படம் | HRW

ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள, இலங்கை தொடர்பான விசாரணைக்கான திகதி நிர்ணயமாகிவிட்டது. 2002 – 2009 வரையான காலப்பகுதியில், இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது அரச படைகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புஆகிய இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் – மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவையே மேற்படி விசாரனையின்போது ஆராயப்படவுள்ளன. இதற்கென 12 பேர் கொண்ட குழுவொன்றை ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவிப்பிள்ளை நியமித்திருக்கின்றார். மேற்படி குழுவிற்கு, ஜ.நாவின் மூத்த அதரிகாரியும் முன்னர் தென் சூடான் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை ஆராய்வதற்கென ஜ.நாவினால் நியமிக்கப்பட்டவருமான சன்றா பெய்டஸ் (Sandra Beidas) நியமிக்கப்பட்டுள்ளார். தென் சூடான் விவகாரம் தொடர்பில் சான்றா வெளியிட்ட அறிக்கை தவறான தகவல்களைக் கொண்டதென்னும் குற்றச்சாட்டுக்கு உள்ளானது. இவரதுதென் சூடான் தொடர்பான அறிக்கை வெளிவந்ததைத் தொடர்ந்து, தென் சூடானியர்கள் மத்தியிலிருந்து பரவலான எதிர்ப்புக்கள் கிளம்பின. இது தொடர்பில், தென் சூடான் ஜனாதிபதி சல்வாகிர் மயார்டிக்கு (Salva Kirr Mayardit) பெருமளவான மக்கள் முறைப்பாடுகள் (Mass petition) அனுப்பி வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சான்றா தென் சூடானிலிருந்து வெளியேற நேர்ந்தது. எனினும் நவிப்பிள்ளை, தென் சூடான் அரசு, சான்றா மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிராகரித்திருந்தார். இத்தகைய பின்னணி கொண்ட ஒருவரே தற்போது, இலங்கை யுத்தம் தொடர்பான விடயங்களை விசாரிப்பதற்கான குழுவிற்கு தலைமை தாங்கியிருக்கின்றார். ஏற்கனவே, குற்றச்சாட்டுக்குள்ளாகியிருந்த ஒருவரை ஏன் இலங்கை தொடர்பான விடயத்திற்கு நியமித்திருக்கிறார்கள்?

ஜ.நா. மனித உரிமைகள் பேரவையில் இறுதியாக நிறைவேற்றப்பட்ட அமெரிக்கப் பிரேரணைக்கு அமைவாகவே, தற்போது நவிப்பிள்ளை தன்னுடைய பணிகளை ஆரம்பித்திருக்கின்றார். நவிப்பிள்ளை தன்னுடைய பணிகளை ஆரம்பித்தவுடனேயே, இலங்கையின் ஜனாதிபதி ராஜபக்‌ஷவும் தன்னுடைய பணிகளை ஆரம்பித்துவிட்டார். ஜனாதிபதி ராஜபக்‌ஷ தற்போது ஜ.நா. மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என்று அறிவித்திருப்பதுடன், இது தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்கியிருக்கின்றார். இதனை பிறிதொரு வகையில் குறிப்பிடுவதானால், இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு என்னும் வகையில், இலங்கையின் மீதான சர்வதேச நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களை கையாளும் இறுதி இடம் நாடாளுமன்றமே என்பதாகவிடயத்தை திருப்பிவிட்டிருக்கின்றார். இதன் மூலம் எதிர்க்கட்சிகளை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றார். ஒன்றில் எதிர்க்கட்சிகள் இதனை ஆதரிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும். ஆதரித்தால் அக்கட்சிகள் சாதாரண சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மேலும் அன்னியப்பட நேரிடும். அதேவேளை எதிர்த்தால், இதுவரை அவர்கள் அரசின் மீது முன்வைத்துவந்த விமர்சனங்கள் வெறும் தேர்தல் நோக்கம் கோண்டது என்னும் உண்மை அம்பலமாகும். இரண்டாலும் நன்மை அரசிற்கே! இவ்வாறானதொரு வியூகத்தை இலக்காகக் கொண்டுதான் ஜனாதிபதி, ஜ.நா. விவகாரத்தை நாடாளுமன்றத்தை நோக்கி திருப்பிவிட்டிருக்கின்றார். விடயத்தை நாடாளுமன்றத்தை நோக்கி திருப்பியிருப்பதன் மூலம், இது ஒரு தேசிய விவகாரம் என்பதாகவே சிங்கள் மக்களுக்கு சொல்லப்படுகிறது. இதன் மூலம் சிங்கள மக்களை இந்த விடயத்திற்கு எதிராக அணி திரட்டுவது இலகுவாகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் அரசியலை மிகவும் சிறப்பாக முகாமை செய்ய முடியும்.

