Photo, Ishara Kodikara / AFP, LICAS.NEWS

பொருளாதாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதன்மையான இலக்காகக் கொண்டிருக்கும் பருநிலை உறுதிப்பாட்டை (Macro Stability) நோக்கிய நகர்வுக்கான அறிகுறிகளை காண்பிக்கத் தொடங்கியிருக்கிறது. இவற்றில் தெளிவாக காணக்கூடியதாக இருப்பது அமெரிக்க டொலருக்கும் ஏனைய சர்வதேச நாணயங்களுக்கும் எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பாகும். இந்த அதிகரிப்பு பெறுமதி குறைந்துகொண்டுவந்த முன்னைய போக்கில் இருந்து ஒரு மாற்றத்தை குறிக்கிறது.

கடந்த ஒரு வருடமாக உத்தியோகபூர்வ நாணயப் பரிமாற்ற வீதத்தில் டொலரின் பெறுமதி 80 சதவீதமளவுக்கு உயர்ந்தது. கறுப்புச் சந்தையில் இந்த வீதம் மேலும் கூடுதலானதாக இருந்தது. சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட மேம்பாடு உட்பட வெளிநாட்டு நாணய சம்பாத்தியத்தில் காணப்படும் உயர்வே ரூபாவின் பெறுமதி அதிகரிப்புக்கு காரணமாகும். ஆனால், அந்த அதிகரிப்பு இன்னமும் இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் வங்குரோத்து நிலை பிரகடனத்தின் விளைவாக வெளிநாட்டுக் கடன்களை மீளச்செலுத்துவதில் இடைநிறுத்தம் ஆகியவற்றிலேயே தங்கியிருக்கிறது.

பெரிதும் தாமதமாகும் சர்வதேச நாணய நிதியத்தின் 290 கோடி டொலர்கள் கடனுதவி இறுதியில் வரவிருக்கிறது என்ற அரசாங்கத்தின் ஊர்ஜிதம் நம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு விடயமாகும். இதை விட உலக வங்கியுடனான நாணயப் பரிமாற்றத்தின் மூலம் 40 கோடி டொலர்களும் கிடைக்கவிருக்கிறது. இவையெல்லாம் பொருளாதாரத்தின் நேர்மறையான நோக்கின் குறிகாட்டிகளாகும். பருநிலை உறுதிப்பாட்டை அடைவதற்கான அரசாங்கத்தின் மூலோபாயம் நாட்டுக்கு பயன்தரத் தொடங்கியிருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

ஆனால், பருநிலை பொருளாதார மீட்சி பரந்தளவில் சனத்தொகைக்கு பயனைத் தருவதாக இருக்கவேண்டுமேயன்றி உயர்ந்த வருமானம் பெறும் பிரிவினரின் ஏகபோகத்துக்குரியதாக அமைந்துவிடக்கூடாது என்பதை அரசாங்கம் மனதிற் கொள்ளவேண்டும். சுதேச உள்ளீடுகள் மற்றும் பயன்விளைவுகளை அடிப்படையாகக் கொண்ட நிலைபேறான பொருளாதார மீட்சி முறைமையொன்றை முன்னெடுக்கவேண்டிய தேவை இருக்கிறது.

ஒரு நலன்வாய்ந்த சமுகமும் அதை அடைவதற்கான பொருளாதாரத் திட்டமும் அடிமட்ட மக்களைப் பாதுகாப்பதாக இருக்கவேண்டும். கடந்த வார இறுதியில் நான் ஒரு மரணச்சடங்கில் கலந்துகொண்டேன். இறந்தவர்  80 வயதையும் தாண்டியவர் போன்று காணப்பட்டார். ஆனால், அவரின் உண்மையான வயது 63. மரணத்துக்கு காரணம் புற்றுநோய். அவருக்கு புற்றுநோய் இருப்பதாக முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது  அரசாங்க புற்றுநோய் வைத்தியசாலையில் கெமோதெராபி மருந்துகள் இருக்கவில்லை. பொருளாதார வசதிகுறைந்த மக்களுக்காகவே அந்த வைத்தியசாலை இருக்கிறது.

இறந்தவர் மிகவும் உறுதியானவராக இருந்ததாகவும் நோயின் ஆரம்பத்தில் கெமோதெராபியுடன் அவரால் நலமாக இருந்திருக்கமுடியும் என்று அவரின் குடும்பத்தவர்கள் கூறினர். பல மாதங்கள் கழித்து கெமோதெராபி மருந்துகள் கிடைக்கப்பெற்றபோது நோயாளி மிகவும் பலவீனமடைந்துவிட்டார். புற்றுநோயும் பரவிவிட்டது. பலவீனப்பட்டுவிட்ட அவரின் உடல் செறிவுகூடிய மருந்துகளுக்கு ஈடுகொடுக்க முடியாததாகிவிட்டது. இறுதியில் குடும்பத்தினர் இழப்பை தாங்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.

