Photo, THEINDIANWIRE

“இன்று பெரும்பான்மையான இளைஞர்கள் இனவெறிக்கும் மதவெறிக்கும் எதிராக குரலெழுப்புகிறார்கள். இனங்கள் மத்தியில் நல்லுறவும் சமாதானமும்  நிலவவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. தமிழர்கள், முஸ்லிம்கள் உட்பட சகல இனக்குழுக்களும் சமத்துவமாக நடத்தப்படவேண்டும் என்று சிங்கள இளைஞர்கள் கூறுகிறார்கள்.

“தமிழ்ச்சமூகம் நீண்டகாலமாக எதிர்நோக்கிவருகின்ற பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டியது அவசியம். போரின் காரணமாக தமிழ் மக்கள் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளினால் இடர்பாடுகளை அனுபவித்துவருகிறார்கள். தீர்க்கப்படவேண்டிய இனப்பிரச்சினைகளும் இருக்கின்றன. வடக்கின் அபிவிருத்திப் பணிகள் குறித்து புதிதாக சிந்திக்கவேண்டியிருக்கிறது.

“இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதன் மூலம் அவர்களின் ஆதரவைப் பெறலாம் என்று நம்புகிறேன். தாய்நாட்டுக்கு வந்து அவர்கள் முதலீடுகளைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.”

கடந்த ஆகஸ்ட் 3 நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்து தனது முதலாவது கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழர் பிரச்சினை தொடர்பில் கூறிய வார்த்தைகள் இவை.

அதற்கு பிறகு மூன்று மாதங்கள் கழித்து அவர் இப்போது இலங்கை அதன் 75ஆவது சுதந்திரதினத்தை அடுத்தவருடம் பெப்ரவரியில் கொண்டாடும்போது சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புவதாக கூறுகிறார். தனது இந்த முயற்சியில் இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் அழைப்பு விடுத்த அவர் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடி இன நல்லிணக்கத்துக்கான திட்டத்தை வகுக்க பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அமைச்சரவைக்குழு ஒன்றையும் நியமித்திருக்கிறார்.

நீதி மற்றும் அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்கள். தங்கள் பணியை விரைவாக நிறைவுசெய்ய இவர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு கூடுவர் என்று அறிவிக்கப்பட்டது.

நாட்டை உலுக்கிய மூன்று தசாப்தகால உள்நாட்டுப்போருக்கு காரணமான தேசிய இனப்பிரச்சினை திகதி குறிப்பிட்டு தீர்க்கக்கூடிய ஒன்றல்ல. அடுத்த சுதந்திர தினத்தை நாடு கொண்டாடும்போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விருப்புவதாக ஜனாதிபதி கூறியது சாத்தியமானளவு விரைவாக தீர்வைக் காணவேண்டும் என்ற அவரின் அக்கறையின் வெளிப்பாடாக இருக்கலாம்.

வட பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக விக்கிரமசிங்க கூறியிருப்பது தமிழர் பிரச்சினைய வடக்குடன் மாத்திரம் சம்பந்தப்பட்ட ஒன்றாக குறுக்குவதில் அவர் நாட்டம் கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது. இந்தப் பிரச்சினை வடக்கும் கிழக்கும் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதனால் கிழக்கு மக்களின் பிரதிநிதிகளையும் இணைத்ததாகவே அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டும். ஜனாதிபதியின் அழைப்புக்கு தமிழ் அரசியல் கட்சிகளிடம் இருந்து கலப்பான பிரதிபலிப்பே வெளியாகியிருக்கிறது.

