படம் | PEDRO UGARTE/AFP/Getty Images

இலங்கையின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்ற சூழலில், அரசினால் நியமிக்கப்பட்ட காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்கென மூவர் அடங்கிய சர்வதேச நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்திருக்கின்றார். சேர் டெஸ்மன் டி சில்வா, சேர் ஜெப்ரி நைஸ் மற்றும் டேவிட் கிறேன் ஆகியோரே ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர்கள் ஆவர். பிரித்தானிய சட்டவாளரான சேர் டெஸ்மன் டி சில்வா (Sir Desmond de Silva) சர்வதேச போர் குற்ற விடயங்களை கையாளுவதில் மிகுந்த தேர்ச்சியுடைவராவார். சியாரா லியோனில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த வழக்கில் தலைமை சட்டவாளராக தொழிற்பட்ட டெஸ்மன், பின்னர் ஜ.நாவின் தலைமைச் சட்டவாளராக நியமிக்கப்பட்டவராவார். சேர் ஜெப்ரி நைஸ் (Sir Geoffrey Nice) புகழ்பெற்ற சட்டத்துறை பேராசிரியராவார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் இணைந்து செயற்பட்டுவரும் ஜெப்ரி, யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் பிரதி சட்டவாளராக செயற்பட்டவர். இறுதியானவர் பேராசிரியர் டேவிட் கிறேன் (Prof. David Crane) அமெரிக்காவின் புகழ்பெற்ற சட்டத்துறை பேராசிரியராவார். டெஸ்மன் டி சில்வாவிற்கு முன்னர் சியாரோ லியோனின் சிறப்பு நீதிமன்றத்தின் தலைமை சட்டவாளராக பணியாற்றியிருந்த இவர், அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு பணியகத்தின் (Defense Intelligence Agency) பிரதி தலைவராகவும் இருந்தவர். இவ்வாறானவர்களே தற்போது ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கவுள்ளனர்.

நவிப்பிள்ளையினால் நியமிக்கப்பட்டுள்ள 12 பேர் அடங்கிய குழுவினருக்கு ஆலோசனை வழங்குவதற்கான மூவர் அடங்கிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதை அறிவோம். அதனை எதிர்கொள்ளும் வகையில் அரசும் மூவர் அடங்கிய சர்வதேச நிபுணர் குழுவொன்றை தற்போது களத்தில் இறக்கியுள்ளது. போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை, அத்துறைகளில் சர்வதேச அளவில் அனுபவமுள்ள நிபுணர்களைக் கொண்டு எதிர்கொள்ளும் இராஜதந்திர முயற்சியிலேயேஅரசு இறங்கியிருக்கிறது என்பதையே மேற்படி நிபுணர்களின் நியமனம் தெளிவுறுத்துகின்றது. அரசு இதனை செய்வதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஒவ்வொரு அரசும் தான் எதிர்கொண்டிருக்கிற நெருக்கடிகளிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் முடிந்தவரை முயற்சிக்கும். அத்தகைய முயற்சிகளில் அது வெற்றியை பெற்றுவிடவும் கூடும்; அல்லது வெற்றி பெறாதும் போகலாம்.

