படம் | AFP/Getty Images, Ishara S. Kodikara, Theglobalmail

மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்புதான் கோட்டாபய ராஜபக்‌ஷ என்ற ஒருவர் இலங்கை அரசியலில் வந்துசேர்ந்தார். இராணுவ சேவையிலிருந்து விலகிய பின் பதினைந்து ஆண்டுகளாக வாழ்ந்தது அமெரிக்காவிலேயாகும். அவர் ஒரு பிரசித்திபெற்ற, அதிகாரமுள்ள, பலமிக்க நபராக மாறியது, சகோதரர் ஜனாதிபதி பதவியேற்புக்கு வந்த பின்னர்தான். அத்தோடு, அவருக்கு அதிகாரமுள்ள பதவியொன்றாக கருதப்படும் பாதுகாப்புச் செயலாளர் பதவி கிடைத்ததோடு, அதன்பின் இடம்பெற்ற நான்காம் ஈழ யுத்தத்தின்போது இராணுவ பாதுகாப்புப் பிரிவினரை நெறிப்படுத்தும் நபராகவும் இவர் பதவி ஏற்றார். யுத்த வெற்றியில் முக்கிய பங்காற்றிய ஒருவர் எனக் கருதக்கூடிய ஜெனரல் சரத் பொன்சேகா ஓய்வு பெறப்போவதை தடுத்து, அவருக்கு இராணுவத்தில் ஜெனரல் பதவியை வழங்க ஜனாதிபதியின் விருப்பம் தெரிவிக்க வைத்ததும் கோட்டாபயவே. சில சில காரணங்களுக்காக சரத் பொன்சேகாவுக்கு ஜெனரல் பதவியை கொடுப்பதற்கு ஜனாதிபதிக்கு விருப்பம் இல்லாத போதிலும், அந்த அதிருப்தியை மாற்றி பொன்சேகாவுக்கு அந்தப் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதியை சம்மதிக்க வைத்ததும் இவரேயாவார்.

அதற்கு மேலதிகமாக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தனக்கு உள்ள அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது முக்கிய காரியத்தை நிறைவேற்றினார். பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதியின் சகோதரர் என்பதை காரணம்காட்டி பாதுகாப்புப் படையினருக்கு தேவையானவற்றை கஞ்சத்தனமின்றி நேரகாலத்தோடு பெற்றுக் கொடுப்பதற்கு முன்னின்றதோடு, முப்படையினருக்கு அபிமானத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட மாபெரும் பிரசாரப் பணிகளின் பின்புலத்தில் இருந்தவரும் இவரேயாவார். யுத்தத்தின் மூலம் கிடைத்த வெற்றி அவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. யுத்தத்தின் மூலம் உருவாகிய மிகப்பெரிய வீரர்கள் மூவரில் ஒருவராக இவர் ஆனார். அத்தோடு, அவர் அரச அதிகாரி என்ற தன்மையிலிருந்தும் ராஜபக்‌ஷ அரசில் ஜனாதிபதிக்கு இரண்டாவதாக மிகப்பெரிய அதிகாரம் பெற்ற ஒருவரானார். ஜெனரல் சரத் பொன்சேகா விலக்கப்பட்டதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவராக இவர் நியமிக்கப்பட்டார். முப்படையினர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் இவருக்கிருந்த இடைவெளி சாதாரண தூரமாகவன்றி வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான தூரம் போன்றே இருந்தது. அரச அதிகாரியாக இருந்தாலும், அவர் ஜனாதிபதிக்கு இரண்டாவதாக இருந்துகொண்டு சகல கெபினட் அமைச்சர்களையும் விட அதிகார பலம் கொண்டவராக செயற்பட்டு வருகின்றார். ஜனாதிபதி மாதிரியே அவரின் மற்றைய சகோதரர்களான சமல் மற்றும் பசில் அரசியல் அனுபவம் உள்ள அரசியல் சம்பந்தமாக பதப்பட்டவர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், கோதாபய ராஜபக்‌ஷ அவ்வாறில்லை. அவர் இராணுவ அதிகாரி மாத்திரமே ஆவார். அவர் எந்த ஒரு விடயத்தையும் பார்க்க முயற்சித்தது இராணுவ கோணத்திலாகும்.