முக்கியத்துவம் வாய்ந்த  தீர்ப்பு

உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கத்துக்கு  இருக்கும் தயக்கம் இப்போது தெளிவாக தெரிய வந்துவிட்டது. மேற்கூறப்பட்ட மரணத்தைப் போன்று எண்ணற்ற கதைகள் இருப்பதை அரசாங்கம் நன்றாக அறியும். கணிசமான பொருளாதார மீட்சி அறிகுறிகளை மக்களுக்கு காண்பித்துவிட்டு தேர்தலுக்கு  போவதையே அரசாங்கம் விரும்பும். பெரும்பாலான வாக்காளர்கள் வசதியானவர்கள் அல்ல, வறியவர்களே. வசதியானவர்களை விடவும் வறியவர்களுக்கு இடர்பாடுகளைக் கொடுக்கின்ற ஒரு பொருளாதாரக் கொள்கையைக் கொண்ட அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கவே அவர்கள் விரும்புவார்கள்.

அதனால் உள்ளூராட்சி தேர்தல்களுக்கு 1000 கோடி ரூபாவை செலவிடுவதை விடவும் அதே பெறுமதியான அரிசியை மக்களுக்கு இலவசமாக கொடுக்க அரசாங்கம் விரும்பியிருக்கிறது. மக்கள் தங்கள் சொந்த சம்பாத்தியத்தில் வாழ்வதற்கு ஏதுவாக அவர்களை வலுவூட்டுவதற்கு அரசாங்கத்தின் உதவியில் தங்கியிருக்கும் கலாசாரத்தில் விடுபடவேண்டிய தேவை  இருக்கிறது. தேர்தல் ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட மார்ச் 9 அரசாங்கத்தைப் பொறுத்தவரை மிகவும் சீக்கிரமான திகதியாகும். அதனால் தேர்தல்கள் பின்போடப்படுவதை அது உறுதிசெய்தது.

2023 பட்ஜெட்டில் தேர்தல் நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்காமல் தடுத்துவைக்கக்கூடாது என்று கடந்தவாரம் உயர்நீதிமன்றம் நிதியமைச்சின் செயலாளருக்கும் சட்டமா அதிபருக்கும் இடைக்கால தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. இந்த நேரத்தில் அல்லது சீக்கிரமாக எந்த நேரத்திலும் உள்ளூராட்சி  தேர்தல்களை நடத்தப்படமாட்டாது என்ற  நிலைப்பாட்டில் இருந்து  அவமானப்படாத முறையில் பின்வாங்குவதற்கான ஒரு வாய்ப்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசாங்கத்துக்கு  வழங்கியிருக்கிறது. நிதியமைச்சு உடனடியாகவே தேர்தல்களை நடத்துவதற்கு வசதியாக தேவையான நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் விடுவிக்கும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. தேர்தல்களுக்கான புதிய திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எடுக்கக்கூடிய தீர்மானத்துக்கு செவிமடுப்பதற்கு அரசங்கத்துக்கு இப்போது வழி திறந்துவிடப்பட்டிருக்கிறது. அதன்படி ஏப்ரல் 25ஆம் திகதி அன்று உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.

முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்றத் தீர்ப்பை வழங்குவதில் இதே போன்ற பிரச்சினையை கையாளவேண்டியிருந்த பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்று வசதியாக அமைந்திருக்கக்கூடும். நிதி வளங்கள் இல்லாமையால் மாகாண தேர்தல்களை நடத்தமுடியவில்லை என்று பாகிஸ்தான் அரசாங்கம் கூறியது. மாகாண சட்டசபைகள் கலைக்கப்பட்ட திகதியில் இருந்து 90 நாட்களுக்குள் தேர்தல்கள் இடம்பெறவேண்டும் என்று பாகிஸ்தான் நீதிமன்றம் காலக்கெடு விதித்தது.

நிதி இல்லை என்பதை காரணம் காட்டி அரசாங்கம் ஒன்று தேர்தல்களைப் பின்போட அனுமதித்தால் அது ஆபத்தான முன்னுதாரணம் ஒன்றை ஏற்படுத்திவிடும் என்று இலங்கையில் உள்ளதைப் போன்றே பாகிஸ்தானிலும் அக்கறை இருந்தது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் நிதி வளங்கள் பற்றாக்குறையை தொடர்ந்து எதிர்நோக்குவதால் தோல்வியைச் சந்திக்கவேண்டிவரும் என்று அரசாங்கம் கருதுகின்ற தேர்தல் ஒன்றை பின்போடுவதற்கு நிதிப்பற்றாக்குறையை காரணமாக காண்பிக்கமுடியும்.

