Photo, Selvarja Rajasegar

‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியின் பிரகாரம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்திய அரசாங்கம் என்பன இணைந்து எமது கொடூரமான அரசாங்கத்தை இந்த நெருக்கடியிலிருந்து வெளியில் கொண்டு வருவதற்கு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து நான் பெருமளவுக்கு ஏமாற்றமும், விரக்தியும் அடைந்த நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து இக்கடிதத்தை எழுதுகிறேன். அரசாங்கத்தின் மோசமான முகாமைத்துவம் மற்றும் ஊழல் என்பவற்றின் காரணமாக என்னுடைய டீசல் வாகனம் இப்பொழுது வீட்டில் முடங்கிக் கிடக்கிறது; வீட்டில் சமையல் எரிவாயு இல்லை. மின்சாரம் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எனது மனைவி ரைஸ் குக்கரைப் பயன்படுத்தி சமையல் வேலைகளைச் செய்கிறார். எமது ஒரு சில அயலவர்கள் செய்து வருவதைப் போல, விறகுகளைப் பயன்படுத்தி சமையல் வேலைகளை மேற்கொள்வதற்கு நாங்கள் இன்னமும் தயாராகவில்லை. இரண்டு தினங்களுக்கு முன்னர் நான் யாழ்ப்பாணம் எங்கிலும் சமையல் எரிவாயுவைத் தீவிரமாகத் தேடி அலைந்தேன். என்னுடைய இந்தத் தேடுதல் தோல்வியடைந்ததனை அடுத்து, ஸ்கூட்டரில் இருந்த பெற்றோல் முழுமையாகத் தீர்ந்து விட்டது. அதிர்ஷ்டவசமாக ஒரு எரிபொருள் நிலையத்தில் ஐந்நூறு ரூபாவுக்கு வரையறுக்கப்பட்ட அளவில் பெற்றோலைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த வரையறுக்கப்பட்ட எரிபொருளுடன் என்னுடைய மனைவியை அவர் சேலையணிந்த நிலையில் ஒரு திருமண வைபவத்திற்கு அழைத்துச் செல்ல முடியுமா என்பது எனக்குச் சந்தேகமாக இருக்கின்றது. இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் ஹர்த்தால் காரணமாக இந்தத் திருமண வைபவம் நடக்குமா என்பதும் தெரியாது.

இந்தக் கஷ்டங்களுக்கு மத்தியில் பிரான்சில் வாழும் தமிழர் ஒருவர் தயாரித்திருக்கும் ஒரு யூ டியூப் காட்சி எனக்கு ஓரளவு நிவாரணத்தையும், புன்னகை செய்வதற்கான ஒரு அரிய வாய்ப்பையும் வழங்கியது. இலங்கையில் வாழும் அவருடைய சகோதரி மின் உபகரணங்களைப் பெற்றுக் கொடுக்குமாறு அவருக்குத் தொல்லை கொடுத்ததுடன், அவர் அவற்றை அந்தச் சகோதரிக்கு உரிய விதத்தில் அனுப்பி வைத்திருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து பிரான்சுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு உரல் மற்றும் உலக்கை என்பவற்றை மீண்டும் யாழ்ப்பாணத்திற்குத் திருப்பி அனுப்புவதற்கென அவர் இப்போது பிரெஞ்சுக் கடைகளில் அவற்றைத் தேடிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால், முன்னர் அவர் பிரான்சிலிருந்து தனது சகோதரிக்கு அனுப்பி வைத்திருக்கும் மின் உபகரணங்களை மின்சாரம் இல்லாத நிலையில் அவரால் பயன்படுத்த முடியாதுள்ளது.

எமது அரசாங்கம் 6.9 மில்லியன் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும், இறுதியில் இப்பொழுது அது சிங்கள பொதுமக்களின் ஆதரவை இழந்துள்ளது.