வடக்கு மக்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் என்று ஜனாதிபதி குறிப்பிடும்போது அவர் பெரும்பாலும் போரின் விளைவான மனிதாபிமானப் பிரச்சினைகளையே மனதில் கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. அந்தப் பிரச்சினைகளுக்கு பரிகாரம் காண்பது இடைக்கால ஏற்பாடுகளாகவே அமையமுடியும். நீண்டகால நோக்கில் இனப்பிரச்சினையின் மூலவேர்க்காரணிகளை இல்லாதொழிக்கக்கூடிய வகையில் நிலைபேறான அரசியல் தீர்வொன்றைக் காண முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தென்னிலங்கை மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய அரசியல் தகுநிலையில் ஜனாதிபதி இருக்கிறாரா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவைக்குழுவின் தலைவர் பிரதமர் குணவர்தனவும் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவும் இதுகாலவரையில் தமிழ்க்கட்சிகளினால் முன்னிலைப்படுத்தப்பட்டு வந்திருக்கும் சிறுபான்மை இனங்களின் குறிப்பாக தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் மற்றும் மனக்குறைகளில் கணிசமானவற்றை ஒருபோதும் அங்கீகரிக்காத ஒரு அரசியல் கலாசாரத்தில் வந்தவர்கள். சிங்கள தேசியவாத கடும்போக்கு சக்திகளின் ஆதரவைக் கொண்ட இவர்கள் முன்னைய தங்கள் நிலைப்பாடுகளைத் தளர்த்தியிருக்கிறார்களா என்பது நாளடைவில் தெரியவரும்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க ராஜபக்‌ஷர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற ஆதரவில்தான் ஆட்சி நடத்துகிறார். சிறுபான்மை இனங்களுக்கு விரோதமான அரசியல் நிலைப்பாடுகளுக்கு பெயர்போன அந்தக் கட்சியை தனது இன நல்லிணக்க முன்னெடுப்புகளுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய ஒரு சக்தியாக ஜனாதிபதியினால் வழிக்குக் கொண்டுவர முடியுமா என்ற இன்னொரு கேள்வியும் எழுகிறது.

இத்தகைய பின்புலத்தில் ஜனாதிபதியின் முன்னெடுப்புகளுக்கான ‘வெளிக் காரணிகள்’ குறித்து அரசியல் அவதானிகள் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் கவனத்தைத் தூண்டுவனவாக இருக்கின்றன.

இலங்கை படிப்படியாக மேற்குலகின் செல்வாக்கின் கீழ் வந்துகொண்டிருக்கிறது. இதற்கான வழியை மேற்குலகை சாராத வல்லாதிக்க நாடுகளே ஏற்டுத்திக்கொடுக்கின்றன. இலங்கை கடன்பொறியில் இருந்து விடுபடுவதற்கு உதவுவதற்கு சீனா தயக்கம் காட்டுகிறது. அவசரகால உதவியாக தன்னாலியன்றதை ஏற்கெனவே செய்துவிட்ட இந்தியா இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சர்வதேச சமூகம் என்ன செய்யப்போகிறது என்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அதனால் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு மேற்குலகையும் அதன் நிறுவனங்களையும் நம்பியிருப்பதைத் தவிர இலங்கைக்கு வேறு வழியில்லை. ஆனால், மேற்குலகின் கோரிக்கைகள்/ நிபந்தனைகள் உள்நாட்டில் பரந்தளவு அரசியல் விளைவுகளைக் கொண்டுவரக்கூடியவையாக இருக்கின்றன என்று கொழும்பில் இருந்து இயங்கும் மூத்த இந்திய பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான பி.கே. பாலச்சந்திரன் கூறுகிறார்.

பொருளாதாரக் கட்டமைப்பில் கடுமையான மாற்றங்களை/ ஒழுங்காக்கல்களை செய்யவேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை மாத்திரமல்ல, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்பார்ப்புகள் மற்றும் ஜி.எஸ்.பி. பிளஸ் திட்டத்தின் கீழான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சலுகைகளுடன் இணைந்த மனித உரிமைகள் நிபந்தனைகளையும் கொழும்பு நிறைவேற்றவேண்டியிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இறுதியாக நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிலைமாறுகால நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட விரிவான செயற்திட்டமொன்றை மீள ஆரம்பிக்குமாறு இலங்கை அரசாங்கத்தைக் கோரியது. அத்துடன், நம்பகத்தன்மை கொண்ட உண்மை அறியும் பொறிமுறை மற்றும் விசேட நீதிமன்றம் ஆகியவை தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் உட்பட ஏற்கெனவே உள்ள கடப்பாடுகளை குறிப்பிட்ட ஒரு காலவரையறைக்குள் நடைமுறைப்படுத்துமாறு அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது. பொறிமுறைகளின் வடிவத்தை தீர்மானிப்பதில் உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வகிபாகம் கொடுக்கப்படவேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டது.

