Photo, SOUTH CHINA MORNING POST

இன்னும் ஒரு சில நாட்களில் எம்மிடம் இருந்து விடைபெறும் 2022 ஆண்டுக்கு இலங்கை அரசியலைப் பொறுத்தவரை மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் இருக்கிறது.

கடந்த வருடம் இதே காலப்பகுதியில் விலைவாசி கடுமையாக அதிகரிக்கத்தொடங்கியபோது ‘விலைவாசி எவ்வளவுதான் உயர்ந்தாலும், சகித்துக்கொாண்டு சமாளிக்கும் சமுதாயமாக இலங்கை மக்கள் மாறிவிட்டார்களோ என்று நினைக்கவேண்டியிருக்கிறது. வெகுசனத்திடமிருந்து எந்த எதிர்ப்பையும் காணவில்லை’ என்று சமூக ஊடகங்களில் ஆதங்கத்தை வெளியிட்ட பெருவாரியான பதிவுகளைக் காணக்கூடியதாக இருந்தது. ஆனால்,  பொறுமையிழந்த மக்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு செய்யத்தொடங்கிய கிளர்ச்சி முழு உலகினதும் கவனத்தை இலங்கையை நோக்கி திரும்பவைத்தது.

நாடு முன்னென்றும் கண்டிராத படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு காரணமான தவறான ஆட்சிமுறைக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சுமார் நான்கு மாதங்களாக கொழும்பு காலிமுகத்திடலை பிரதான தளமாகக் கொண்டு நாடுபூராவும் மூண்ட மக்கள் போராட்டம் இலங்கையில் முதற்தடவையாக ஜனாதிபதி ஒருவரை நாட்டைவிட்டு வெளியேறவைத்தது.

தென்னிலங்கையில் மிகுந்த மக்கள் செல்வாக்குடைய அரசியல் தலைவராக விளங்கிய மஹிந்த ராஜபக்‌ஷ மக்கள் கிளர்ச்சிக்கு முகங்கொடுக்கமுடியாமல் பிரதமர் பதவியை துறந்து, அலரிமாளிகையை மக்கள் முற்றுகையிட்ட நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வெளியேறி திருகோணமலை கடற்படைத் தளத்தில் தஞ்சமடையவேண்டிவந்தது.

இராணுவப் பின்புலத்துடன் மிகவும் பலம்பொருந்திய ஜனாதிபதி என்று நோக்கப்பட்ட கோட்டபாய ராஜபக்‌ஷ நாட்டின் அரசியல் வரலாற்றில் பதவிக்காலத்தின் இடைநடுவில் பதவிவிலகிய முதல் ஜனாதிபதி என்றும் மக்கள் கிளர்ச்சியினால் பதவிவிலக நிர்ப்பந்திக்கப்பட்ட முதல் ஜனாதிபதி என்றும் மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய முதல் ஜனாதிபதி என்றும் பல வரலாற்று ‘முதல்களை ‘ தனதாக்கிக்கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆரம்பித்த ஒரு சில வருடங்களில் அதை நாட்டின் மிகப்பெரிய கட்சியாக விளங்கவைத்த ‘அரசியல் மதியூகி ‘ என்று வர்ணிக்கப்படும் பசில் ராஜபக்‌ஷ நிதியமைச்சர் பதவியை மாத்திரமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறக்கவேண்டிவந்தது.

ராஜபக்‌ஷர்கள் 2019 நவம்பரில் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது இன்னொரு இருபது வருடங்களுக்காவது அவர்களது ஆட்சியை அசைக்கமுடியாது என்று கூறிய அரசியல்வாதிகளும் அவதானிகளும் இருந்தார்கள். ஆனால், இரண்டரை  வருடங்களுக்குள்ளாக ராஜபக்‌ஷர்கள் கூண்டோடு பதவிகளில் இருந்து விரட்டப்பட்டார்கள். மக்கள் கிளர்ச்சி படைபலம் கொண்டு ஒடுக்கப்பட்ட பிறகு அவர்கள் மீண்டும் அரசியல் செயற்பாடுகளில் தற்போது ஈடுபடத்தொடங்கியிருந்தாலும், முன்னைய மிடுக்குடன் இல்லை. மீண்டும் அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்கான அவர்களின் பிரயத்தனம் இன்னும் வெற்றிபெறவில்லை.

இலங்கை அரசியல் கடந்த காலத்திலும் குறிப்பிட்ட சில உயர்வர்க்க குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்தது. ஆனால், ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்தது போன்று அந்தக் குடும்பங்களுக்கு எதிராக மக்கள் ஒருபோதும் வீதியில் இறங்கியதில்லை.

ஆட்சிமுறையின் தவறான போக்குகள் சகலவற்றையும் உருவகிப்பவர்களாக விளங்கும் ராஜபக்‌ஷர்கள்  தங்கள் அரசியல் எதிர்காலம் குறித்து மிகுந்த ஐயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை அதிகாரத்தில் இருந்து விரட்டிய – அரசியல் புரட்சியொன்றின் பரிமாணத்தை எடுத்த – மக்கள் கிளர்ச்சியைப் போன்ற ஒன்றை தெற்காசியா ஒருபோதும்  கண்டதில்லை.

