படம் | Ishara S.Kodikara Photo, GETTY IMAGES

தமிழ் வாக்காளர்கள் மறுபடியும் கூட்டமைப்புக்கு ஓர் ஆணையை கொடுத்திருக்கிறார்கள். 2003இல் இருந்து அவர்கள் கொடுத்து வரும் ஓர் ஆணையின் தொடர்ச்சியா இது?

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த சுமார் ஆறாண்டுகளுக்கு மேலாக கூட்டமைப்பின் செயற்பாடுகளைக் குறித்து தமிழ் வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியும் விமர்சனங்களும் அதிகரித்துக் காணப்பட்ட ஓர் அரசியல் சூழலில் தேர்தல் முடிவுகள் இவ்வாறு அமைந்திருக்கின்றன. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள முன்னேறிய பிரிவினர் என்று கருதத்தக்க அரசியலை புத்திபூர்வமாக அணுகும் தரப்பினர் கூட்டமைப்பின் மீது அதிருப்தியோடு காணப்பட்டார்கள். இக்கட்டுரை ஆசிரியர் உட்பட தமிழ் ஆய்வுப் பரப்பில் கட்டுரைகளையும் பத்திகளையும் எழுதுபவர்களில் ஒரு பகுதியினர் கூட்டமைப்பை நோக்கி கேள்விகளைக் கேட்டதோடு மக்கள் முன்னணியின் மீது பரிவோடும் காணப்பட்டார்கள்.

தமிழ் ஊடகப் பரப்பில் ஆசிரியர் பீடங்களின் மத்தியிலும் ஊடகவியலாளர்களின் மத்தியிலும் ஊடகச் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் கூட்டமைப்பின் மீது விமர்சனங்களைக் கொண்டிருந்தவர்களின் தொகை அதிகரித்துக் காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை “ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் நாமது சொன்னால் பாவமடா” என்று ஆசிரியர் தலையங்கம எழுதுமளவிற்கு ஊடகப்பரப்பில் ஒரு பகுதியினர் கூட்டமைப்பின் மீது விமர்சனங்களோடு காணப்பட்டார்கள்.

வட மாகாண முதலமைச்சரும் ஏறக்குறைய இதையொத்த ஒரு நிலைப்பாட்டோடுதான் காணப்பட்டார். தமிழ் டயஸ்போறாவில் குறிப்பிப்பிடத்தக்க ஒரு பிரிவினர் மக்கள் முன்னணியின் மீது பரிவோடு காணப்பட்டார்கள். தாயகத்தில் நடக்கும் ஒரு தேர்தலுக்காக டயஸ்போறாவில் சுவரொட்டிகளை ஒட்டுமளவிற்கு அவர்களுடைய ஆதரவின் அளவு காணப்பட்டது.

இணையப்பரபபில் சமூக வலைத்தளங்களில் ஒரு பெரும் பிரச்சார யுத்தமே முன்னெடுக்கப்பட்டது. இணையப்பரப்பில் உருவாக்கப்பட்ட சித்திரத்தைப் பொறுத்தவரை மக்கள் முன்னணிக்கு வாய்ப்புக்கள் அதிகரிப்பது போல ஒரு தோற்றம் உருவாகியது.

கூட்டமைப்பினர் மத்தியிலும் தமது ஏக போகம் சோதனைக்குள்ளாகிறது என்று ஒரு பதற்றம் காணப்பட்டது. தமது வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக அவர்களிற் சிலர் கோடிக்கணக்கில் செலவழித்தார்கள்.

ஆனால், தேர்தல் முடிவுகள் மேற்படி எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் பொய்யாக்கிவிட்டன. கூட்டமைப்பின் மீது அதிகரித்து வந்த அதிருப்தியை வாக்குகளாக மாற்ற மக்கள் முன்னணியால் முடியவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக தமிழில் அரசியல் எழுதும் ஒரு பகுதியினரின் நம்பிக்கைகளும் சாதாண தமிழ் வாக்காளர்களின் நம்பிக்கைகளும் ஒன்றல்ல என்பதை இத்தேர்தல் நிரூபித்திருக்கிறது. அல்லது தமிழ் அரசியல் எழுதுபவர்களால் சாதாரண தமிழ் வாக்காளர்களின் கருத்துலகத்துக்குள் நுழைய முடியவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