உள்நாட்டு நிலைமைகள் இவ்வாறிருக்க, இப்படியானதொரு விசாரனையின் ஊடாக வரக்கூடிய விளைவுகளை எவ்வாறுதான் மதிப்பிடுவது? தமிழர்கள் மத்தியில் ஜ.நா. விசாரணை குறித்து அளவுக்கதிகமான நம்பிக்கைகள் ஊட்டப்பட்டுள்ளன. ஆனால், இவ்வாறான விசாரணைகளின் எதிர்காலத் தாக்கம் என்பது முற்றிலும் சர்வதேச உறவுகளிலேயே தங்கியிருக்கிறது. உதாரணமாக, இஸ்ரேல் – பலஸ்தீன விவகாரம் தொடர்பில், இஸ்ரேல் மீது பல பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை இஸ்ரேல் தொடர்பில் ஜ.நாவினால் எந்தவொரு காத்திரமான நடவடிக்கையும் எடுக்க முடிந்ததில்லை. இதற்கு காரணம், இஸ்ரேல் – அமெரிக்க உறவாகும். அடிப்படையில் சர்வதேச உறவுகள் என்பது சர்வதேச அதிகாரமாகும். அந்த அதிகாரம் என்பது அவரவரின் நலனாகும். எனவே, இந்த யதார்த்ததை தாண்டி எந்தவொரு விசாரணையும், எவரது குரல் வளையையும் நசுக்கிவிடப் போவதில்லை. எனவே, இந்த இடத்தில் இலங்கையின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணையானது ​உடனடியான அதிசயங்கள் எதனையும் நிகழ்த்திவிடப் போவதில்லை. மேற்படி விசாரணை இம்மாதத்திலிருந்து ஏப்ரல் நடுப்பகுதி, 2015 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியதாக இடம்பெறவுள்ளது. இதன் விளைவாக இலங்கை யுத்தத்தில் பங்குகொண்ட, இரு தரப்பினரும் சில குற்றங்களை இழைத்துள்ளதாக முடிவு வரக்கூடும். ஆனால், இந்தக் காலப்பகுதியில் மேற்படி விசாரணைக் குழுவிற்கு கிடைக்கும் சாட்சியங்களின் அடிப்படையில்தான் முடிவு வெளியாகும். ஆனால், அரசின் மீதான குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. எனவே, இந்த விடயம் அடுத்து வரவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும். இதன் பின்னர் ஒரு பிரேரணை கொண்டு வரப்படலாம். அவ்வாறில்லாது, விசாரணையின் முடிவை ஜ.நா பொதுச் சபையின் பரீசீலனைக்கும் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்புண்டு. ஆனால், இப்படியான நடவடிக்கைளின் மூலம் நிகழப்போகும் இறுதி விளைவு என்னவாக இருக்க முடியும்?

இந்த இடத்தில், கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவிப்பிள்ளையை சந்தித்தபோது, அவர் குறிப்பிட்ட விடயம் ஒன்றே நினைவுக்கு வருகிறது. எனது கேள்வி ஒன்றுக்கான பதிலாகவே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் குறித்து பேசிவரும் நீங்கள், அதற்கான காலவரையறையாக எவற்றை கருதுகின்றீர்கள்? அதாவது 2009இற்கு முன்னரான நிலைமைகளை மட்டுமா அல்லது யுத்தத்திற்கு பின்னரான நிலைமைகள் உள்ளடங்கலாகவா? அதாவது, யுத்தத்திற்கு பின்னரான நிலைமைகள் தொடர்பில், தமிழர் தரப்பு பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன சூழலிலேயே, நான் மேற்படி கேள்வியை கேட்க நேர்ந்தது. எனது கேள்விக்கு நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்த நவிப்பிள்ளை, வித்தியாசமான பதில் ஒன்றை வழங்கியிருந்தார்.

