Photo, COUNTERPOINT

சிறைவாசம் அனுபவித்துவந்த சிங்கள சினிமா நடிகரும் சமகி பல ஜனவேகயவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன்  ராமநாயக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மன்னிப்பு வழங்கப்பட்டு வெலிக்கடை சிறையில் இருந்து ஆகஸ்ட் 26 விடுதலை செய்யப்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவர் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று அவரை வரவேற்றார். தொழிலமைச்சர் மனுஷ நாணயக்காரவையும் அங்கு காணக்கூடியதாக இருந்தது. சிறைச்சாலைக்கு வெளியே திரண்டிருந்த ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் ரஞ்சனை வரவேற்றார்கள்.

அவரை தனது வாகனத்தில் கூட்டிச்செல்வதற்கு அமைச்சர் நாணயக்கார முயற்சி செய்த போதிலும் அங்கு உருவான அசௌகரியமான சூழ்நிலைக்கு மத்தியில் அவர் பின்வாங்கினார். பிரேமதாசவே ரஞ்சனை தனது வாகனத்தில் கூட்டிச்சென்றார்.

இப்போது ரஞ்சனுக்குப் பதவிகளை வழங்குவதில் பிரேமதாசவும் அரசாங்கத்தரப்பில் சிலரும் போட்டிபோடுகிறார்கள். அப்படி என்னதான் மெச்சக்கூடிய காரியத்தைச் செய்துவிட்டு சிறை சென்று திரும்பியதால் இவர்கள் எல்லோரும் அவரை அரவணைப்பதில் முண்டியடிக்கிறார்கள். நீதித்துறையை அவமதித்ததாக குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்த அவர் ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் வெளியே வந்திருக்கிறார். இந்த விடயத்தில் எந்தவிதமான ஒழுக்க நியாயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசியல்வாதிகள் நினைப்பதாகத் தெரியவில்லை.

ரஞ்சன் பிரதியமைச்சராக இருந்தவேளையில் அலரிமாளிகைக்கு வெளியே 2017 ஆகஸ்ட் 21 செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது பெரும்பாலான நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் ஊழல்தனமானவர்கள் என்று குறிப்பிட்டார். இதற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றஞ்சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு உயர்நீதிமன்றம் 2021 ஜனவரி 12 நான்கு வருட கடூழியச்சிறைத் தண்டனை விதித்தது. நீதித்துறை பற்றி தான் கூறியதை ஒருபோதும் வாபஸ்பெறப்போவதில்லை என்று பிறிதொரு சந்தர்ப்பத்தில் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே கூறியதற்காக ரஞ்சன் மீது இன்னொரு நீதிமன்ற அவமதிப்பு குற்றஞ்சுமத்தப்பட்டு அந்த வழக்கில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து உயர்நீதிமன்றத்தினால் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2021 ஏப்ரல் 7 அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.

19 மாதகாலமாக சிறைவாசத்தை அனுபவித்த நிலையில் கடந்தவாரம் அவருக்கு ஜனாதிபதியின் மன்னிப்பு வழங்கப்பட்டதை அடுத்து வெளியே வந்திருக்கிறார். கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்தபோது ரஞ்சனுக்கு மன்னிப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும், அவர் அதில் அக்கறை காட்டவில்லை.

உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 25 தனது சட்டத்தரணியூடாக ரஞ்சன் சமர்ப்பித்த சத்தியக்கடதாசியில் ஐந்து வருடங்களுக்கு முன்னர் அலரிமாளிகைக்கு வெளியே தன்னால் தெரிவிக்கப்பட்ட கருத்து முற்றிலும் தவறானது; இலங்கையின் நீதித்துறை முழுவதையும் அவமதிப்பதாக அது அமைந்தது என்றும் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்தார்.

தன்னால் அலரிமாளிகைக்கு வெளியே தெரிவிக்கப்பட்ட கருத்தை வாபஸ்பெற முடியாது என்று உயர்நீதிமன்றத்துக்கு வெளியே கூறியதும் மிகவும் பிழையானதும் முழு நீதித்துறையையும் அவமதிப்பதாகும் என்று சத்தியக்கடதாசியில் மேலும் குறிப்பிட்ட ரஞ்சன் இனிமேல் தனது வாழ்நாளில் எந்தவொரு நீதிபதியையும் அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை தெரிவிக்கப்போவதில்லை என்றும் உறுதியளித்தார். இதையடுத்தே அவருக்கு மன்னிப்பு அளிக்கும் பத்திரத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்.

