Photo, Global Press Journal

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதிகளில் திருமதி குமாரதுங்கவுக்கு அடுத்ததாக அல்லது அவருக்கு இணையாக படிப்பிலும் வாசிப்பு அனுபவத்திலும் சர்வதேச விவகாரங்கள் பற்றிய அறிவிலும் கூடுதல் திறமையுடையவர் என்று  அண்மையில் அரசியல் அவதானியொருவர் குறிப்பிட்டிருந்தார். எந்தவேளையிலும் எந்த விவகாரம் பற்றியும் பேச்கூடிய அளவுக்குத் தகவல்களை அவர் விரல் நுனியில் வைத்திருப்பவர் என்றும் கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பேசும்போது ‘உங்களுக்கு என்ன தெரியும். நான் சொல்வதைக் கேளுங்கள்’ என்ற தோரணையில்தான் அவர் நடந்துகொள்வார்.

ஆனால், ஜனாதிபதி அண்மைக்காலமாக நிகழ்த்துகின்ற உரைகளில் இன்றைய நடைமுறைப் பிரச்சினைகளை – பொருளாதார இடர்பாடுகளை – ஓரளவுக்கேனும் தணிப்பதற்கான வழிவகைகளையோ யோசனைகளையே காணமுடியவில்லை. 2030 ஆண்டில் பொருளாதாரத்தை எந்த நிலைக்கு கொண்டுவரவேண்டும், சுதந்திரம் பெற்றதன் நூற்றாண்டு நிறைவு 2048 கொண்டாடப்படும்போது வளர்ச்சியடைந்த பொருளாதாரமாக இலங்கையை மாற்றுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றியே அவர் பெரும்பாலும் பேசுகிறார். அவரே கூறுவது போன்று தான் உயிருடன் இல்லாத காலத்தின் பொருளாதார வளர்ச்சி பற்றி நீண்டகால நோக்கு அக்கறையுடன் யோசனைகளை முன்வைக்கிறார்.

இலங்கையை எமது பிராந்தியத்தின் ‘பொருளாதார கேந்திர மையமாக’ அபிவிருத்தி செய்வது குறித்து முன்னர் பேசிய ராஜபக்‌ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டுவந்துவிட்டு போய்விட்டாரகள். விக்கிரமசிங்க பொருளாதார கேந்திர மையம் குறித்து பெரிதாக பேசுவதாக இல்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் கல்வியமைச்சு மீதான வரவு – செலவுத்திட்ட நிதியொதுக்கீடு குழுநிலை விவாதத்தின்போது எமது நாட்டை பிராந்தியத்தின் ‘கல்வி கேந்திர மையமாக’ மாற்றுவது குறித்து அவர் பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது.

உண்மையில், விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடியின் விளைவாக இன்று நாட்டில் கல்விக்கு ஏற்பட்டிருக்கின்ற ஆபத்தைப் புரிந்துகொண்டவராகத்தான் பேசுகிறாரா என்று கேட்கவேண்டியிருக்கிறது. பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் உணவுக்கும் கல்விக்கும் இடையில் எதை தெரிவுசெய்வது என்று தடுமாறிக்கொண்டிருக்கும் ஒரு நேரத்தில் அவர் இலங்கையில் சர்வதேச கல்வி நிறுவனங்களையும் பல்கலைக்கழகங்களையும் அமைப்பது குறித்து கனவு காண்கிறார்.

பிள்ளைகளுக்கு மூன்று வேளை ஒழுங்காக உணவையும் கொடுத்து, தேவையான சகல உபகரணங்களுடன் அவர்களை பாடசாலைக்கும் அனுப்பக்கூடிய நிலையில் பெரும்பாலான குடும்பங்கள் இன்று இல்லை. பிள்ளைகள் கல்வியை இடைநடுவில் கைவிடவது இன்று ஒரு பெரிய பிரச்சினையாக உருவாகிவருகிறது.

நாடாளுமன்ற விவாதத்தின்போது மாத்தளை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. றோஹினி கவிரத்ன தெரிவித்த ஒரு விலைப்பட்டியலை நோக்குவது அவசியமாகும்.