கிளர்ச்சியை தோற்கடித்ததன் பின்னர்

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர் தோல்வி நிலையை அடைந்த தமிழ் மக்களை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு யுத்தத்தில் மாபெரும் வீரர் என்ற பெயர் பெற்ற கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கே வழங்கப்பட்டது. கோட்டாபயவின் இராணுவ நிழல் மெதுமெதுவாக தமிழ் மக்கள் மீது மட்டுமன்றி முழு நாட்டின் மீதும் படும் ஒரு நிலை தோன்றியுள்ளது எனக் கூறலாம்.

உள்நாட்டு கிளர்ச்சியை தோல்வியடையச் செய்ததன் பின்னர், தோல்வியடைந்த கிளர்ச்சியாளர்கள் மற்றும் அவர்கள் சார்பான மக்களை நிர்வகிக்கும் பொறுப்பு வெற்றிபெற்ற இராணுவத்திடம் ஒப்படைக்கப்படுவதில்லை. இது ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டமாகும்.

71ஆம் ஆண்டு கிளர்ச்சியை தோல்வியடையச் செய்ததன் பின்னர், சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட சிறைக் கைதிகள் 18,000 பேரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை, சிறிமா பண்டாரநாயக்க அரசு, கிளர்ச்சியாளர்களை வெற்றிகொண்ட இராணுவத்திடம் ஒப்படைக்கவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் அனைவரையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை சிறைச்சாலை அமைச்சிடம் ஒப்படைத்தார். அதற்காக அமைச்சில் இருந்த அதிகாரிகள் போதுமானதாக இல்லாமையால் சிறைச்சாலை அமைச்சுக்கு கூடுதலாக – புதிதாக ஆட்கள் சேர்த்துக்கொள்ள வேண்டி ஏற்பட்டது. இருந்த சிறைக் கூண்டுகள் போதாமையால் தற்காலிக முகாம்களை உருவாக்க வேண்டி ஏற்பட்டதுடன், முகாம்களை நிர்வகித்ததும் சிறைச்சாலை அமைச்சு அன்றி இராணுவத்தினர் அல்ல.

சாதாரணமாக இராணுவத்தினர் முகாம்களிலிருந்து வெளியில் கொண்டுவரப்படுவது யுத்த சூழ்நிலை அல்லது பேரிடர் நிலைமை ஒன்று ஏற்படும் சந்தர்ப்பத்திலாகும். யுத்த சூழ்நிலை முடிவடைந்த கையோடு மறுபடியும் சிவில் நிர்வாகம் ஒன்றிற்கு இடமளிக்கும் வகையில் யுத்த சட்டம் அகற்றப்பட்டு பாதுகாப்பு படையினரை மறுபடியும் தங்களது முகாம்களுக்கு அனுப்ப வேண்டும். அது ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டமாகும்.

எல்.ரி.ரி.ஈயை தோல்வியடையச் செய்தமை உள்நாட்டு கிளர்ச்சியை தோல்வியடையச் செய்த முதல் சந்தர்ப்பமன்றி, மூன்றாவது முறை என்று கருதலாம். ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நாட்டின் பல பிரதேசங்களில் தற்காலிக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஜே.வி.பி. கிளர்ச்சி உச்ச நிலையிலிருக்கும்போது தோல்வியடைவதை காண்பதற்கு பொதுமக்கள் விரும்பினாலும், பாதுகாப்புத் தரப்பினர் அதனை ஒழித்த முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. இராணுவத்தினரது செயற்பாட்டை மக்கள் வரவேற்கவில்லை. தமிழ் இளைஞர்களின் கிளர்ச்சியாகக் கருதக்கூடிய எல்.ரி.ரி.ஈயின் யுத்தத்தை தோல்வியுறச் செய்ததன் பின்னர், தெற்கு சிங்கள மக்கள் இராணுவத்தினரை போர் வீரர்கள் என ஆதரித்தாலும், இதே இராணுவத்தினர் மூலம் சிங்கள ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி தோல்வியடையச் செய்யப்பட்டதன் பின்னர் தெற்கு சிங்கள மக்கள் இராணுவத்தினரை போர் வீரர்களாக கருதவில்லை. அப்போது அவர்கள் இராணுவத்தினர் பற்றி கடுமையான விமர்சனத்துடன் இருந்தனர். தற்போது இராணுவத்தினரை போர் வீரர்கள் என வாய் நிறைய கூறும் சம்பிக ரணவக, விமல் வீரவன்ச போன்றவர்கள் மத்தியில் கூட அன்று கசப்பான உணர்வே இருந்தது.

