படம் | AP PHOTO/Eranga Jayawardena, Thehindu

இனப் பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இந்தியாவின் தலையீடு உள்ளது. குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும் தமிழ் தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று இந்தியப் பிரதமரை சந்திப்பது அல்லது இந்திய வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடுவது பின்னர் அந்தச் சந்திப்பு தொடர்பாக அதீத நம்பிக்கையுடன் ஊடகங்களுக்கு கருத்து சொல்வது வழமையாகிவிட்டது. இந்திரா காந்தி முதல் இன்றைய நரேந்திர மோடி வரை இதற்கு வரலாறுகள் உண்டு. அமிர்தலிங்கம் இந்திரா காந்தியை 1983ஆம் ஆண்டு சந்தித்ததில் இருந்து சம்பந்தன் மன்மோகன் சிங்கை 2013இல் சந்தித்து உரையாடிய விடயங்கள் எதிலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக இல்லை. இந்த நிலையில் புதிய பிரதமர் நரேந்திர மோடியையும் சம்பந்தன் தலைமையிலான குழு சந்தித்துள்ளது.

புதிய பிரதமர்கள் பதவியேற்றால்…

இந்தியாவில் புதிய பிரதமர்கள் பதவியேற்ற பின்னரான ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தலைவர்களை சந்தித்து இனப் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவது வழமையான நிகழ்வு என்ற அடிப்படையில் நரேந்திர மோடியின் அழைப்பையும் அவதானிக்கலாம். இலங்கை ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை சந்திப்பதும் மரபுவழிசார் நடைமுறைகள். இந்த வரையறைகளை தாண்டி எதுவும் இல்லை என்பது தமிழ் மக்கள் அனுபவரீதியாக கற்றுக்கொண்ட பாடங்கள். ஆனாலும், அரசுக்கு அரசு என்ற அணுகுமுறைகளையும் தாண்டி அமர்தலிங்கம், சம்பந்தன் ஆகியோருடன் இந்திய பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்புக்களில் ஒரு நாட்டின் தலைவருக்குரிய மரியாதை அந்தஸ்த்து கொடுக்கப்பட்டது. இந்த கௌரவம் ஒன்றுதான் இந்தியாவிடம் இருந்து தமிழர்களுக்குக் கிடைத்திருக்கின்றது. இந்த காரணத்தினால் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா உட்பட வெளிநாட்டுக்குச் செல்ல முடியாத ஏற்பாடுகளை அரசு செய்யக்கூடிய ஆபத்துக்களும் உள்ளது.

முதலமைச்சர் வெளிநாடு செல்ல முடியாது

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளிநாடுகளுக்குச் செல்வதானால் ஆளுநரின் அனுமதி பெறப்பட வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததை மையாகக் கொண்டு அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கின்றார். ஆனால், அரசியலமைப்பின் படி அவ்வாறு இல்லை. அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் தன்னிச்சையாக வெளிநாடுகளுக்கு சென்றுவர முடியாது என்று நாடாளுமன்ற நிலையியல் கட்ளைகளின் விதிகளில் உள்ளது. ஆனால், எதிர்க் கட்சிகளின் தலைவர்கள், முதலமைச்சர்கள் சென்று வரலாம். திறைசேரியின் அனுமதியின்றி வெளிநாட்டு நிதியுதவிகளை மாகாண சபைகள் கோர முடியாது என்று 13ஆவது திருத்தச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அரசில் அங்கம் வகிக்காத கட்சிகளின் முதலமைச்சர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அந்த நாடுகளின் தலைவர்களைச் சந்திப்பதற்கு அரசியலமைப்பில் தடையில்லை. ஆகவே, இந்தியாவிடம் இருந்து தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என்ற கவலைகளுக்கு அப்பால் இந்தியப் பிரதமர்களுடனான சந்திப்புக்களின் போது கிடைத்த அரச கௌரவத்தையும் தடுப்பதற்கான எற்பாடுகள்தான் தற்போது வகுக்கப்படுகின்றன. அதன் வெளிபாடுதான் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவின் மேற்படி கூற்றாகும்.

புரிந்துகொள்ள வேண்டிய தருணம்

எனவே, 13ஆவது திருத்தச்சட்டம் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முழுமைப்படுத்தாது என்று தெரிந்த நிலையில் தமிழ்த் தலைவர்கள் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் முதலமைச்சர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது என்ற அரசின் நிலைப்பாடு ஒற்றையாட்சிக் கோட்பாட்டை நிறுவியுள்ளது எனலாம். ஆகவே, நரேந்திர மோடியுடனான சந்திப்பில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை இந்திய அரசு நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி இயல்பானதாகும். 13ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாத அல்லது அதிலுள்ள பல அதிகாரங்களை மத்திய அரசு மீள எடுத்துள்ள நிலையில் வெறுமனே 13ஆவது திருத்தம் என்ற வெளித் தோற்றத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு செயற்பட முடியாது என்பது நடைமுறையில் கண்ட உண்மைகள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்னமும் 13ஆவது திருத்தச்சட்டம் பற்றி எந்த அடிப்படையில் கனவு காண்கின்றது? வட மாகாண முதலமைச்சர் ஆளுநரின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது என்ற அறிவிப்புக்கு பின்னரும் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலான அதிகாரங்களை இந்தியா பெற்றுத் தரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இந்திரகாந்தி காலம்