ஊழல் மலிந்த ஓர் ஆட்சிக்கு கடன்கள் வழங்கப்படுவதனை சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்தியா என்பன உண்மையில் ஊக்குவிக்க வேண்டுமா? எமது அமைச்சர்களின் மாட மாளிகைகள், அவர்களுடைய திருமண வரவேற்பு வைபவங்கள் மற்றும் விருந்துகள், ஸ்போர்ட்ஸ் வகை கார்கள், பந்தயக் குதிரைகள் மற்றும் வெளிநாட்டு நாய்கள் என்பவற்றைப் பார்க்கும் பொழுது “மிஸ்டர் 10%” என்ற வர்ணனை ராஜபக்‌ஷ அரசாங்கத்திலிருக்கும் அநேகமாக அனைத்து அமைச்சர்கள் தொடர்பாகவும் உண்மையானது என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை. அவர்கள் தமது செலவுக் கணக்குகளை அரசாங்க சம்பளங்களுக்கு மட்டும் வரையறுத்துக் கொள்வதில்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். இந்த அமைச்சர்களிலும் பார்க்க உயர்ந்தளவில் சம்பளங்களைப் பெற்றுக் கொள்ளும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகளும் கூட இந்தளவுக்கு ஆடம்பரமான வாழ்க்கை வாழவில்லை. அவர்கள் அவ்விதம் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாலும், இலங்கையில் எவருக்கும் இல்லாத வெட்கம் அவர்களுக்கு இருப்பதனால் அப்படியான வாழ்க்கையை இரகசியமாகவே வாழ்வார்கள் – உண்மையில் ஊழல் அரசியல்வாதிகள் எமது நாட்டில் திருடும் பொழுதும், அதற்கூடாக ஆடம்பர வாழ்க்கை வாழும் பொழுதும் அவர்களை மக்கள்  பாராட்டுகிறார்கள். இதற்கான காரணம் மேல் நாட்டு சட்ட அமுலாக்க முகவரகங்கள் மீது பணிந்து செல்லும் எமது சட்ட மா அதிபர் திணைக்களத்தை ஒத்த விதத்தில் செல்வாக்குச் செலுத்த முடியாது என்பதாகும். இது தவிர, மிகவும் விரிவான விசாரணைகளுக்குப் பின்னர் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கும் பல நபர்கள் எமது நீதித்துறையினாலும், பணிந்து போகும் சட்ட மா அதிபர் திணைக்களத்தினாலும் விடுவிக்கப்பட்டு வருகின்றார்கள்; இந்த நீதித்துறையின் மீதோ அல்லது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மீதோ எனக்குத் துளியும் நம்பிக்கையில்லை. அத்துடன், அந்த அப்பாவி விசாரணை அதிகாரி பணிந்து போகும் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படுகின்றார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்தியா என்பன இந்த அசுத்தமான கரங்களுக்கு மேலும் அதிகளவிலான பணத்தைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றனவா? அப்படி அவர்களுக்குப் பணம் வழங்கப்பட்டால் அதற்கான விலையை எதிர்கால தலைமுறையினர் செலுத்த வேண்டி வருமா? இறுதியில், இந்தக் கடன்களைச் செலுத்த வேண்டிய நிலையில் எம்மை விட்டு வைத்துவிட்டு, அவர்கள் இந்தப் பணத்தை விழுங்கிக் கொள்வார்களா? ஏற்கனவே நாடு எடுத்திருக்கும் கடன்களை எம்மால் செலுத்த முடியாத ஒரு நிலைமை நிலவி வருகின்றது.

நிதித்துறையில் நற்பெயர் பெற்றுக் கொண்டிருக்கும் மூன்று நபர்கள் இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கு உதவுவதற்கு முட்டாள்தனமாக முன்வந்திருக்கிறார்கள். அவர்கள் அந்த முயற்சியில் வெற்றியீட்ட முடியும். எவ்வாறிருப்பினும், அவர்கள் அதில் வெற்றியீட்டி, எமது ஊழல் அரசியல் தலைவர்கள் அவ்விதம் கிடைக்கும் பணத்தில் கைவைத்தால் (நிச்சயமாக அவர்கள் அவ்வாறு செய்வார்கள்) இந்த மூன்று நபர்களினாலும் அதனைத் தடுத்து நிறுத்த முடியுமா? அவர்கள் தம்மை மிகவும் மோசமான ஒரு நிலைமைக்குள் தள்ளியிருப்பதுடன், அதற்கூடாக எம்மை மேலும் அதிகளவில் கடன் சுமைக்குள் தள்ளி விடுகிறார்கள்.