ஜே.வி.பி. கிளர்ச்சிக்கு பக்கச்சார்பற்ற ஆதரவு தெற்கு சிங்கள மக்கள் மத்தியில் இருந்த அதேவேளை, பாதுகாப்பு தரப்பினர் தொடர்பாக மக்கள் அதிருப்தியுடன் இருக்கின்றனர் என ஜனாதிபதி பிரேமதாஸ அறிந்திருந்தார். கிளர்ச்சியை தோல்வியடையச் செய்த உடனேயே நாட்டின் நாலா புறங்களிலும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக இராணுவ முகாம்களை அகற்றி இராணுவத்தினரை அவர்களின் முகாம்களுக்கு அனுப்பும் முயற்சியை மேற்கொண்டது அதனால்தான்.

அந்த நியதி வடக்கு தமிழ் மக்களுக்கும் பொருந்தும். இந்தச் செயற்பாடு வடக்கு தமிழ் கிளர்ச்சி தோல்வியுறச் செய்ததன் பின்னர் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு காரணம் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆவார். அவ்வாறு நடந்ததற்கான காரணம் அவருக்கு இராணுவ அறிவு அன்றி அரசியல் அறிவு இல்லாமை என்பதாக இருக்கலாம். சில நேரம் கோட்டாபய பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இல்லாமல் இருந்திருந்தால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூட சிறிமா பண்டாரநாயக போன்று அல்லது ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ போன்று கிளர்ச்சியை தோல்வியுறச் செய்ததன் பின்னர் தமிழ் மக்களை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை இராணுவத்தினரிடம் ஒப்படைக்காமல் அவர்களை இராணுவ முகாம்களுக்கு அனுப்பும் கொள்கையை பின்பற்றியிருந்திருப்பார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ யாருடைய விவகாரத்திலும் தலையிடுவார். ஆனால், கோட்டாபயவின் விவகாரத்தில் மட்டும் தலையிடமாட்டார். அது ஏனெனில், கோட்டாபய அவரின் விருப்பத்திற்குரிய சகோதரர் என்பதை விட, யுத்தத்தின்போது மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டு, யுத்த வெற்றிக்காக அவர் செய்திருந்த அர்ப்பணிப்பு கூட காரணமாக இருக்கலாம். கோட்டாபய செய்யும் எந்த விடயத்திலும் தலையிடாமல், அவரின் தேவைகளை அவரின் விருப்பத்திற்கமைய செய்து கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி இடமளித்தது, அவர் தொடர்பாக கொண்டிருந்த நம்பிக்கை என நினைக்கலாம். அந்த நிலைமை பாதுகாப்புச் செயலாளருக்கு மிகப்பெரிய பொறுப்பை பெற்றுக்கொடுப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறலாம். கோட்டாபயவால் தனது சகோதரரான ஜனாதிபதியை கடந்து செல்லும் தேவை இருக்கவில்லை என்றாலும், அரசியல் பிரச்சினைகளை இராணுவ கோணத்தில் பார்த்து கருமமாற்றும் நிலையில், அவர் தற்போது தனது சகோதரருக்கு மட்டுமன்றி, அவரின் ஆட்சிக்கும் அரசியல் சவக்குழிகளை வெட்டுபவராக இருக்கிறார்.

இறந்தவர்களை நினைவுகூரல்

வடக்கில் இடம்பெற்றது ஒரு கிளர்ச்சி மாத்திரமே. தெற்கில் ஒரே அமைப்பினால் இரு கிளர்ச்சிகள் இடம்பெற்றன. 71 கிளர்ச்சியின்போது இறந்த கிளர்ச்சியாளர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் இறந்தோரை நினைவுகூரினர். இரண்டாவது கிளர்ச்சியை தோல்வியுறச் செய்ததன் பின்னரும் இறந்தவர்களின் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் இறந்தவர்களை நினைவுகூரினர். அதற்காக அன்னையர் முன்னணி ஒன்று உருவாக்கப்பட்டதுடன், மஹிந்த ராஜபக்‌ஷ அந்த முன்னணியின் முக்கிய உறுப்பினராகவும் உள்ளார். உயிரிழந்தவர்கள் என்னதான் குற்றம் செய்திருந்தாலும், அவர்களை நினைவுகூரும் உரிமை அவர்களின் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் உள்ளது. கோட்டாபய ராஜபக்‌ஷ இதற்கு முன்னர் யாரும் செய்யாதவற்றை செய்கின்றார். வடக்கு தமிழ் மக்களுக்கு உள்ள இறந்த உறவுகளை நினைவுகூரும் உரிமையைக் கூட இல்லாமல் செய்துள்ளார். அரசியல் பார்வையுடன் அணுகாமல் எல்லாவற்றையும் இராணுவ கண்ணோட்டத்துடன் பார்த்து நகர்வதே இதற்கான காரணமாக இருக்கலாம்.