இந்தியாவில் உள்ள மாநிலங்களை ஒத்த அல்லது இந்திய மாநில அதிகாரங்களையும் விட குறைவான அரசியல் தீர்வு ஒன்றையே அன்று இந்திரா காந்தி தீர்மானித்திருந்தார் என்பதற்கு வரலாறுகள் உண்டு. இந்திரா காந்தி காலத்தில் அமிர்தலிங்கம், சம்பந்தன் போன்ற தமிழ்த் தலைவர்களுக்கு அரச கௌரவம் இந்தியாவில் கிடைத்து என்ற ஒரு செய்தியைத் தவிர வடக்கு – கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அதிகார விடயத்தில் இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மைக்கு பங்கம் ஏற்படக் கூடாது என்பதில் இந்திரா காந்தியும் அவதானமாக இருந்தார் என்பதுதான் உண்மை. ஏனெனில், இந்தியாவில் சமஷ்டி முறை ஆட்சி இருந்தாலும் அங்கு ஒற்றையாட்சி தன்மை கொண்ட அரசுதான் உள்ளது. பிராந்திய பாதுகாப்பு என இந்திரா காந்தி கூறியது, இந்தியாவின் ஒற்றையாட்சித் தன்மையை பாதுகாக்கும் நோக்கில் என்பதை தமிழ்த் தலைமைகள் அறியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதன் காரணத்தினால் தான் 1987இல் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமான மாகாண சபை முறையை அவர்கள் அன்று ஏற்றிருந்தார்கள். விடுதலைப் புலிகள் அதனை விரும்பவில்லை என்ற ஒருவகை அச்சத்தினால் பின்னர் 13ஆவது திருத்தம் தீர்வு ஆகாது என்ற கருத்தையும் தமிழ் தலைமைகள் அன்று முன்வைக்கத் தவறவில்லை.

சாதகமான அரசியல் சூழல்

ஆனால், 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் இந்தியாவின் விருப்பத்தை முழுமையாக ஏற்கக்கூடிய நிலைமை சம்பந்தன் போன்ற தமிழ்த் தலைமைகளுக்கு ஏற்பட்டுள்ளது. நரேந்திர மோடி காங்கிரஸ் அல்லாத வேறு அரசியல் கட்சியை சேர்ந்திருந்தாலும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் 13ஆவது திருத்தச் சட்டம்தான் தீர்வு என்பதை ஏற்க வேண்டிய ஒரு கட்டாயச் சூழல் அவருக்கும் உண்டு. ஏனெனில், இந்தியத் தேசியப் பாதுகாப்பு என்ற எல்லைக்குள் இலங்கை விவகாரம் நோக்கப்படுவதால் இந்தியாவில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் இந்திரா காந்தி அன்று எழுதி வைத்த 13ஆவது திருத்தச் சட்டம்தான் இறுதிவரை நடைமுறையில் இருக்கும் என்பது வெளிப்படையானது. ஆகவே, தமிழ்த் தலைமைகள் செய்ய வேண்டியது என்ன? 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் 18ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் எவ்வாறு பறிக்கப்பட்டன என்பது பற்றிய விடயங்களை அரசியலமைப்பு ரீதியாக சுட்டிக்காட்ட வேண்டும்.

1947 ஆண்டு சோல்பரி யாப்பில் இருந்து தமிழ் மக்களுக்கு ஏற்ற முறையில் இருந்த சட்டங்கள் படிப்படியாக எவ்வாறு இல்லாமல் செய்யப்பட்டன, சட்டத்திற்கு மாறான காணி அபகரிப்புகள், தமிழர் பகுதிகளில் புதிய சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகள் உருவாக்கப்படுகின்றமை போன்ற பல்வேறு விடயங்களை உதாரணப்படுத்தலாம். தமிழ் மக்களுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்புகளையும் எடுத்துக் கூறலாம். ஆக, அரசியலமைப்பும் அதனைப் பாதுகாக்கின்ற நீதிமன்றமும் சிங்கள மயப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு ஒற்றையாட்சி முறையை ஏற்பது? என்ற கேள்விகள் இயல்பாகவே எழும். இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கோட்பாடு எதற்காக எழுந்தது என்ற சர்வதேச சமூகத்தின் வினாவுக்கும் இயல்பாகவே பதில் கிடைக்கலாம்.

தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.