இரு நாடுகளிலுமே நடத்தப்படவேண்டியிருப்பவை நாடாளுமன்ற தேர்தல்கள் அல்ல, அடுத்த மட்டத்திலான தேர்தல்களே என்பது கவனிக்கத்தக்கது. மக்களின் கவனத்தில் இல்லாவிட்டாலும் கூட இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நான்கு வருடங்களுக்கும் அதிகமான காலமாக பின்போடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளிலுமே இந்தத் தேர்தல்களில் அரசாங்கத்துக்கு கடுமையான தோல்வி ஏற்பட்டால் முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை எழும் என்ற ஐயம் இருக்கிறது. சட்டப்படி அவ்வாறு செய்யவேண்டும் என்றில்லை. இலங்கையில் சட்டப்படி தற்போது நடத்தப்படவேண்டியிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களைப் போலன்றி நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கும் கூடுதலான காலம் இருக்கிறது. அதனால்தான் ஜனாதிபதி விக்கிரமசிங்க உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகளினால் அல்ல நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் மாத்திரமே அரசாங்கத்தை மாற்றமுடியும் என்று கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.

ஜனாதிபதியின் தெரிவுகள்

கடந்த ஒரு வருட காலமாக மக்கள் முகங்கொடுத்துவரும் பொருளாதார இடர்பாடுகளின் விளைவாக தற்போதைய தருணத்தில் அரசாங்கம் மோசமான தேர்தல் தோல்வியொன்றை சந்திக்கக்கூடிய வாய்ப்பே இருக்கிறது. சட்டப்படி பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கின்ற போதிலும் உள்ளூராட்சி தேர்தல்களில் அரசாங்கத்துக்கு ஏற்படக்கூடிய தோல்வி அதை பதவிவிலகுமாறு எதிர்க்கட்சிகள் கோரும் சூழ்நிலைக்கு வழிவகுத்து வீதிப்போராட்டங்களும் மூளக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

அதன் காரணத்தினால்தான் அரசாங்கத்தை மாற்றுவதற்கான எந்த முயற்சியும் நாடாளுமன்ற தேர்தல் போன்ற உகந்த வழிமுறைகளின் ஊடாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பது முக்கியமானது என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க சொல்லவேண்டியேற்பட்டது. நாடாளுமன்றத்துக்குப் பதிலாக வீதிகள் ஒரு தெரிவு அல்ல. ஏற்றுக்கொள்ளப்பட்ட செயன்முறைகளை சீர்குலைப்பதற்கான எந்த முயற்சியுமே இலங்கையின் அரசியலமைப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் மீறுவதாக அமையும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் ஒன்றின் மூலமாக மாத்திரமே அரசாங்கத்தை மாற்றமுடியும் என்ற ஜனாதிபதியின் கூற்று உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் கட்சிக்குத் தோல்வியடைந்தாலும் கூட நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படப்போவதில்லை என்ற எச்சரிக்கையேயாகும். உள்ளூராட்சி தேர்தல்களில் தோல்வியடைந்த போதிலும் அரசாங்கங்கள் வீழ்ச்சியடையாமல் சட்டப்படி அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் வரை பதவியில் தொடர்ந்து இருந்ததற்கு கடந்த கால உதாரணங்கள் இருக்கின்றன.

2018 பெப்ரவரி உள்ளூராட்சி தேர்தல்களில் அன்றைய அரசாங்கம் படுதோல்வி கண்டது. ஆனால், அந்த நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடையும் வரை அரசாங்கம் தொடர்ந்து பதவியில் இருந்தது. 2020 ஆகஸ்டிலேயே நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே அந்த தேர்தலில் அரசாங்கம் படுதோல்வி கண்டது. இப்போது கூட ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை அதிகாரத்தில் இருக்க உறுதிபூண்டிருப்பதாகத் தெரிகிறது.

2018 பெப்ரவரி உள்ளூராட்சி தேர்தல்களில் தோல்வி கண்ட அரசாங்கத்துக்கு பிறகு நேர்ந்த கதி தனக்கு ஏற்படுவதை தவிர்ப்பதே இன்றைய அரசாங்கத்துக்கு இருக்கும் சவாலாகும். 2018ஆம் ஆண்டில் விக்கிரமசிங்க பிரதமராகவே பதவியில் இருந்தார். ஆனால், இப்போது அவர் உச்சபட்ச அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதியாக இருக்கிறார். இதுவே அன்றைய சூழ்நிலைக்கும் இன்றைய சூழ்நிலைக்கும் இடையிலான வித்தியாசம். தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தில் இரண்டரை வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தனது விருப்பப்படி எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்கக்கூடிய அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்.

தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தாங்கள் தோல்வியைச் சந்திக்கக்கூடிய தேர்தலுக்கு முகங்கொடுக்க ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பப்போவதில்லை என்பதால் அவர்கள் ஜனாதிபதிக்கு பணிந்தவர்களாக நடந்துகொள்வதற்கான சாத்தியமே இருக்கிறது.

அதனால் ஜனாதிபதி மனதிற்கொண்டுள்ள இரு விவகாரங்களில் அவர் தனது அதிகாரத்தை முழுமையாக செலுத்தக்கூடிய சந்தர்ப்பம் கிட்டியிருக்கிறது. ஒன்று இலங்கையின் பொருளாதார மீட்டெடுப்பது. மற்றையது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது. இவற்றுக்கு நாடாளுமன்றத்தின் ஆதரவைப் பெறுவதில் அவர் அக்கறை செலுத்துகிறார்.

கலாநிதி ஜெகான் பெரேரா