Photo, Maatram/ Selvaraja Rajasegar

கடந்த மே 9 பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்‌ஷ விலகினார். ஜூன் 9 முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார். ஜூலை 9 மாபெரும் மக்கள் கிளர்ச்சியை அடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறி பிறகு வெளிநாடு சென்று பதவி விலகினார். இந்த மூன்று 9ஆம் திகதிகளும் இலங்கையின் அரசியலில் நிலையான ஒரு வரலாற்று முக்கியத்துவ இடத்தைப் பெற்றுவிட்டன.

இது சில எதிரணி கட்சிகளுக்கு 9ஆம் திகதியில் போராட்டம் நடத்தினால் அரசாங்கத்தை வீழ்த்தமுடியும் என்ற ஒரு மருட்சியைக் கொடுத்துவிட்டது போலும். ஆகஸ்ட் 9ஆம் திகதியையும் அவை மாபெரும் போராட்டத்துக்கான தினமாக அறிவித்து கொழும்பில் அணிதிரளுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதே இந்த அழைப்பின் நோக்கம். ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)யும் முன்னரங்க சோசலிச கட்சியும் அதன் பின்னணியில் இருந்தபோதிலும், சமகி ஜன பலவேகயவின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே முன்னரங்க பேச்சாளராக நின்று ‘இறுதி யுத்தத்தில்’ பங்கேற்குமாறு மக்களை அழைத்தார்.

ஜூலை 9 தலைநகரில் இடம்பெற்ற வரலாற்று மக்கள் கிளர்ச்சியின்போது அங்குவந்த வேறு அரசியல்வாதிகளை போராட்டக்காரர்கள் தாக்கி விரட்டிய  போதிலும், அவர்களில் ஒரு பிரிவினர் பொன்சேகாவை உற்சாகமாக வரவேற்றதை காணக்கூடியதாக இருந்தது. அந்த வரவேற்பு போராட்ட இயக்கத்தின் மத்தியில் தனக்கு பேராதரவு இருக்கிறது என்ற ஒரு மருட்சியை அவருக்கு ஏற்படுத்திவிட்டது போல தோன்றுகிறது. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ‘அறகலய’ போராட்ட இயக்கத்தின் முக்கிய  பேச்சாளர் போன்று பொன்சேகா நடந்துகொண்டார்.

மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்படக்கூடிய உத்தரவுகளை ‘சட்டவிரோதமானவை’ என்று வர்ணித்த அவர் இராணுவத்தினர் அந்த உத்தரவுகளை பின்பற்றக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார். இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்று 13 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் தனது வேண்டுகோளுக்கு படையினர் மதிப்புக்கொடுப்பார்கள் என்று அவருக்கு நம்பிக்கை இருக்கிறது போலும். அவரது போராட்ட அழைப்புக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சமகி ஜன பலவேகய அறிவிக்கத்தவறவில்லை.

எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே ஆகஸ்ட் 9 ‘இறுதி யுத்தத்தில்’ பங்கேற்பதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தவர்களினால் பெரும் எண்ணிக்கையில் மக்களை அணிதிரட்ட முடியவில்லை. சில தொழிற்சங்க இயக்கங்களும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் ஆதரவாளர்களுமே ஆங்காங்கே ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற எந்த இடத்திலும் பீல்ட் மார்ஷலை கண்டதாக யாரும் சொல்லவில்லை.

அந்தப் போராட்டத்தில் பங்கேற்பதில் மக்கள் காட்டாத ஆர்வத்தை தற்போதைய அரசாங்கத்தை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்றோ அல்லது வீதிகளில் இறங்கவேண்டிய அளவுக்கு இப்போது மக்களுக்கு பிரச்சினைகள் இல்லை என்றோ அர்த்தப்படுத்தவேண்டியதில்லை. ஆனால், இலக்குகளை தெளிவாக வரையறுக்காமல் நெடுகவும் போராட்டங்களை தொடருவதை மக்கள் விரும்புவதாக இல்லை. இடையறாத போராட்டங்கள் ஒரே குழப்பநிலைக்கு வழிவகுக்கலாம் என்ற பீதி மக்கள் மத்தியில் காணப்படுகிறது. போராட்டக்காரர்கள் மீதான விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஒடுக்குமுறையும் ‘அறகலய’ போராட்ட இயக்கத்தில் கடந்த நான்கு மாதங்களாக பங்கேற்று  ஆதரவு வழங்கிய பல அமைப்புக்களை அதைரியப்படுத்திவிட்டது என்பதும் உண்மை.

