படம் | Photo, Lakruwan Wanniarachchi, GETTYIMAGES

உலகின் பல பாகங்களிலே ஊடக சுதந்திர தினமானது தமது ஊடகப்பணியை ஆற்றும்போது கொலையுண்ட ஊடகவியலாளர்களை நினைவுகூருவதால் கொண்டாடப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் அப்படிப் பலியானவர்களின் தொகையானது எனது பேச்சிலோ இப்படியான ஒரு நிகழ்விலோ குறிப்பிட்டுச் சொல்லிமுடியாதபடிக்கு அதிகமானதாகும். இங்கு அமர்ந்திருக்கும் ஊடகவியலாளர்கள் உட்படப் பலர் இன்றும் அதேபோன்ற ஆபத்துக்குத் தொடர்ந்தும் முகங்கொடுத்தும் வருகின்றனர். இருண்ட காலகட்டங்களிலுங்கூட பாதுகாக்கப்பட்டு வந்துள்ள தொழிற்துறையில் ஒரு சட்டத்தரணி என்ற ரீதியிலே, பெரும் விலை கொடுத்த இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு எனது ஆழ்ந்த கனத்தை வெளிப்படுத்துவதற்குக் கிடைத்த சலாக்கியமாகவே இதனை நான் பார்க்கிறேன். அறிந்துகொள்வதற்கான எமது உரிமையைப் பாதுகாப்பதிலே பெரும் கிரயத்தைச் செலுத்திய அவர்களைச் சிரம் தாழ்த்திக் கனம் செய்கிறேன்.

இந்தக் காலைப்பொழுதிலே பேசும்படியாக எனக்குத் தரப்பட்ட தலைப்பு, “போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறுதலும் ஊடக சுதந்திரமும்” என்பதாகும். மக்களைச் சுண்டியிழுக்கும் ஒரு தலைப்பாக இது தெரிந்தாலுங்கூட, ஊடகவியலாளர்கள் – குறிப்பாக வடக்குக் கிழக்கிலே உள்ளவர்கள் – அனுதினமும் முகங்கொடுக்கும் அம்சங்களையே நான் கவனத்திற்கொள்ள விரும்புகிறேன். இப்படியான தலைப்பைக் கையாள்வதற்கு நான் எனது உரையை இரு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, சர்வதேசக் குற்றச்செயல்களைத் தெரியப்படுத்துவதிலே ஊடகத்தின் (மற்றும் ஊடக சுதந்திரத்தின்) வகிபங்கு. இரண்டாவதாக, நிலைமாற்றுக்காலநீதியின் செயன்முறையிலே கடந்தகாலத்திலே இடம்பெற்ற சர்வதேசக் குற்றச்செயல்களைக் கையாளுவதிலே ஊடகத்தின் (மற்றும் ஊடக சுதந்திரத்தின்) வகிபங்கு.