ஆனால், ரஞ்சனுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு முழுமையானது அல்ல. அவரது குடியுரிமைகள் மீள வழங்கப்படவில்லை. அதனால் அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவோ அல்லது தேர்தல்களில் வாக்களிக்கவோ, போட்டியிடவோ  முடியாது. சஜித் பிரேமதாசவின் வார்த்தைகளில் கூறுவதானால் ரஞ்சனுக்கு கிடைத்தது அரை விடுதலையே. அவர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கக்கூடிய ஒருவராக மாறாதிருப்பதை உறுதிசெய்வதற்கு பிரேமதாச பெரும் பிரயத்தனம் செய்கிறார்.

சமகி பல ஜனவேகயவின் தேசியப்பட்டியலில் வெற்றிடம் ஏற்படும்போது ரஞ்சனை அதற்கு நியமிக்கத் தயாராயிருப்பதாகவும் ஆனால் குடியுரிமைகள் அவருக்கு இல்லை என்பதால் அதைச் செய்யமுடியாது என்றும் கூறியிருக்கும் பிரேமதாச தனது கட்சியின் செயற்குழுவின் உறுப்பினராக அவரை நியமித்து  அதன் மூலமாக தங்களது நாடாளுமன்றக் குழுவின் ஒரு உறுப்பினராக அவர் கருதப்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தப்போவதாக பின்னர் தெரிவித்தார்.

இதனிடையே, சமகி ஜன பலவேகயவில் இருந்து பிரிந்து தற்போது விக்கிரமசிங்க அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் ஹரின் பெர்னாண்டோவும் மனுஷ நாணயக்காரவும் அவரை தங்கள் பக்கம் இழுத்துவிட துடியாய்த்துடிக்கிறார்கள். வெளிநாடுகளில் வேலைசெய்யும் இலங்கையர்களின் நலன்களைக் கவனிப்பதற்கான நல்லெண்ணத் தூதுவராக ரஞ்சனுக்கு நாணயக்கார நியமனம் வழங்கியிருக்கிறார்.

ஆனால், தற்போதைக்கு எந்தவொரு அரசியல் கட்சியிலும் இணையாமல் சுயாதீனமாக இருக்கப்போவதாக கூறியிருக்கும் ரஞ்சன் பின்னர் ஒரு கட்டத்தில் தீவிர அரசியலுக்குத் திரும்பலாம் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். “மரணமடைவதற்கு முன்னர் என்றாவது ஒரு நாள் தீவிர அரசியலுக்குத் திரும்பமுடியும் என்று நம்பிக்கைகொண்டுள்ளேன்” என்றுதான் அவர் வெலிக்கடைச் சிறைக்கு வெளியே வந்தவுடன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய ரஞ்சன், குறிப்பிட்ட சில விடயங்களைப் பேசக்கூடாது என்ற உத்தரவின் கீழ் நான் இருக்கிறேன். இது எனக்கு வழங்கப்பட்ட மன்னிப்பின் நிபந்தனையாகும். குற்றங்களைச் செய்வதற்காக நாம் சிறைக்குப் போவதில்லை; குற்றங்களை அம்பலப்படுத்துவதற்காகவே சிறை செல்கிறோம். என்னால் இப்போது கூறக்கூடியது இது தான்” என்று குறிப்பிட்டார்.

ஒரு புறத்தில் பிரேமதாசவையும் மறுபுறத்தில் ஹரின் பெர்னாண்டோ மற்றும் நாணயக்காரவையும் கைவிடமுடியாமல் ரஞ்சன் ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறார். சிறையில் இருந்தவேளை அவரை அடிக்கடி சென்று பார்த்தவர் பிரேமதாச. அதேவேளை அவருக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரசார இயக்கத்தை முன்னெடுத்ததில் முன்னணியில் நின்றவர்கள் பெர்னாண்டோவும் நாணயக்காரவும். ஜனாதிபதியாக பதவியேற்ற சில வாரங்களில் தனக்கு மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி விக்கிரமசிங்கவையும் ரஞ்சன் மறக்கமுடியாது. வெளியில் வந்தும் கூட அவர் இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு கைதி மாதிரியே இருக்கவேண்டிய நிலை.

அண்மைக் காலத்தில் இலங்கையில் நீதித்துறையை அவமதித்ததாக குற்றவாளியாகக் காணப்பட்டு சிறை சென்ற முதல் அரசியல்வாதி ரஞ்சன் அல்ல. ஜனாதிபதிகளினால் மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலையான முதல் அரசியல்வாதியும் அவரல்ல.

சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவும் 6 வருடங்களுக்கு முன்னர் பொதுபல சேனா பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக சிறை சென்றார்கள். ஞானசார ஒரு மதகுருவாக இருக்கின்ற போதிலும் அவரையும் அரசியல்வாதிகளின் வரிசையில் வைப்பதில் பொருத்தப்பாடு இல்லையென்று கூறமுடியாது. அரசியல்வாதிகளை விடவும் முனைப்புடன்  இனவாத நச்சுக்  கருத்துக்களைப் பரப்பி பேரினவாத அரசியலை ஊக்குவிப்பவர் அவர்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் திசாநாயக்க அமைச்சராக இருந்தவேளை 2003 நவம்பரில்  ஹபராதுவவில் வருடாந்த விவசாய விழாவில் உரையாற்றியபோது உயர்நீதிமன்றத்தின் செயற்பாடுகளை கண்டனம் செய்து வெளியிட்ட கருத்து நீதிமன்ற அவமதிப்பாக அமைந்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் சமாதான முயற்சிகளை முன்னெடுத்தவேளையில் இராணுவ விவகாரங்களைக் கையாளுவதில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் பாதுகாப்பு அமைச்சராக இருந்த திலக் மாரப்பனவுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் (பிரதம நீதியரசராக சரத் என்.சில்வா இருந்தபோது) உயர்நீதிமன்றம் தலையிட்டு ஜனாதிபதிக்கு சாதகமான முறையில் தீர்ப்பை அறிவித்தது. இராணுவத்தின் மீதான கட்டுப்பாட்டை கொண்டிருப்பதில் ஜனாதிபதியின் அதிகாரத்தை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம் பாதுகாப்பு அமைச்சரின் நடவடிக்கைகள் செல்லுபடியற்றவை என்று அறிவித்தது. இதனால் துணிச்சல் பெற்ற திருமதி குமாரதுங்க பிரதமர் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்திடமிருந்து பாதுகாப்பு, உள்துறை மற்றும் ஊடகத்துறை அமச்சுக்களைப் பறித்தெடுத்தார். இது விடயத்தில் உயர்நீதிமன்றத்தின் தலையீட்டை எதிர்ப்பதாகவும் அதன் தீர்ப்பை ஏற்கப்போவதில்லை என்றும் தனது அந்த உரையில் திசாநாயக்க குறிப்பிட்டார். அதுவே அவரை சிக்கலில் மாட்டியது.

அவர் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வு 2004 டிசம்பர் 7 இரு வருட கடூழியச்சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இலங்கையில் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக சிறைக்குச் சென்ற முதல் நாடாளுமன்ற உறுப்பினரான  திசாநாயக்க வெலிக்கடைச் சிறையில் அல்ல, பெரும்பாலும் தேசிய வைத்தியசாலையின் மேர்ச்சண்ட் வார்ட்டில்தான் நாட்களைக் கழித்தார் எனலாம். பின்னர் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக வந்ததும் 2006 பெப்ரவரியில் அவருக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.

2010 ஜனவரியில் காணாமல்போன பிரபல அரசியல் கார்ட்டூனிஸ்ட் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை (2016) விசாரித்த நீதிபதி அவர்களுக்கு பிணை வழங்க மறுத்ததை அடுத்து நீதிமன்றத்துக்குள் பிரவேசித்த ஞானசார தேரர் நீதிபதியையும் சட்டத்தரணிகளையும் அவதூறு செய்ததுடன் எக்னெலிகொடவின் மனைவி சந்தியாவையும் அச்சுறுத்தினார்.

இதையடுத்து சட்டமா அதிபர் திணைக்களம் அவருக்கு எதிராக தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2018 ஆகஸ்ட் 8ஆம் திகதி 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 6 மாதச் சிறைத்தண்டனை தேரருக்கு விதிக்கப்பட்டது.

அவருக்கு 2019 மே 23 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். ரஞ்சனின் விடுதலை தொடர்பாக கடந்தவாரம் கருத்துவெளியிட்ட ஆங்கிலப் பத்திரிகையொன்று நீதிமன்ற அவமதிப்புக்காக சிறைக்குச் சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட முன்னைய மன்னிப்புகளைச் சுட்டிக்காட்டி ஞானசாரவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு ஜனாதிபதியாக சிறிசேன செய்த வெறுக்கத்தக்க செயல்களின் நீண்ட பட்டியலில் ஒன்று என்று வர்ணித்திருந்தமை கவனிக்கத்தக்கது.

ஆனால், திசாநாயக்கவும் ஞானசாரவும் செய்த குற்றம் ரஞ்சனின் குற்றத்தையும் விட பாரதூரமானதாக இருந்தாலும் கூட அவர்களுக்கு முழுமையான மன்னிப்பு (குடியியல் உரிமைகளுடன்) முன்னைய ஜனாதிபதிகளினால் வழங்கப்பட்டது. ஆனால், ஜனாதிபதி ரணில் ரஞ்சனுக்கு அவ்வாறு செய்யவில்லை. அதற்கு  ஒரு அரசியல் காரணி  இருக்கக்கூடும்.