80 பக்க அப்பியாசக் கொப்பி ஒன்று 200 ரூபா. சி.ஆர்.புத்தகம் 560 ரூபா. பென்சில் அல்லது குமிழ்முனை பேனை 40 ரூபா. கலர் பென்சில் பெட்டி 570 ரூபா. பசை ஒரு போத்தல் 150 ரூபா. பள்ளிக்கூட பை 4000 ரூபா. ஒரு சோடி சப்பாத்து 3500 ரூபா என்று விலைகளை பட்டியலிட்ட றோஹினி ஒரு தந்தை அன்றாடம் சம்பளத்துக்கு வேலை செய்பவராக இருந்தால் அவரின் சம்பளத்தின் கால்வாசி பிள்ளையின் கலர் பென்சில் பெட்டி வாங்கவே செலவாகிவிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

பாடக்குறிப்புகளை எடுப்பதற்கு ஒரு 80 பக்க அப்பியாசக்கொப்பியை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று கல்வியமைச்சருக்கு தெரியாதா என்று கேள்வியெழுப்பிய அவர்  பாடசாலை காகிதாதிகள் மற்றும்  உபகரணங்களுக்காக ஒரு பிள்ளைக்கு ஒரு மாதம் ஏறத்தாழ 25,000 – 30,000 ரூபா பெற்றோருக்கு தேவைப்படுகிறது என்று கூறினார்.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி விக்கிரமசிங்க சமர்ப்பித்த 2023 வரவு – செலவுத்திட்டத்தில் கல்வித்துறைக்கு 23,200 கோடி ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நாட்டுக்கு எந்தப் பாதுகாப்பு பிரச்சினையும் இல்லாத ஒரு நேரத்தில் பாதுகாப்புக்கு 39,070 கோடி ரூபாவும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் பொதுப்பாதுகாப்புக்கு 1990 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பொதுப் பாதுகாப்புக்கு இவ்வாறு ஒதுக்கப்பட்ட போதிலும் பொலிஸ் திணைக்களத்துக்கு 12,920 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 2023ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு செலவினம் 53,920 கோடி ரூபாவாகும்.

கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட 23,200 கோடி ரூபாவில் உயர்கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகையை கழித்தால் பாடசாலைக் கல்விக்கு 17,630 கோடி ரூபாவே மிஞ்சும். இதில் ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் அதிகாரிகளுக்கான செலவினங்கள் போக மிகவும் சொற்பமான தொகையே பாடசாலைக் கல்வியின் ஏனைய முக்கிய செயற்பாடுகளுக்காக மிஞ்சப்போகிறது. நிலைவரம் இப்படியே போனால், தெற்காசியாவில் கல்விக்கு மிகவும் குறைந்த நிதியை ஒதுக்குகின்ற நாடாக இலங்கையே விரைவில் விளங்கும்.

ஒரு காலத்தில் ஆசியாவில் படிப்பறிவில் ஜப்பானுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கையில் இன்று கல்வித்துறைக்கு அரசாங்கம் கொடுக்கின்ற முக்கியத்துவத்தின் இலட்சணம் இவ்வாறாக இருக்கிறது.

இது இவ்வாறிருக்க, பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநடுவில் கல்வியை கைவிடும் மாணவர்களின் பிரச்சினைக்கு வருவோம்.

அடுத்த வருட தொடக்கத்தில் 30 சதவீதத்துக்கும் அதிகமான பிள்ளைகள் பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று மூத்த அரசியல் ஆய்வாளரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான குசல் பெரேரா அண்மையில் ‘சர்வதேச நாணய நிதியத்துடனான சீர்திருத்தங்கள் பல ஆயிரக்கணக்கான பிள்ளைகள் கல்வியைக் கைவிட வழிவகுக்கும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார். 35 சதவீதமான குடும்பங்கள் இரு வேளை உணவைக்கூட பெறமுடியாத நிலையில் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குவதாக செப்டெம்பர் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளை மேற்கோள் காட்டி அவர் தெரிவித்தார்.

“2023 வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே பொருட்களின் விலைகள் வானளாவ உயர்ந்துவிட்டன. அவற்றைக் குறைக்க அரசாங்கத்திடம் மாற்றுத்திட்டம் ஒன்று இல்லாததால் பெருமளவு பிள்ளைகளுக்குப் பாடசாலைக்குப் போகாமல் விடுவதைத் தவிர வேறு வழி இல்லாத நிலை. தற்போது பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளின் தொகை சுமார் 41 இலட்சம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவர்களில் சுமார் 14 இலட்சம் பேரின் கல்விக்கான உரிமை, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஜனாதிபதி விக்கிரமசிங்க நடைமுறைப்படுத்துவதன் நேரடி விளைவாக பறிக்கப்படப்போகிறது.

“வரவு – செலவுத்திட்டம் தயாரிக்கப்படுவதற்கு முன்னதாகவே நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பிரகாரம் பொருளாதாரத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை விக்கிரமசிங்க ஆரம்பித்துவிட்டார். நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க ஒருபுறம் வரிகள் அதிகரிக்கப்படுவதுடன் புதிய வரிகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த வரிகள் சந்தை விநியோகத்தில் பல மட்டங்களில் விலைகளை கடுமையாக அதிகரித்திருக்கின்றன.