ஆளும் மஹிந்த அரசைப் பொறுத்தவரையில் அது, இரண்டு முனைகளின் ஊடாக செலாற்றுகிறது. ஒன்று, உலகம், ஆசியாவை நோக்கித் திரும்பியிருக்கின்ற சூழலில், ஆசியாவில் எழுச்சியடைந்துவரும் பொருளாதார சக்திகளான சீனாவுடனும், இந்தியாவுடனும் சமளவான உறவை பேணுவதன் ஊடாக, மேற்குலக நெருக்கடிகளை தணிக்க அல்லது ஒரு எல்லைக்குள் முடக்கிவைக்க முயற்சிக்கிறது. உள்நாட்டு விவகாரங்களுக்குள் தலையிடாக் கொள்கையை தங்களுடைய வெளிவிவகாரக் கொள்கையாக கொண்டிருக்கும் சீனாவின் ஆதரவும், இலங்கையின் உள்விவகாரங்கள் அதிகம் சர்வதேச மயப்படுவது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று எச்சரிக்கும் மோடி தலைமையிலான இந்தியாவும் இப்போது கொழும்பிற்கு சாதகமாகவே இருக்கிறது. ஒரு புறம் இவ்வாறுஎழுச்சியடைந்து வரும் பிராந்திய சக்திகளின் நலன்களுடன் இணைந்து நிற்பதன் மூலம், கொழும்பு தற்போதைய மேற்குலக அழுத்தங்களை சமாளிக்க முயல்கிறது. இது ஒரு முனை நகர்வு என்றால், பிறிதொரு முனையில் ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஊடான மேற்குலக அழுத்தங்களை, இவ்வாறான நிபுணர்களை வாடகைக்கு அமர்த்துவதன் ஊடாக, ஒரு எதிர் நிபுணத்துவ சவாலை கொடுக்க முயற்சிக்கிறது. இதற்கு முன்னரும் ஒரு அமெரிக்க நிபுணத்துவ அமைப்பை அரசு வாடகைக்கு அமர்த்தியிருந்தது. ஆனால், தற்போது சற்று மாறுபட்ட வகையில், அரசால் நியமிக்கப்பட்ட உள்ளக ஆணைக்குழுவிற்கு, ஆலோசனை வழங்கும் நோக்கிலேயேஜ.நா. குற்றவியல் நடைமுறைகளில் மிகுந்த தேர்ச்சியும் அனுபவமும் மிக்க மூவரை கொழும்பு நியமித்திருக்கின்றது. அரசால் மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணைகள் சர்வதேச தரத்திற்கு அமைவாக இடம்பெறவில்லை என்னும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையிலேயே, தற்போது மேற்படி சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைகளை அரசு உள்ளவாக்கிச் செயலாற்ற முனைந்திருக்கிறது. இதன் மூலம் இலங்கைக்குள் இடம்பெறும் விசாணைக்கும் ஒரு சர்வதேச தரம் உண்டு என்பதையேஅரசு நிரூபிக்க முயல்கிறது. இவைகள் அனைத்தையும் தொகுத்து, ஒரு வரியில் சொல்வதானால், அரசு அதன் பணியை செய்கிறது. தமிழர் தரப்பினர் எப்பணியை ஆற்றுவது?

தமிழ் மக்களுக்கான தேவை, இலங்கை தீவில் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழ்வதற்கான ஒரு ஏற்பாடு. அப்படியொரு ஏற்பாடு, வெளியிலிருந்து வரும் அழுத்தங்களால் சித்திக்குமா என்பது ஒரு கேள்வியென்றால், இவ்வாறான அழுத்தங்கள் நான் மேலே குறிப்பிட்டவாறான அரசின் இரு முனைப்பட்ட உபாயங்களால் வெற்றிகொள்ளப்பட்டு விடுமாயின், தமிழர் கோரிக்கைகளுக்கு என்ன நிகழும் என்பது அடுத்த கேள்வியாகிறது. நிலைமைகள் மாற்றமடைந்து கொண்டு செல்கின்றன. இலங்கையின் தமிழர் பிரச்சினையில் தாக்கம் செலுத்தக் கூடிய ஒரேயொரு நாடு என்று கருதப்படும் இந்தியா, கொழும்பை தனிமைப்படுத்தும் நோக்கிலான, சர்வதேச அழுத்தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது என்று குறிப்பிடுகிறது. இலங்கை விவகாரத்தை கொழும்பு – புதுடில்லி என்னும் இருதரப்பு உரையாடலின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியுமென்று குறிப்பிடுகிறது. அவ்வாறான இருதரப்பு உரையாடலில் கூட்டமைப்பும் ஒரு அங்கமாக இருக்கும். அத்தகைய சூழலில், கூட்டமைப்பு போர்க்குற்ற விசாரணை விவகாரத்தை கையில் எடுக்க முடியுமா? தண்டிக்கும் நோக்கிலான ஒரு செயலுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு, இணங்கிப் போவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியுமா? இந்த இடத்தில் போர்குற்ற விவகாரம் தொடர்பில் கூட்டமைப்பு தன்னுடைய நிலைப்பாட்டை தமிழ் மக்கள் முன்வைக்க வேண்டுமா, இல்லையா? போர் குற்ற விசாரணையோ அல்லது வேறு ஏதும் தண்டிக்கும் நோக்கிலான சர்வதேச அணுகுமுறைகளோ தமிழ் மக்களின் அரசியல் தீர்வில் எந்தவொரு பங்களிப்பையும் வழங்கப் போவதில்லை.