அவருக்கு இந்த கிளர்ச்சிகளில் பிரிக்கமுடியாமல் பொதிந்துள்ள சமூக அரசியல் சூழ்நிலைகள் குறித்து அறியாதவராகவே இருக்கிறார். அவரது இராணுவ கண்களுக்கு தெரிந்தது கிளர்ச்சியாளர்களுள் வாழ்கின்ற பயங்கரவாதம் மட்டுமே. பயங்கரவாதியாக ஒருவர் உருவாவதற்கு அவரைப் பாதிக்கின்ற சமூக காரணிகள் என்னவென்பது அவருக்கு தெரிவதில்லை. குறைந்தபட்சம் தன்னால் தோற்கடிக்கப்பட்டது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு படையன்றி, இந்த நாட்டு மக்களின் பிள்ளைகளில் ஒருபகுதியினர் என்பதைக் கூட புரிந்து கொள்வதற்கு அவர் தவறிவிட்டார்.

யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு கோட்டாபயவே தடையாக இருந்துவருகிறார். உள்நாட்டு விசாரணை ஒன்றின் மூலம் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் மன்னிப்பு வழங்கி விடுதலை வழங்கும் திட்டமொன்றை அமுல்படுத்தியிருந்தால் தற்போது சர்வதேச மட்டத்திலிருந்து பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை தவிர்த்திருக்கலாம். ஆக, இலங்கை தற்போது முகம்கொடுத்துவரும் பாரிய நெருக்கடிகளுக்கு முக்கிய காரணம் கோட்டபாயவேயாகும். அண்ணன் தனது விருப்பத்திற்குரிய தம்பிக்கு எந்த காரியத்தையும் தனது இஸ்டத்திற்கு செய்வதற்கு இடமளித்து விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது, நாட்டை சிக்கல் நிலைக்கு கொண்டு வருவதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் கூறலாம்.

எந்தவொரு யுத்தத்தின்போதும் வரையறைகளை எதிர்பார்க்க முடியாது. 71 கிளர்ச்சியின்போது கூட உரிமை மீறல் பிரச்சினைகள் இடம்பெற்றதன. அவற்றினூடாக சர்வதேச ரீதியில் பேசப்பட்ட சம்பவம் அழகு ராணி பிரேமவதீ மனம்பெருமவின் கொலையாகும். பிரதமர் சிறிமா பண்டாரநாயக அதைப்பற்றி பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட இராணுவத்தினருக்கு வழக்கு தொடர்ந்தார்; அவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டது. அதனூடாக படையினரை காட்டிக் கொடுத்தமை ஒன்று இடம்பெறவில்லை. அதன் மூலம், படையினருக்கு ஏற்பட்டிருந்த அபகீர்த்தியே இல்லாமல் செய்யப்பட்டிருந்தது.

கோட்டாபயவினால் ஏற்பட்ட தவறுகள்

நாட்டை இராணுவ முகாம் ஒன்றுக்குள் கொண்டு சென்றதே கோட்டா செய்த மிகப் பெரும் தவறாகும். சிவில் அதிகாரிகள் ஏற்க வேண்டிய பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். முறையான பயிற்சிகள் வழங்கப்படாமல் பெருமளவான இராணுவ அதிகாரிகள் தூதுவர் பதவிகளில் அமர்த்தப்பட்டனர். கல்வியைக் கூட இராணுவ மயமாக்கினர். அதனூடாக நாட்டை முகாம்களுக்குள் தள்ளுவதற்கு மேலதிகமாக ஜனநாயக கட்டமைப்பையும் கோட்டா சிதைத்தார்.

குற்றம் செய்தவர்களின் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் சுட்டுக் கொல்லும் மிலேச்சதனமான முறையை நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதும் அவரேயாவார். அது உலகம் ஏற்றுக்கொண்ட சட்டபூர்வமான மற்றும் ஜனநாயக கோட்பாட்டுக்கு முரண்பட்ட பாசிஸ முறையாக கொள்ள முடியும்.