இலங்கையில் இழைக்கப்பட்டிருக்கக்கூடிய சர்வதேச சட்டத்தின் கீழான குற்றச்செயல்களை விசாரித்து வழக்கு தொடுப்பதற்கு நாடுகடந்த – சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தக்கூடிய வழிமுறைகள் உட்பட பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு நாடுகளிடம் அந்தத் தீர்மானம் வேண்டுகோள் விடுத்தது.

தீர்மானத்தின் நிபந்தனைகள் நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாக அமைகின்றன என்ற காரணத்தைக்கூறி அரசாங்கம் அதை நிராகரித்தது. ஆனால், சர்வதேச தராதரங்களுக்கு ஏற்றமுறையில் மனித உரிமைகள் மற்றும் இன நல்லிணக்கத்தை மேம்படுத்தவேண்டிய தேவையை ஒத்துக்கொண்ட அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவதற்கும் கதவை திறந்தே வைத்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை இலங்கையினால் முற்றுமுழுதாக நிராகரிக்க முடியாது. ஏனென்றால், பேரவை மேற்குலக வல்லாதிக்க நாடுகளின் ஆதிக்கத்தில் இருக்கிறது. பொருளாதார ரீதியில் அதே நாடுகளின் மீதே இலங்கை தங்கியிருக்கிறது. அதன் பெரும்பாலான வர்த்தகம் மேற்கு நாடுகளுடனானதாகவே இருக்கிறது.

இலங்கையின் 500 கோடி டொலர்கள் ஆடை உற்பத்தி தொழிற்துறையின் தனியான மிகப்பெரிய சந்தையாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் திட்டம் இலங்கைக்கு முன்னுரிமை வரிச்சலுகையை வழங்குகிறது. இந்தச் சலுகை தொழில் உறவுகள், சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச விதிமுறைகளுடன் (International Protocol) பிணைக்கப்பட்டதாகும். இந்த விதிமுறைகளை கடைப்பிடிப்பதில் இலங்கையின் செயற்பாடுகள் குறைபாடுடையனவாக இருக்கின்றன.

அடுத்த வருடம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நீடிப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக இலங்கை நிலைவரங்களை ஆராய  கடந்தமாதம் கொழும்பு வந்த ஆட்சிமுறை, சட்டத்தின் ஆட்சி மற்றும்  மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய செயற்குழு கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதையும் நீதிவிசாரணையின்றி சந்தேக நபர்கள் தடுப்புக்காவலில் தொடர்ந்தும் வைக்கப்படுவதையும் குறித்து விசனம் வெளியிட்டது. இலங்கை தற்போது எதிர்நோக்குகின்ற கடுமையான பொருளாதார நெருக்கடியை மனதிற்கொண்டு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக்கொள்ளாது என்று அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்ற போதிலும், சலுகை விலக்கிக்கொள்ளப்படுவதற்கான கோட்பாட்டளவிலான சாத்தியப்பாடுகள் இருப்பதாக பாலச்சந்திரன் கூறுகிறார்.

ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையை இழப்பது இலங்கைக்கு பாரதூரமான பாதிப்புக்களைக் கொண்டுவரும். ஆடை உற்பத்தி தொழிற்துறையில் 350,000 பேர் நேரடியாகவும் 700,000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். இவர்களில் 80 சதவீதமானவர்கள் கிராமியப் பெண்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் பாரதூரமாகப் பாதிக்கப்படுபவர்கள் இவர்களே.

இவை எல்லாவற்றையும் நன்கு அறிந்த நிலையிலேயே ஜனாதிபதி விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு மேற்குலக வல்லாதிக்க நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறும் நோக்கில் புதிய இன நல்லிணக்க செயற்திட்டமொன்றை தொடங்கியிருக்கிறார் என்பது பல அவதானிகளின் அபிப்பிராயமாக இருக்கிறது.

வீரகத்தி தனபாலசிங்கம்