Photo, THE AUSTRALIAN

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் தற்போதைக்கு பயனளிக்கும் அறிகுறிளைக் காட்டுகின்றன. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கவிருப்பது உறுதியாகியிருக்கின்றது. அதன் முதல்கட்ட கடன்தொகை கிடைக்கப்பெற்றுள்ளது. இது தற்போதைய பொருளாதார இடர்பாடுகளை சமாளிக்க வேறு கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு உதவும். பழைய கடன்களையும் புதிய கடன்களையும்  திருப்பிச்செலுத்தக்கூடியதாக இருக்கும் என்பதை உறுதிசெய்வதே சவாலாக அமையும். இதற்காக அரசாங்கம் அதன் புதிய வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கின்றது.

இந்தக் கொள்கை வரிகள் இல்லாமலேயே விலைவாசி உயர்வின் காரணமாக ஏற்கெனவே வாழ்க்கையைச் சமாளிக்க முடியாமல் இருந்த வருவாயை சம்பாதிப்போருக்கு கணிசமான வரிச்சுமையை அதிகரிக்கிறது. அரசாங்க சேவையாளர்களிலும் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களிலும் குறைப்புச்செய்வதற்கான அதன் திட்டங்கள் குறித்தும் அரசாங்கம் அறிகுறிகளைக் காட்டுகின்றது. இவை பட்ஜெட்டை சமநிலைப்படுத்துவதற்கு அவசியமான சீர்திருத்தங்களாக இருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து அரசாங்கத்துக்கு இவை ஆதரவைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய சாத்தியமில்லை. சனத்தொகையில் 40 சதவீதமானோர் தினமும் 225 ரூபாவையும் விட குறைவான பணத்துடன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில் பலர் வறுமைக்கோட்டின் கீழ் விழக்கூடிய ஆபத்து இருப்பதாக உலக வங்கி எச்சரிக்கை செய்திருக்கிறது.

பொருளாதாரத்தை நிலையுறுதிப்படுத்துவதற்குத் தேவைப்படும் பொருளாதாரக் கொள்கைகள் மக்களின் வரவேற்பைப் பெறக்கூடியவையாக இல்லை என்பதே அரசாங்கத்தின் பிரசசினையாகும். அந்க்த கொள்கைகள் அரசியல் ரீதியிலும் சிக்கலானவையாக இருக்கின்றன. கடந்த காலத்தை ஆராய்ந்து பார்க்கத் தவறுவது எமது தோல்விகள் அல்லது தவறுகளுக்கான காரணங்களை உறுதிப்படுத்துவதற்கு உதவுவதில்லை. ஆட்சிமுறைமையை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு அல்லது நேர்மையற்ற முறையில் சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதும் உதவப்போவதில்லை. நிதி வளத்தைப் பொறுத்தவரை நாட்டை ஒப்பேறக்கூடியதாக்குவதற்கு முன்னெடுக்கப்படும் இந்தப் பொருளாதார மறுசீரமைப்பின் செலவுச்சுமை நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அவர்களுக்குக் கீழ் உள்ளவர்கள் மீதே விகிதப் பொருத்தமில்லாத அளவுக்கு கடுமையாக விழப்போகிறது.

வாழ்க்கைச் செலவு வானளாவ உயர்ந்துகொண்டிருக்கும் ஒரு நேரத்தில், நிலையான வருமானத்தைப் பெறுகின்றவர்களைப் பொறுத்தவரை உயர்ந்த மட்டங்களிலான வரிகளினால் இருமடங்கு சுமையைத் தாங்கவேண்டியவர்களாக இருப்பதால் அவர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். செலவு அதிகரிப்புக்களை தங்களது வாடிக்கையாளர்கள் மீது சுமத்திவிடக்கூடிய நிலையில் இருக்கும் வர்த்தக சமூகத்தினர் மற்றும் சுயாதீன துறைசார் நிபுணத்துவ பிரிவினரைப் போலன்றி, இந்த நிலையான வருமானத்தைப் பெறும் பிரிவினர்  வாழ்க்கையைச் சமாளிப்பதற்கு பெரும் சிரமப்படுகின்றனர். 12 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் அல்லது சனத்தொகையில் ஐந்து சதவீதமானவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக கடந்தவருடம் நாட்டை விட்டு வெளியேறியிருப்பதாக குடியகல்வு புள்ளிவிபரங்கள் காடடுகின்றன.

