நாடாளுமன்றத்தை ஒரு வலுவான அமைப்பாக மாற்றாமல் நிறைவேற்றுத் துறை அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க விடமாட்டோம் என்பது சிங்கள பௌத்த அரசியலின் அடிப்படை நிலைப்பாடாக உள்ளது. ஏனெனில், தேர்தல் முறையை மாற்றாமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தால் நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாமல் போய் விடும் என்று ‘ஜாதிக சிந்தனை’ கருதுகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையா, நாடாளுமன்ற முறையா நல்லது என்பதில் உண்மையில ‘ஜாதிக சிந்தனை’க்கு கரிசனையில்லை, சிங்கள மன்னராட்சி முறையின் தொடர்ச்சியாக இன்றைய ஜனநாயக அரசிற்கு இசைவாக்கம் பெற்ற வலுவான தலைவர் ஒருவர் அவசியம் என்பதே ‘ஜாதிக சிந்தனை’க்கு முக்கியம். இப்போதிருக்கும் தேர்தல் முறையின் கீழ் தனித்து ஒரு கட்சி பெரும்பான்மை ஆட்சி அமைப்பது – வலுவான தலைமை உருவாதல் – சாத்தியமில்லாத படியால் தொகுதி வாரி பிரதிநித்துவத்துவம் மேலோங்கியிருக்கும் ஒரு தேர்தல் முறை மீளக் கொண்டுவர வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பதற்கான முன் நிபந்தனையாக இவர்கள் இதனை முன்வைக்கிறார்கள். அல்லாவிடில் அந்நிய நாடுகள் இலங்கையின் ஸ்திரமற்ற தன்மையைப் பாவித்து நாட்டின் அரசியல் கட்டமைப்பில் தாம் விரும்பும் மாற்றத்தைச் செய்து விடும் (தமிழர்களுக்கு சுயாட்சி வழங்குவது உட்பட) என இந்தத் தரப்பு அஞ்சுகின்றது. ஜாதிக ஹெல உறுமயவினதும் மஹிந்த சார்பு சுதந்திரக் கட்சியினதும் நிலைப்பாடுகளில் இது தெளிவாகத் தெரிகின்றது. இந்த நிலைப்பாடு பற்றி ஜாதிக ஹெல உறுமயவின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி சிறிசேனவின் தேர்தல் வெற்றியின் தந்திரோபாய மூளைகளில் ஒருவரான அசோக அபயகுணவர்த்தன ஜனாதிபதி சிறிசேனவின் வெற்றி தொடர்பாக அண்மையில் எழுதிய சிங்கள நூலொன்றில் விரிவாக எழுதியுள்ளார்.

ஆகவே, இத்தகைய அடிப்படையான பாரிய மாற்றங்கள் இல்லாமல் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு வாயப்பில்லை. அத்தகைய அரசியலமைப்பானது வெறுமனே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் தேர்தல் முறையை மாற்றுவதற்கும் மட்டும் இடமளிக்க முடியாது. இனப்பிரச்சினைக்கான தீர்வையும் அது உள்ளடக்க வேண்டும். ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டுமென்றால் தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என்று சிங்களம் நிபந்தனை விதிக்குமென்றால் தமிழர்களும் தம் தரப்பு நிபந்தனைகளை முன்வைக்கலாம்; முன்வைக்க வேண்டும். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாத புதிய அரசியலமைப்பாக்க முயற்சி எதற்கும் நாம் ஆதரவு வழங்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தரப்பு எடுக்க வேண்டும். பிறகு பார்த்துக் கொள்வோம் என்று சிங்களம் கூறினால் நாம் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது. தெளிவாகவும், சமயோசிதமாகவும் தமிழர் நலன்களை மனதில் கொண்டு தீர்க்கமான இவ்வாறான முடிவுகளை எடுக்கக் கூடிய தலைமையை நாம் இந்தப் பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

குமாரவடிவேல் குருபரன்,

சட்டத்துறை விரிவுரையாளர்,

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்