மேலும், இங்கு அரசியல் தீர்வு குறித்து சிந்திக்கும்போதுபிறிதொரு விடயத்தையும் கருத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ் மக்கள் கடந்த முப்பது வருடங்களாக போர்ச் சூழலுக்குள் அகப்பட்டுக்கிடந்தனர். இந்தக் காலத்தில் வசதியுள்ள ஒரு தமிழ் மத்தியதர வர்க்கமானது, ஜரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்றுவிட்டது. அவ்வாறு சென்றவர்கள் எப்போதும் சென்றவர்களே! இப்போதும் இங்கிருக்கிற தமிழ் மத்தியதர வர்க்கம், அந்த விருப்புடனனேயே இருக்கிறது. சமீபத்தில் வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரத்தான் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டிருந்தார். யாழ்பாண பல்கலைக்கழகத்தில் “தமிழர்களின் எதிர்காலம்: சனத்தொகை ரீதியான ஒரு நோக்கு” (Future of Tamils: A demographic perspective) என்னும் தலைப்பில் இடம்பெற்ற உரையின்போதே, வல்லிபுரத்தான் மேற்படி தகவலை வெளியிட்டிருந்தார். 2031ஆம் ஆண்டளவில் தமிழர்கள் 10.3 வீதமாகவும், முஸ்லிம்கள் 10.8 வீதமாகவும் இருப்பர். இதன் மூலம் தமிழர்கள் இலங்கையின் சனத்தொகையில் மூன்றாவது இடத்திற்கு சென்றுவிடுவர். அவர் தன்னுடைய உரையின்போதுசுவாரஷ்யமான ஒரு உதாரணத்தை எடுத்தாண்டிருந்தார். இலங்கையில் அருகிவரும் (Endangered) மிருகங்களான யானை, புலி மற்றும் டொல்பின் போன்று இந்துத் தமிழர்களும் அருகிவிடுவர். தமிழ் அரசியல் தலைமைகள் என்போர் மிகவும் ஊன்றிக் கவனிக்கவேண்டிய கருத்திது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக் கோஷங்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்ற சூழலில், அவ்வாறான ஒரு தீர்வானது, காலப்போக்கில் தேவையற்ற ஒன்றாக்கிவிடக் கூடியளவிற்கு நிலைமைகள் மாற்றமடைந்து செல்கின்றன.

எனவே, இன்றைய சூழலில் சாத்தியமான விடயங்களை முன்னிறுத்தி அதனூடாக பயணிப்பதற்கான வழிகளை தமிழர் தரப்புக்கள் கண்டடைய வேண்டியுள்ளது. போர்க்குற்றம், சர்வதேச அழுத்தம் போன்ற சொற்களில் குளிர்காய்ந்து கொண்டிருந்தால், இறுதியில் தமிழர் அரசியல் கோரிக்கைகள் என்பது, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிடலாம். முன்னர் மாகாண சபை விடயத்தில் நடந்ததும் இதுதான். யதார்த்தத்தை புறம்தள்ளி வீரவசனங்களை உரைத்தோரின் பக்கமாக வசியப்பட்டதன் விளைவு, தற்போது அந்த மாகாண சபை முறைமையில் உள்ளதைக் கூட பெற முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனை கருத்தில்கொண்டு சிந்திக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சிந்திக்கும் அனைத்து தரப்பினருக்கும் உண்டு.

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

Jathindra