அதேவேளை, இலங்கை இவ்வருடம் அரசியலில் வேறு பல விசித்திர நிகழ்வுகளையும்  சந்தித்தது. கடந்த பொதுத்தேர்தலில் ஒரு ஆசனத்தைக்கூட கைப்பற்ற முடியாமல் தேர்தல் வரைபடத்தில் இருந்து துடைத்தெறியப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடளாவிய ரீதியில் கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் பெறக்கூடியதாக இருந்த  ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்தைப் பயன்படுத்தி காலந்தாமதித்து நாடாளுமன்றத்துக்கு வந்து பிறகு பிரதமராகி இறுதியில் 134 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாகவும் தெரிவானார். இலங்கையில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் முதன் முதலாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டவர் அவரே.

நாடாளுமன்றத்தில் ஒரேயொரு ஆசனத்தைக் கொண்டிருக்கும் கட்சியொன்றின் தலைவர் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாவது உலகில் வேறு எங்கும் நடந்திருக்க முடியாதது. கொள்கை விவகாரத்தைப் பொறுத்தவரை தன்னுடன் முற்றிலும் முரண்பாட்டைக் கொண்ட ஒரு கட்சியின் நாடாளுமன்ற பலத்தில் அரசாங்கத்தை நடத்தும் முதன்முதலான ஜனாதிபதியாகவும் விக்கிரமசிங்க விளங்குகிறார். இதுவும் கூட வேறு எங்கும் நடந்திருக்கமுடியாது.

மக்கள் கிளர்ச்சிக்கு முகங்கொடுக்க முடியாமல் பதவியில் இருந்து இறங்கிய அரசாங்கத்தின் உறுப்பினர்களே பெரும்பாலும் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையிலும் இருக்கிறார்கள். தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பொதுஜன பெரமுன பொறுப்பல்ல என்று பசில் ராஜபக்‌ஷ சில தினங்களுக்கு முன்னர் கூறியதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆளும் கட்சி பொறுப்பல்ல என்று கூறப்படுவதும் இதுவே முதற்தடவையாகும். இதுவும் இலங்கையில்தான் நடக்கமுடியும்.

வங்குரோத்து நிலை

இது இவ்வாறிருக்க, வெளிநாடுகளிடமும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமும் பெற்ற கடன்களை தவணை தவறாமல் திருப்பிச்செலுத்த முடியாதளவுக்கு பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது என்று இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக இவ்வருடமே பிரகடனம்  செய்யப்பட்டது.

பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கவேண்டியிருக்கும் கடனுதவியை முற்றுமுழுதாக நம்பியே செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. கடந்த செப்டெம்பர் முதலாம் திகதி நாணய நிதியத்துடன்  காணப்பட்ட அலுவலர்கள் மட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் விரிவுபடுத்தப்பட்ட கடனுதவியாக 48 மாத காலப்பகுதியில் 290 கோடி அமெரிக்க டொலர்கள் கிடைக்கவேண்டும்.

ஆனால், தவணைக்கடன்களை திருப்பிச்செலுத்த முடியாத நிலையில் இருக்கும் இலங்கை கடனுதவிகளை பெற்ற நாடுகளுடன் – குறிப்பாக சீனா, இந்தியா, ஜப்பான் – கடன் மறுசீரமைப்பு ஏற்பாடுகளை வெற்றிகரமாக செய்துகொண்டால் மாத்திரமே அந்தக் கடனுதவி கிடைக்கும். அது மாத்திரமல்ல, அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது உட்பட பெருவாரியான நிபந்தனைகளையும் அரசாங்கம் நிறைவேற்றவேண்டியிருக்கிறது.

நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் ஏற்கெனவே முன்னெடுத்துவருகிறது. 2023 பட்ஜெட்டும் நாணய நிதியத்தின் யோசனைகளின் அடிப்படையிலேயே தாயாரிக்கப்பட்டது.

வெளிநாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அரசாங்கத் தரப்பில் அடிக்கடி கூறப்படுகின்ற போதிலும், நாணய நிதியத்தின் கடனுதவியை விரைவாக பெறக்கூடிய சாத்தியத்தைக் காணவில்லை. இந்த மாத இறுதியில் அந்த உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அடுத்த வருடம் மார்ச் மாத இறுதியில் கிடைக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக நம்பப்படுகிறது.