அரசியல் செயற்பாடுகளுக்கு பாதுகாப்புப் படையினரை உத்தியோகபூர்வமாகவும் உத்தியோகபூரவமற்ற முறையிலும் பயன்படுத்தியது மிகப்பெரிய தவறாகும். யுத்த காலப்பகுதியில் தெற்கில் சில அமைப்புகள் யுத்த எதிர்ப்பு கொள்கையை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பயங்கரமான யுத்தமொன்று ஏற்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் நடந்துகொண்ட விதத்தில் தவறு இருந்தாலும், அவர்களை ஒடுக்குவதற்கு மேற்கொண்ட வழிமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அமைப்புகளைச் சேர்ந்த சிலர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதுடன், இன்னும் சிலர் மர்மமான முறையில் காணாமல் போயினர். சில ஊடக நிறுவனங்கள் தாக்குதல்களுக்குட்பட்டன. அவ்வாறான காரியங்களில் பாதுகாப்புத் தரப்பினருக்கு வேண்டப்பட்டவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள் என்பது தெளிவாக தெரியக்கூடியதாக இருந்தது.

யுத்தம் முடிவுற்றதன் பின்னரும் அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை. சில காரணங்களுக்காக நாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு அதிகாரபூர்வமாக மட்டுமன்றி அதிகாரபூர்வமற்ற முறையிலும் பாதுகாப்பு படையினருடன் சம்பந்தப்பட்ட சிலர் பயன்படுத்தப்பட்டார்கள். அரசுடன் சம்பந்தப்பட்டவர்கள் இந்த செயற்பாடுகளை வெறுத்தனர். இது விடயம் பற்றி அவர்கள் வெளியில் இரகசியமாக பேசிக்கொண்டனர். இந்த செயற்பாடுகளை எதிர்க்கவோ அல்லது வெளிப்படையாக பேசவோ அஞ்சுகின்றனர்.

அடிப்படைவாத சக்திகளை வளர்த்தல்

பாதுகாப்புச் செயலாளர் சில பிரிவினைவாதிகளுக்கு பாலூட்டி வளர்த்தெடுத்தார்; அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதோடு ஆதரவையும் வழங்கினார். பொதுபலசேனா என்ற அமைப்பை அதற்கு ஒரு நல்ல உதாரணமாக கொள்ள முடியும். ஞானசார தேரரின் செயற்பாடு இயல்பான ஒன்றல்லாமல் பாதுகாப்பு அமைச்சின் பலத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று எனக் கருதலாம். இந்த தேரருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கு இடையில் உள்ள இரகசிய தொடர்பு அனைவரும் அறிந்துள்ளனர். அதனால் அந்த தேரர் தான் நினைத்தபடி நடந்துகொள்வதற்கு பாதுகாப்புப் படையும் அனுமதித்து பார்த்துக் கொண்டிருந்தது.

அரசைச் சேர்ந்த அதிகமான அமைச்சர்கள் இதைப்பற்றி அறிந்திருந்தார்கள். ஞானசார தேரரால் ஏற்பட்டிருந்த வன்முறை கலாசாரத்தை அரசில் உள்ள அநேக அமைச்சர்கள் ஏற்றுக்கொள்ளா விட்டாலும், அதனை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தனர். காரணம், அந்த தேரரின் பின்னால் கோட்டாபயவின் நிழல் இருப்பதேயாகும். நாட்டின் பௌத்த உயர் பீட தேரர்களும் இந்த செயற்பாட்டை நிறுத்திக் கொள்ளவில்லை. பாதுகாப்புச் செயலாளருக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் உள்ள இரகசிய தொடர்பே அந்த அமைதிக்குக் காரணமாகும்.

ஹலால் பிரச்சினை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் நாட்டில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பௌத்த உயர் பீட தேரர்கள் சிலர் பிரச்சினையை அதிக தூரம் செல்ல விடாது சமாதான முறையில் சுமுகமாக தீர்ப்பதற்காக முன் வந்தனர். அந்தக் காலப்பகுதியில் கும்பலொன்று குறித்த பிக்குகளுக்கு தொலைப்பேசி ஊடாக தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இந்த நடவடிக்கை அவர்களுக்கு அனுபவமற்ற ஒன்றாக இருந்தமையோடு, அது கசப்பானதொரு காலமாகவும் அமைந்தது. இதனால், தொலைப்பேசி இணைப்புகளை துண்டிக்கவேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. உயர்பீட தேரர்களை பொதுவெளியில் கதைக்கவிடாமல் தடுப்பதே நோக்கமாகும்.