ஒரு செயற்பாட்டாளரான நண்பர் கேட்டார், “தமிழ் மக்கள் என்று நாங்கள் யாரைக் கருதுகிறோம்? நாங்கள் பழகுவோர், இடை ஊடாடுவோர் மட்டும்தானா தமிழ் மக்கள்? இல்லை” என்று. சாதாரண தமிழ் வாக்காளர்களுக்கும் தமிழ் சமூகத்தில் உள்ள முன்னேறிய பிரிவினருக்குமிடையிலான பாரதூரமான ஓர் இடைவெளியையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இத்தகையதொரு பின்னணியில் கூட்டமைப்புக்கு தமிழ் வாக்காளர்களில் பெருமளவினர் வழங்கியிருக்கும் ஆகப் பிந்திய ஆணையை எப்படி வியாக்கியானம் செய்வது?

தமிழ் வாக்காளர்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது அவர்கள் கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகளையிட்டு திருப்தியாக உள்ளார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது அவர்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் கேட்டது போல ஒரு தீர்வுக்காக வழங்கிய ஆணையா இது? அல்லது சில கூட்டமைப்பு பிரமுகர்கள் கூறுவது போல புலிகள் இயக்கத்தால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு என்ற அங்கீகாரம் இம்முறையும் அவர்களுக்குச் சாதகமாக அமைந்ததா? அல்லது சில கூட்டமைப்புப் பிரமுகர்கள் கூறுவது போல தமிழ் வாக்காளர்கள் ஐக்கியத்தைச் சிதைக்க விரும்பவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாமா? அல்லது ஒரு நாடு இரு தேசம் என்ற கொள்கையை அவர்கள் நிராகரிக்கிறார்கள், அதன் மூலம் ஒரே நாடு ஒரே தேசம் என்பதை ஏறறுக்கொள்கிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாமா? அல்லது சில விமர்சகர்கள் கூறுவது போல ஒரு நாடு இரு தேசம் என்பது வாக்காளர்களுக்கு விளங்கவில்லையா? அல்லது இருக்கிற நிலைமைகளை குழப்ப விரும்பாத ஒரு கட்சியை வாக்காளர்கள் தெரிந்தெடுத்தார்களா? சில விமர்சகர்கள் கூறுவது போல தீவிர நிலைப்பாடுள்ள ஒரு கட்சியைத் தெரிவு செய்தால் அது மறுபடியும் நிலைமைகளைக் குழப்பிவிடும் என்று சிந்தித்து தீவிர நிலைப்பாடற்ற ஒரு கட்சியை வாக்காளர்கள் தெரிந்தெடுத்தார்களா? அல்லது மேற்சொன்ன எல்லா தர்க்கங்களுக்கும் அப்பால் தமிழ் வாக்காளர்கள் மிகவும் எளிமையான தர்க்கங்களுக்கூடாக தட்டையாகச் சிந்தித்து தமது இன அடையாளத்தை நிரூபிக்கும் விதத்தில் வழங்கிய வாக்குகள் இவை என்று எடுத்துக் கொள்ளலாமா?

மேற்கண்ட வியாக்கியானங்களில் ஒன்றோ அல்லது பலவோ பொருத்தமாய் இருக்கலாம். ஆயின், மேற்படி ஆணையை தமிழ் வாக்காளர்கள் எந்த அடிப்படையில் வழங்கியிருக்கிறார்கள்?

எனது கடந்தவாரக் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டதைப் போல தமிழ் வாக்காளர்கள் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளின் படி வாக்களித்தார்களா? அல்லது மக்கள் முன்னணியின் ஒரு பகுதி ஆதரவாளர்கள் கூறுவது போல கடைசிநேரப் பிரச்சாரத்தால் மனம் மாறினார்களா? அல்லது ஏற்கனவே பழக்கப்பட்ட ஒரு சின்னத்திற்கு பழக்கப்பட்ட ஒரு கட்சிக்கு பழக்கதோசத்தின் பிரகாரம் ஒரு சடங்கைப் போல வாக்களித்தார்களா? இவற்றில் எது சரி?

