Photo, Selvaraja Rajasegar

கிரமங்களில் வாழும் மக்களுக்கு வசிப்பதற்காக 20 பேரச்சஸ் அல்லது அதற்கு அதிகமான அரசக் காணிகள் சட்ட ரீதியாக உரித்துடன் வழங்கப்படுகின்றன. எனினும், மலையக மக்களுக்கு வசிப்பதற்காக 1995ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை ஒரு குடும்பத்துக்கு 7 பேச்சஸ் அளவு காணியே வழங்கப்பட்டுள்ளது. அவையும் சட்ட உரித்து அற்றவைகளாகும்.

1972 ஆம் ஆண்டு 01ஆம் இலக்க காணி சீர்திருத்த ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 3(3) இன் பிரகாரம் பெருந்தோட்டங்களில் லயன் வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு 20 பேர்ச்சஸ் அளவிலான காணி ஒதுக்கப்படுவதனை உறுதிசெய்துள்ளது. எனினும், தற்போதைய அரசாங்கம் மலையக மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 பேர்ச்சஸ் துண்டு அளவான காணியை மாத்திரம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அறிய முடிகிறது.

நாட்டில் காணி இல்லாத பிரஜைகளுக்கு காணி வழங்குவதற்காக காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் (1935), அரச காணிகள் கட்டளை சட்டம் (1947), காணி கையளிப்பு (விசேட ஏற்பாடுகள்) சட்டம் (1979), காணி சீர்திருத்த ஆணைக்குழு சட்டம் ஆகிய சட்டங்கள் ஊடாக அனுமதிப்பத்திரம் (permit) அளிப்புப் பத்திரம் (grant) மற்றும் அறுதியீட்டு உறுதியூடாக (deed of transfer) காணி உரிமை வழங்கப்படுகிறது.

எனினும், மலையக மக்களுக்கு இந்தச் சட்டங்களில் ஏற்புடைய சட்டங்களைப் பயன்படுத்தி அனுமதிப்பத்திரமோ, அளிப்புப் பத்திரமோ, அறுதியீட்டு உறுதியோ இதுவரை வழங்கப்படவில்லை.

நாட்டில் காணி அற்ற பிரஜைகள் உரிய அரச அதிகாரிகள், அரசு நிறுவனங்களின் மூலம் மற்றும் காணி கச்சேரி ஊடாக தெரிவு செய்யப்படுகின்றனர். எனினும், மலையக மக்கள் தொடர்பில் பெருந்தோட்ட கம்பனிகளும் பெருந்தோட்ட கம்பனிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கம்பனி சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியமும் (PHDT – Trust) தொழிற்சங்கங்களும் தீர்மானங்களை மேற்கொள்கின்றன.

நாட்டில் காணி அற்ற பிரஜைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அரசு காணிகள் எது என்பதை காணி அமைச்சு, காணி சீர்திருத்த ஆணைக்குழு, வீடமைப்பு அதிகார சபை, காணி ஆணையாளர், மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் போன்ற அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

எனினும், பெருந்தோட்ட கம்பனிகளும் பெருந்தோட்ட கம்பனிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியமுமே மலையக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய காணிகளைத் தெரிவு செய்கின்றன.

நாட்டில் பிரஜைகளுக்கு அரசு காணிகள் வழங்கப்பட்டு வீடுகள் கட்டிக் கொடுக்கும் போது அப்பொறுப்பை வீடமைப்பு அதிகார சபையே நிறைவேற்றுகிறது.

எனினும், மலையக மக்களுக்கு பெருந்தோட்ட கம்பனியின் கட்டுப்பாட்டில் உள்ள பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் என்ற நிறுவனம் நிறைவேற்றுகின்றது அல்லது பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தோட்ட வீடமைப்பு கூட்டுறவு சங்கத்தின் ஊடாக நிறைவேற்றப்படுகிறது.