பேருவளை சம்பவத்தின் பின்னர் இந்த ரகசிய தொடர்பு வெளிப்பட்டது எனலாம். பொதுபல சேனா அமைப்பு கூட்டிய மாபெரும் கூட்டத்தில் கலவரம் ஒன்று நடக்கும் என பிரதேச அரசியல் தலைவர்கள் அறிந்திருந்தனர். அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்கள் உட்பட சில சிங்கள அமைச்சர்களும் பொலிஸ் உயரதிகாரிகளை சந்தித்து கூட்டத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டிருந்தனர். பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவினாலேயே இவர்களது கோரிக்கை புறக்கணிக்கப்பட்டிருக்கலாம். அளுத்கம கூட்டத்தின்போது ஞானசார தேரர் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு மக்களை உசுப்பேற்றினார். முழு பிரதேசமும் நனையும் அளவிற்கு பெற்றோலை ஊற்றிவிட்டு அந்த பிக்கு அங்கிருந்து வெளியேறினார். அதன் பின்னர் அந்த இடத்திற்கு நெருப்பு வேறு நபர்களால் வைக்கப்பட்டது. கலகத்தை ஏற்படுத்தியவர்கள் மத்தியில் சிவில் உடை அணிந்த பாதுகாப்புத் தரப்பினரும் இருந்ததாக பிரதேச முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் கூறுகின்றார்கள். பேருவளை கலவரத்தின் பின்னர் பொதுபலசேனாவின் தலைமைப் பிக்குவான விமலஜோதி தேரருக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவேண்டி ஏற்பட்டது. ஞானசார தேரரின் நடவடிக்கைகள் புத்த தர்மத்திற்கும் துறவரத்திற்கும் பொருத்தமற்றதாக இருக்கிறது எனக் கூறி உரையாற்றிய அவர், தான் தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமா செய்யப்போவதாகவும் கூறினார்.

இடம்பெற்ற அந்த மாபெரும் அழிவிற்குப் பின்னர் பாதுகாப்புச் செயலாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. தனக்கும் பொதுபலசேனாவுக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லையெனக் கூறி பத்திரிகை மாநாடொன்றை கூட்டி கருத்துத் தெரிவிக்குமாறு ஞானசார தேரருக்கு பாதுகாப்புச் செயலாளர் கூறியதாக தெரியவருகிறது. இப்போதைக்கு சில ஊடகவியலாளர்களுக்கும் எனக்கும் தெரிந்த ஒரு இரகசியத்தை கூறப்போகிறேன். பேருவளை சம்பவத்துக்குப் பின்னர் ஊடகவியலாளர் மாநாட்டில் ஞானசார தேரர் தெரிவித்த கருத்தை ஒளிபரப்புமாறு ஊடக நிறுவனமொன்றின் செய்திப் பிரிவு பொறுப்பாளரை தொடர்பு கொண்டு புலனாய்வுப் பிரிவின் பிரதான அதிகாரியொருவர் கேட்டுள்ளார். அந்தச் செய்திப் பிரிவு தலைவரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்திருக்கவில்லை. சிறிது நேரத்தின் பின்னர் அந்தத் செய்திப் பிரிவு பொறுப்பாளருடன் தொடர்புகொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, ஞானசார தேரரின் உரையை ஒளிபரப்பித் தருமாறு கூறியுள்ளார். தனது பிரசார நடவடிக்கைகளுக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்றே ஞானசார தேரர் செய்தியாளர் மாநாட்டின்போது தெரிவித்திருந்தார்.

இந்தச் செயலானது “மறைத்து வைக்கப்பட்டிருந்த பூனை வெளியில் பாய்ந்தது” போன்று உள்ளது. பிரபாகரனின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முக்கிய பங்காற்றியதன் மூலம் மக்கள் மத்தியில் வீரராக இருந்த கோட்டாபய ராஜபக்‌ஷ, இன்றைய காலகட்டத்தில் நாட்டின் எதிர்கால பயணத்தை குழப்பத்திற்குள்ளாக்கும் நபர் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றே கூற வேண்டும்.

ராவய பத்திரிகையில்ගෝඨාභයගේ හෙවණැල්ල என்ற தலைப்பில் விக்டர் ஐவன் எழுதி வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.

நன்றி: ராவய