‘இறுதி யுத்தத்திற்கு’ அழைப்பு விடுத்தவர்கள் இலங்கை அரசியல் அரங்கை பெருமளவுக்கு மாற்றியமைத்துவிட்ட மக்கள் கிளர்ச்சியின் அடிப்படை உணர்வுகளை கொச்சைப்படுத்திவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். புதியதொரு அரசியல் கலாசாரம் தோற்றுவிக்கப்படவேண்டும்; மக்களுக்கு பொறுப்புக்கூறக்கூடியதும் ஊழலற்றதுமான ஆட்சிமுறை ஏற்படுத்தப்படவேண்டும்; ஒட்டுமொத்தத்தில் முறைமை மாற்றம் (System Change) வேண்டும் என்ற போராட்ட இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்களுக்கு மக்கள் தொடர்ந்தும் ஒருமைப்பாட்டை வெளிக்காட்டுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அதேவேளை, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகக் கூறும் புதிய ஜனாதிபதிக்கு அவகாசம் வழங்கவேண்டும் என்ற கருத்து மக்களில் கணிசமான பிரிவினர் மத்தியில் குறிப்பாக மேல் தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தவர்கள் மத்தியில் வலுவாக இருக்கிறது. தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற சில நடவடிக்கைகள் மக்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணத்தைத் தருகின்றன என்ற போதிலும் வாழ்க்கைச் செலவு உயர்வு தொடர்ந்தும் வானளாவ உயர்ந்துகொண்டே போகிறது.

ஒரு புறத்தில் பொருளாதார இடர்பாடுகளை தணிப்பதற்காக நடவடிக்கைகள் எடுப்பதில் அக்கறை காட்டுவதாக கூறுகின்ற அரசாங்கம் மறுபுறத்தில் மின்சார கட்டணங்களை முன்னென்றும் இல்லாத வகையில் 75 சதவீதத்தினால் அதிகரித்திருக்கிறது. நீர்க்கட்டணம் போன்ற பல சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் சாத்தியமும் இருக்கிறது. மேலும் பல்வேறு வரிகளை அதிகரித்ததன் மூலமாக மக்கள் மீது மறைமுகமாக சுமைகள் ஏற்றப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. இதேபோக்கு தொடருமாக இருந்தால் ஒரு  எல்லைக்கு அப்பால் மக்கள் மீண்டும் வீதிகளுக்கு இறங்குவதை தவிர்க்கமுடியாமல் போகும்.

கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்த மக்கள் கிளர்ச்சி போன்று மீண்டும் மக்கள் அணிதிரண்டு ஆட்சியதிகாரத்தின் வாசற்படி வரை வந்து சவால் விடுக்கக்கூடிய நிலைமை மீண்டும் தோன்றுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்பதில் அரசியல் அதிகாரவர்க்கம் உறுதியாக இருக்கிறது. விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் இதையே பிரதிபலிக்கி்ன்றன.

‘அறகலய’ போராட்ட இயக்கம் தணிந்துபோயிருக்கலாம். ஆனால், அது பொதுமக்கள் மத்தியில் தவறான ஆட்சிமுறைக்கு எதிராக வளர்த்துவிட்ட அரசியல் பிரக்ஞை தணிந்துவிடப்போவதில்லை. ராஜபக்‌ஷர்களின் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பின்னரான காலகட்டத்தில் இலங்கையின் அரசியல் பழையமாதிரி இருக்கமுடியாது. உன்னிப்பாக தங்களை இடையறாது  அவதானித்துக்கொண்டிருக்கப்போகின்ற மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அரசியல்வாதிகள் முன்னர் போன்று செயற்படமுடியாது என்பது நிச்சயம்.

அதேவேளை ‘அறகலய’ போராட்ட இயக்கம் அதனால் இதுவரையில் சாதிக்கக்கூடியதாக இருந்தவை பற்றியும் கடைப்பிடித்த அணுகுமுறைகள் பற்றியும் விமர்சன அடிப்படையில் உள்நோக்கிப் பார்க்கவேண்டியது அவசியமாகும். ஆரம்பக்கட்டத்தில் இருந்தே இயக்கத்துக்கு கட்டுறுதியான – தெளிவான ஒரு தலைமைத்துவம் இருக்கவில்லை. ஆதரவு தெரிவித்து கொழும்பு காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’விற்கு வந்த பல்வேறு அமைப்புக்களும் அவற்றின் நோக்கங்களை அறிவிப்பதற்கான களமாக அதை மாற்றியதையும் காணக்கூடியதாக இருந்தது.

கோட்டபாய ராஜபக்‌ஷ அதிகாரத்தைக் கைவிட்டு நாட்டை விட்டு ஓடிய பிறகு அடுத்தது என்ன என்பது பற்றி போராட்ட இயக்கத்தின் மத்தியில் தெளிவு இருக்கவில்லை. மக்களின் மாபெரும் பங்கேற்புடன் போராட்ட இயக்கம் அரசியல் அதிகாரவர்க்கத்தை உலுக்கி உலகின் கவனத்தை ஈர்த்தபோது அதற்குள் ஊடுருவிய சில அரசியல் சக்திகள் தங்களது அரசியல் நிகழ்ச்சித்திட்டத்துக்கு இசைவான முறையில் இயக்கத்தை ‘கடத்திச்செல்ல’ முயற்சித்து வன்முறைகளுக்கு வழிவகுத்தது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவதற்கு விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு வாய்ப்பாகிப் போனது.