நாணய நிதியம் உறுதியளித்துள்ள உதவி, பொருளாதார நெருக்கடியின் கடுமையை தணிக்க இவ்வருடம் இந்தியா தொடர் கடனாக வழங்கிய உதவியையும் (400 கோடி டொலர்கள்) விட குறைவானதாகும். அதுவும் அந்த உதவி நான்கு வருடகாலப் பகுதியில் 8 தவணைகளிலேயே வழங்கப்படும். நிபந்தனைகள் நிறைவேற்றப்படுகின்ற போக்கைப் பொறுத்தே அந்த கொடுப்பனவுகள் அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் நாணய நிதியத்தின் உதவியில் பெரிதாக கொண்டாடுவதற்கு எதுவுமில்லை.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

2 கோடி 20 இலட்சம் இலங்கையர்களில் சுமார் 62 இலட்சம் பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக உணவு மற்றும் விவசாய நிறுவனம் கடந்தவாரம் அறிவித்தது. உணவுப் பொருட்களை வாங்க இயலாததால் இரு குடும்பங்களில் ஒன்று சமாளிக்கும் வழிமுறைகளை தற்போது கடைப்பிடிக்கின்றன. சனத்தொகையில் 40 சதவீதமானவர்கள் வாழ்வாதாரங்களுக்காக விவசாயத்தை நம்பியிருக்கின்ற போதிலும், தற்போதைய பல்பரிமாண நெருக்கடி தேசிய உணவு முறைமையை சீர்குலைக்கும் ஆபத்து இருக்கிறது என்று அந்த நிறுவனம் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

23 இலட்சம் சிறுவர்கள் உட்பட 57 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது என்று யூனிசெப் அறிக்கை தெரிவிக்கிறது. உலகில் மிகவும் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் முதல் பத்து நாடுகளில் இலங்கையும் அடங்குகிறது; தெற்காசியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மறுவார்த்தைகளில் கூறுவதானால், பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியைப் பொறுத்தவரை, எமது பிராந்தியத்தில் இலங்கை ஆப்கானிஸ்தானுடன் ‘கூட்டாளியாக’ விளங்குகிறது.

கடுமையான விலைவாசி அதிகரிப்பு காரணமாக பெரும்பாலான மக்களினால் வழமையான உணவு வகைகளை வாங்கமுடியாமல் இருக்கிறது. ஒரு வேளை அல்லது இரு வேளை உணவைத் தவிர்க்கும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அடுத்த நாள் உணவு எங்கிருந்து வரும் என்ற ஏக்கத்துடன் சிறுவர்கள் பசியுடன் படுக்கைக்கு செல்கிறார்கள் என்றும் யூனிசெப் கூறுகிறது.

மக்கள் பெரும் எண்ணிக்கையில் நாட்டைவிட்டு வெளியேறுவது பொருளாதார நெருக்கடியின் விளைவான இன்னொரு  பிரச்சினையாகும். இவ் வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 113,140 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள். கடந்த வருடம் இதே காலப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையுடன் (30,797 பேர்) ஒப்பிடும்போது இது கடுமையான அதிகரிப்பாகும். மூளைசாலிகள் வெளியேற்றமும் தீவிரமடைந்திருக்கிறது.

இதன் விளைவான பாதிப்புக்களை பற்றி சிந்திக்காமல் அரசாங்கமும் மக்கள் வெளியேற்றத்தை ஊக்குவிக்கும் கைங்கரியங்களில் ஈடுபடுகிறது. வெளிநாட்டு வேலைக்கு செல்லவிரும்பும் அரச ஊழியர்களுக்கு ஐந்து வருட காலத்துக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படுகிறது.

இவ்வாறாக பெருவாரியான பிரச்சினைகளை இலங்கைக்கு தந்த 2022 விடைபெறவிருக்கும் அதேவேளை புதிய வருடம் நெருக்கடிகளில் ஒரளவேனும் தணிவை ஏற்படுத்தக்கூடிய மாறுதல்களை கொண்டுவரும் என்று நம்பிக்கை வைக்கவும் முடியாமல் உள்ளது. அடுத்த வருடம் பாரிய உணவுத்தட்டுப்பாடு ஏற்படக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க அபாயச்சங்கு ஊதிக்கொண்டிருக்கிறார். மின்கட்டணங்களை மீண்டும் அதிகரிக்காவிட்டால் நாடு பல மணி நேர மின்வெட்டைச் சந்திக்கவேண்டிவரும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. வேறு பல சேவைகளின் கட்டணங்களும் அதிகரிக்கப்படலாம்.

மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற அதேவேளை அரசியல்வாதிகள் குறிப்பாக ஆளும் கட்சி அரசியல்வாதிகள் தங்களது போக்கில் எந்த மாற்றத்தையும் காட்டுவதாக இல்லை.

‘அறகலய’ மக்கள் கிளர்ச்சிக்குப் பின்னரான காலகட்டத்தில் நிலைவரங்கள் முன்னரைப் போன்று இருக்கப்போவதில்லை; தங்களை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கும் மக்கள் பற்றி எசசரிக்கையுணர்வுடனேயே அரசியல்வாதிகள் செயற்படவேண்டியிருக்கும் என்று அவதானிகள் கூறினார்கள். ஆனால், மக்கள் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டு அதன் முன்னரங்கத்தில் நின்ற செயற்பாட்டாளர்களை அரசாங்கம் தொடர்ந்து வேட்டையாடுவதை அடுத்து தோன்றியிருக்கும் சூழ்நிலை தங்களது பழைய போக்கிற்கு திரும்புவதற்கு அரசியல்வாதிகளுக்கு ஊக்கம் கொடுத்திருக்கும் துரதிர்ஷ்டவசமான நிலைமையை காண்கிறோம்.

வீரகத்தி தனபாலசிங்கம்