Photo, Ishara S. Kodikara/ AFP, THE EDITION

இலங்கை காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு பெற்ற சுதந்திரத்தின் 75ஆவது வருட நிறைவை அரசாங்கம் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டாடியது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் ஒரு உரையை நிகழ்த்தவில்லை. தயாரிக்கப்பட்ட உரை சிறப்பானதாக இருந்தது. ஆனால், அது பின்னரே விநியோகிக்கப்பட்டது. இராணுவ அணிவகுப்பு நடைபெற்ற கொழும்பு காலிமுகத்திடலில் பொது மக்களின் பங்கேற்பு தவிர்க்கப்பட்டமை சுதந்திர தின நிகழ்வில் அவதானிக்கக்கூடியதாக இருந்த இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

வழமையான சூழ்நிலைகளில், சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது காலிமுகத்திடலில்   கரையோரக் காற்றையும் விரிந்து பரந்த பசுமையான மைதானத்தையும் ரசிக்க மக்கள் கூட்டம் நிரம்பிவழியும். மக்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்தால் கண்கவரும் இராணுவ  அணிவகுப்பையும் விமானப்படையின் சாகசங்களையும் கண்டு ரசிக்க அவர்கள் தவறியிருக்கமாட்டார்கள். ஆனால், பாதுகாப்பின்மை உணர்வுடன் இருக்கும் அரசாங்கம் நிலைவரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பியது என்பது தெளிவாகத் தெரிந்தது. அதனால், பெருமளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது.

மக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவர்களில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கக்கூடும் என்று அரசாங்கம் அஞ்சிய காரணத்தினாலேயே பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. முதல்நாள்  இரவு பெரும்பாலும் இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சத்தியாக்கிரகத்தை தண்ணீர்ப் பீரங்கித் தாக்குதல் நடத்தி பலவந்தமாக கலைத்தனர். நாட்டு மக்கள் கொண்டாடுவதற்கு பெரிதாக எதுவும் இல்லாத ஒரு நேரத்தில் சுதந்திர தின நிகழ்வுக்காக பெருமளவு நிதி வீணாக ஒதுக்கப்பட்டதை ஆட்சேபித்தே இளைஞர்கள் அந்த சத்தியாக்கிரகத்தை முன்னெடுத்தனர்.

பெருமளவு பாதுகாப்புப் படையின் பிரசன்னம் இருந்தபோதிலும் அமைதியான முறையில் போராட்டத்தைச் செய்தவர்கள் குண்டர் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்காகினர். சத்தியாக்கிரகிகள் பொலிஸாரின் நடவடிக்கையை எதிர்த்து  நின்றபோது அவர்கள் தாக்கப்பட்டு  விரட்டப்பட்டதுடன் கைதுசெய்யப்பட்டனர். எந்தவித குழப்பமும் இன்றி சுதந்திர தின கொண்டாட்டங்களை நடத்துவதில் அரசாங்கம் குறியாக இருந்ததே தவிர மக்களின் மனங்களை வென்றெடுப்பதில் அக்கறை காட்டவில்லை.

கொண்டாட்ட அரங்கில் பொதுமக்களின் பங்கேற்பு இல்லாமல் வீதியெங்கும் பொலிஸாரும் படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட விதம் கடந்த தசாப்தங்களில் நாடு முகங்கொடுத்த போர்க்காலத்தை நினைவுபடுத்தியது. அந்த நாட்களில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் கடுமையான பாதுகாப்பின் கீழ் இடம்பெற்ற அதேவேளை  விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருப்பதையே விரும்பினார்கள்.

மக்களின் வாழ்வில் பெரும் அவலங்களை ஏற்படுத்தியிருக்கும் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்குப் பல வருட காலப்போர் பெருமளவில் காரணமாக இருந்ததால் அந்த கடந்த காலத்தை மீட்டுப்பார்ப்பது இன்று பொருத்தமானதேயாகும். சனத்தொகையில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்திருப்பதுடன் 40 சதவீதமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இனநெருக்கடிக்கும் பொருளாதார அபிவிருத்தியின்மைக்கும் இடையிலான தொடர்பை ஏற்றுக்கொண்டவராக ஜனாதிபதி விக்கிரமசிங்க இனநெருக்கடிக்கு தாமதமின்றி அரசியல் தீர்வொன்றைக் காணும் முயற்சிகளுக்கு முன்னுரிமையைக் கொடுத்திருக்கிறார்.