வேறுபல நாடுகளைப்போலவே இலங்கையிலும் போர்க்குற்றங்கள், மனுக்குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் இன அழிப்பு ஆகியவை பற்றி அறிக்கைசெய்வதென்பது ஆபத்தான காரியமாகும். அநேகமாக இந்தக் குற்றச்செயல்கள் தமது குற்றச்செயல்கள் பகிரங்கப்படுத்தப்படுவதை விரும்பாத மிகவும் வல்லாதிக்கமுள்ளவர்களால் இழைக்கப்படுவதுண்டு. போர்க்குற்றங்கள் பற்றி அறிக்கைசெய்வது பெரும் ஆபத்தை விலைக்குவாங்வது போன்றதே. வாளைவிடப் பேனாமுனை பலம் மிக்கது என்பதைப் போரிடும் தரப்பினர் உணர்ந்திருப்பதாலே ஒருவேளை இப்படியாகக்கூடும். ஆயினும், இப்படியான ஆபத்துக்களிலிருந்தும், யுத்த வலயங்களுக்குள் நுழைவது மறுக்கப்பட்டிருந்தும், பல நாடுகளிலே போர்க்குற்றங்களையும் வேறு சர்வதேசக் குற்றச்செயல்களையும் வெளிக்கொணர்வதற்கு ஊடகவியலாளர்கள் உதவியுள்ளனர். சர்வதேசக் குற்றங்கள் இடம்பெறுகையிலே அவற்றைத் தமது ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளிலே பதிவுசெய்து, வலைத்தளங்களுக்கு அந்தச் சான்றுகளைத் தரவேற்றும் ‘குடிமக்கள் ஊடகவியலாளர்கள்’ அதிகரித்து வருகின்றனர். இந்த யுக்தி இலங்கையிலும் கணிசமான அளவுக்குப் பயன்படுத்தப்படுவதை நாம் கண்டுள்ளோம். உதாரணமாக. நுழைவு அனுமதி மறுக்கப்பட்டிருந்த மெனிக்பாம் தடுப்புமுகாமின் ஆரம்பகட்டத்து நிலைமை மற்றும் அங்கு அடைக்கப்பட்ட மக்களின் மோசமான நிலைமை போன்றவற்றையிட்ட படங்கள், அந்த முகாமுக்குள் சென்ற குடிமக்கள் ஊடகவியலாளர்களாலேயே வெளிக்கொணரப்பட்டன.

ஆயினும், குற்றங்கள் மத்தியிலே ஊடகவியலாளர்கள் சேதமாக்கும் வகிபங்கை வகிப்பதும் சாத்தியமே. மனுக்குலத்துக்கு இழைக்கப்பட்ட மோசமான இன அழிப்புக்களின்போது எப்படியாக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதையிட்ட உதாரணங்களையும் நாம் கண்டுள்ளோம். பல மில்லியன்கணக்கான மக்கள் கொலையுண்ட ஜேர்மனி மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளிலே, அந்த இன அழிப்பை ஊக்குவித்து அவற்றை ஒழுங்கிணைக்க உதவிய வானொலி நிலையப் பணியாளர்களே அவற்றுக்குப் பொறுப்பைக் கொண்டவர்கள். இலங்கையிலுங்கூட, உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் யுக்தியான ‘நடுகை ஊடகவியலாளர்’ பயன்படுத்தப்பட்டதை நாம் கண்டுள்ளோம். ஒரு தரப்பாரை ஆதரிக்கும் ஊடகவியலாளர்கள் இராணுவ அலகொன்றிலே உள்வாங்கப்பட்டு யுத்த வலயங்களுக்குச் செல்லும் அனுமதி அவர்களுக்கு வழங்கப்படுவதுண்டு.

களநிலைச் செய்திகள் பற்றிய உண்மையின் விளக்கத்தை வழங்குகையிலே, இத்தகைய ஊடகவியலாளர்களின் அறிக்கைகள் பக்கச் சார்பானதாக இருப்பது இயல்பானதே. அதேபோலவே, குடிமக்கள் ஊடகவியலாளர்களும் அபத்தமானவர்களாக ஆகிடக்கூடும். ஒன்றில் அவர்கள் ஒரு தரப்பாரின் கொள்கைபரப்பினை ஊக்குவிப்பதாலேயோ அல்லது ஊடக விதிகள் மற்றும் தர்மங்களுக்கு ஒழுகாத பொறுப்பற்ற சமூக ஊடகப்பயன்பாடுகளாலேயோ இப்படியாகலாம். எனவே, மோசமான குற்றச்செயல்களை வெளிக்கொணர்வதற்கு எப்படியாக இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் செயற்படுமோ, அதேபோலவே அந்தக் குற்றங்களை மூடிமறைக்கவும் மேலும் குற்றங்களைச் செய்யும்படி ஊக்குவிக்கவும் ஊடகம் பயன்படுத்தப்படலாம்.

இதனாலேதான், சான்று இருந்தாலுங்கூட பெருமளவிலான குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றதையிட்டு உலகுக்கு உறுத்தியுணர்த்துவது கடினமானதாகிறது. தப்பான தகவல்களின் திரட்சியால், தீர்மானம் எடுப்பவர்களுக்கு யாரை நம்புவது என்ற குழப்பம். இலங்கையிலே, பிரதானமாகச் சர்வதேச விசாரணையைத் தவிர்க்கும் பிரகாரமாக, இராணுவமும் முன்னைய அரசும் திட்டமிட்டுப் புனையப்பட்ட தப்பான தகவல்களைச் பரப்பி வந்தது. “குடிமக்களின் இறப்பு பூச்சியம்”, “யுத்த சூனியப் பிரதேசம்”, “சகல கனரக ஆயுதங்களையும் முடிவுக்குக் கொணர்தல்”, மற்றும் “மனிதாபிமான நடவடிக்கை” போன்றவைகளைப் பற்றி அவைகள் பேசிவந்தன. இந்தப் பொய்கள் கூறப்பட்டுக் கொண்டிருக்கும் போதே குண்டுத்தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான அப்பாவிக் குடிமக்கள் கொலை செய்யப்பட்டனர். எனவே, சர்வதேசக் குற்றங்களையிட்டு அறிக்கையிடும் ஸ்தாபனங்களின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வி இங்கே எழுகிறது. பாதுகாப்பதற்கான பொறுப்புக் கோட்பாட்டின் (Responsibility to Protect Doctrine) வெளிச்சத்திலே இந்தக் கேள்விகள் பொருத்தமானவை. ஒரு நாட்டிலே சர்வதேசக் குற்றங்கள் பெருமளவிலே இடம்பெறும்போது, அவற்றைத் தவிர்ப்பதற்குக் குறிந்த அந்த நாடு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், சர்வதேசச் சமூகம் குடிமக்களைப் பாதுகாப்பதற்கு ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் பணிப்புரையின் கீழ் பல படிமுறைகளை எடுத்திடலாம். சர்வதேத் தீர்மானம் எடுப்போருக்கான கேள்வி தொடர்கிறது – என்ன நடக்கிறது என்பதே தெரியாவிட்டால், என்ன செய்வது என்று எமக்கு எப்படித் தெரியும்?

லிபியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலே அண்மை காலங்களிலே இடம்பெற்ற பூசல்களின்போது, அவை தொடர்கையிலேயே அவற்றை விசாரிப்பதற்கு ஐ.நா. ஒரு விசாரணை மன்றத்தை அமைத்து, ஐ.நா. இற்கு எந்த நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பதைப் பரிந்துரைத்திருந்தது. ஆயினும், இந்த விசாரணைகள் நீடிய காலம் எடுக்கும் என்பதுடன், களநிலை அறிக்கையிடுதலுக்கு அவை மாற்றீடாக அமையவே அமையாது. ஆனால், ‘களநிலை அறிக்கையிடுதல்’ வல்லமையுள்ளதாய் இருப்பதை உறுதிசெய்வதற்கு அதன் நம்பகத்தன்மை மிக முக்கியமானதாகும். அதாவது, அது தொழிலாண்மை கொண்டதாயும் நேர்மையானதாயும் நடுநிலையானதாயும் இருக்கவேண்டும். அது ஒரு தரப்புக்குப் பக்கச்சார்பானதாகக் கண்டுகொள்ளப் படக்கூடாது. முன்நகர்ந்து செல்வதற்கு நாம் கற்கவேண்டிய பாடம் இதுவாகும். நாம் நேர்மையானவராயும், நிதர்சனமானவராயும், சகல பாதிப்புற்றோரினதும் மனித உரிமைகளைப் பாதுகாத்து அதனை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தைக் கொண்டவராயும் இருந்தால், சர்வதேச விடங்களிலே மாற்றங்களை விளைவிப்பதற்கு அவசியமான நம்பகத்தன்மையை உலகம் தரக்கூடிய சாத்தியம் உண்டு.

நான் ஏற்கெனவே பகிர்ந்துகொண்டதைப்போல, எனது பேச்சின் இரண்டாம் பகுதியிலே நான் நிலைமாற்றுக்கால நீதியும் ஊடக சுதந்திரமும் பற்றிய விடயத்தைக் கவனத்திற் கொள்ள விரும்புகிறேன். அதாவது, குற்றங்கள் இழைக்கப்பட்ட பின்பு சமூகமானது அந்தக் கடந்தகாலக் குற்றங்களைக் கையாள எத்தனிக்கையிலே ஊடகத்தினதும் ஊடக சுதந்திரத்தினதும் வகிபங்கு என்ன என்பதே. பலவிதங்களிலே போர்க்குற்றச்செயல்கள் அம்சங்களிலே அறிக்கையிடும் இந்தப் பகுதி அவ்வளவு கிளர்ச்சியான அனுபவமாய் இராவிட்டாலுங்கூட, இதுவும் அதேபோலவே முக்கியமானதாகும். நிலைமாற்றுக்கால நீதி (Transitional Justice) என்பதால் நாம் கருதுவது என்ன? கடந்த காலங்களிலே பெருமளவிலான குற்றச்செயல்கள் இழைக்கப்பட்டுள்ள இடங்களிலே கடந்த காலத்தை மேற்கொள்வதற்கும் அதைக் கையாள்வதற்கும் சமூகம் மேற்கொள்ளும் படிமுறைகளே இவை. நிலைமாற்றுக்கால நீதிக்கு நான்கு தூண்கள் உண்டு. அதாவது. உண்மை, நீதி, திருத்தியமைப்பு மற்றும் மீள இடம்பெறாது என்பதற்கான உத்தரவாதம் ஆகியவைகள். எனவே, குற்றவியல் விசாரணைகள், வழக்குகள், உண்மை அறியும் ஆணைக்குழு, நிவாரண நிகழ்ச்சித்திட்டங்கள், மற்றும் நினைவுகள் ஆகிய அனைத்துமே நிலைமாற்றுக்கால நீதியின் பகுதிகளாகும்.

நிலைமாற்றுக்கால நீதியின் பிரதான கோரிக்கைளுள் ஒன்றுதான் அதன் பொறிமுறைகளின் வடிவமைப்பு மற்றும் அமுலாக்கம் ஆகியவற்றிலே பாதிக்கப்பட்டோர் ஈடுபடுவது பற்றியதாகும். எனவே, பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாகத் தொடர்பாடுவதிலே பிரதானமான பொறுப்பை அரசாங்கம் கொண்டிருக்கும் அதேவேளை, இலங்கை போன்ற ஆயிரக்கணக்கான பாதிப்புற்றோர் உள்ள நிலையிலே, அவர்கள் அனைவரையும் நேரடியாக ஈடுபடுத்துவது என்பது சாத்தியமற்ற காரியமாகும். எனவே, சகல ஊடகங்களும் பல்வேறான நிலைமாற்றுக்கால நீதியின் பங்காளிகட்கிடையே நிலவும் தொடர்பாடற் பிளவைப் பாலமிடுவதிலே உதவும்பிரதான வகிபங்கை வகிக்கலாம். அது பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசுக்கும் இடைப்பட்ட அல்லது பாதிகப்பட்டவர்களுக்கும் வேறு பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடைப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடைப்பட்ட பிளவுகளையிட்டதாக இருக்கலாம். இந்த வகிபங்கினை வகிப்பதற்கு ஊடகம் சுயாதீனமானதாய் இருக்கவேண்டும். தொடரும் செயன்முறையினைக் கண்டித்து விமர்சிக்க இயலாத ஒரு சூழ்நிலையிலே அவர்கள் அமர்த்தப்படக்கூடாது.

இரண்டாவதாக, அவர்கள் நிலைமாற்றுக்கால நீதியிலே பயிற்றப்பட்டு, அதிலே மேற்கொள்ளப்படும் செயன்முறைகளைப்பற்றிப் புரிந்துகொள்ளவேண்டும். இது மிக முக்கியம். இடம்பெறும் செயன்முறைகளின் வகைகள், அவற்றில் உள்ள குறைபாடுகள், அந்த செயன்முறைகளை மேம்படுத்துவதற்கு பரிந்துரைக்கும் வழிமுறைகள், அந்த செயன்முறைகளால் எதிர்பார்க்கப்படும் விளைவுகள் போன்றவற்றையிட்டு ஊடகவியலாளர்கள் புரிந்து கொண்டாலேயன்றி பாதிகப்பட்டவர்களும் பொதுமக்களும் அந்தச் செயன்முறைகளைப் பற்றிப்புரிந்துகொள்ள மாட்டார்கள். மிகவும் நேர்த்தியான செயன்முறைகளை நீங்கள் கொண்டிருந்தாலுங்கூட, பாதிக்கப்பட்டோர் அவற்றைப் புரிந்துகொண்டு அவற்றிலே பங்கெடுக்க இயலாதிருக்குமாயின், அதனால் பயனேதுமில்லை. எனவே, அச்சு மற்றும் ஊடகத் தொழிற்துறைத் தலைவர்கள் – குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்கள் – அவர்களின் ஊடகவியலாளர்கள் இந்த செயன்முறைகளிலே நன்கு பயிற்றப்பட்டு பாதிக்கப்பட்டோரின் நலன்களைச் சேவிப்பதை உறுதிசெய்யும் கடப்பாட்டைக் கொண்டவர்களாவார்கள்.

கடந்த வருடம் மார்ச் மாதத்திலே ஜெனீவாவில் இருந்து சில தமிழ்த்தரப்பினர்கள் ஜெனீவா முறைகள் பற்றியும் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் பற்றியும் பல தப்பான தகவல்களைப் பரப்பியதை நாம் கண்டோம். தமிழர்களுக்கு அந்தத் தீர்மானத்தால் எவ்வித நன்மையும் கிட்டாது, அந்தத் தீர்மானத்திலே சர்வதேச விசாரணை எதுவுமே இல்லை, அது ஒரு பலவீனமான தீர்மானம் என்றும் கூறினார்கள். இந்தக் கூற்றுக்கள் பொய்யானவைகள் என்பது ஒருபுறமிருக்க, அவை எந்த மக்களின் நலனுக்காக நகர்த்தப்பட்டதோ அந்தக் மக்களைக் குழப்பிப்போட்டது. இதிலே நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் உள்ளது. நிஜங்களையிட்ட எமது பதிலீடுகள் அவற்றையிட்ட சீரியஸான பகுப்பாய்விலும் தொழிற்தன்மையான அறிவிலும் தங்கியிருக்க வேண்டும்; அரசியல் விளையாட்டுக்களிலும் உணர்ச்சிப் பிரவா புக்களிலுமல்ல. தொடரும் செயன்முறைகள் பற்றிய நேர்மையான விபரிப்புகளுக்கும் நேர்மையற்ற விபரிப்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இனங்கண்டுகொள்ளக்கூடிய விதத்திலே எமது ஊடவியலாளர்கள் பயிற்றுவிக்கப்படல் வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களின் உண்மை அறிவதற்கும் நீதிக்குமான உரிமை முழுமையாக உணரப்படும் என்பதே எமது பொதுவான நம்பிக்கையாகும். அந்தச் சேவைக்காக எமது பணி அர்ப்பணிக்கப்படட்டும்.

ஊடக சுதந்திர தினத்தன்று யாழ். நூலக கேட்போர் கூடத்தில் நிறான் அங்கிற்றனால் நடத்தப்பட்ட பேச்சு இங்கு தரப்பட்டுள்ளது.