அந்த பதில், ஜ.நா. மனித உரிமைகள் பேரவை என்பது எந்தளவு தூரம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என்பதை கோடிகாட்டியிருந்தது. அவர் குறிப்பிட்ட பதில் இதுதான் – மனித உரிமைகள் பேரவை என்பது ஜக்கிய நாடுகள் சபை இல்லை. அங்கே பொதுச் சபை இருக்கிறது. பாதுகாப்பு பேரவை இருக்கிறது (UN human rights council is not a UN. There is a general assembly. There is Security Council). உண்மையில் இது எனது கேள்விக்கான பதில் இல்லை. ஆனால், மனித உரிமைகள் பேரவையின் செயற்பாட்டு எல்லை எத்தகைய தன்மையைக் கொண்டிருக்கிறது என்பதற்கான பதிலே இது. இதிலிருந்து தமிழர்கள் கண்டடைய வேண்டிய பதில் என்ன? ஏனெனில், மனித உரிமைகள் பேரவையால், வெறுமனே சிபார்சுகளை மட்டுமே வழங்க முடியும். அதற்கு மேல் எதனையும், அதனால் செய்ய முடியாது. ஆனால், அத்தகைய சிபாரிசுகளை பலம் பொருந்திய சக்திகள் தங்களின் நலன்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தக் கூடிய ஏது நிலை உள்ளது என்பதையும் புறக்கணிக்க இயலாது. இலங்கை விடயத்திலும் இதுதான் நிலைமை. இலங்கைக்கு எதிராக ஜக்கிய நாடுகள் சபையினால் நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனெனில், பாதுகாப்பு பேரவையின் அனுமதியின்றி இலங்கைக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் ஜ.நாவினால் மேற்கொள்ள முடியாது. இலங்கை விவகாரம் பாதுகாப்பு பேரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுமிடத்து, சீனா அதனை நிராகரிக்கும். எனவே, ஜ.நாவின் ஊடாக இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்பது ஒரு கனவுலக வாதம்தான். அவ்வாறாயின் இதற்கு அப்பால் ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாதா?

நிச்சயமாக முடியும். மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்படும் விசாரணையின் முடிவை பலம்பொருந்திய நாடுகள், தங்களின் நாடாளுமன்றங்களில் சமர்ப்பித்து, இலங்கையின் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த முடியும். அமெரிக்கா நினைத்தால் அமெரிக்க செனற்றின் ஆதரவுடன் இலங்கையின் மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்த முடியும். இதேபோன்று ஜரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகள், தனித்தனியாக தங்களின் நாடாளுமன்றங்களின் ஆதரவுடன் அத்தகைய பொருளாதாரத் தடையை ஏற்படுத்த முடியும். ஆனால், இவையெல்லாம் நடைபெறலாம் அல்லது நடைபெறாதும் போகலாம். ஏனெனில், இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் குறித்த நாடுகளின் வெளிவிவகார நலன்களுடன் தொடர்புபட்டவை ஆகும். நாடுகள், பிராந்தியங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நலன்களுடன் அரசியலை உற்று நோக்குகின்ற உலகில், மனித உரிமைகள் என்பதும் அரசியல் தராசு கொண்டுதான் நிறுக்கப்படுகிறது.

இலங்கையின் மீது ஜ.நா. மனித உரிமைகள் பேரவை விசாரணை ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. இதன் பொருள் என்ன? ஜனாதிபதி ராஜபக்‌ஷ தலைமையிலான அரசின் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதுதானே! ஆனால், தென் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த இடதுசாரித்துவ அரசியலால் வழிநடத்தப்படும் நாடென்று கணிக்கப்படும் பொலிவியா, ஜனாதிபதி ராஜபக்‌ஷவிற்கஞ அந்த நாட்டின் உயரிய சமாதான விருதை வழங்கி கௌரவித்துள்ளது. ஒவ்வொரு நாடுகளினதும் நலன்சார் அரசியலுக்கு முன்னால் மனித உரிமை விவகாரம் எவ்வாறு இரண்டாம் பட்சமாகிறது என்பதற்கு இது நல்ல உதாரணமாகும். எனவே, ஜ.நா. மனித உரிமைகள் பேரவையினால் மேற்கொள்ளப்படும் விசாரணையின் இறுதி விளைவு எவ்வாறு அமையும் என்பது தற்போதைக்கு ஊகங்களுக்கு உரிய ஒன்று மட்டும்தான். ஏனெனில், இறுதியில் தமிழர் விவகாரம் (மனித உரிமை) என்பது, நலன்சார் அதிகார போட்டியில், ஒரு வெறும் துருப்புச் சீட்டாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு, வீசியெறியப்படும் நிலை உருவாகலாம். எனவே, ஊகங்களுக்கு உட்பட்ட ஒன்றின் மீது தமிழர்கள் எத்தகைய நம்பிக்கையை வளர்த்துச் செல்ல முடியும்?

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

DSC_4908