மக்கள் அனுபவிக்கின்ற பொருளாதார இடர்பாடுகள் பாரம்பரிய தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் அமைப்புக்களின்  ஒன்றிணைந்த போராட்டங்களுக்கு வழிவகுத்திருக்கின்றன. தங்களுக்குப் பாதிப்பாக அமையக்கூடிய முறையில் வருவாய் பெருக்கத்தில் ஈடுபடும் அரசாங்கத்துக்கு எதிராக இவர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறா்கள். அடையாள வேலைநிறுத்தம் என்று வர்ணிக்கப்பட்ட கடந்த வாரத்தைய வேலைநிறுத்தம்  இணக்கமான ஒரு பிரதிபலிப்பை வெளிப்படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தும் அளவுக்கு வெற்றிகரமானதாக அமைந்தது. ஜனாதிபதிக்கு நெருக்கமான அரசாங்க உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தியதைப் போன்று தொழில்களை இழக்கவேண்டிவரும் என்பது மாத்திரமல்ல, சொத்துக்களும் சுவீகரிக்கப்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக போலும் பல ஊழியர்கள் வேலைக்கு வராமல் இருக்கவில்லை.

இதற்கு ஒரு முன்னுதாரணம் இருக்கிறது. 1980 ஜூலை வேலைநிறுத்தின்போது ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அன்றைய அரசாங்கம் எச்சரித்தது. அந்த எச்சரிக்கையை நடைமுறைப்படுத்திய அரசாங்கம் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அரச ஊழியர்களை வேலைநீக்கம் செய்தது. அந்த ஊழியர்களும் அவர்களின் குடும்பங்களும் பல வருடங்களாக பெரும் கஷ்டப்படவேண்டியேற்பட்டது. அன்றைய அரசாங்கம் மக்களின் அமோக ஆணையைக் கொண்ட அரசாங்கமாக இருந்த காரணத்தினால் சமூகத்தின் ஏனைய பிரிவினர் அடக்குமுறைக்கு எதிராக எதையும் செய்யமுடியவில்லை.

தற்காலிக ஓய்வு

தங்களது பொருளாதாரக் கஷ்டங்களையும் மனக்குறைகளையும் பரிசீலனைக்கு எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வந்திருப்பதன் விளைவாக வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக Determination தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.

பல்வேறு துறைகளையும் சேர்ந்த நாற்பதுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் இணைந்தன. தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதனாலேயே வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாக அவை விளக்கமளித்தன. வேலைநிறுத்தத்தின் விளைவாக சுகாதாரம், தபால் மற்றும் ரயில் போன்ற சேவைகள் பாதிக்கப்பட்டன.

கல்வி, துறைமுகம், நீர்விநியோகம், பெற்றோலியம், வீதி அபிவிருத்தி, மின்சாரம் மற்றும் வங்கிச்சேவைகள் உட்பட  ஏனைய துறைகளையும் சேர்ந்த ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் இணைந்தனர். தங்களது பிரச்சினைகள் மற்றும் அக்கறைகள் குறித்து ஆராய முன்வருவதாக ஜனாதிபதி செய்த அறிவிப்பு தொடர்பில் அரசாங்கத்துடன் பேசவிருப்பதாக கூறிய  வேலைநிறுத்தம் செய்த தொழிற்சங்கங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தியிருக்கின்றன. இது அரசாங்கம் அதன் தந்திரோபாயத்தை மறுபரிசீலனை செய்வதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கும். 1980 பதவியில் இருந்த அரசாங்கத்தைப் போலன்றி தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை கிடையாது. கடந்த வருடத்தைய மக்கள் போராட்ட இயக்கத்துக்குப் பிறகு இன்றைய அரசாங்கத்துக்கு ஒரு சட்ட ஆணை மாத்திரமே இருக்கிறது.

மக்களின் விரக்திக்கும் வெறுப்புக்கும் மத்தியில் அரசாங்கம் இதுவரையில் விட்டுக்கொடுக்காமல் இருந்துவருகிறது. மக்கள் போராட்டம் அடக்கியொடுக்கப்பட்டிருக்கிறது. போராட்ட இயக்கத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டருக்கிறார்கள். திட்டமிடப்பட்டபடி பொருட்களின் விலைகளும் வரிகளும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் உறுதிப்பாட்டுக்கும் நிதி வளங்கள் பெருக்கத்துக்கும் அவசியமான பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை கொடுப்பது என்ற அடிப்படையில் அரசாங்கம் தான் எடுக்கும்  மிகவும் கடுமையான நிலைப்பாடுகளை நியாயப்படுத்திக்கொண்டுவருகிறது.

