மூன்றாம் உலக நாடு ஒவ்வொன்றிலும் புரட்சி செய்வதில் வெற்றிபெறாத ஒரு பிடெல் காஸ்ட்ரோவோ, அமில்கார் கப்ராலோ அல்லது என்குயென் கியாப்போ இருக்கவே செய்கிறார்கள். ஆனால், அவர்கள் அநீதிக்கும் சகிப்புத்தன்மையின்மைக்கும் அசமத்துவத்துக்கும் எதிரான தங்களது போராட்டத்தில் புரட்சிவாதிக்குரிய பண்புகளையும் நேர்மையுடனான ஒழுக்கமுறையையும் அர்ப்பணிப்பு உணர்வையும் உருவகப்படுத்தி நிற்பதன் மூலமாக சோசலிசத்தின் விதைகளை ஆழமாக வேரூன்றச் செய்திருக்கிறார்கள். சண்முகதாசன் அத்தகைய ஒரு மனிதரே.

அவரைப் பொறுத்தவரை, சோசலிசத்தை அடைவதற்கு குறுக்குவழி கிடையாது. நாடாளுமன்றப் பாதையும் அதற்குக் கிடையாது. இலக்குகளுக்கும் வழிமுறைகளுக்கும் இடையே விட்டுக்கொடுப்பும் இருக்கமுடியாது. அதனால் அவரால் ஒருபோதும் அதிகாரத்தை எட்டமுடியவில்லை. ஒரு தடவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோதிலும் கூட நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவரால் வரமுடியவில்லை.

சண் தனது அரசியல் போக்கை ஜனரஞ்சக அரசியலாக ஒருபோதும் தாழ்த்திக்கொண்டதுமில்லை. அவ்வாறிருந்தாலும் அவர் ஒரு மக்களின்  தலைவன். தொழிலாளர் வர்க்கத்தின் சேவகன்.

1939ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் மார்க்சியத்தை அறிந்துகொண்ட தருணம் முதல் மரணமடையும் வரை சண் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கும் வர்க்கங்கள் இல்லாத சமூகத்தை அடையும் வேட்கைக்குமான இலட்சியத்துக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.

முதலில் லெனினையும் சோவியத் கம்யூனிசத்தையும் பின்பற்றிய சண் 1963ஆம் ஆண்டுக்குப் பிறகு வழிகாட்டலுக்காக மாவோ சேதுங்கின் சீனா நோக்கித் திரும்பினார். அந்தப் பயணத்தில் அவர்  தொழிற்சங்கவாதியாக, தத்துவார்த்தியாக, வாதப்பிரதிவாதம் செய்பவராக, கட்டுரையாளராக, போராளியாக, சேவகனாக விளங்கினார்.

நம்பிக்கையற்றதாக தோன்றிய இலட்சியங்களுக்காக குரல்கொடுப்பதற்கு தயங்காத சண் தனது செயற்பாடுகளின் மூலமாக அந்த இலட்சியங்களை நம்பிக்கைக்குரியவையாக்கினார்.

டி.எஸ்.சேனநாயக்கவின் அரசாங்கம் இந்திய வம்சாவளி தோட்டத்தொழிலாளர்களின் குடியுரிமையயும் வாக்குரிமையையும் பறித்ததையடுத்து அந்த மக்கள் இடதுசாரி அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை தேர்தல் நோக்கங்களுக்காக தீண்டத்தகாதவர்களானார்கள். ஆனால், செங்கொடி சங்கத்தின் மூலமாக தோட்டத்தொழிலாளர்களின் இலட்சியங்களுக்காக குரல்கொடுத்த சண் அவர்களுக்குப் போராட்ட உணர்வை ஊட்டினார்.

இந்து சமுதாயம் அதன் வெறித்தனமான சாதி அடக்குமுறைக் கட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கோவில் கதவுகளை மாத்திரமல்ல, பொது இடங்களின் கதவுகளையும் மூடியபோது ‘உயர்சாதி’ இந்து குடும்பத்தைச் சேர்ந்தவரான சண் பிராமணர்களின் மாடங்களுக்குள் அந்த மக்களை வழிநடத்திச்சென்று மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டினார்.

பாரம்பரிய அர்த்தத்தில் சண் ஒரு குரு. முன்னுதாரணத்தாலும் போதனையாலும் அவர் ஒரு ஆசிரியர். பொதுவாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு உதாரண புருசர். இலங்கையின் அரசியல் சமுதாயம் முற்றுமுழுதாக ஊழல்தனமானதாக மாறியிருந்த ஒரு நேரத்தில் பணத்துக்கு விலைபோகும் குணத்தினாலோ அல்லது அதிகார மோகத்தினாலோ தீண்டப்படமுடியாதவராக சண் விளங்கினார்.

இலங்கையில் புத்திஜீவித்துவ வாழ்வு கீழ்த்தரமானதாகவும் அருவருக்கத்தக்கதாகவும் மாறியிருந்த ஒரு நேரத்தில் சண் இருண்ட உலகின் ஒரு தீபம் போன்று தனது புத்திஜீவித்துவ நேர்மையை வெளிக்காட்டினார். இலங்கை மிகவும் கொடூரமான இனவாத வன்முறைக்குள் மூழ்கிக்கிடந்த ஒரு நேரத்தில் சண் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏகோபித்த நீதி வேண்டிக் குரல்கொடுத்தார்.

மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் அவர் கண்ட வேறுபாடு ஒரு கோட்பாட்டு அடிப்படையிலான நவீனத்துவம் அல்ல, மாறாக ஆழமான ஒரு மெய்யுணர்வாகும். மற்றெவரையும் விட முன்கூட்டியே நிலைவரங்களைப் புரிந்துவிளங்கிக் கொள்ளக்கூடிய சிறப்புவாய்ந்த இயங்கியல் சிந்தனையாற்றலை கொண்டிருந்த சண் தான் தலைமை தாங்கிய மக்களை விடவும் முன்கூட்டியே விடயங்களை தெரிந்துகொள்கிற ஒரு அரசியல் இயல்புணர்ச்சியைக் கொண்டவராகவும் விளங்கினார்.

ஒரு அர்த்தத்தில் நோக்கும்போது சண் தனது காலத்துக்கு முந்தியவர் மாத்திரமல்ல, ஆழ்கடலின் நடுவில் தெரியும் மலைக்குன்றைப் போன்றவர்.

ஏ.சிவானந்தன்

(காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் அவர்களின் மறைவையடுத்து 1993 முற்பகுதியில் லண்டனில் ‘இனமும் வர்க்கமும்’ (Race and Class) சஞ்சிகையின் ஆசிரியர் ஏ.சிவானந்தன்  எழுதிய அஞ்சலிக் குறிப்பு இன்று அவரது 30ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.)