சபரகமுவ, தென், மேல், ஊவா, மத்திய, வட மேல் மாகாணங்களில் உள்ள பல ஹெக்டயர் அளவான பெருந்தோட்டக் காணிகள் சகோதர சிங்கள மக்களுக்கு அரச நிறுவனங்கள் அனுமதிப்பத்திரம், அளிப்புப் பத்திரம், அறுதியீட்டு உறுதி ஊடாக வழங்கப்பட்டுள்ளன.

எனினும், மலையக மக்களுக்கு பெருந்தோட்ட காணிகளை வழங்குவதற்கு மாத்திரம் பெருந்தொட்ட கம்பனிகளுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் இடையே காணப்படுகின்ற குத்தகை ஒப்பந்தம் காரணமாக காட்டப்பட்டு காணி உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. அத்தோடு, பெருந்தோட்ட கம்பனிகளுடன் எவ்வித தொடர்புமற்ற காணி சீர்திருத்த ஆணைக்குழு, JEDB, SLSPC, TRI ஆகிய அரச நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள பெருந்தோட்டக் காணிகளை அவற்றில் வாழும் மலையக மக்களுக்கு குடியிருப்புத் தேவைக்காக அனுமதிப்பத்திரம், அளிப்புப் பத்திரம், அறுதியீட்டு உறுதி ஊடாக வழங்குவதற்கு இதுவரையில் எந்த விதமான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

அரசு ஆவணங்களின்படி ஏறத்தாழ 103,000 ஹெக்டயார் அளவிலான பெருந்தோட்ட காணிகள் பயன்படுத்தப்படாத காணிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், மலையக மக்களுக்கு ஒரு குடும்பத்துக்கு 20 பேர்ச்சஸ் என்ற அளவு காணியை மற்றும் ஏனைய சமூகத் தேவைகளுக்காக காணிகளை வழங்கி புதிய குடியிருப்புகளை ஏற்படுத்தி கிராமங்களாக மாற்றுவதற்கு வெறும் 20000 ஹெக்டயருக்கும் குறைவான காணியே தேவைப்படுகின்றது.

ஏனைய பிரஜைகளுக்கு விவசாய மற்றும் இதர தொழில் முயற்சிகளுக்காக அரச காணிகள் வழங்கப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டு அப்பிரஜைகளின் பொருளாதர ஸ்திரத்தின்மையும் நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பும் உறுதி செய்யப்படுறது.

எனினும், மலையக மக்களுக்கு விவசாய மற்றும் இதர தொழில் முயற்சிகளுக்காக காணி வழங்கப்படுவதில்லை. அத்தோடு, பெருந்தோட்டக் காணிகளை பெருந்தோட்டங்களுக்கு வெளியில் உள்ளவர்களுக்கு வழங்குவதற்கான கொள்கையே ஆட்சியாளர்களால் முன்வைக்கப்படுகின்றது.

எமது நாட்டில் பிரஜைகளுக்காக குடியேற்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டு புதிய கிராமங்கள் அமைக்கப்படும் போது ஏனைய எல்லா காரணிகளுக்கும் அப்பால் பிரஜைகளின் குடும்ப பாதுகாப்பு, நலன், பொருளாதார சுபிட்சம் என்பனவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

எனினும், மலையக மக்களுக்கு குடியிருப்புக்காக காணி வழங்கப்படும் போது மாத்திரம் நம் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட தேயிலைச் செடிகளுக்கும் ரப்பர் மரங்களுக்கும் அம்மக்களை விட அதிக மதிப்பு வழங்கப்பட்டு தேயிலைச் செடிகளையும் ரப்பர் மரங்களையும் காப்பாற்றுவதாக கூறி அவர்கள் தொடர்ந்து லயங்களிலேயே வாழ்வது உறுதி செய்யப்படுகிறது அல்லது மனிதர்கள் வாழ பொருத்தமற்ற காணிகளில் குடியேற்றப்படுதல் இடம்பெற்று வருகிறது.

இலங்கையில் வாழும் எல்லா பிரஜைகளுக்கும் அரசு காணி வழங்கவில்லை என்பது உண்மை என்ற போதும் காணி ஒன்றை தனது சொந்த வருமானத்தில் கொள்வனவு செய்ய முடியாத ஏக பெம்பான்மை பிரஜைகளுக்கு காணி வழங்கி அவர்களின் நில உரிமையையும் இருப்பையும் அரசு உறுதி செய்துள்ளது. தொடர்ந்தும் செய்யப்பட்டு வருகிறது.