இது இவ்வாறிருக்க, மேற்கூறப்பட்ட மூவருக்கும் ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து எந்த படிப்பினையையும் அரசியல்வாதிகள் பெறவில்லை என்பதைக் காண்பிக்கும் ஒரு சம்பவமாக புத்தளம் மாவட்ட பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நீதிபதிகள் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பில் இரு சட்டத்தரணிகள் அவர் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படவேண்டும் என்று கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 23 பொதுஜன பெரமுனவின் தலைமையலுவலகத்தில் செய்தியாளர் மகாநாட்டில் உரையாற்றிய சனத் நிஷாந்த நாட்டில் சட்டம் சீர்குலைந்திருப்பதற்கு காரணம் நீதிபதிகள் கிறிமினல்களை விடுதலை செய்வதாகும் என்று குறிப்பிட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. இவரது விவகாரம் எவ்வாறு கையாளப்படும் என்பதை அடுத்துவரும் நாட்களில் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

எமது நாட்டில் நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் பிரதம நீதிரசர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட சம்பவம் கூட இடம்பெற்றது.

2018 அக்டோபரில் ஜனாதிபதி சிறிசேன பிரதமர் பதவியில் இருந்து விக்கிரமசிங்கவை அகற்றிவிட்டு மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்ததை அடுத்து மூண்ட அரசியலமைப்பு நெருக்கடிக்கு மத்தியில் நவம்பர் முற்பகுதியில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டார். அந்த அறிவித்தலுக்கு எதிராக உயர்நீதிமன்ற வழங்கிய உத்தரவு தொடர்பில் சில வாரங்களுக்கு பிறகு சரத் என். சில்வா மருதானையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கருத்து வெளியிட்டார்.

அந்தக் கருத்து நீதித்துறையை அவமதிக்கும் வகையில் இருந்ததாக மூன்று பேராசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கு 2019 மே மாதம் விசாரணைக்கு எடுக்கப்படவிருந்த நிலையில் இரு நீதியசர்கள் தாங்கள் அந்த அமர்வில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக்கொள்வதாக அறிவித்தனர்.

சரத் என். சில்வா பிரதம நீதியரசராக பதவி வகித்த காலத்தில் வழங்கிய தீர்ப்பொன்றுக்காக பல வருடங்கள் கழித்து நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்ட விசித்திரத்தையும் கண்டோம்.

2004 டிசம்பர் சுனாமியினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அனர்த்த நிவாரண உதவியாக வெளிநாடுகளிடம் இருந்து பெருமளவு நிதி கிடைத்தது. சுனாமி வேளையில் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க நாட்டில் இருக்கவில்லை. அப்போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷதான் உடனடி நிவாரணப் பணிகளை மேற்பார்வை செய்தார். அவரது அம்பாந்தோட்டை மாவட்டமும் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று.

‘ஹெல்பிங் அம்பாந்தோட்டை’ என்ற நிதியம் ஒன்றை உருவாக்கிய ராஜபக்‌ஷ அதற்குக் கிடைத்த நிதியை கையாடி தனியார் வங்கியொன்றில் வைப்பிலிட்டதாக 2005 குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சரத் என். சில்வா தலைமையிலான உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு தவறானது என்று தீர்ப்பளித்தது. அவ்வாறு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதனால் தான் ராஜபக்‌ஷவினால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடியதாக இருந்தது.

ராஜபக்‌ஷவின் இரண்டாவது பதவிக்காலத்தின் இறுதியில் சரத் என்.சில்வா, “ராஜபக்‌ஷ இப்போது வித்தியாசமான மனிதராக மாறிவிட்டார். அவரது ஆட்சியில் பெருமளவு ஊழல் இடம்பெறுகிறது. ஹெல்பிங் அம்பாந்தோட்டை வழக்கில் என் முன்னால் இருந்த சாட்சியங்களின் அடிப்படையில் அப்போது தீர்ப்பை வழங்கினேன். அவர்கள் இப்போது நடந்துகொள்கின்ற முறையைப் பார்த்தால் அந்த வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள்  உண்மையானவையாக  இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அவரை அந்த வழக்கில் இருந்து விடுவித்ததற்காக மன்னிப்புக் கோருகிறேன்” என்று பகிரங்கமாக கூறினார்.

தவறானது என்று அவரே ஒத்துக்கொள்கின்ற தீர்ப்புத்தான் ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வழிவகுத்து நாட்டை இன்றைய வங்குரோத்து நிலைக்குக் கொண்டுவந்திருப்பதால் மக்கள் அனுபவிக்கின்ற அவலங்களுக்கு தானும் ஒரு வகையில் பொறுப்பு என்று முன்னாள் பிரதம நீதியரசர் மனம் வருந்துவாரோ என்னவோ!

வீரகத்தி தனபாலசிங்கம்