இலங்கைக்குக் கடன்கள் வழங்கப்படக் கூடாது; எதிர்ப்புத் தெரிவிப்பது தொடர்பான தமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தும் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளாதிருக்கும், பொறுப்புக் கூறும் அரசாங்கம் ஒன்று எமக்குக் கிடைக்கும் வரையில் கடன்களை மீளமைப்புச் செய்வதற்குக் கூட அவ்வித கடன்கள் வழங்கப்படக் கூடாது.

தயவுசெய்து கொலைக்காரர்கள் மற்றும் திருடர்கள் ஆகியோரின் பக்கத்தை எடுக்கவேண்டாம். இலங்கையின் துன்பப்படும் மக்கள் சார்பாக குரல்களை உயர்த்துங்கள். எமது பேரில் கடன்களை வழங்கி, எம்மிடமிருந்து ஏற்கனவே பெருந்தொகையான பணத்தைத் திருடிக் கொண்டிருக்கும் ஆட்களின் கைகளுக்கு அந்தப் பணத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டாம்.

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கான ஒரு காரணமாக எமது துன்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமென இந்தியாவிடமும், சர்வதேச நாணய நிதியத்திடமும் நான் கேட்டுக் கொள்கிறேன். பாரிய மக்கள் எதிர்ப்புக்கள் காரணமாக தோன்றியிருக்கும் அழுத்தத்தை அவர்களே தணித்துக் கொள்ளட்டும். நாங்கள் எமது தற்போதைய துன்பத்தைச் சகித்துக் கொள்கின்றோம்; நீங்கள் வழங்கும் கடன்களும் எமது தலைவர்களால் திருடப்பட்டால் அடுத்த தலைமுறை எமது பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் ஆகியோர் நாங்கள் இன்றிருக்கும் நெருக்கடி நிலையிலும் பார்க்க மிக மோசமான நெருக்கடியொன்றுக்குள் தள்ளப்பட முடியும்.

இந்த அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இந்தியாவும், சர்வதேச நாணய நிதியமும் முன்வராவிட்டால், பெருகி வரும் நாட்டின் அராஜக நிலை இந்த அரசாங்கம் வெளியேறுவதற்கு வழிகோலி, பொறுப்புக் கூறக் கூடிய புதிய அரசாங்கமொன்றை நாங்கள் பெற்றுக் கொள்வதற்கு உதவும். அதுவே எமது முதன்மைத் தேவையாக உள்ளது.

பிரித்தானிய மக்கள் ஜேர்மனியின் குண்டுத் தாக்குதல்கள் காரணமாக சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்த பொழுது வின்ஸ்ட்டன் சேர்ச்சில் 1940 இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் எழுந்து நின்று, நிவாரண உதவிகளுக்குப் பதிலாக “இரத்தம், உழைப்பு, கண்ணீர் மற்றும் வியர்வை” என்பன சிந்தப்படும் என வாக்குறுதி அளித்தார். இப்பொழுது துன்பத்தைச் சகித்துக் கொள்ள வேண்டிய தருணம் எமக்கு வந்துள்ளது. இந்தத் தருணத்தில் எமது அரசியல்வாதிகளுக்கு மேலும் அதிகளவிலான கடன்களைக் கொடுத்து, நாங்கள் சமையல் எரிவாயு, உணவு மற்றும் எரிபொருள் என்பவற்றை பெற்றுக் கொள்வதற்கும், அவர்கள் ஆடம்பர வாழ்வு வாழ்வதற்கும் அனுமதிப்பதன் மூலம் எமது அடுத்த தலைமுறையை துன்பத்தில் ஆழ்த்த முடியாது.

எம்மைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஓர் அரசாங்கம், பொறுப்புக் கூறலை முன்வைக்கும் ஓர் அரசாங்கம் அமைக்கப்படும் வரையில் தயவுசெய்து மேலும் கடன்களை வழங்க வேண்டாம்.

எஸ். ரத்னஜீவன் ஹூல்

No More Loans Without Accountability தலைப்பில் 21.04.2022 அன்று கிறவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.