மக்கள் முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவுகளோடு இருந்தார்கள் என்று கூட்டமைப்புப் பிரமுகர்கள் கூறுகிறார்கள். ஆயின், அந்த முடிவுகளை வாக்காளர்கள் எப்பொழுது எடுத்தார்கள்? எந்த அடிப்படையில் எடுத்தார்கள்? அவை வழமையாகக் கூறப்படுவது போல வாக்காளர்கள் தெளிவாகச் சிந்தித்து எடுத்த முடிவுகளா? கடந்தவாரக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதைப் போல தெளிவாகச் சிந்தித்து முடிவெடுப்பது என்பது அரசியல் மயப்பட்ட வாக்காளர்களுக்கே உரியதாகும். அவ்வாறு தெளிவாகச் சிந்தித்து முடிவெடுக்கும் வாக்காளர்கள் முன்முடிவுகளோடோ முற்கற்பிதங்களோடோ தேங்கி நின்று விடுவதில்லை. மாறாக கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் அவர்கள் தொடர்ச்ச்சியாக விவாதித்தே முடிவுகளை எடுப்பார்கள். ஆனால், நடந்து முடிந்த தேர்தலின் போது அத்தகைய விவாதங்கள் எதையும் பகிரங்கத்தில் காண முடியவில்லை.

பிரச்சாரக் கூட்டங்களில் வேட்பாளர்கள் மோதிக் கொண்ட அளவுக்கு வாக்காளர்கள் மோதிக்கொள்ளவில்லை. வாக்காளர்கள் பெருமெடுப்பில் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வரவேயில்லை. இத்தகையதோர் பின்னணியில் தமிழ் வாக்காளர்கள் எத்தகையை உரையாடல்களுக்கூடாக அல்லது விவாதங்களுக்கூடாக தெளிவாகச் சிந்தித்து முடிவுகளை எடுத்தார்கள்?

மக்கள் முன்னணியின் ஒரு பகுதி ஆதரவாளர்கள் கூறுகிறார்கள், இறுதிநேரப் பிரச்சாரங்களால் வாக்காளர்கள் முடிவுகளை மாற்றியிருக்கலாம் என்று. ஊடகங்கள் பக்கச்சார்பாகச் செயற்பட்டன என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், அவர்களுடைய கட்சிக்காரர்கள் ஒப்புக்கொள்வதைப் போல முழு மூச்சான ஒரு பிரச்சாரத்தை அவர்கள் ஜனவரி – 08 இற்குப் பின்னரே முன்னெடுக்கக் கூடியதாக இருந்தது. அதற்கு முன்புவரை அந்தக் கட்சியானது சில நபர்களின் கட்சியாகவே சுருங்கிக் காணப்பட்டது. அதற்கு முன்பு நடந்த தேர்தல்களின் போது வேட்பாளர்களைக் கண்டுபிடிப்பதே அக்கட்சிக்கு பெரிய சவாலாக இருந்தது. பகிரங்கத் தளத்தில் அக்கட்சிக்கு ஆதரவாகக் காணப்பட்ட புத்திஜீவிகள், சட்டத்துறை நிபுணர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற சமூகப் பிரபலஸ்தர்கள் பலரும் அக்கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்ந்து செயற்படத் தயாராக இருக்கவில்லை.

யாழ்ப்பாணத்து நடுத்தர வர்க்கமானது அக்கட்சி தொடர்பில் வெளிப்படையான ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கத் தயங்கியது. கூட்டமைப்பு தோல்வியுறுமா என்பது தொடர்பில் அவர்களுக்கு ஐயங்கள் இருந்தன என்பதினாலேயே “ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் நாமது சொன்னால் பாவம்” என்ற ஒரு மனோநிலை பரவலாகக் காணப்பட்டது. குறிப்பாக பரப்புரைகள் முடிவுக்கு வந்த அன்று இரவு யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பெயரால் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதை மறுத்து இன்னொரு அறிக்கை வெளிவந்தது. ஆனால், இந்த அறிக்கை போர் ஒரு தோல்விகரமான வெற்றிடத்தையும் வெளிக்காட்டியது. இக்கட்டுரையில் முன்பு குறிப்பிடப்பட்ட வவுனியாவை மையமாகக் கொண்டு இயங்கும் அந்த செயற்பாட்டாளர் கேட்டது போல உலகம் பூராகவும் பொதுவாக மாற்றம் என்று வரும் பொழுது அதன் முதற்பொறி மாணவர்கள் மத்தியில்தான் எழுவதுண்டு. இம்முறை தேர்தல் களத்தில் நிலைமை அவ்வாறு இருந்ததா? மாற்றத்தின் இதயமாக இருக்க வேண்டிய மாணவர்களின் பெயரால் உத்தியோகப் பற்றற்ற அறிக்கைகளை வெளியிடலாம் என்ற ஒரு நிலைமை எதைக் காட்டியது? பல்கலைக்கழக மாணவர்கள் மாற்றத்தின் முன்னணிப் படையாக அல்லது கூர்முனையாக இருக்கவில்லை என்பதைத்தானே?