மக்களின் கோபம்

சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்  தலைநகர் கொழும்பில் மாத்திரம் தான் இடம்பெற்றன என்றில்லை. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் குறிப்பாக வடக்கிலும் இடம்பெற்றன. பிரதான தமிழ் கட்சியும் சிறிய கட்சிகளும் சுதந்திர தின நிகழ்வுகளைப் பகிஷ்கரிக்குமாறு அழைப்பு விடுத்தன. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஹர்த்தாலைப் பிரகடனம் செய்து கறுப்புக்கொடிகளைப் பறக்கவிட்டனர். ஆனால், பெரும்பாலான மக்கள் சுதந்திர தினக் கொண்டாட்டங்களிலோ அல்லது அதற்கு எதிரான போராட்டங்களிலோ அக்கறை காட்டவில்லை.

தன்னியல்பான முறையில் மக்கள் தேசியக்கொடிகளைப் பறக்கவிடவும் இல்லை. அரசாங்கமும் அவ்வாறு செய்யுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கவுமில்லை. அரசாங்கம் ஏதோ தனக்காக சுதந்திர தினத்தைக் கொண்டாடியது போன்று தோன்றியது. பொலிஸாரின் பாதுகாப்புடன் பளபளக்கும் வாகனங்களில் வந்திறங்கிய ஆளுநர்களும் அமைச்சர்களும் ஏனைய விருந்தினர்களும் காலிமுகத்திடல் சுதந்திரதின கொண்டாட்ட அரங்கில் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த பந்தல்களில் அமர்ந்ததை தேசிய தொலைக்காட்சிகள் காட்டின. ஆனால், தங்களது தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்னால் இருந்து அவற்றைப் பார்த்த மக்கள் ஆடம்பர வாகன வரிசைகளைக் கண்டு ஆத்திரமடைந்திருப்பார்கள்.

ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்துக்கு முன்னர், தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வங்குரோத்துநிலை பிரகடனம் செய்யப்பட்டதையடுத்து வீதிக்கு இறங்கி மக்கள் செய்த கிளர்ச்சிக்கு மத்தியில் இதே அரசியல் தலைவர்கள் பதுங்கியிருந்தார்கள். பொதுப் போராட்டங்களில் ஒருபோதுமே பங்கேற்காத மக்களும் வீதிகளுக்கு இறங்கியதைக் காணக்கூடியதாக இருந்தது. நாட்டின் செல்வத்தைச் சூறையாடி தங்களை பிச்சைக்காரர்களாக்கிவிட்ட அரசாங்கத் தலைவர்கள் வெளியேறவேண்டுமென்று கோருவதற்கு குழந்தைகளுடன் தாய்மார், வயோதிபர்கள், உடல் ஊனமுற்றவர்கள் என்று சமூகத்தின் பல பிரிவினரும் தொலைதூர இடங்களில்இருந்தும் போராட்டக்களங்களுக்கு திரண்டு வந்தார்கள்.

அதே மக்கள் தாங்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கே திணறிக்கொண்டிருக்கும்போது அதே அரசியல்வாதிகள் ஆடம்பர வாகனங்களில் வந்து சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதை தொலைக்காட்சிகளில் பார்த்து கொதிப்படைந்திருப்பார்கள். ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் செய்துவிட்டு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தண்டனை எதுவும் இன்றி சுதந்திரமாக ஆடம்பர வாழ்க்கையை நடத்தும் போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும் என்றே அரசாங்கத்தை மக்கள் கோருகிறார்கள். ஆனால், அதை அரசாங்கம் செய்யத்தயங்குகிறது போன்று தெரிகிறது.

இத்தகைய பின்புலத்தில் சுதந்திர தினம் இந்த வகையாக யாருக்காகக் கொண்டாடப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. பொருளாதாரம் படுமோசமாக வீழ்ச்சியடைந்திருக்கும் நிலைவரத்துக்கு மத்தியில் கற்பனை செய்துப்பார்த்திருக்க முடியாத முறையில் சுதந்திரதினம் கொண்டாடப்பட்டிருக்கிறது. நிகழ்வுக்கான செலவு தொடர்பில் மக்களின் ஆட்சேபத்தை கருத்தில் எடுக்க அரசாங்கம் முயற்சித்து இராணுவ அணிவகுப்பின் அளவைக் குறைத்தது. வாழ்வின் அழகியல் பக்கத்தைப் பிரதிபலிக்கும் கலாச்சார அணிவகுப்புக்களும் நிறுத்தப்பட்டன.

சுதந்திரதினம் வேறுபட்ட முறையில் அதாவது அரசியல் தலைவர்களுக்காகவோ சர்வதேச சமூகத்துக்காகவோ அன்றி மக்களுக்காக கொண்டாடப்பட்டிருக்கவேண்டும். இந்த நிகழ்வு பெருமளவுக்கு சர்வதேச கவனத்தைப் பெறவில்லை. எம்மை உலகம் பார்க்கின்ற முறையை அது மாற்றவில்லை. அது இலங்கை மக்களின் இதயங்களையும் தொடவில்லை. சுதந்திர தினக் கொண்டாட்டங்களை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு அவர்கள் நிச்சயமாக தங்களது நலன்களுக்கு உதவாத அந்தச் செலவினங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்திருப்பார்கள்.