“பாடசாலை உபகரணங்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துவிட்டன. வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. பிரபல அரசாங்கப் பாடசாலைகளுக்கும் தனியார் கம்பனிகளினால் இலாபநோக்கில் நடத்தப்படும் சர்வதேச பாடசாலைகளுக்கும் பிள்ளைகளை அனுப்பும் வசதிபடைத்த குடும்பங்கள் இந்த விலை உயர்வுகளின் கொடுமையை உணரப்போவதில்லை. நாடு பூராவும் இருக்கும் 10,150  அரசாங்க பாடசாலைகளில் க.பொ.த. சாதாரணதரம் வரை வகுப்புக்களைக் கொண்ட 3,204 பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களினால் சுமையைத் தாங்கமுடியாமல் போகும்.

“புதுவருடத்தில் ஒரு பிள்ளையை பாடசாலைக்கு அனுப்புவதற்கு இந்தக் குடும்பங்கள் 15,000 ரூபாவுக்கும் அதிகமான பணத்தை தேடவேண்டியிருக்கும். அவர்களில் பெரும்பாலான குடும்பங்களுக்கு அது சாத்தியமில்லை. பிள்ளைகள் பாடசாலைக்குப் போகாமல் விடுவதைத் தவிர வேறு மார்க்கமில்லை. அதனால் அடுத்த வருடம் பாடசாலையை இடைநடுவில் கைவிடும் பிள்ளைகளின் தொகை அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது” என்று பெரேரா கூறுகிறார்.

மலையக பிள்ளைகளின் நிலை

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கையின் ஏனைய சகல சமூகங்களையும் விட  மிகவும் கூடுதலாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களே.

கொவிட் -19 பெருந்தொற்று நோய் காலகட்டத்தில் ஏற்பட்ட தொழில் இழப்புகள், ஊதியக்  குறைப்பினாலும் கூட அவர்களே கூடுதலாக பாதிக்கப்பட்டார்கள். அதில் இருந்து ஓரளவேனும் விடுபடுவதற்கு முன்னர் தற்போதைய  நெருக்கடி வந்து தோட்டத் தொழிலாளர்களை பெரும்  சமூக – பொருளாதார இடருக்குள்ளாக்கியிருக்கிறது.

இலங்கை சிறுவர்கள் இன்று சத்துணவுப் பற்றாக்குறையினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் தோட்டத்தொழிலாளர் சமூகத்தின் சிறார்களே அதனால் மிகவும் கூடுதலாக பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள் என்பதை சொல்லத்தேவையில்லை. அந்தச் சிறுவர்களின் கல்வியும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

கல்வியை இடையில் நிறுத்தும் பெருந்தோட்ட பகுதி சிறுவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்திருக்கிறது என்று ஆய்வுகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. பெற்றோரின் வருமானம் வாழ்க்கைச் செலவுக்கு அறவே போதாமல் இருப்பதால் பிள்ளைகளும் ஏதாவது சம்பாத்தியத்தை தேடுவதற்காக கல்வியை இடையில் நிறுத்தும் போக்கு அதிகரித்திருக்கிறது என்று கொள்கை ஆய்வு  நிறுவனம் (Institute of Policy Studies) கூறுகிறது.

பாடசாலைக்குச் செல்லும் வயதில் உள்ள பிள்ளைகள் தொழில் வாய்ப்பைத் தேடுவதற்காக படிப்பை இடையில் நிறுத்துவதைத் தடுக்க தோட்டப்பகுதிகளில் வயது வந்தவர்களின் சம்பாதிக்கும் ஆற்றலை விரிவுபடுத்த புதிய செயற்திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் என்று அந்த நிறுவனம் யோசனை கூறியிருக்கிறது.

பெருந்தோட்டப் பகுதிகளில் வயது வந்தவர்களின் வருமான மூலங்களை – ஆதாரங்களை அதிகரிப்பதற்கு ‘விசேட செயற்திட்டங்கள்’ நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று அந்த  பொருளாதார நிபுணர்கள் அமைப்பின் ஆய்வு அறிக்கை கோரிக்கை விடுத்திருக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலமாக பொருளாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவதற்குப் பிள்ளைகளை ஊக்கப்படுத்தமுடியும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெருந்தோட்டப் பகுதிகளின் சிறுவர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தே இந்த நிறுவனம் ஆய்வை மேற்கொண்டது. பாடசாலைக்குச் செல்லாமல் கல்வியை இடைநிறுத்தும் பிள்ளைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான அதிகரிப்பை தடுத்து நிறுத்துவதற்கான வழிவகைகளில் இந்த நிறுவனம் கவனம் செலுத்தியது.