எனினும், வரலாறு நெடுகிழும் ஏறத்தாள மலையக மக்கள் அனைவருக்கும் காணி உரிமை மறுக்கப்பட்டமையும் அதன் காரணமாக மிக மிக அடிப்படை உரிமையான முகவரியைக் கூட பெற்றுக் கொள்ள முடியாது ஆரம்பத்தில் தோட்ட சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் வழங்கிய ‘முகவரியை’ மலையக மக்கள் சுமந்து கொண்டிருக்கின்றனர்.

கிராமங்களில் மட்டும் நகர்ப்புறங்களில் வாழும் மக்களில் முறையே 95 மற்றும் 84 சதவிதமானவர்கள் சொந்தமான வீடுகளைக் கொண்டுள்ளனர்.

எனினும். மலையகத்தில் தனி வீடுகளைக் (எனினும் வீடுகள் அமைந்துள்ள காணிக்கு சட்ட ரீதியான உரித்து இல்லை) கொண்டவர்கள் வெறும் 10.2 சதவீதம் மாத்திரமே.

1981ஆம் ஆண்டில் நகரங்களில் இருந்த கட்டடங்களின் எண்ணிக்கை 511,810, கிராமங்களில் இருந்த கட்டிடங்களின் எண்ணிக்கை 2,084,841. 2012ஆம் ஆண்டில் அவை முறையே 908,078 மற்றும் 4,133.982 ஆக அதிகரித்திருந்தன. அதாவது, குறித்த காலப்பகுதியில் நகரங்களில் 396,267 கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. அது 77.42 சதவீத அதிகரிப்பாகும். குறித்த காலப்பகுதியில் கிராமங்களில் 2,049,141 கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. அது 98.25 சதவீத அதிகரிப்பாகும்.

எனினும், மலையகத்தில் 1981ஆம் ஆண்டு 217,193 கட்டடங்கள் (ஒரு லயன் வீடு ஒரு கட்டடமாக கணக்கிடப்பட்டுள்ளது.) இருந்த நிலையில் 2012 ஆண்டாகின்ற போது 225,099ஆக அதிகரித்துள்ளது. அதாவது வெறும் 7,906 கட்டிடங்களே புதிதாக கட்டப்பட்டுள்ளன. அது வெறும் 9.64 சதவீத அதிகரிப்பாகும். 2023 ஆகின்ற போது மலையகத்தில் வெறும் 39,799 வீடுகளே காணப்படுகின்றன.

சில கேள்விகள்,

  1. மனிதர்கள் காலடிபடாத காடுகளை அழித்து பெருந்தோட்டங்களை உருவாக்கி பேணி இந்நாட்டின் நவீன பொருளாதாரத்திற்கு தமது உழைப்பை வழங்கிய மக்களுக்கும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் ஒரு குடும்பத்துக்கு 20 பேர்ச்சஸ் காணியை சட்ட ரீதியான உரித்துடன் வழங்கி இதர உரிய வசதிகளுக்கான காணிகளுடனான குடியேற்றங்களை அமைத்து கிராமங்களை உருவாக்கும்படி அரசாங்கத்தை கோருவதற்கு மலையக தலைமைகளுக்கு ஏன் இத்தனை தயக்கம்?
  2. காடுகளை அழித்து மனிதர்கள் வாழக்கூடிய பல ஆயிரம் ஹெக்டயர் காணிகளை உருவாக்கிய மலையக மக்களுக்கு வீட்டுரிமைக்காகவும் தொழில் உரிமைக்காகவும் காணி உரிமையை பாரட்சமின்றி வழங்க அரசாங்கத்தை கோருவதற்கு மலையக தலைமைகளுக்கு எது தடையாக உள்ளது?
  3. 200 வருடங்கள் கடந்தும் இந்த பாரபட்சங்கள் ஓரங்கட்டல்கள் தொடர வேண்டுமா?

சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார்