படம் | ROB PINNE

கதை 1

பனி பொழிந்து கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் ஏதோ ஒரு நாடு. வயதான ஒரு தாய் இரு ஆண் பிள்ளைகளின் படங்களுக்கு முன்னால் இருந்து அழுது கொண்டிருக்கிறார். வேறு இரண்டு ஆண் பிள்ளைகள், “வா அம்மா நேரமாகிற்றுது, போவம்” என்று அழைக்கின்றனர். கண்ணீரைத் துடைத்தபடி எழுந்திருக்க முயற்சிக்கும் அவரை இரு பிள்ளைகளும் கைத்தாங்கலாகத் தூக்கிக்கொண்டு போய் கார் பின் இருக்கைகளுக்குள் இருத்துகின்றனர். அம்மா யன்னலுக்கு வெளியே பார்க்கிறார். பனி அழகாகப் பொழிந்துகொண்டிருக்கிறது. எங்கட இடத்துக்கு காரை விடு, முன் இருக்கையில் அமர்ந்திருப்பவன் சொல்கிறான். அதெப்பிடி, இந்த முறை எங்கட இடத்தில தான் விளக்குக் கொளுத்த வேணும் என்கிறான் காரை செலுத்துகின்றவன். வாய்த் தகராறு முற்றி கைச் சண்டைக்கு வருகிறது. இருவரும் காருக்குள் சண்டைபோட, கார் ஒரு கம்பத்தில் மோதுகிறது. அந்த விபத்தில் தாய் இறந்துவிடுகிறாள்.

முடிவு எழுத்தில் தெரிகிறது 2010 நவம்பர் 27 இன் 6.10 மணிக்கு இன்னும் இருப்பது 5 நிமிடங்கள்.

கதை 2

2009ஆம் ஆண்டின் தொடக்கப் பகுதி. ஐரோப்பாவின் ஒரு நாடு. அங்கு வாழ்கிறார் ஒரு தமிழர். தீவிர விடுதலைப் போராட்ட விசுவாசி. உழைப்பின் மொத்தத்தையும் போராட்டத்துக்காக அர்ப்பணித்தவர். அன்றைய நாளில் உள்ள உள்ளூர் அமைப்பொன்றிடமிருந்து அவசர அழைப்பு வருகிறது. சண்டை வெற்றி, இத்தின கோடி டொலர் தேவையாக இருக்கு. எப்பிடியாது ஒழுங்கு படுத்துங்கோ அண்ண, நம்பிக்கையோடு பேசி வைக்கிறார் அந்த அமைப்பின் தலைவர் என அறியப்பட்டவர். ஏற்கனவே, இவருக்குத் தலை நிமிரமுடியாதளவு கடன். மனைவியும், பிள்ளையும்தான் இப்போதைக்கு மிச்சம். யோசிக்கிறார். போராட்டம் வென்றால் இயக்கம் எல்லா கடனையும் அடைக்கும். மனைவி பிள்ளைகள் மற்றும் தானும் சேர்ந்து ஆயுள்கால கடனைப் பெற்றால் என்ன? (ஐரோப்பிய நாடுகளின் நிதிநிறுவனங்களிடம் வாழ்நாள் முழுவதையும் அடகு வைத்து கடன் பெறும் முறை) குடும்பத்தை சம்மதிக்க வைத்து அமைப்பு கேட்ட பணத்தை அனுப்பி விடுகிறார்.

2009 மே மாதம் போர் முடிந்தது. 2014 மே மாதத்தில் அவரின் குடும்பம் பிரிந்தது. ஆயுள் கால கடனாளியோடு குடும்பமாக வாழ முடியாதென்று கூறி மனைவியும் பிள்ளைகளும் சட்டப்படி விவாகரத்துப் பெற்று பிரிந்து அமெரிக்காவில் குடியேறிவிட்டனர். அவர் ஐரோப்பாவுக்கான அடிமையாகி உழைத்துக் கொண்டிருக்கிறார். மரணமும் அவருக்குக் கடனில்தான் முடியும். ஆனால், அமைப்புக்குக் காசு கேட்டவர் அதே சுகபோகங்களோடு வாழ்ந்து வருகிறார்.

கதை 3

சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வாங்க அதிகளவு நிதி கிடைத்தது. ஆயுதம் – கப்பல்கள் வாங்கிய மிச்சம் போக, மிகுதியானதை ஐரோப்பிய நாடுகளில் தொழில்களில் முதலிட்டார்கள். சுப்பர் மார்க்கெற், மருந்துக் கடை என்பன இதில் பிரபலமான விடுதலைப் புலிகளின் முதலீடுகள். அதாவது, ஐரோப்பிய நாடுகளில் தம் ஆதரவாளர்களாக இருப்பவர்களின் பெயர்களில் கடைகளை வாங்கி நடத்துவது. கணக்குக் காட்டப்படும் தொகைக்கு ஏற்ப வருமானம் விடுதலைப்புலிகளுக்கு வரும். அதைத் தனியாகக் கவனிக்க பொறுப்பாளர்கள் இருப்பர். புலிகளின் அதிகார மறைவிற்குப் பின்னர் இந்த வணிக மையங்கள் அனைத்தும் தனியுடமையாகிவிட்டன. வணிக நிலையங்கள் அதன் உரிமையாளர்கள் ஆகிவிட்டனர். இப்போது விடுதலைப் புலிகள் என்று அவர்களிடம் விசாரித்தால், விடுதலைப்புலிகளா அப்பிடி எண்டால் யாரு? என்று விசாரிக்குமளவுக்கு நிலைமை.

