“மைனாகோகம மற்றும் கோட்டாகோகமவில் இருந்த அமைதியான போராட்டக்காரர்கள் மீது வேண்டுமென்றே கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான தூண்டுதல்களின் போதிலும் கூட, அரசினால் ஆதரவளிக்கப்பட்ட தாக்குதல்காரர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும் கூட நாங்கள் வன்முறையினை பதிலுக்குப் பதிலாக்குவதனை வழியாகக் கொள்ளக்கூடாது. நாம் வன்முறையில் பதிலளிக்கும் போது, நாங்கள் எங்களுடைய மனிதாபிமானத்தினை மறுதலிக்கின்றோம், குண்டாந்தடிகளின் குவியல் ஒன்றுக்கும் கற்களுக்கும் முரட்டு சக்திக்கும் எமது கொள்கையடிப்படையிலான போராட்டத்தினை சுருக்குகின்றோம்” என்று கூறுகின்றார் பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம.

கோட்டா வேண்டாம் என்பதன் அர்த்தம் வன்முறை வேண்டாம் என்பதாகும். சாக்குபோக்குகள் இல்லை, விதிவிலக்குகள் இல்லை. இது ஒரு இலகுவான வழி இல்லை, ஆனால் எங்களது நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கான வழி இலகுவானதாக இருக்கமுடியாது என்றும் அவர் கூறுகிறார். கோட்டாபய ராஜபக்‌ஷவை பதவி விலகுமாறுகோரி நடாத்தப்பட்டு வரும் அமைதியான போராட்டத்தின் மீதான குண்டர்களின் வன்முறை பிரயோகம் குறித்து பேசும்போதே மேற்கண்டவாறு பேராசிரியர் கூறுகிறார்.

ஆங்கில மொழியில் அமைந்த அவருடைய நேர்க்காணல் கீழே இணைக்கப்பட்டிருக்கிறது. அதன் தமிழாக்கத்தை வீடியோவின் கீழ் பார்க்கலாம்.

தற்போது நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்டுவருகின்ற வன்முறை தவறானதாகும். இது மேலும் ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் என்பதனாலல்ல, இந்த அரசாங்கத்தின் போக்கிற்கு இது வசதியானதாகிவிடும் என்பதனாலுமல்ல, ஆனால் தேசிய தலைமைத்துவத்தில் இருந்து எந்த இராட்சசர்களை நாம் விரட்டவேண்டும் என முயற்சித்துக் கொண்டிருக்கின்றோமோ அதே இராட்சசர்களாக எம்மையும் மாற்றிவிடும் என்பதனால் இந்த வன்முறை தவறானதாகும். மைனாகோகம மற்றும் கோட்டாகோகமவில் இருந்த அமைதியான போராட்டக்காரர்கள் மீது வேண்டுமென்றே கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான தூண்டுதல்களின் போதிலும் கூட, அரசினால் ஆதரவளிக்கப்பட்ட தாக்குதல்காரர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும்கூட நாங்கள் வன்முறையினை பதிலுக்குப் பதிலாக்குவதனை வழியாகக் கொள்ளக்கூடாது. நாம் வன்முறையில் பதிலளிக்கும் போது, நாங்கள் எங்களுடைய மனிதாபிமானத்தினை மறுதலிக்கின்றோம், குண்டாந்தடிகளின் குவியல் ஒன்றுக்கும் கற்களுக்கும் முரட்டு சக்திக்கும் எமது கொள்கையடிப்படையிலான போராட்டத்தினை சுருக்குகின்றோம்.

நாங்கள் எங்களுடைய எதிரிகளை விடவும் சிறந்தவர்களாக இருக்கவேண்டும். அவர்களைப் போல வன்முறையாளர்களாக நாமும் இருப்பது, கோட்டாவை திரும்பவும் கொண்டுவந்து இதனை அவருடைய நிரந்தரமான வீடாக்குவதற்காகவிருக்கும். நாம் கோரிக்கை விடுத்தது போன்று கோட்டா வீடு செல்வதற்கு, அவரும் அவருடைய ஆதரவாளர்களும் பிரயோகித்த கொடூரத்தனமும் மனிதநேயமற்ற தன்மையும் கூட தோற்கடிக்கப்படல் வேண்டும். ஆகையால் ஒரு போதும் திருப்பிக் தாக்கும் வன்முறை வேண்டாம்.

கோட்டா வேண்டாம் என்பதன் அர்த்தம் வன்முறை வேண்டாம் என்பதாகும். சாக்குபோக்குகள் இல்லை, விதிவிலக்குகள் இல்லை. இது ஒரு இலகுவான வழி இல்லை, ஆனால் எங்களது நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கான வழி இலகுவானதாக இருக்கமுடியாது. பக்கசார்பற்றதொரு சட்டத்தின் ஆட்சியினுள், செயற்பாடுமிக்க பிரஜைகளிலும் பொறுப்புக்கூறக்கூடிய ஜனநாயக ஆட்சியிலும் அத்திவாரமிடப்பட்ட, அனைவருக்குமான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நீதி என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டதொரு புதிய இலங்கையினை கட்டியெழுப்புவதற்கு, தீயிடல், கொலை, கொள்ளை மற்றும் சட்டரீதியற்ற விழிப்புக்குழுக்கள் என்பன  எங்களுடைய மீள்எழுச்சியினை பறைசாற்றுவதற்கு அனுமதிக்கமுடியாது. எது மோசமானதாக ஆரம்பிக்கின்றதோ அது எப்போதும் மோசமானதாவே முடியும். வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராகிலும், அவ்வாறு செய்வதற்கான அதிகாரத்துடன் தொடர்ந்தும் செய்துகொண்டிருப்பவர்களை, தற்போது நிறுத்துவதற்கு நாம் ஒன்றாகப் பணியாற்றுவோம் என்பதுடன் அனைத்துக் குற்றவாளிகளையும் நீதிக்கு முன் கொண்டுவருவோம். யாருடைய வன்முறை சிறந்தது என்றோ யாருடைய வன்முறை மோசமானதென்றோ நாம் பக்கச்சார்பாக இருக்கக்கூடாது. குற்றவாளிகள் சாகும்போது, அப்பாவிகள் குற்றவாளிகளாகின்றனர், நாம் அனைவரும் களங்கமானவர்களாகின்றோம். இதனை உடனே நிறுத்துவோம், தயவுசெய்து அதற்கு காரணம் கற்பிக்காது நிறுத்துவோம்.