படம் | JDS

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கோரி அவரது மகள் விபூஷிகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை வரைந்துள்ளார். எதுவித திருத்தமுமின்றி அந்தக் கடிதத்தில் உள்ளவற்றை அவ்வாறே கீழ் தந்திருக்கிறோம்.

###

பா. விபூஷிகா

2015.02.16

கடந்த வாரம் 13.03.2014 அன்று எனது தாயார் உணவு கொடுத்த பின் கதவை சாத்துவதற்கு சென்றார். அப்போது யாரோ தெரியாது, வீட்டிற்குள் புகுந்துவிட்டார். அப்போது நாங்கள் கேட்டோம், நீயார் என்று கேட்டோம். அவர் சொன்னான், சத்தம் போடாதே, சத்தம் போட்டால் கழுத்தை நசித்து கொள்வேன் என்று கூறினார். எனது தாயார் என்னை பிடித்துக் கொண்டு கதவைத் திறந்து ஓடி வந்தார். அப்போது ஆயுதம் தாங்கிய இராணுவம், பொலிசும் வந்து எங்களின் கையை பிடித்துவிட்டார்கள். பின்பு ஒருவர் வீட்டுக்குள் சென்றார். இரண்டு வெடிச்சத்தம் கேட்டது. அவர் கத்திக்கொண்டு ஓடிவந்தார். பிறகு எங்களை விசாரித்தனர். அவருக்கும் எங்களுக்கும் தொடர்புகள் உள்ளதாம் என்று கூறினார்கள். எனது தாயார் மேல் சத்தியம், எங்களுக்கு அவரை தெரியாது. பின்பு ரேசனுக்கு கூட்டிக்கொண்டு போனார்கள். எனது அம்மாவையும் என்னையும் பிரித்து வைத்து விசாரித்தனர். எனது கண் முன்னால் வைத்து அம்மாவை அடித்து தலைமயிரை பிடித்து இலுத்தனர். கரன்ட் விலங்கை கையில் கொழுவினார்கள். உண்மையை சொல் அல்லது சுவிச்சை ஒன் பண்ணுவேன் என்று கூறினார்கள். எனக்கு தூக்கம் வந்தபின் அருகில் தூங்கிவிட்டேன். அம்மாவை வைத்து அடித்து மடியில் மிதித்து தலைமயிரை பிடித்து வைத்துக்கொண்டு உண்மையைச் சொல் அல்லது உன்னையும் கொல்லுவோம், உனது பிள்ளையையும் கொல்லுவோம் என்று விரட்டினார்களாம். அப்போதுதான் நான் சாமத்தியம் பட்டுவிட்டேன். எனக்கு அடித்துவிட்டனர். அவர்கள், எங்களுக்கு தெரியாத இரு பெண்களை கொண்டுவந்து என்னையும் அம்மாவையும் பிரிக்க நின்றனர். அப்போது நான் கூறினேன், அம்மாவை விட்டு பிரியமாட்டேன் என்று கூறினேன். அதற்கு எனது அம்மாவை அடித்தனர், போகச் சொல்லி அடித்தனர்.