மே 9 அலரிமாளிகையில் இருந்து மஹிந்த ராஜபக்‌ஷவினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட குண்டர்கள் காலிமுகத்திடல் அமைதிவழி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை நடத்தியபோது நாடு பூராவும் மக்கள் கொந்தளித்தார்கள். அதேபோன்ற ஒரு  பிரதிபலிப்பை ஜூலை 22 அதிகாலையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பலவந்தமாக போராட்ட இயக்கத்தவரை வெளியேற்றியபோது காணக்கூடியதாக இருக்கவில்லை.

முறைமை மாற்றம் போராட்ட இயக்கத்தின் பிரதான முழக்கமாக இருந்தது. முறைமை மாற்றம் என்பது அடிப்படையில் ஒரு அரசியல் புரட்சியாகும். ஆட்சி மாற்றம் என்பது முறைமை மாற்றம் ஆகிவிடாது. சமுதாயத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றுவதே உண்மையான முறைமை மாற்றம். கோட்டபாய ராஜபக்‌ஷ கூட 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலின்போது முறைமை மாற்றம் பற்றி பேசினார். இன்று ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் அது பற்றி பேசுகிறார். உண்மையில் அத்தகைய மாற்றம் ஒன்றுக்கு அவர்கள் எதிரானவர்கள். அத்தகைய மாற்றம் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கின்ற வர்க்கத்தின்  நலன்களுக்கு முற்றிலும் எதிரானது.

அதனால் அரசியல் அதிகார வர்க்கம் உண்மையான முறைமை மாற்றத்துக்காக போராடுகின்ற சக்திகளை படைபலம் கொண்டு ஒடுக்கவே செய்யும். அதேவேளை, தற்போதைய அரச இயந்திரத்தை அப்படியே வைத்துக்கொண்டு முறைமை மாற்றத்தை செய்யமுடியாது. அதனால், முறைமை மாற்றம் என்பதைப் பற்றிய தெளிவான விளக்கமின்றி வெறுமனே ஒரு சுலோகமாகப் பயன்படுத்துவது மக்களை தவறாக வழிநடத்துவதாகவே அமையும்.

இதனிடையே, போராட்ட இயக்கம் ஓய்ந்துபோனதுதான் தாமதம் அரசியல்வாதிகள் தங்கள் பழைய போக்கிற்கு திரும்புவதைக்காணக்கூடியதாக இருக்கிறது.

போராட்ட இயக்கம் உச்சக்கட்டத்தில் இருந்தவேளையில் சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமைப்பது குறித்தும் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்தி சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுத்து உதவிகளைப் பெறவேண்டிய அவசியம்  குறித்தும் பேசிய பெரும்பாலான அரசியல் கட்சிகள் இப்போது அத்தகைய ஒரு ஏற்பாட்டுக்கு ஒத்துழைக்காமல் இருப்பதிலேயே கவனம் செலுத்துகின்றன.

ஜனாதிபதி விக்கிரமசிங்க ராஜபக்‌ஷர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை அமைச்சர்களாகக் கொண்ட அரசாங்கத்துக்கு தலைமைதாங்கிக்கொண்டு சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்வருமாறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதில் எந்தளவுக்கு நேர்மையாக இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், அரசியல் கட்சிகள் அத்தகைய அரசாங்கம் ஒன்றில் பங்கேற்பது தங்களுக்கு ஒரு பொறியாக அமைந்துவிடுமோ என்று அஞ்சுகின்றன.

ஜனாதிபதி அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்திவருகின்ற போதிலும் பல கட்சி அரசாங்கம் ஒன்றையாவது அமைப்பதில் வெற்றி காண்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதையே நிகழ்வுப்போக்குகள் உணர்த்துகின்றன.

தாங்கள் தற்போது எடுக்கக்கூடிய நிலைப்பாடுகள் அடுத்துவரக்கூடிய தேர்தலில் தங்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மனதிற்கொண்டே அரசியல் கட்சிகள் அவற்றின் வியூகங்களை வகுக்கின்றன. எதிரணி கட்சிகள்  ‘அறகலய’ போாட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசினாலும் அரசாங்கம் தற்போது முன்னெடுக்கின்ற அடக்குமுறை நடவடிக்கைகளை உள்ளூர ஆதரிக்கவே செய்கின்றன. ஏனென்றால், தாங்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற வல்லமையுடன் மக்கள் சக்தி ஒன்று நிலையாக இருப்பதை அரசியல் வர்க்கம் விரும்பப்போவதில்லை.

“ராஜபக்‌ஷர்களுடனேயே முன்னரும் இருந்தோம். இப்போதும் இருக்கிறோம். எதிர்காலத்திலும் இருப்போம். ராஜபக்‌ஷர்களுடன் மீண்டெழுவோம்” என்று குரல்கள்  கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் ஒலித்ததையும் கேட்டோம்.

வீரகத்தி தனபாலசிங்கம்