இந்த மூன்று கதைகளும் நிஜமானவை. அதுவும் ஐரோப்பாவில்தான் இந்தக் கதைகளும் இருக்கின்றன. விடுதலைப் புலிகளோடு வைத்துத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்துவிட்டன. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகளை தடைசெய்தது தவறு என்று தீர்ப்பளித்திருக்கிறது. களத்தில் புலிகள் இல்லாத இந்தத் தருணத்தில் வெளியாகியிருக்கும் தீர்ப்பு, கிளை பரப்பியிருக்கும் விடுதலை அமைப்புக்களிடம் மேலும் பிளவுகளையும், சுட்டுக்கொலைகளையும், மிரட்டல்களையுமே ஏற்படுத்தும். 2009ஆம் ஆண்டிலிருந்து மௌனிக்கப்பட்ட ஆயுதத்தோடு எந்த வன்முறைகளிலும், இலங்கையில் புலிகள் மற்றும் புலிகள் சார்ந்தவர்கள் ஈடுபடாததற்கான அங்கீகாரமே ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு. அதனை இவ்வாறான அமைப்புகள் உரிமைகோரலின் மூலம் குழப்பிவிடக்கூடாது என்பதே தமிழர்களின் பேச்சாக இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்திருக்கும் இந்த விடுதலை நிரந்தரமானால் அவர்களால் சுயாதீனமாக இயங்கமுடியும். அவர்கள் மீண்டும் வந்து போரிடாவிட்டாலும் தமிழர்கள் நடத்திய போராட்டத்திற்கும், இவ்வளவு காலம் செய்த தியாகங்களுக்கும் உலகம் கொடுக்கும் உயரிய மரியாதையாகவும் அது இருக்கும்.

அப்படியான ஒரு விடுதலை அறிவிப்பு சாத்தியப்பட்டாலும், 2009க்கு முன்னரான விடுதலைப் புலிகளை இனி காண்பது மிக மிக அரிதாகவே இருக்கும். இலங்கையில் இனியும் ஒரு ஆயுத வழிப் போராட்டத்துக்கு சாத்தியமில்லாததோடு அதற்கான மக்களும் இப்போதைக்கு இல்லை. இவ்வாறு களத்தில் முற்றுமுழுதாகவே புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் புலத்துப் புலிகள்தான் கிடைக்கின்ற களங்களுக்கு வருவர். ஐ.நா. முன்றலும், லண்டன், பாரிஸ் நகரங்களுமே போராட்டக் களங்களாகும். இவ்வாறு மென்மையான போராட்ட வழிமுறைகளையே விடுதலையாகும் புலிகள் மேற்கொள்ள முடியும். அந்த வகைப் போராட்டங்கள் ஊடாக இலங்கையில் நிகழ்ந்த கொடூரங்களுக்கு சர்வதேச நியாயத்தைத் தேடிக் கொள்ளலாம். நீதியின் பக்கம் நின்று தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கேட்கவும் முடியும்.

மேலும், இன்னும் பல பிரிவுகளாகி நிதி சேகரிக்கலாம். அந்த நிதியைக் கொண்டு ஏதோ ஒரு வகையில் அழிந்துபட்ட தாயத்தின் பகுதிகளை அபிவிருத்தி செய்யமுடியும். விடுதலைக்காகத் தம்மைக் கொடுத்து, தற்போது தெருவுக்கு வந்திருக்கும் முன்னாள் போராளிகளின் மீள் வாழ்க்கைக்கு பொருளாதார ரீதியான உதவிகளைச் செய்ய முடியும். காணாமல் போனவர்கள், வறுமைப்பட்டவர்கள், கணவனை இழந்த விதவகைள் என அனைத்துத் தரப்பினருக்கும் உதவுவலாம்.

இவையெல்லாவற்றையும் விடுத்து, பழையபடியும், இந்தச் சாட்டை வைத்துக்கொண்டு ஆளாளுக்கு நிதி சேகரிப்பதிலும், நான் பெரிது, நீ பெரிதென்று சண்டையிடுவதிலும், உணர்ச்சிவசப்பட்டு அரசியல் அரங்கில் இறங்கினால் எச்சம் சொச்சமுள்ள தமிழர்களையும் பழிகொடுக்க வேண்டிய நிலைவரும்.

ஜெரா