பின்பு மாலை 7.30 அளவில் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு விஜயராணி என்று ஒரு லோயர் வந்திருந்தவா. சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் விஜி மிஸ் வந்திருந்தவர்கள். பின்பு எல்லோரும் சேர்ந்து நீதவான் ஐயாவின் வீட்டிற்குச் சென்று நடந்ததை எல்லாம் சொன்னோம். அவர் என்னை சிறுவர் நன்னடத்தை ஆணையாளராகிய விஜி மிஸ்ஸிடம் ஒப்படைத்தனர். நான் போகமாட்டேனென்று அழுதேன். எனது அம்மா கூறினார்கள், நீங்க போய் படியுங்கோ, எப்படியாவது என்னை நீதிவான் ஐயா அவர்களிடம் நடந்ததை சொல்லி எடுங்கோ என்று கூறினார்கள். எனக்கு யாருமே இல்லை. அம்மா மட்டும்தான், அம்மாவுக்கு நான் மட்டும்தான். எனக்கு மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். மூத்த அண்ணாவை இனந்தெரியாதவர்கள் சுட்டுக்கொன்டனர். இரண்டாவது அண்ணா யுத்தத்தில் கொல்லப்பட்டு இறந்துவிட்டார். மூன்றாவது அண்ணா காணாமல்போய்விட்டார். எனது தந்தையும் 2014.04.19ஆம் திகதி கென்சரால் காரணமாக இறந்துவிட்டார். எங்களுக்கு யாரின்றி, துணையும் இல்லாமல் இருந்தோம். அம்மாவும் வீட்டில் இருந்து சாப்பாட்டு பார்சல்கள் செய்து கொடுத்து வந்தார்கள். அந்த காசில்தான் எனது அம்மா படிப்புச் செலவுகள் எல்லாம். பின்பு சிறுவர் நன்னடத்தை விஜி மிஸ் என்னை வைத்தியசாலையில் கொண்டு விட்டார். மறுநாள் திங்கட்கிழமை அன்று 2014.03.17ஆம் திகதி என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு பல பேர் என்னை கொண்டு செல்ரதுக்காக நின்றனர். XXX என்னை கொண்டு விட்டார்கள். எனது அம்மாவை விட்டதில் இருந்து யோசனையாகத்தான் இருந்தேன். பைத்தியம் போல் இருந்தேன். பூஸா முகாமில் எனது அம்மாவை கொண்டு சென்றனர் என்று கேள்விப்பட்டேன். பின்பு நீதிமன்றத்தில் வைத்து அம்மாவைப் பார்க்கப் போகிறேன் என்று கேட்டேன். அவர்கள் என்னை பார்க்க அனுமதித்தார்கள். போய் பார்த்தேன். அம்மாவைப் பார்த்தபோது கவலையாக இருந்தது. எனது மனதில் நினைத்தேன், கடவுள் எங்களை ஏன்தான் இப்படி சோதிக்கின்றார் என்று கவலைப்பட்டேன். நானும் அம்மாவும் அண்ணாக்களையும் இழந்து இருக்கிறோம். நானும் அம்மாவும்தான் மிஞ்சி இருக்கிறோம். நாங்களும் அண்ணாவிடம் போய் விட நினைத்தேன். எனது மூன்றாவது அண்ணா இருக்கிறார் என்று கவலையில்லாமல் இருந்தோம்.

எனது அம்மா கிளிநொச்சி சென்றார். அதில் மீட்டிங் ஒன்று நடந்தது. அதில் ஒரு அக்கா வைத்திருந்த புத்தகத்தை வாங்கியிருந்தார். LLRC என்ற புத்தகத்தில் 41ஆவது பக்கத்தில் எனது அண்ணாவை கண்டார். அதற்கு பின்பு நம்பிக்கையுடன் எனது அம்மா மூன்றாவது அண்ணா இருக்கின்றார் என்று நம்பினார். பின்பு நாங்களும் காணாமற் போனோர் என்று கூட்டத்தில் சேர்ந்து எனது அண்ணாவைத் தாங்கோ என்று அழுதேன்.

ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன ஐயா உங்கள் பிள்ளையாக நினைத்து எனது அம்மா ஒரு தப்பும் செய்யாத அம்மாவை விடச் சொல்லுமாறு கேட்கின்றேன். எனது மூன்றாவது அண்ணாவையும் விடச் சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்சின்றேன். ஐயா உங்களை பார்க்கோனும் போல் இருக்குது. ஐயா, உங்களை பார்க்க முடியாததால் நான் கடிதம் மூலம் அழுது இருக்கிறேன். ஐயா, அம்மா இல்லாமல் இருக்கமாட்டேன், நான் நஞ்சாவது குடித்து செத்துவிடுவேன்.

அதற்கு முன்பு எனது அம்மாவை விடுதலை செய்து தருமாறு கேட்டுக்கொள்கின்றேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனரான ஐயா எப்படியாவது பேப்பரில் பார்ப்பேன். உங்கள் கட்டளையை பார்த்துக்கொண்டு இருப்பேன். இத்துடன் எனது கவலை மடலை முடிக்கின்றேன்.

நன்றி,

இங்கனம்,

பா. விபூஷிகா

vibu 1 vibu 2 vibu 3