கொவிட் பெருந்தொற்று நோய் பரவுவதற்கு முன்னதாகவே ஆரம்ப பாடசாலை, இரண்டாம் நிலைக் கல்வி, கல்லூரிக்கல்வி என்ற மூன்று மட்டங்களிலும் தோட்டப்பகுதிகளில் கல்வியை இடைநிறுத்தும் பிள்ளைகளின் வீதத்தில் கடும் அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது. கல்வி மட்டங்களின் உயர்வுடன் சமாந்தரமாக கல்வியை இடைநிறுத்தும் பிள்ளைகளின் சதவீதமும் அதிகரிக்கிறது. அதாவது, ஆரம்பக்கல்வியை இடைநிறுத்துபவர்களை விடவும் இரண்டாம் நிலை மற்றும் கல்லூரி மட்டங்களில் கல்வியை இடைநிறுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

தோட்டப்பகுதிகளில் ஆரம்ப பாடசாலைகளில் கல்வியை இடைநிறுத்துபவர்கள் 4 சதவீதமாகவும் இரண்டாம் நிலை பாடசாலைகளில் அது 20 சதவீதமாகவும் கல்லூரி மட்டத்தில் அது 26 சதவீதமாகவும் இருக்கின்றது. இதற்கு மாறாக, நகர்ப்புற மற்றும் கிராமப்பகுதிகளில் இந்த வீதங்கள் மிகவும் குறைவானவையாக இருக்கின்றன.

கொவிட் பெருந்தொற்று நோய் பரவலுக்குப் பிறகு தோட்டப்பகுதி சிறுவர்களினால் எதிர்நோக்கப்பட்ட நிதி நெருக்கடிகளே பாடசாலைகளுக்குப் போகாமல் கல்வியை அவர்களில் கணிசமானவர்கள் இடைநிறுத்துவதற்கு பிரதான காரணம். தற்போதைய பொருளாதார நெருக்கடி அவர்களின் அவலங்களை மேலும் அதிகரித்திருக்கிறது. அதனால் அவர்கள் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை சமாளிக்க பெற்றோர்களின் வருமானத்துக்குப் புறம்பாக சம்பாத்தியத்தை தேடுவதற்கு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

நிலைவரத்தில் மேம்பாட்டை ஏற்படுத்த தோட்டப்பகுதிகளில் வயது வந்தவர்கள் கூடுதல் வருமானத்தைப் பெறுவதற்கு வசதியாக வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.அதேவேளை பாடசாலைகளில் இலவச உணவுத் திட்டத்தை தொடருவதற்கு உறுதியான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். இது தோட்டப்பகுதிகளில் சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுவதைத்  தடுப்பதற்கு சாத்தியமான தீர்வாக அமையும் என்று கொள்கை ஆய்வுகள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

உணவைப் பெறுவதற்கு பெரும் கஷ்டப்படும் பல தோட்டப்பகுதி சிறுவர்கள் வருமானம் ஒன்றை தேடுவதற்காகவே பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் இணையவழி மூலமான வகுப்புக்களில் பங்கேற்க முடியாமல் போன தோட்டப்பகுதி மாணவர்களில் பலரும் கல்வியை இடைநிறுத்தி பாடசாலைக்கு போகாமல் விடுகிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய மாணவர்கள் தாங்கள் இழந்த பாடங்களை மீண்டும் கற்றுக்கொள்ள வசதியாக விசேட ஏற்பாடுகள் செய்யப்படவேண்டியதும் அவசியம். இதன் மூலமாக அவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டக்கூடிய சூழ்நிலையை உருவாக்கமுடியும்.

ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் விதந்துரைக்கப்பட்டவாறு ‘பூச்சிய சிறுவர் தொழிலாளர் ‘ இலக்கை 2025 ஆண்டில் அடைவதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளது. சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுவதை ஒழிப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கல்வியை இடைநிறுத்தும் சிறுவர்களின் எண்ணிக்கையையும் குறைக்கமுடியும்.

ஆனால், கொவிட் பெருந்தொற்று பரவலை அடுத்து தோன்றிய சூழ்நிலைகளுடன் தற்போதைய பொருளாதார நெருக்கடியும் சேர்ந்து 2025 பூச்சிய சிறுவர் தொழிலாளர் இலக்கை அடையும் முயற்சிகளை முன்னரை விடவும் கூடுதல் சவாலுக்குள்ளாகியிருக்கின்றன. நீண்டகாலமாக பாடசாலைகள் மூடப்படுவதற்கு வழிவகுத்த பெருந்தொற்றுநோய் பரவலுக்கு பிறகே பெருந்தோட்டப்பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை கணிசமானளவு அதிகரித்தது என்பதை சான்றுகள் உறுதிப்படுத்துவதாக கொள்கை ஆய்வு நிறுவனம் கூறியிருக்கிறது.

வீரகத்தி தனபாலசிங்கம்