துணிச்சலான உறுதிமொழிகள்

சுதந்திர தினக் கொண்டாட்டத்தை வேறுபட்ட முறையில் நடத்தியிருக்கமுடியும். மக்களின் வாழ்வைப் பாழ்படுத்தியிருக்கும் வறுமையை அரசாங்கம் உணர்ந்து நடந்துகொண்டிருக்க முடியும். மக்கள் மீது அக்கறை காட்டும் பண்புகளை வெளிக்காட்டக்கூடிய முறையில் சுதந்திர தின நிகழ்வை அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்க முடியும். நாடு பூராவும் இருந்து சகல இனங்களையும் மதங்களையும் சாதிகளையும் சேர்ந்த வறிய குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பாடசாலை சிறார்களை அழைத்துவந்து பாடசாலைப் புத்தகங்களையும் சீருடைகளையும் ஒரு அடையாளபூர்வமாக அன்பளிப்புச் செய்து நாட்டின் சிறுவர்களில் முதலீடு செய்வதில் அரசாங்கத்துக்கு இருக்கும் கடப்பாட்டை வெளிக்காட்டியிருக்கலாம்.

இது அரசாங்கம் தவறவிட்ட – அதற்குப் பெரும் பாதகமாக அமையக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகும். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் இதன் தாக்கத்தை உணரக்கூடியதாக இருக்கும். 2048ஆம் ஆண்டில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க கொண்டிருக்கும் திட்டம் அன்றாட வாழ்க்கையை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் கவனத்தைப் பெறவில்லை. “ஒரு தாயின் பிள்ளைகள் போன்று ஐக்கியப்படுவதற்கு எங்களை நாம் அர்ப்பணிப்போம். சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடப்போகும் 2048ஆம் ஆண்டளவில் உலகின் மிகவும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றுவதற்கு எம்மை அர்ப்பணிப்போம்” என்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி கூறினார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் முன்னுரிமை கொடுக்கின்ற விவகாரங்கள் குறித்து கண்டன விமர்சனங்கள் இருக்கின்ற போதிலும், தேசிய நலன்களுக்கு உகந்த முறையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஜனாதிபதி வெற்றிகாண்பார் என்று தொடர்ந்து நம்பிக்கை வைப்பவர்களும் இருக்கிறார்கள். ஜனாதிபதியின் துணிச்சலான சூளுரைகளில் ஒன்று மூன்று தசாப்த கால உள்நாட்டுப்போருக்கு வழிவகுத்த இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் கண்டு 75ஆவது சுதந்திர தினத்தில் தேசிய நல்லிணக்கத்தை எட்டி ஒரு தாய் மக்கள் போன்று ஐக்கியப்படுவதாகும்.

இந்தப் பணி தொடர்பில் மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர் முதலில் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியபோது சுதந்திர தினத்துக்கு முன்னதாகக்கூட அந்தப் பணி நிறைவேற்றப்பட்டுவிடக்கூடும் என்று ஒருவகை எதிர்பார்ப்பு இருந்தது. பணி நிறைவேற்றம் குறித்து சுதந்திரதின சுபவேளையிலேயே அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு அமையவில்லை. முதல் அடி கூட இன்னும் எடுத்துவைக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்து பெப்ரவரி 8 ஜனாதிபதி நிகழ்த்தவிருக்கும் கொள்கை விளக்க உரை மீது இப்போது கவனம் திரும்பியிருக்கிறது.

இன அடிப்படையில் பிளவுபட்ட சமுதாயம் ஒன்றில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதென்பது எளிதான காரியம் அல்ல. பல துறைகளையும் சேர்ந்த பல பிரிவினரின் ஆதரவு அதற்கு தேவை. இது  தொடர்பில் ஜனாதிபதியின் உறுதிப்பாட்டின் அறிகுறி சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் மூலம் வெளிப்பட்டது. நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு இவ்வாறு நடைபெற்றிருக்கிறது. கடந்த காலப் பிளவுகளை வெற்றிகொள்வதில் ஜனாதிபதிக்கு இருக்கும் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.

பல தசாப்தங்களுக்கு பிறகு சுதந்திர தினத்தன்று தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த 2015 – 2019 காலப்பகுதியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சிவில் சமூகத்திடமிருந்து ஆதரவை வேண்டிநிற்கும் அம்சங்கள் ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் இருக்கின்றன. கடந்த கால தவறுகளின் மரபை நாம் வெற்றிகொண்டு படிப்பினைகளைப் பெற்று தவறுகள் மீண்டும் இழைக்கப்படாத ஒரு எதிர்காலத்தை நோக்கி நாம் பயணத்தை தொடங்கவேண்டியது அவசியமாகும்.

கலாநிதி ஜெகான் பெரேரா