ஆனால், மக்களின் அபிப்பிராயத்தை செவிமடுக்க மறுப்பதன் மூலமாக அரசாங்கம் தன்னை தொழிற்சங்கங்களாக இருந்தாலென்ன அரசியல் கட்சிகளாக இருந்தாலென்ன ஒழுங்கமைக்கப்பட்ட சக்திகளுடன் ஒரு மோதல் போக்கிற்கே கொண்டுசெல்கிறது. சமூகத்தின் ஏனைய பிரிவுகள் ஒப்பீட்டளவில் பாதிக்கப்படாமல் இருந்தாலும் கூட பொருளாதார சுமையின் கடுமை பரந்தளவு பிரிவினரை பெரிதும் பாதிக்கிறது. இது ஒரு பெரும் அநீதி என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. அதை நிச்சயம் அகற்றவேண்டும். தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதும் மக்கள் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பிலான அணுகுமுறையை மறுபரிசீலனை செய்வதும் தற்போதைய சூழ்நிலையில் சமாதானத்தை ஏற்படுத்தும் சைகைகளாக அமையமுடியும்.

மறபுறத்தில், சட்டத்தின் பிரகாரம் நடத்தவேண்டியிருப்பதும் ஏற்கெனவே இரு தடவைகள் தேர்தல் ஆணைக்குழுவினால் திகதி நிர்ணயிக்கப்பட்டதுமான உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக காட்டிவருகின்ற மறுப்பு அரசியல் நெருக்கடியை மோசமாக்குகிறது. தேர்தல்களுக்குத் தேவையான நிதி வளங்களை திறைசேரி விடுவிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளுக்கு முரணாகவும்  எடுத்திருக்கும் நிலைப்பாட்டினால் அரசாங்கம் அதற்கான எதிர்ப்பை தொடர்ந்து விரிவடையச்செய்துகொண்டே போகிறது.

மக்களின் ஆதரவைப் பெறுவதில் தனக்கு இருக்கும் ஆற்றல் தொடர்பில் அரசாங்கத்துக்கு இருக்கும் அச்சவுணர்வே அது உள்ளூராட்சி தேர்தல்களை குழப்புவதற்குக் கொண்டிருக்கும் திடசங்கற்பத்துக்குக் காரணமாகும். எதிரணி கட்சிகளையும் விட மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே அரசாங்கக் கட்சிகளின் மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஜனாதிபதி விக்கிரமசிங்கவைத் தவிர மற்றும்படி ஒரு வருடத்துக்கு முன்னர் மக்கள் இயக்கத்தின் சீற்றத்துக்கு முகங்கொடுக்கமுடியாமல் அபகீர்த்திக்குள்ளாகி பதவியில் இருந்து விலகிய அதே அரசியல் கட்சிகளினதும் அரசாங்கத்தினதும் உறுப்பினர்களையே தற்போதைய அரசாங்கம் கொண்டிருக்கிறது.

ஜனாதிபதியின் தெரிவுகள்

அரசாங்கம் இதுவரையில் அதற்கு இருக்கக்கூடிய நெருக்குதல்களுக்கு பொலிஸ் நடவடிக்கைகளின் மூலமாக போராட்ட இயக்கத்தை ஒடுக்குவதன் மூலமே பதிலளித்துவருகிறது. வீதிப்போராட்டங்களை அரசாங்கம் பொறுத்துக்கொள்ளத் தயாராயில்லை. அத்துடன், சட்டத்தைப் பொருட்படுத்தாமல் அரசாங்க நிறுவனங்கள் தனது விருப்புக்கேற்ப செயற்படவேண்டும் என்று அவை மீது அரசாங்கம் நெருக்குதலையும் பிரயோகிக்கிறது. உள்ளூராட்சி தேர்தல்களுக்கான திகதிகளை நிர்ணயிப்பதில் தேர்தல் ஆணைக்குழு எடுத்த தீர்மானம் ஒரு தடவை அவமதிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தேர்தல்களை மீண்டும் ஒத்திவைக்கவேண்டியிருக்கிறது போன்று இப்போது தோன்றுகிறது. அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைப்பதற்கு தன்னாலியன்றவரை சிறப்பாக சுயாதீனமாக செயற்பட்டுவரும்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அமைச்சர்களுக்கு விடுக்கின்ற அழைப்பாணைகளையும் அரசாங்கம் அவமதிக்கிறது.