மக்கள் முன்னணியானது கடந்த இரு மாதங்களாகத்தான் தேர்தல்களத்தில் முழு மூச்சாகச் செயற்பட்டது. அவர்கள் கனவுகண்ட மாற்றத்தை ஏற்படுத்த அந்த இரண்டு மாதங்கள் போதுமா? பல தசாப்தங்களாக தமிழ் வாக்காளர்களின் மனதில் படிந்து போயிருக்கும் ஒரு சின்னத்தையும் ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகளாகப் பதிந்து போயிருக்கும் ஒரு கட்சிப் பெயரையும் மாற்றுவதற்கு சுமார் இரண்டு மாதகால முழு அளவிலான பிரச்சாரங்கள் மட்டும் போதுமா?

பரப்புரைக் களத்தில் ஒப்பீட்டளவில் மக்கள் முன்னணியே புத்திபூர்வமான அரசியலை முன்வைத்தது. ஆனால், அதைச் சாதாரண வாக்காளர்களுக்கு விளங்கத்தக்க விதத்தில் எளிமையான சூத்திரங்களாக எளிமையான கோஷங்களாக பரவலாக்குவதில் அவர்கள் போதியளவு வெற்றியைப் பெறவில்லை. கோஷ அரசியலின் ஆரவாரங்களுக்குள் புத்திபூர்வமான உரையாடல்கள் அமுங்கிப் போவது என்பது அதிகம் முன்னேறாத ஜனநாயகப் பரப்புக்களில் ஒரு பொதுப் போக்காகக் காணப்படுகின்றது.

இலங்கையின் அனுபவம்மிக்க சிவில் அதிகாரியான நெவில் ஜெயவீர ஒருமுறை சொன்னார், “ஜனரஞ்சகத்திற்கும் புத்திசாலித்தனத்துக்கும் பொதுவாக பொருந்தி வருவதில்லை” என்று. தனது கொள்கை இலக்குகளை வாக்காளர்கள் மயப்படுத்துவதில் மக்கள் முன்னணியானது போதியளவு வெற்றிபெறவில்லையா?

எனவே, தமிழ் வாக்காளர்கள் மிகவும் அரசியல்மயப்படுத்தப்பட்டதால் தெளிவாகச் சிந்தித்து முடிவெடுத்தார்கள் என்று கூறப்படுவது ஒரு முழு உண்மையா? அல்லது இறுதி நேரப் பிரச்சார உத்திகளால் வாக்காளர்கள் குழப்பிவிடப்பட்டார்கள் என்பதும் ஒரு முழு உண்மையா? அல்லது ஒரு பழக்கத்தின் பிரகாரம் தமிழ் வாக்காளர்கள் ஒரு பழகிய சின்னத்திற்கு, ஒரு பழகிய கட்சிக்கு சடங்குபோல வாக்களித்துவிட்டு வந்தார்கள் என்பதுதான் சரியா?

இதில் எதுவும் சரியாக இருக்கலாம். ஆனால், இம்மூன்று கருதுகோள்களை விடவும் மிக மிகச் சரியானது எதுவெனில், தமிழ் அரசியலை வாக்கு வேட்டை அரசியலாக மாற்றுவதில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் வெற்றிபெறத் தொடங்கிவிட்டார்கள் என்பதே. இக்கட்டுரை முழுவதும் தமிழ் வாக்காளர்கள் என்ற ஒரு சொல் நோக்கம் கருதியே பயன்படுத்தப்படுகிறது. முழு உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு போர்க்களத்தில் வாழ்ந்த மக்கள் கூட்டம் அதிலும் குறிப்பாக குணப்படுத்தப்படாத கூட்டுக் காயங்களோடும் கூட்டு மனவடுக்களோடும் மல்லுக்கட்டும் ஒரு மக்கள் கூட்டம் வெறும் வாக்காளர்களாக சிறுத்துப் போயிற்றா? அதுவும் தேர்தலில் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள் தேசியப் பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்படும் ஒரு ஜனநாயகச் சூழலில் தமிழ் மக்கள் வாக்காளர்களாக மட்டும் சிறுத்துப் போயினர் என்பது எவ்வளவு பெரிய கொடுமை?

நிலாந்தன்