தேர்தல் நோக்கங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை நிறுத்திவைப்பதற்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை மதித்துச் செயற்படுவதற்கு அரசாங்கம் மறுப்பது நீண்டகால நோக்கில் நாட்டுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சட்டத்தின் ஆட்சிக்கு பெரும் தாக்கமாகும். இவையெல்லாம் எதிர்காலத்தில் தகராறுகளையும் சட்டம் ஒழுங்கு இன்மையையும் கொண்டுவரக்கூடிய எதிர்மறையான போக்குகளாகும். இவை நீண்டகாலத்துக்கு நாட்டின் அபிவிருத்திக்கும் விழுமியங்களுக்கும் பாரிய பாதக விளைவுகளைக் கொண்டுவரக்கூடியவையாகும்.

நிலைவரத்தின் பாரதூரத்தன்மையை விளங்கிக்கொள்ளக்கூடியவராக ஜனாதிபதி விக்கிரமசிங்க இருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. பிரச்சினைகள் தொடர்பில் நெருக்குதல்கள் அதிகரிப்பது தவிர்க்கப்படவேண்டும். அனுபவமிக்க ஒரு அரசியல் தலைவராகவும் சிறந்த வாசிப்பு பழக்கத்தைக் கொண்ட சர்வதேச அரசியல் மாணவராகவும் இருக்கும் ஜனாதிபதி அரசாங்கத்தின் மூன்று கிளைகளுக்கும் இடையில் ஏற்படக்கூடிய ஒரு மோதல் கொண்டுவரக்கூடிய ஆபத்துக்களை நன்கு அறிவார்.

நீதித்துறையுடனான ஒரு மோதல் அல்லது நீதித்துறையின் தீர்மானங்களை மறுதலிக்கும் செயல் சட்டமுறைமை முழுமையின் மீதுமான நம்பிக்கையை அரித்துச்சென்றுவிடும்; அரசியல் சமுதாயத்தின் உறுதிப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சி மீது அதற்கு இருக்கவேண்டிய  பற்றுறுதியில் முதலீட்டாளர்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நம்பிக்கையை இல்லாமல் செய்துவிடும். உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தவேண்டிய தேவை குறித்த அமெரிக்கத் தூதுவரின் வலியுறுத்தல் இந்த உண்மையை உணர்த்தியிருக்கும்.

உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தவேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் அமெரிக்காவைப் போன்றே ஏனைய மேற்குலக நாடுகளும் ஜப்பானும் அதே நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை போன்ற நிதிச்சலுகைகள் மற்றும் பயன்களின் வடிவில் உலகின் மிகவும் பெரிய தனவந்த நாடுகளான இவற்றின் இலங்கை அதன் பொருளாதார உயிர்வாழ்வு, வர்த்தகம் மற்றும் உதவிகளுக்காக தங்கியிருக்கிறது. அதனால் உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திடமிருந்தும் வருகின்ற இந்த நெருக்குதல்கள் தேர்தல்களின் திசையில் அரசாங்கத்தை உந்தித்தள்ளி மக்களிடமிருந்து புதிய ஆணையப் பெற நாட்டம் கொள்ளவைக்கக்கூடும்.

உருப்படியான முறையில் ஆட்சி செய்வதற்கு அரசாங்கத்தின் நியாயப்பாட்டை வலுப்படுத்தவும் தேசிய நலன்களுக்காக பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் தேர்தல் ஆணையொன்று தேவை. வேண்டப்படும் ஆணை உள்ளூராட்சி மட்டத்தில் இல்லாமல் இருக்கலாம். அங்கு அரசாங்கம் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதை கருத்துக்கணிப்புக்கள் காட்டுகின்றன. ஆனால், ஜனாதிபதி தனது தற்துணிபை பிரயோகிக்கக்கூடிய தேசிய மட்டத்தில் அந்த ஆணை வரக்கூடும்.

கலாநிதி ஜெகான் பெரேரா